டெல்லி விவசாயிகள் போராட்டம்: 22 வயது மாணவி திஷா ரவி கைது!
திஷா ரவி (Disha Ravi), 22 வயது பெண்ணின் கைது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கைதைக் கண்டித்துப் பல்வேறுவகையிலான போராட்டங்கள் நடக்கின்றன. சர்வதேச அளவில் அவருக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்கின்றன. சர்வதேச பத்திரிகைகள் கொண்டாடிய இந்த திஷா ரவியை ஏன் கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ்?!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய ‘டூல் கிட்’ (Toolkit) உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி திஷா ரவியைக் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ்.
உலகம் முழுவதிலும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க ‘டூல்கிட்’ தயாரிப்பது வழக்கம். போராட்டம் குறித்த எல்லா தகவல்களையும் பல நூறு பேரிடம் முறையாகக் கொண்டு சேர்ப்பதற்கு இந்த ‘டூல்கிட்’ உதவும். போராட்டங்களுக்கு மட்டுமல்ல, ஐநா சபை கூட ஒரு விஷயத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ‘டூல்கிட்’ தயாரிக்கும்.
அந்தவகையில் திஷா ரவி தயாரித்த விவசாயிகள் போராட்டத்தைப் பற்றிய ‘டூல் கிட்’, இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும், கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg), தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் வழக்குப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவித்து வன்முறையைத் தூண்டிவிடுவதாக திஷா ரவி மேல் டெல்லி காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முலுக் ஆகியோரின் மீதும் டெல்லி போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது அரசு அடக்குமுறையை செலுத்துவதாக இந்தியா முழுவதும் இதற்கு வலுவான எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில் போலீசார் சொல்வது போல அவர் சமூக விரோதியா, காலிஸ்தான் தீவிரவாத ஆதரவாளரா, அல்லது சூழலியல் ஆர்வளரா, செயற்பாட்டாளரா என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உண்மையில் யார் இந்த திஷா ரவி?
22 வயதான திஷா ரவி பெங்களூரைச் சேர்ந்தவர். மவுன்ட் கார்மல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். சிறு வயதில் பருவ நிலை மாற்றத்தால் விவசாயத்தில் சிரமப்பட்ட தாத்தா பாட்டியை பார்த்து திஷாவிற்கு பருவநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் குறித்த சிந்தனை தோன்றியிருக்கிறது. இந்தநேரத்தில்தான் திஷா உலக அளவில் கவனம் பெற்ற சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்கின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். ‘ஃப்ரைடே’ஸ் ஃபார் ஃபியூச்சர்’ (Fridays For Future) என்ற பெயரில் 2018-ம் ஆண்டு கிரெட்டா தன்பெர்க் தொடங்கிய சூழியல் செயற்பாட்டாளர்கள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார் திஷா. 2019-ம் ஆண்டு, அந்த அமைப்பின் இந்தியக் கிளையை தொடங்கி அதற்குத் தலைமை தாங்கவும் செய்திருக்கிறார்.
பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல கட்டுரைகளையும், ஆவணங்களையும் எழுதியுள்ளார். தொடர்ந்து பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும், அடையாள எதிர்ப்புகளையும் முன்னின்று நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருக்கிறார் திஷா.
வழக்கு பதியப்பட்ட சர்ச்சைக்குரிய ‘டூல் கிட்’ கிரெட்டா துன்பெர்க்கினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டு பின் நீக்கப்பட்டது. அந்த ‘டூல் கிட்’ குடியரசு தினத்தன்று நடந்த திடீர் விவசாயிகளின் முற்றுகை உட்பட பல அசம்பாவிதங்களுக்கு வழிகாட்டியது என்பதே டெல்லி போலீசாரின் குற்றசாட்டு. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே திஷா கைது செய்யப்பட்டிருக்கிறார். குறிப்பாக இந்த ‘டூல்கிட்’ உருவாக்குவதில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான Poetic Justice Foundation பங்கு உள்ளது எனவும், அவர்களுடன் இணைந்து தான் திஷா இதை உருவாக்கினார் எனவும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறது டெல்லி போலீஸ்.
பால் பொருட்கள், இறைச்சி என எதுவும் உண்ணாமல் வீகன் (Vegan) உணவுப்பழக்கம் கொண்டவர் திஷா. வீகன் உணவு பொருட்களை சுவை பார்த்து தயார்ப்படுத்தும் பணியில் இருந்தார். சூழலியல் போராளியாக உலக அளவில் கவனம் பெற்றவர் திஷா ரவி. பிரிட்டிஷ் வோக் (Vogue) பத்திரிகை சூழலியல் இனவாதத்திற்கு எதிரான போராளியாக இவரை அடையாளப் படுத்தியிருந்தது. இந்தியாவின் பெருமைமிகு இளைஞர்களில், அதுவும் பெண்களில் ஒருவர் எனக் கொண்டாடப்பட்டவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
-ஜெனிஃபர்.ம.ஆ
விகடன்