“ஒவ்வொரு வீட்டிலும் 2 மரக்கன்றுகள் நட வேண்டும்!” – நடிகர் விவேக்கின் பசுமை பக்கங்கள்

த. ஜெயகுமார்

ஒரு நடிகனாகத் திரைத்துறை அவரை நினைவுகூரும். ஒரு பசுமை மனிதனாக அவர் நட்ட மரங்கள் அவரை நினைவுகூரும்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் இன்று அவரது உயிர் இயற்கையில் கலந்தது. நடிகர் விவேக்கின் அனைவரும் அறிந்த இன்னொரு பக்கம் மரம் வளர்ப்பு. எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும். கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமோடு நல்ல நட்பு பாராட்டியவர். அந்த உறவின் அடையாளமாக கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தொடர்ந்து இயங்கி வந்தார்.

அதேபோன்று சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல் போன்ற விஷயங்கள் பற்றி அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். பசுமை விகடன் பற்றியும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிந்திருந்த அவர், அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் ஒரு முறை பதிவிட்டு இருந்தார்.

அதேபோன்று உலக வன நாள், சுற்றுச்சூழல் தினம் என எந்தத் தினங்கள் வந்தாலும் அன்று மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றைச் செய்வார். அதேபோன்று சிறுதானியங்கள் சாப்பிடுவதும் பற்றியும் வலியுறுத்தி வந்தார்.

நடிகர் விவேக் 2011-ல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியபோது அளித்த பேட்டியில், “நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும். மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையன தூய்மையான ஒட்சிசன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று, திருச்சியில் பசுமை கலாம் (கிரீன் கலாம்) திட்டம் தொடங்கப்பட்டது.

சென்னையில் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். கோவையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சேலத்தில் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும். தொடர்ந்து வேலூர், வேதாரண்யம், தஞ்சாவூர், அடுத்து நான் பிறந்த திருநெல்வேலி என ஒவ்வோர் ஊராக இந்தத் திட்டம் நிறைவேற உள்ளது.

இறுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளின் இறுதி மரக் கன்றை கடலூரில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நட்டு வைப்பார். வீட்டுக்கு இரண்டு மரம்… ஒவ்வொருவரும் வீட்டில் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றில் நச்சுத் தன்மை குறையும். எனவே, தமிழகத்திலிருந்து மரங்களின் பசுமைப் புரட்சி தொடங்க வேண்டும்” என்று பேசினார்.

சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஏராளமான மரங்களை நட்டவர். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசும், சமூகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு காணொளி பதிவு ஒன்றை நான் வெளியிட்ட போது, அதை மனமுவந்து பாராட்டியவர்.

பத்மஶ்ரீ, கலைமாமணி என்று விருதுகள் வாங்கியிருந்தாலும், அவர் அடிக்கடி சொல்வது, “ரசிகர்களின் அன்பே ஒரு விருதுதானே! 35 ஆண்டுகளாக அதை வருடா வருடம் வாங்கிக் கொண்டு இருக்கிறேனே!”

வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது போல, “மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன.”

ஆம்… ஒரு நடிகனாகத் திரைத்துறை அவரை நினைவுகூரும். ஒரு பசுமை மனிதனாக அவர் நட்ட மரங்கள் அவரை நினைவுகூரும்.

நடிகர் விவேக்கின் பசுமை செயல்பாடுகள் குறித்து மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயிலிடம் பேசியதுபோது, “பசுமையை மீட்டெடுக்கும் அவரது செயல்பாடுகள் நேர்மையானவை. அதில் எந்த போலித்தனமும் இல்லை. முதன்முறையாக தூர்தர்ஷன் தொலைக்காட்டியில் ஒரு நிகழ்ச்சியில்தான் அவரைச் சந்தித்தேன். அதிலிருந்து இருவருக்கும் நட்பு உருவானது.

இயற்கை விவசாயம் சம்பந்தமாகப் பேச அழைக்கும்போதுகூட என்ன பேச வேண்டும் என்று கேட்டுவிட்டுதான் நிகழ்ச்சிக்கு சென்று பேசுவார். `எங்களை அழைப்பதைவிட நம்மாழ்வார், உங்களைப் போன்ற ஆட்களைத்தான் அழைக்கணும்’ என்று சொன்னார். `நடிகர்கள் பேசும்போது அது இன்னும் பலபேருக்கு போய் சேரும். தாராளமாக பேசுங்கள்’ என்று சொல்வேன். அவருக்கு நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கான காலம் கிட்டவில்லை.

சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது பயோ சென்னை 2012 என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் மரக்கன்றை நட்டுவிட்டு வந்து சிறுதனியங்கள் பற்றிய சிறப்புகளைப் பற்றி பேசினார். இப்படி போகும் இடமெல்லாம் மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஆலோசனைகளை வழங்குவது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரது இழப்பு தமிழ்நாட்டில் பசுமை பணிகள் மேற்கொள்வோர் மத்தியில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய உறுதுணையாக இருந்தவர் நடிகர் விவேக்” என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யாவும் விவேக்கின் பணியை நினைவுகூர்ந்துள்ளார்.

-விகடன்
2021.04.17

தமிழ் மக்களின் வாழ்வோடு உன் நகைச்சுவை, தமிழ் எப்போதும் கலந்திருக்கும்

1980-83 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தபோது, கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் மூத்தவர் விவேக். ஓவியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள் என்று இருந்த அப்போதைய கல்லூரியின் கலைக்குழுவில்தான் விவேக்கோடு நிறைந்த நட்பு.

அதற்கும் முன்னால் விவேக்கின் எழுத்து, கல்லூரி ஆண்டு மலரின் மூலமாக அறிமுகம். மயிர்ப்படகு என்பது அந்தக் கவிதையின் தலைப்பு என நினைக்கிறேன்…
எங்கள் ஐயா சுதானந்தா எங்களையெல்லாம் எப்போதும் இழுத்துக் கொண்டு அலைவார். புதிய புதிய கருப்பொருள்களை, உத்திகளை, உருவாக்க முறைகளை முன் வைப்பார். நாங்கள் அப்போது, சுவர்ப் பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு பெரிய போர்டில் கவிதை, ஆக்கங்களை, புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றோடு தாளில் வண்ண வண்ணமாக எழுதி ஒட்டி வைப்போம். அதிலும் விவேக் சிறப்பாகப் பங்கெடுப்பார். மாணவர்களின் படைப்பாக்க ஆற்றலை வளர்த்தது அந்தச் சுவர்ப் பத்திரிக்கை.

அப்படித்தான் அப்போது வந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடந்த பல்வேறு கலை நிகழ்வுகளில் நாங்கள் இணைந்து பங்கேற்றுக் கலக்கினோம்…
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய “Around world in 80 days” நூலைப்போலவே நூலின் தலைப்பு ரொம்பப் புகழ் பெற்றது. எங்களை அந்தத் தலைப்பு ரொம்பவே அந்த நேரம் ஈர்த்தது. அதனை ஒட்டி, எங்கள் கல்லூரிக் கலைக்குழு “Around Madurai in 15 Minutes” என்றொரு நாடகத்தை உருவாக்க நினைத்தது. அதற்கு விதை போட்டவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா.

நாடகம் உருவானதே ஒரு கூட்டு முயற்சியில், அனைவரும் கல்லூரி வளாகத்தில் மெயின் ஹால் கட்டிடம் அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தடி நிழலில் வட்டாக அமர்ந்து, மதுரையின் பல்வேறு காட்சிப் படிமங்களை, சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதில் அதி சுவாரசியமாய் இருந்த, மதுரையில் கிராமத்தன்மை மற்றும் நகரத் தன்மையை வெளிப்படுத்தும், நடிப்புக்கும் வாய்ப்பளிக்கும், பார்வையாளருக்கும் சுவாரசியத்தைத் தரக்கூடியதாகச் சிலவற்றைத் தேர்வு செய்து, அதனை நாடகமாக்கினோம்.

மதுரையில் தெருவோரத்தில் லேகியம் விற்பவர்கள், டவுன் ஹால் ரோட்டில் புல்லாங்குழல் வாசிப்பவர், தெருவோரம் அமர்ந்து ஆர்மோனியம் வாசித்தபடி யாசகம் கேட்கும் கண்தெரியாத இசைஞர்கள், புரோட்டாக் கடை, நவீன இசை நிகழ்வுகள் நடக்கும் கேசி ரெஸ்டாரெண்ட் இன்றும் இதுபோன்ற சிலவற்றைறேத் தேர்ந்து அவற்றைக் காட்சிப் படிமமாக்கி, நாடக நிகழ்வாக்கினோம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பஞ்ச். கடைசியில், இசையின் உச்சம் போல, கண்தெரியாத தெருப்பாடகன் பாடலும், கோசி ரெஸ்ட்டாரெண்டில் வண்ண விளக்குகள் படபடக்க நடக்கும் நவீன ஆங்கில இசையும் மாற்றி மாற்றிக் கட்ஷாட் வடிவத்தில் அமைத்தோம்.

இடது புறம் ஸ்பாட் லைட் வெளிச்சம் தெருப்பாடகன் மீது படும் போது அவன் பாடுவான்… அப்படியே விளக்கணைந்து அந்த நொடியே வண்ணங்கள் மிளிய வலதுபுறம் கோசி ரெஸ்டாரெண்டடின் ஆங்கிலப் பாடகன் பாடுவான்… இரண்டு மூன்று முறை இது மாறி மாறி வேகமெடுக்கும்…
தெருப்பாடகனாக நடித்தது நான். ஆங்கில இசைஞனாக நடித்தது விவேக்.

அதற்கான ஒத்திகை மூன்று நாட்கள் மெயின் ஹாலில் நடந்தது. மெயின் ஹால் முழுக்க அவரவர் பாத்திரங்களை ஆங்காங்கே நடித்தும், படித்தும், பாடியும் அசைந்தும் கொண்டிந்தனர். எனக்கு, தியாகராஜ பாகவதரின் “தீன கருணா கரனே நடராஜா நீல கண்டனே…” பாடலை மனப்பாடம் செய்யச் சுதானந்தா சொல்லியிருந்தார். அதனையும், ஆர்மோனியம் வாசிப்பது போன்ற பாவனை செய்து கொண்டே பாட வேண்டும். பாகவதர் குரல் உச்சஸ்தாயி… என்றாலும் அந்த வயதில் கத்திக் கத்தி… பாகவதர் போல ஒரு ஸ்தாயியை நானும் தொட்டுப் பாட ஆரம்பித்தேன்…

நாடக நிகழ்வின் உச்சமாக அந்தக் காட்சி பட்டையைக் கிளப்பியது. அதிலும் விவேக் அனாயசமாக நகைச்சுவை ததும்பும் உடலசைவுடன், நவீன உடையுடன், ஆங்கில இசைப் பாடலைப் பாடி அசத்திவிட்டார். எனக்கு மஞ்சள் ஒளி ஸ்பாட் லைட்டும், விவேக்குக்குப் பல வண்ணமாய் மிளிரும் விளக்கொளியும் மாறி மாறி இசையோடு வழங்கப்பட்ட போது, பார்வையாளர்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது…

அப்புறம் கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு மதுரை அண்ணா நகரில் அப்போது விவேக் குடியிருந்த வீட்டுக்கு ஒரு முறை நண்பர்களோடு சென்றோம். அதற்கப்புறம் ஒரு முறை நேரில் பார்த்தது.

அளவுக்கதிமாக நடிப்புத் தாகத்தில் சென்னை சென்று, பார்த்த வேலையை விட்டு, ஒரு கலைஞனாக, அதுவும் நகைச்சுவைக் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி, சின்னக் கலைவாணர் என்கிற கிடைத்தற்கரிய பட்டமும் பெற்று, மேலும் மேலும் வளர்ந்த விவேக்… இப்படித் திடுதிப்பென மறைந்து போனது… என்னத்தைச் சொல்ல…

என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வோடு உன் நகைச்சுவை, தமிழ் எப்போதும் கலந்திருக்கும் நண்பா..
சென்று வா…

பசுமை மாறாத கல்லூரிக்கால நினைவுகளுடன்…

– ஓவியன் இரவிக்குமார்

Tags: