எரிக் சொல்ஹெய்ம் நடுநிலை தவறினார் : பாலித கோஹன

Erik Solheim back in SL affairs Shares experience in engaging the Diaspora  : mirrorcitizen.lk

நோர்வேயின் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் இரண்டு பக்கங்களுக்கும்   சமமாக  பணியாற்றியதாக    நாம் நம்பவில்லை.  அவருடைய பக்கச் சார்பு தொடர்பில்   எனக்கு ஒரு பாரிய  சந்தேகம் காணப்பட்டது. மேலும்   புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி  பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை இருக்கவில்லை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி  பாலித கோஹன தெரிவித்தார்.

கலாநிதி பாலித கோஹன  முன்னர் அரசாங்க சமாதமான செயலகத்தின்  தலைவராகவும்  வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும்  இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராகவும் பணியாற்றியிருக்கிறார்.  

விடுதலை புலிகளுடனான  மூன்று  சுற்று பேச்சுவார்த்தைகளில்    அரசாங்கத்தின் சார்பில்   பாலித கோஹன  2006 ஆம் ஆண்டில் கலந்துகொண்டிருந்தார். ஜெனிவாவில் நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகள் மற்றும்   நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாலித கோஹன பங்ககேற்றிருந்தார்.  

அவருடனான செவ்வியின் விபரம் வருமாறு,

கேள்வி: நீங்கள் 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை  அரசாங்க சமாதான செயலகத்தின் பிரதானியாக செயற்பட்டீர்கள். அப்போது  யுத்தத்தினால் அன்றி பேச்சுவார்த்தை மூலம்  இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாத்தியம் தெரிந்ததா?

பதில்: அந்தகாலத்தில்  ஒருநாடாக  ஒரு அரசாங்கமாக  பேச்சுவார்த்தை ஊடாக யுத்தத்தை முடிப்பதற்கு நாங்கள் பாரிய முயற்சிகளை  செய்திருந்தோம். ஆனால்  நாங்கள்  மேற்கொண்ட அந்த அனைத்து முயற்சிகளையும்   விடுதலைப்புலிகள் அமைப்பு நிராகரித்தது.  ஒருசில சமயங்களில்  ஜெனிவாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம்.   அங்கு  இரண்டு சந்தர்ப்பங்களிலும்   பேச்சுவார்த்தையிலிருந்து  புலிகள் அமைப்பே  எழுந்து சென்றது. மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை  நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெறுவதற்கு ஏற்படாகி  இருந்தது. 

நானும்  எனது  குழுவும் அங்கு சென்றிருந்தோம்.   அப்போது புலிகள்   பேச்சுவார்த்தை மேசைக்கு வரவில்லை. எனக்கு அந்த நிகழ்வு இன்னும் ஞாபகம் இருக்கிறது.  பேச்சுவார்த்தைக்கு  தயாராகுவதற்கான அறைக்குக்கூட  புலிகளின் பிரதிநிதிகள் வரவில்லை.  எனவே சமாதானத்தின் ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு   புலிகளுக்கு எந்த தேவையும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.  அவர்களின் விருப்பமும் நோக்கமும்  யுத்தத்தின் ஊடாக  பிரச்சினையைத் தீர்ப்பதாகவே காணப்பட்டன.

கேள்வி: புலிகள் நினைத்திருந்தால்   யுத்தமின்றி பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமா?

பதில்:  அதற்கு தற்போது  பதிலளிப்பது கடினமானது.  புலிகளின் தலைமை இன்று உயிருடன் இல்லை. எனவே இந்த  கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது.

கேள்வி:  நீங்கள் அரசாங்க  சமாதான செயலகத்தில் தலைவராக இருந்தபோது  நேர்வேயின் சமாதானப் பிரதிநிதி  எரிக் சொல்ஹெய்முடன் செயற்பட்டிருந்தீர்கள்.  அவர் பக்கச்சார்பாக  செயற்பட்டதாக  குற்றச்சாடு இருந்தது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நோர்வேயின் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் இரண்டு பக்கங்களுக்கும்   சமமாக  பணியாற்றியதாக    நாம் நம்பவில்லை.  அவருடைய பக்கச் சார்பு தொடர்பில்   எனக்கு ஒரு பாரிய  சந்தேகம் காணப்பட்டது.

கேள்வி:  சமாதான செயலகத்தின்  தலைவராக இருந்து  அப்போது  சமாதானத்தை அடைய முடியவில்லை என்ற கவலை  உள்ளதா?

பதில்: யுத்தம் செய்யாமல்   சமாதானத்தை அடையக்கூடிய    ஒரு சந்தர்ப்பத்தை  புலிகள் அமைப்பு இல்லாது செய்துவிட்டதே என்ற கவலை எனக்கிருக்கிறது.  எந்தவொரு நபருமே  யுத்தத்திற்கு செல்வதற்கு விரும்பமாட்டார். அது அவர்களின் முதலாவது நோக்கமாக இருக்காது. யுத்தம் செய்யாமல் பிரச்சினையைத் தீர்ப்பதே எமது முதன்மை நோக்கமாக இருக்கும்.  ஆனால் அன்று  புலிகளுக்கு யுத்தம் செய்து வெற்றிபெறும் நோக்கமே காணப்பட்டது.  யுத்தம் தொடர்பான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியது புலிகள் அமைப்புதான்.  அந்த அச்சுறுத்தலை   ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு  எமக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை.

கேள்வி: நீங்கள்  புலிகள்  அமைப்பின் உறுப்பினர்கள் யாரை   நேரடியாக  சந்தித்திருக்கிறீர்கள்?

பதில்:  நான்  புலிகள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன்.  ஒஸ்லோவில்  புலிகளின்  உறுப்பினர்களை சந்தித்தேன்.  ஜெனிவாவில்  நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளில் அவர்களை சந்தித்தேன். புலிகளின்  தலைவர்களையும் சந்தித்திருந்தேன்.

கேள்வி:  அன்டன் பாலசிங்கத்துடனான சந்திப்பு ?

பதில்: அன்டன் பாலசிங்கத்தை சந்தித்தது மட்டுமன்றி  நான் அவருடன் பேச்சுவார்த்தையும்  நடத்தினேன்.  

கேள்வி: அவர்களின் நோக்கம் எவ்வாறு இருந்ததாக நீங்கள் உணர்ந்தீர்கள்?

பதில்: முதலில் ஜெனிவாவில்  இரண்டு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதில் அவர்கள் இடையில் எழுந்து சென்றனர்.  இந்நிலையில்  இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் நான் ஒருவிடயத்தைப் புரிந்துகொண்டேன். அதாவது புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி  பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை இருக்கவில்லை.  அவர்களின் நோக்கம் அதுவாக  இருக்கவில்லை.    

கேள்வி: தற்போது நாட்டின் நிலைமை தொடர்பில் உங்களின்  மதிப்பீடு என்ன?

பதில்: தற்போத எமது நாட்டில் சமாதானம் இருக்கின்றது. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.  பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.  அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த  எதிர்காலம் இருக்கின்றது.

கேள்வி: கடந்த 11வருடங்களாக  வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு  தீர்வு காணவில்லையே?

பதில்: வடக்கு  கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினை என்ன என்பது எனக்குப் புரியவில்லை.  அவர்கள் ஏன் வடக்கு, கிழக்கிற்கு மட்டும் அரசியல் அதிகாரத்தை கோருகின்றனர்.  தமிழ் மக்களின் மிக அதிகமானோர்  வடக்கு, கிழக்கிற்கு வெளியிலேயே  வாழ்கின்றனர். அப்படியானால்  வடக்கு, கிழக்கிற்கு மட்டும் ஏன்  அரசியல் தீர்வு அவசியம்? வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்தானியாவே உருவாக்கியது. வடக்கு, கிழக்கிலுள்ள அதிகமான காணிகள் வரலாற்று ரீதியில் கண்டி இராஜதானிக்கே  சொந்தமாக இருந்தன.   எனவே  வடக்கு கிழக்கு  பகுதிகளின்  பிரச்சினைகள் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கேள்வி:  அப்படியானால் வடக்கு, கிழக்கிற்கு அரசியல் தீர்வு  தேவையில்லை என்று கருதுகின்றீர்களா?

பதில்: அரசியல்  பிரச்சினை  இருந்தால்தான்   அரசியல் தீர்வு அவசியம்.  ஆனால்  வடக்கு, கிழக்கின் அரசியல் பிரச்சினையை என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

கேள்வி: புரிந்துகொள்ள முடியவில்லையா?  அல்லது இல்லை என்று கருதுகின்றீர்களா?

பதில்: எனக்குப் புரியவில்லை என்று கூறுகின்றேன்.  யாராவது எனக்குப் புரியவைக்கலாம்.  ஆனால்  வடக்கு, கிழக்கிற்கு   அரசியல் பிரச்சினை இருப்பதாக  யாரும் எனக்கு இதுவரை  நிரூபித்து கூறவில்லை.

கேள்வி: சீனாவுக்கான இலங்கைத் தூதுவராக   நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள் விரைவில் சீனா செல்லவுள்ளீர்கள்.  புதிய தூதுவர் பொறுப்பு தொடர்பில்?

பதில்: சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகால   உறவு காணப்படுகின்றது. இது அண்மையில் ஏற்பட்ட  ஒரு நட்புறவல்ல.  ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே  இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு வலுவாக இருந்திருக்கிறது.   நீண்டகாலமாக   இந்த தொடர்பும்  நட்புறவும் நீடித்து வருகிறது.  சிறிமா அம்மையார் பிரதமராக இருந்தபோது  சீனா இலங்கையுடன் மிக நெருக்கமாக  செயற்பட்டு வந்திருக்கிறது.    அதேபோன்று  யுத்த காலத்தில் சீனாவானது இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது.  

யுத்தத்தை முடிப்பதற்கு சீனா எமக்கு உதவியது.   யுத்தத்தின் பின்னர்  இலங்கை மிக வேகமாக  அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதற்கு   நடவடிக்கை எடுத்தது.  அந்த சந்தர்ப்பத்தில் சீனா இலங்கைக்கு   பாரிய உதவிகளை வழங்கியது.   எனவே  இலங்கைக்கும்  சீனாவுக்குமிடையிலான   நட்புறவானது  இலகுவாக பார்க்கக்கூடியதல்ல.   கொவிட – 19  அச்சுறுத்தல்  ஏற்பட்ட போது சீனா  இலங்கைக்கு  ஒத்துழைப்பும் உதவியும் வழங்கியது.   எனவே  எதிர்காலத்தில்  இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு மிகவும் வலுவடையும்.  அதனை மேலும்  பலப்படுத்துவதற்கும்  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கும்  எனது  காலத்தில்  பாரிய  அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்.  அதுவே  எனது  பிரதான நோக்கமாகும்.

கேள்வி: இலங்கையை சீனாவானது   கடன்பொறிக்குள் தள்ளியுள்ளதாக  மேலைத்தேய நாடுகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.  இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ஒருசில நாடுகள்  இலங்கையை  சீனா  கடன்பொறிக்குள் சிக்க வைத்துள்ளதாக  அடிப்படையற்ற  குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.   இது எவ்விதமான  அடிப்படையும் இல்லாத ஒரு குற்றச்சாட்டாகும்.   இலங்கை பெற்றுள்ள கடன்களில் 10 வீதமே சீனாவிடமிருந்து பெற்றப்பட்டவையாகும்.   இலங்கை அதிகளவான கடன்களை மேற்கு நாடுகளிடமே பெற்றுள்ளது.  அத்துடன் சர்வதேச அமைப்புகளிடமும்   கடன்கள் பெறப்பட்டுள்ளன.  உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடமும்   கடன் பெற்றுள்ளது. 

எனவே  சீனாவானது  இலங்கையை  கடன்பொறிக்குள்  தள்ளியுள்ளதாக கூறுவது   அடிப்படையற்ற ஒரு  குற்றச்சாட்டாகும்.  சீனாவை விட நாம் மேற்கு நாடுகளுக்கே  அதிக கடன் செலுத்தவேண்டியுள்ளது.   சீனா இலங்கைக்கு பலவந்தமாக கடன்  வழங்கவில்லை.  நாம்  கோரிக்கை விடுத்ததன் காரணமாகவே  எமக்கு கடன்  வழங்கப்பட்டது.  ஆனால் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் காணப்படுகின்ற மிக நெருக்கமான உறவை இல்லாதொழிக்கும் நோக்கத்துடனேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.    சில மேற்கு நாடுகள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.  

கேள்வி: இலங்கையானது  சீனாவுடன் நெருங்கி செயற்படுவதாகவும் அது குறித்து  இந்தியா  சற்று  கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.   இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: அதுவும் ஒரு நியாயமான குற்றச்சாட்டல்ல.  நாம்  எமக்குத் தேவையான  முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு  சீனாவுடன் நெருங்கியிருக்கின்றோம்.   அதுமட்டுமன்றி வரலாற்று ரீதியாக  இரண்டு நாடுகளுக்கிடையில் பாரியதொரு   உறவு காணப்படுகின்றது.   இதன் அடிப்படையிலேயே நாம் சீனாவுடன்  நெருங்கி செயற்படுகின்றோம். ஆனால் நாம் எப்போதும் இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்படுகின்றோம்.  

இரண்டு நாடுகளும் எமது நட்பு நாடுகள்.  இந்தியாவானது  எமது நெருங்கிய அயல்நாடு. இல்ஙகையுடன் இந்தியா மத, கலாசார   தொடர்புகளைக் கொண்டது.   மறுபக்கம் சீனாவானது   பொருளாதார  வர்த்தக ரீதியில்  எங்களுடன்   நெருக்கமான  தொடர்பை   பேணும் நாடு.  அத்துடன் எமது  பாதுகாப்பு விடயங்களிலும் ஒத்துழைப்பு வழங்கிய நாடாகும்.  எனவே நாம் சீனாவுடன் மிக நெருங்கி செயற்படுவதாக குற்றச்சாட்டு வைப்பதில் அர்த்தமில்லை.  ஆனால் கொள்கை ரீதியாக ஒரு விடயத்தை   தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம். 

அதாவது   நாம்  சீனா அல்லது வேறு  எந்த நாட்டுடனும்  செயற்படும்போது  அல்லது அயல்நாடான இந்தியாவுக்கு  அச்சுறுத்தல்   ஏற்படாது. நாம்  நெருக்கமாக செயற்படுகின்ற  எந்தவொரு நாட்டிடமும் இருந்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது  இலங்கையின் பொறுப்பாகும்.  அதுவே  எமது கொள்கையாகும்.  இதனை ஜனாதிபதியும்  தெளிவாக  குறிப்பிட்டிருக்கிறார். அவரது கொள்கை பிரகடனத்திலும் அது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

பேட்டி கண்டவர் – ரொபட் அன்டனி

-வீரகேசரி
2020.09.20

Tags: