மூன்றாவது அலையை தடுப்பூசியும் தடுக்காது

ரு நோய்க்கு எதிரான மருந்து அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கும் அது தொடர்பான பல்வேறு கட்ட பரிசோதனைகள் முடிவடைந்து சந்தைப்படுத்தப்படுவதற்கும் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள்வரை செல்லும். மருந்து ஒரு நோயைக் குணப்படுத்தலாம். ஆனால் அது மனித உடலில் எவ்வாறான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும், நீண்ட கால அடிப்படையில் எவ்வாறு செயல்படும் என்பதும் கண்டறியப்பட்டு இறுதி செய்வது மிக முக்கியம். ஆனால் மருத்துவ சரித்திரத்திலேயே நோயொன்று தோன்றிய ஒரு வருட காலத்துக்குள்ளேயே அதை எதிர்க்கும் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு பாவனைக்கும் விடப்பட்டது இதுவே முதல் தடவையாக இருக்கும். ஏனெனில் இவ்வுலகில் ஏராளமான ஆள்கொல்லி நோய்கள் பரவி வந்துள்ள போதிலும், அவை பல்லாயிரம் கோடி மக்களைக் காவு கொண்டிருந்தாலும் அவற்றை வென்று மக்களைக் காக்கும் முயற்சிகளை மனிதன் கைவிட்டதே கிடையாது. சவால்களை சந்திப்பதும் வெற்றிகொள்வதும் மனிதரில் என்றென்றும் குடிகொண்டிருக்கும் ஒரு இயல்பாகும். அதன் பிரகாரமே, எயிட்ஸ் நோயை முற்றிலும் வெற்றி கொள்ள முடியாது போனாலும், அது எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஏற்படுத்திய உலகளாவிய அச்சத்தையும் மரண எண்ணிக்கையையும் இன்று வெகுவாகக் கட்டுப்படுத்த முடிந்தது. பாலியல் உறவுகளை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்ற செய்தியை உலகெங்கும் வெற்றிகரமாக எடுத்துச் சென்றதன் மூலம் இது சாத்தியமானது. 

எனினும் உலகைத் தாக்கிய பேரழிவு நோய்களில் எதுவுமே உலகம் முழுவதும் இவ்வளவு வேகமாகப் பரவியதில்லை. இதனால்தான் உலக முடக்கம் என்பது கொவிட் -19 வைரஸ் பரவலின் போது மட்டுமே முதல் தடவையாக பிரயோகத்துக்கு வந்தது. நோயெதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு குறுகிய காலம் எடுத்துக் கொள்ளப்பட்டதற்கும் இந்த அவசர நிலையே காரணமானது. தனியொரு நோய்க்கு எதிராக உலகெங்கும் ஒரே தடவையில் தடுப்பு மருந்து ஏற்றப்படுவது இதுவே முதல் தடவை. அவசர கதியில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டமைக்கு உயிர்களைக் காக்க வேண்டும் என்பது மட்டுமல்ல காரணம்; உலகளாவிய ரீதியாக சரிந்திருக்கும் பொருளாதாரத்தையும் அதன் மோசமான பக்க விளைவுகளில் இருந்தும் நாடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுவும் முக்கிய காரணம்.

உலகெங்கும் 500 கோடி மக்களுக்காவது அடுத்த இரண்டு வருட காலத்துக்குள் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு, நாம் தடுப்பூசி ஏற்றியவர்களாக இருப்பினும், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் என்பனவற்றை தொடர்ச்சியாக பின்பற்றியாக வேண்டும்.

எமக்கான முதலாவது தடுப்பூசி அடுத்த ஆண்டே வந்துசேரும் என்பதாக கருத்துகள் நிலவிவர, அஸ்ட்ரா செனகா, கொவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்ததாலும், அண்டை நாடுகளுக்கு ஒரு தொகுதியை இலவசமாக வழங்க அந்நாடு முன்வந்ததாலும் குறுகிய காலத்துக்கள் தடுப்பூசிகளை நாம் பெற முடிந்தது. மற்றொரு தொகுதி தடுப்பு மருந்துகள் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து வந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொடையாக கோவெக்சின் மருந்தும் எம்மை வந்தடையவுள்ளது.

எனினும் இவற்றால் நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. முதல் கொவிட் தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டறியப்பட்டதும் நாம் தொடர் முடக்கத்துக்கு சென்றோம். தனிப்பட்ட மற்றும் தேசிய ரீதியாக ஏற்பட்ட பெரும் பொருளாதார சரிவுகளுக்கு மத்தியில் ஜூன் மாதமளவில் கொவிட் பரவுதல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு செப்டெம்பர் –அக்டோபர் மாதங்களில் நாட்டு நிலைமை வழமைக்கு திரும்ப ஆரம்பித்தது. இச் சமயத்தில் மக்கள் தாம் கைகொண்டிருந்த கொவிட் பாதுகாப்பு பழக்க வழக்கங்களை கைவிட ஆரம்பித்தனர். பலர் முகக்கவசமின்றியே நடமாடத் தொடங்கினர். சமூக இடைவெளி என்பது மறந்து போன கதையானது. சுகாதார அதிகாரிகளும் சரி, பொலிசாரும் சரி சுகாதார வழிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துவதை பெரும்பாலும் நிறுத்திக் கொண்டனர். அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது போல காணப்பட்ட சூழலில்தான் கம்பஹா ஆடைத்தொழிலகத்தில் இரண்டாம் அலை விசைகொண்டது.

அம் மாவட்டத்தை உடனடியாக முடக்கியிருக்கலாம், வெளிமாவட்டங்களுக்கு பரவுவதைத் தடை செய்யும் முகமாக. அதைச் செய்திருந்தால் பேலியகொடை மீன்சந்தை திறக்கப்பட்டிருக்காது. இரண்டாம் அலை வேகம் வெற்றிருக்காது. ஆனால் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நம் இயல்பு காரணமாகவே இரண்டாம் அலை நாடெங்கும் பரவியது.

தற்போது ஆங்காங்கே தடுப்பூசி ஏற்றப்படுகிறது. தடுப்பூசி வந்துவிட்டதால் இனி கொரோனா அச்சம் தேவையில்லை, கூடி மகிழ்ந்து கொண்டாட்டம் போடலாம் என்ற தவறான முடிவுக்கு மக்கள் வந்து விடக் கூடாது. ஏனெனில் நாம் ஏற்றிக் கொள்ளும் தடுப்பூசிகள் எழுபது அல்லது எண்பது சதவீதமே பலனளிக்கக் கூடியது என்று அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே ஒப்புக்கொள்கின்றன. 30 வயதுக்கும் குறைவானவர்களை கொவிட் – 19 தாக்குமா, தாக்கினால் எவ்வகையான விளைவுகளை அவர்களில் ஏற்படுத்தும், அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றினால் அதன் செயலாற்றல் எத்தகையதாக இருக்கும் என்பதுபோன்ற ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதுடன் இம் மருந்துகளின் நீண்ட கால பின்விளைவுகளையும் நாம் அறியோம். கொவிட் தடுப்பூசி என்பது முழுமையான ரோக நிவாரணி அல்ல.

எனவே தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் ஏனையோரைவிட தாம் ஒரு படி மேல் என எண்ணிக்கொண்டு பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பிச் சென்றுவிடலாகாது. இத் தடுப்பூசி ஒரு விலக்களித்தல் ஆகாது. ஊசி ஏற்றிக் கொண்டவர்கள் ஏனையோரைப் பார்க்கிலும் ஏற்றம் பெற்றவர்கள் அல்ல. அவர்கள் இரண்டாவது ஊசியையும் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரேயே கொவிட் நோயெதிர்ப்பு சக்தி முழுமையாக வேலைசெய்யும்.

நாமும் நாடும் மிக மோசமான பொருளாதார நிலையில் உள்ளோம். மூன்றாவது அலைக்கு நாம் முகம் கொடுப்பதும் தவிர்ப்பதும் நம் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே நாம் மீண்டு வர வேண்டுமென்றால் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள், இதுவரை ஏற்றிக் கொள்ளாதவர்களைப் போலத்தான் தொடர்ந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு அலட்சியம், மூன்றாவது அலையை கொண்டுவந்து விடலாம். எமது மீட்சியை மறுபடியும் தடுத்து விடலாம்.

தினகரன்
2021.02.28

Tags: