இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்!

யற்கை’, ‘ பேராண்மை’, ‘ ஈ’, ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இன்று, 14.03.2021 காலை 10 மணியளவில் மரணமடைந்தார். 61 வயதான ஜனநாதன் மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மயக்கமாகி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால் சுயநினைவின்றி சிகிச்சை பெற்றுவந்த ஜனநாதன் மரணத்தோடு போராடி உயரிழந்திருக்கிறார்.

சினிமாவுலகில் நேர்மையாளராக அறியப்பட்டவர் ஜனநாதன். உழைக்கும் மக்களின் உயர்வு, சமூக சமநிலையின் அத்தியாவசியம், அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் எனத் தொடர்ந்து கம்யூனிச சித்தாங்களைத் தன்னுடைய படங்களில் பேசியவர் ஜனநாதன்.

இயற்கையில் கலந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சுற்றுச்சூழல் மீதும், விவசாயத்தின் மீதும், இந்தப் பூமியின் மீதும் அதைவிட இந்த மக்களின் மீதும் பேரன்பு கொண்டவர். இதை அவருடைய படங்களின் வாயிலாக அறிய முடியும். தமிழ் திரைப்படத் துறையில் இருந்த ஒரு முக்கிய மார்க்சிய சிந்தனையாளர். அதை தன் திரைப்படத்தின் வாயிலாகவும் முன்வைத்தார். அதேபோல இயற்கையின் மீதும் விவசாயத்தின் மீதும் இருந்து வந்த சிந்தனையை தன்னுடைய எழுத்துகளிலும் பேட்டிகளிலும் முன்வைத்து வந்தார். அவற்றின் தொகுப்புகள்தான் இங்கே இடம் பெறுகின்றன. எஸ்.பி.ஜனநாதன் பல்வேறு தருணங்களில் பகிர்ந்துகொண்டவை இவை…

இயற்கை

“முதல் முறையாகத் திரைப்படம் தொடங்குகிறேன். படத்துக்குப் பெயர் பிடிக்க வேண்டும். அதுவும் உடனடியாக! டைட்டிலைப் பதிவு செய்தாக வேண்டும் என்பது தயாரிப்பாளரின் உடனடித் தேவை. ஏதேதோ யோசனைகள். தூக்கம் வராமல் புரள்கிறேன். எதையும் கடவுள் வாழ்த்தோடு துவங்குவதுதானே முறை. இப்படி ஒரு யோசனை வந்தவுடனேயே என் மனசுக்குள் வந்து உட்கார்ந்த தலைப்பு… `இயற்கை’. முதல் படத்தை இயற்கையின் வாழ்த்துடன் துவங்க வேண்டும் என்று அதையே தலைப்பாக வைத்தேன்.

`கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்..?’ என்ற கேள்வியை அப்போதே பலர் கேட்டனர்.

இயற்கைக்குச் சம்பந்தமில்லாதது எது? ஆகாயம், பூமி, மனிதன், இந்த வாழ்க்கை, அதிலிருந்து வரும் கதைகள் எல்லாமே இயற்கையோடு கலந்ததுதானே?

மனிதன் மேல் இயற்கையும் இயற்கையின் மேல் மனிதனும் வைத்திருக்கிற காதலால்தான் இன்னும் இந்த பூமி சுழல்கிறது. அதனால் இந்தப் படத்துக்கு `இயற்கை’ என்ற தலைப்புதான் ரொம்பப் பொருத்தம் என்றேன்.

எனது இரண்டாவது படம் இயற்கைக்கு எதிரானவர்களை இழுத்து நிறுத்தி கேள்வி கேட்கிற கதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்து `ஈ’ படத்தின் ஒன்லைனும் ரெடி பண்ணிவிட்டேன். அதன் கதை விவாதம் கொடைக்கானலில் நடந்தது. ஒரு மாலை நேரத்து விவாதம்… நாங்களே டீ தயாரிப்பதற்காக டீ தூள் வாங்க கடைக்குச் சென்றோம். அது பணக்காரர்கள் மட்டுமே வந்துபோகும் கடை. அங்கே சாதாரண டீ தூள் பாக்கெட்டுகள் ஒரு பக்கமும் வெல்வெட் துணிப்பைகளில் உள்ள டீ தூள் இன்னொரு பக்கமும் இருந்தன. வெல்வெட் பைகளில் இருந்த டீ தூள் பல மடங்கு அதிக விலையாக இருந்தது. என்னுடன் விவாதத்தில் இருந்த தோழர்கள் பாவல் சங்கர், டி.எஸ்.எஸ். மணி போன்றவர்களிடம் அதுபற்றிக் கேட்டபோது கிடைத்த பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியதோடு அதிர்ச்சியையும் கொடுத்தது.

ஓர்கானிக் டீ

வெல்வெட் துணிப்பைகளில் இருந்தது ஓர்கானிக் டீ (Organic Tea) என்றார்கள். குறிப்பிட்ட நிலத்தில் எந்தவிதச் செயற்கை உரமும் போடாமல் இயற்கை உரங்கள் மட்டுமே போட்டுப் பயிரிடப்படும் தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்டதுதான் ஓர்கானிக் டீ. மணமும் குணமும் நிறைந்த, எந்தவிதப் பக்க விளைவுகளும் இல்லாத இந்த இயற்கை டீ, ஏழைகளின் தொண்டையை எட்டியே பார்க்காது. இதே போலத்தான் ஒவ்வொரு பயிரும் தானியங்களும் இன்றைக்கு விளைவிக்கப்படுகின்றன. ஆர்கானிக் பயிர்கள் எல்லாமே விலை உயர்ந்தவை. `உடனடி உற்பத்தியைப் பெருக்கும் மரபணு விதைகளில், கடுமையான உரங்களைப் போட்டு விளைந்த அரிசியில், இந்தியப் பாரம்பர்யமிக்க நெல் வகைகளில் இல்லாத அளவு கூடுதலாக கார்போஹைட்ரேட் இருப்பதால் உற்பத்தி பெருகும். பலரது வயிறு நிறையும். ஆனால், அதுவே இந்தியர்களின் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணமாக அமைகிறது’ என்பன போன்ற ஆய்வுத் தகவல்கள் எங்களின் `ஈ’ கதை விவாதத்தின்போது பேச்சோடு பேச்சாக வெளிப்பட நான் அதிர்ந்து போனேன்.

`உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற மாபெரும் தத்துவத்தை யார் யாரின் சுயநலமோ சூறையாடுகிறதே… `உணவே விஷமாக’ மாறிக் கொண்டு இருக்கிறதே என என் மனம் துடிதுடித்தது. இதேபோல… எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுத்த பின்பு நிலத்தடியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பாவிட்டால் நாளடைவில் அதுவே நிலநடுக்கத்துக்கு வழி வகுக்கும் என இன்னொரு விஷயம் தெரிந்தது. பெரும் சக்திமிக்க, அழிக்கவும் ஆக்கவும் முடியாத மாபெரும் இயற்கையை மனித வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப நியாயமாக மாற்றி பயன்படுத்திக் கொள்வதுதானே விஞ்ஞானம்.

சுயலாபத்துக்காக, அதுவும் உடனடித் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் கண்டுபிடிப்புகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே அல்ல. அது திருட்டுத்தனம். சுரண்டலின், ஊழலின் இன்னொரு வடிவம். மக்களின் தேவைக்காக லாப நோக்கமற்ற எதிர்காலத் திட்டங்களோடு செய்யப்படும் ஆய்வுகளே உண்மையான விஞ்ஞானம். அது இயற்கையின் எதிரி அல்ல. `ஈ’ திரைப்படத்தின் கோஷமே அதுதான். லாப வெறியில் மக்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் திட்டத்தோடு செயல்படும் கிருமி யுத்தத்துக்கு (Bio War) எதிராக ஏதோ என்னால் முடிந்த தீ தான் `ஈ’!

வெள்ளையர்களின் சுரண்டல்

இங்கிலாந்து என்பது வளங்கள் இல்லாத சின்னஞ்சிறு நாடு. ஆனால், ஆங்கிலேயர்கள் வளம் நிறைந்த இந்தியாவை 300 ஆண்டுகளாக ஆக்கிரமித்து ஆண்டார்கள். இங்கேயுள்ள வளங்களை எல்லாம் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொண்டார்கள். `வெள்ளைக்காரன் இல்லைனா இந்தியாவுக்கு ரயில் வந்திருக்காது, விமானம் வந்திருக்காது’ என்று சிலர் சொல்வார்கள். உண்மைதான். ஆனால் நம் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வசதிகள்தாம் இவை.

உணவு உற்பத்தியில் தன்னிறைவுபெற்ற இந்தியாவில் இருந்து கரும்பு, பருத்தி போன்றவற்றை உலகச்சந்தைக்குக் கொண்டு சென்று பணப்பயிராக்கி வெள்ளைக்காரர்கள் லாபம் பார்த்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியர்களே நாட்டைச் சுரண்டும் நிழற்கொள்ளை நடந்துவருகிறது. இப்போதுகூட இங்கே உற்பத்தியாகும் பால், சர்க்கரைதான் உலகச் சந்தையில் விலைமதிப்புமிக்க பொருளாகி சாக்லேட்டாக விற்கப்படுகிறது. எல்லோருக்கும் வேண்டிய பொருள்களை உற்பத்திசெய்து கொடுக்கும் உழைக்கும் வர்க்கம் வறுமையில் கிடக்கிறது. 

கிறிஸ்து பிறப்புக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே `அரசர் நாட்டில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். சுத்தமான நீரை மக்களுக்குக் கொடுங்கள். தண்ணீர் வழியே கிருமிகள் பரவக்கூடும். தவறினால் மக்கள் உயிரிழக்க நேரிடும்’ என்று அரிஸ்டாட்டில் எழுதி வைத்திருக்கிறார். அதை அப்போதே அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்கிறார் சாக்ரடீஸ். இது வரலாறு. ஆனால் அந்த நீர்நிலைகளை அழிக்கும் செயல்களே இன்று மேலோங்கி நிற்கின்றன.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் 

தஞ்சாவூர் மாவட்டம், வடச்சேரிதான் எனக்கு சொந்த ஊர். பிறந்தது அந்த ஊர் என்றாலும், படிப்பு, வளர்ப்பு எல்லாம் சென்னையில்தான். அதனால எனக்கு விவசாயத்த பத்தி எதுவும் தெரியாது. அதை புரிய வெச்சவர் நம்மாழ்வார். மண்ணுல போடற நெல் விதை, மண்ணுல இருக்கிற சத்தை உறிஞ்சிதான் வளர்றதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஒரு கூட்டத்துல கலந்துக்கும்போது நம்மாழ்வார்கிட்ட இது சம்பந்தமா விவாதிச்சேன். `சூரிய ஒளியிலிருந்து கிடைக்கிற ஆற்றலாலதான் நெல் விளையுது. நெல் மட்டுமல்ல… கரும்பு, வாழைன்னு பல பயிர்கள் இதுமாதிரிதான் வளருது. பயிர்கள் மண்ணை உறிஞ்சுகிறது என்றால் ஒருமுற நெல் வைக்கும்போதே 10 மூட்டை மண்ணும் குறைஞ்சிருக்கிணுமே… மண்ணு அப்படியேதானே நிலத்துல இருக்குது’ன்னு சொன்னாரு. சூரிய ஒளி மூலமாவே எல்லா சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்குதுன்னு புரிஞ்சிகிட்டேன்.

`ஆத்துல போற தண்ணியால, முதல்ல கடைமடை பகுதிதான் பாசனம் பெற வேண்டும். அதன்பிறகே ஒவ்வொரு பகுதியும் பாசனம் பெற்றுவர வேண்டும்’ என்பார் நம்மாழ்வார். 10 ஏக்கர் நிலம் இருக்குன்னா, எல்லா நிலத்துலயும் சமமா தண்ணி நிக்கணும். அதுதான் நீர் மேலாண்மைக்கு சிறந்த உதாரணம். ஒரு இடத்துல 2 இன்ச் தண்ணியும், இன்னொரு இடத்துல அரை அடி தண்ணியும் நின்னா சரியான நிலமில்ல என்பார். இயற்கை விவசாயத்து மேல இருந்த ஆர்வத்தால பழனி பக்கம் கூட்டுப் பண்ணையில நிலத்த வாங்கிப் போட்டேன். அந்த முயற்சி தோல்வியில முடிஞ்சாலும், அந்த நிலத்த அப்படியேதான் வெச்சிருக்கேன்.

இயற்கை விவசாயத்த பத்தியும், பாரம்பர்யத்த பத்தியும் நம்மாழ்வார் ஐயா மூலமாதான் ஊக்கத்தைப் பெற்றேன். பேராண்மை படத்துல `பாரம்பர்ய நெல் செத்தாகூட நான் செத்த மாதிரி’ன்னு ஒரு வசனமும் வெச்சிருப்பேன். இதெல்லாம் ஐயாவ மனசுல வெச்சிட்டு எழுதியதுதான். விவசாயம் என்பது ஒரு விஞ்ஞானம். ஒரு மிகச் சிறந்த அறிவு. அவர் வெறுமனே நம்மோட பழம்பெருமையை பேசனது கிடையாது. அதிலுள்ள சிறந்த அறிவை தெரிஞ்சு வெச்சிருப்பது நல்லது.

பசுமை விகடன்

`பசுமை விகடன்’ முதல் இதழிலேயே என்னுடைய பேட்டி வெளியானது. அந்த வகையில் பசுமை விகடனுக்கும் எனக்கும் முன்பிருந்தே தொடர்பு உள்ளது. இந்தியாவின் செல்வம் விவசாயம்தான். அதுதான் நம் முன்னோரை வாழ வைத்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த இங்கிலாந்து நாட்டில் நீர் வளமும் இல்லை, நில வளமும் இல்லை. அதனால், அங்கே உற்பத்தியும் இல்லை. இதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருக்கும் விவசாயத்தை லாபகரமாக்க நினைத்தது. முதலில் பருத்திக்கும் அடுத்து கரும்புக்கும் இங்கே ஆலைகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் விளையும் பருத்தியை நூலாக்கி, அதை உலகச் சந்தையில் விற்பனை செய்து லாபம் பார்த்தது, பிரிட்டிஷ் அரசாங்கம். விடுதலைக்குப் பிறகு நேரடியாக இல்லாமல் மறைமுகமாக நம்முடைய பொருள்கள் உலகச் சந்தைக்குச் செல்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறதா, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உற்பத்தியாவது பெருகியது. விடுதலைக்குப் பிறகு ஊர்த்தலைவர்களும், உள்ளூர் கட்சிக்காரர்களும் கையில் கிடைத்ததையெல்லாம் சுருட்டி லாபம் பார்க்கின்றனர். இந்த அரசியலை விவசாயிகள் புரிந்து செயல்பட வேண்டும். 

நம்முடைய அடிப்படை சக்தி, விவசாயம்தான். கருத்துகள் சிந்தனைகள், பொருளாதாரம் எல்லாமே விவசாயம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஒரு விவசாயியின் தொடர்புகள் உள்ளூரைத் தாண்டி வெளியூர்களுக்கும் பரவுகிறது என்றால் அது பசுமை விகடன் மூலம்தான். பசுமை விகடன்மீது இருந்த மதிப்பால்தான் பேராண்மை படத்தில் ஒரு ராக்கெட்டுக்குப் `பசுமை’ என்று பெயர் சூட்டினேன்.

இயற்கைக்கு எதிரான எதையும் நான் வெறுக்கிறேன். எதையேனும் அழித்து நீ வாழத் துடிப்பது இயற்கைக்கு எதிரானது. நம்முடைய காதல், நட்பு, உறவுகள் எல்லாமே இயற்கையாக இருந்தால் சந்தோஷம் நிலைக்கும். இயற்கை மேல் நமக்கு காதல் இருந்தால் பூமி இன்னும் புதுசாய் பூக்கும்!”

-விகடன்
2021.03.14

Tags: