‘திராவிட இயக்கத்தின் பிதாமகன்!’ – அயோத்திதாச பண்டிதரின் 176 வது பிறந்தநாள்
– மல்லை சத்யா
100 ஆண்டுகளுக்கு முன் `தமிழன்’ என்ற வார இதழை 7 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று.
புயலின் முகங்களே… பூகம்பத்தின் விதைகளே… வணக்கம். நலம் வாழிய நலனே.
இன்று (20.05.2021) அயோத்திதாசர் பண்டிதர் அவர்களின் 176 வது பிறந்தநாள்.
தமிழகத்தில் வேத பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநித்துவம், பெண்ணுரிமை, தமிழ்மொழி உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கருத்துகளை சிந்தித்த மாபெரும் அரசியல் ஞானி அயோத்திதாசர் பண்டிதர்.
100 ஆண்டுகளுக்கு முன் `தமிழன்’ என்ற வார இதழை 7 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகை
17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியர்கள் வணிகம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து இந்த நாட்டை அடிமைப்படுத்தி கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களால் நிர்வாகம் செய்தனர்.
மதராஸ் பட்டினத்தில் 1770-களில் ஆங்கில ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட போலீஸ் துறை, தபால் துறை, படைப்பிரிவு போன்றவற்றை நிர்வகிக்கவும் இருப்புப் பாதைகள் அமைக்கவும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் பல அதிகாரிகள் பிரிட்டனிலிருந்து வந்திருந்தனர். அவர்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்பாளர்கள், தோட்டக்காரர், சமையல்காரர், வீட்டு வேலைக்காரர் போன்ற அடிப்படை வேலைகள் செய்ய உதவியாளர்கள் தேவைப்பட்டனர். இத்தகைய உடலுழைப்பு வேலைகளுக்கு முன்னேறிய சாதியினர் எவரும் முன்வரவில்லை. காரணம், வெள்ளைக்காரர்கள் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உடையவர் என்பதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. அதேவேளை, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இம்மண்ணின் மைந்தர்கள் இப்பணிகளில் அதிகளவில் தெரிவுசெய்யப்பட்டனர்.
கந்தசாமி மகன் காத்தவராயன் அயோத்திதாசர் ஆனார்
மெட்ராஸ் ராஜதானியின் ஆட்சியாளராக சர் தாமஸ் மன்றோ இருந்த நாள்களில் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகப் பொறியாளராக திரு ஜார்ஜ் ஆரிங்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி பணிபுரிந்தார். இவரிடம் உதவியாளராகக் கந்தப்பன் என்பவர் இருந்தார். ஒரு சிறந்த சித்த மருத்துவராகவும், தமிழ் இலக்கியத்தில் பாண்டியத்துவம் மிகுந்தவராகவும் இருந்தார் கந்தப்பன். இன்று உலகம் முழுவதும் பரவி உள்ள உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஏட்டுச்சுவடியை இவர்தான் பாதுகாத்து வைத்திருந்தார் என்பது பலர் அறியாதது.
மெட்ராஸ் ஆயிரம் விளக்குப் பகுதியில் மக்கிஸ் கார்டனில் வசித்து வந்த கந்தப்பனின் மகன் கந்தசாமி ஒரு சிறந்த சித்த மருத்துவர். இவருக்கு 1845-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. காத்தவராயன் எனப் பெயரிட்டனர். காத்தவராயன், பரம்பரைத் தொழிலான சித்த மருத்துவத்தைத் திறம்பட கற்று மெட்ராஸ் பிளாக் டவுன் பகுதியில் வாழ்ந்த பன்மொழிப்புலவர் அயோத்திதாசப் பண்டிதரின் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார். தன் குரு மீது கொண்ட பற்றினால் காத்தவராயன் என்ற தன் இயற்பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.
ரெட்டமலை சீனிவாசனும் அயோத்திதாசரும்
கோடைக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் அலுவல்களை மலை மாவட்டமான நீலகிரிக்கு மாற்றி அங்கு சென்று தங்கிப் பணியாற்றுவர். ஜார்ஜ் அவர்கள் உதகை செல்லும்போது அவர்களுடன் பட்லர் கந்தப்பனும் தன் குடும்பத்துடன் சென்று தன் குடும்பத்தை குன்னூரில் தங்க வைத்திருந்தார்.
இக்காலகட்டத்தில்தான் செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூர் தாலுகா கோழியலத்தில் இருந்து அயோத்திதாசரின் உறவினரான ரெட்டமலை சீனிவாசன் அவர்கள் உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் தலைவராக இருந்தார். அவரின் தங்கையான தனலட்சுமி அம்மாளை அயோத்திதாசர் திருமணம் செய்துகொண்டார்.
திராவிட இயக்கத்தின் பிதாமகன்
இன்றைய திராவிட இயக்கத்தின் பிதாமகன் அயோத்திதாசப் பண்டிதர் என்றால் அது மிகையன்று.
1881-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தலைவர் அயோத்திதாசர், தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அல்லர், அவர்கள் பூர்வத் தமிழர் என்று பதிய வேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல் அரசுக்கும் தன் கோரிக்கையை முன்வைத்தார்.
தமிழர்கள் ஆதி திராவிடர்கள் என்றும், சாதி திராவிடர்களாகப் பிரிந்து இருப்பதை உணர்ந்து ஒட்டுமொத்த மக்களுக்காகவும் சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 1890-ல் உருவாக்கினார். கிராமம்தோறும் திராவிட மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது. மக்கள் அமைப்பாய் உருவாகி அரசியல் பயிற்றுவிக்கப்பட்டனர்.
1907-ம் ஆண்டு தொடங்கி 1914 வரை ஏழு ஆண்டுகள் `தமிழன்’ என்ற வார இதழை இவர் தொடங்க, அதை தமிழ்நாடு, இந்தியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் விரும்பி வாங்கிப் படித்து வந்துள்ளனர்.
`தமிழன்’ இதழின் தொண்டு
21.10.1908-ம் ஆண்டு `தமிழன்’ இதழில் பிரசுரமான ஒரு செய்தியை இங்கே பதிவிடுவது சிறப்பு என்று கருதுகிறேன்.
`சென்னை நேஷனல் பண்டு இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் என்னும் சங்கத்து காரியதரிசிகளால் செப்டம்பர் 24 அன்று அனுப்பிய கடிதங்கள் கிடைக்கப் பெற்றோம். அதன் கருத்து என்னவெனில் தீபாவளி அன்று சகலரிடத்திலும் பணம் வசூல் செய்து மேற்கண்ட பண்டில் சேர்த்து கைத்தொழில்களை விருத்தி செய்ய வேண்டும் என்றும், இதில் ராயப்பேட்டை கிளையோரால் பணம் சேகரிப்பதற்கு சிலரை நியமித்து உள்ளதை, சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் கருத்துகளை அறிய வேண்டி இருந்தனர்.
இச்சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் 14 பேர் பிராமணர்கள், ஒரு செட்டியார், ஒரு முதலியார், ஒரு முகமதியர், 3 நாயுடு. இதில் பெருந்தகையார் பிராமணர்களாக இருக்கின்றார்கள். சில நாள்கள் சென்று செட்டியார், முதலியார், நாயுடு, முகமதியர் முதலியோர் விலகிவிட்டால் `நேஷனல் இண்டஸ்டிரியல்’ என்ற பெயரில் இருந்த போதிலும் அது `பிராமணர்கள் இண்டஸ்ட்ரியல்’ ஆக முடிந்துவிடும்.
நம் பணங்களை சேகரித்து ஒப்படைத்துவிட்டு சகல சாதிகளுக்கும் பிரயோஜனம் இல்லாமல் போகுமாயின் அது என்ன பயன்?’
என்று கேள்வி தொடுத்து சமூக நீதி வகுப்பு வாரி பிரதிநித்துவம் குறித்து சிந்திக்க வைத்துள்ளார்.
`உங்கள் சாமிகள் எமக்கு வேண்டாம்!’
`1892-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் கூடியுள்ள கூட்டத்தில் சென்னை மகாஜன சபை பிரதிகளுடன் சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் ஒரு பிரதிநிதியாய் நானும் உள்ளே உட்கார்ந்து இருந்தேன். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசிவிட்டு இறுதியாக தாழ்த்தப் பட்டோர் பிரச்னை குறித்துப் பேச்சு எழுந்தபோது, வீரராகவாச்சாரியார் எழுந்து, நீலகிரியில் இருந்து அக்குலத்தோருக்கு ஒரு பிரதிநிதி வந்து இருக்கிறார் என்று கூறினார். அவரின் கருத்தைக் கேட்கலாம் என்று சொன்னபோது, நான் எழுந்து சபையோருக்கு வந்தனம் கூறி சபாநாயகரை நோக்கி… `உலகத்தில் உள்ள சகல சாதியோருக்கும் தெய்வம் பொதுவென்றும் கோவில் பொதுவென்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அங்ஙனம் இருக்குமாயின் தாழ்த்தப்பட்டோரில் உள்ள வைணவ மதத்தவர்களை விஷ்ணுவின் கோயில்களுக்குள்ளும் சைவ மதத்தவர்களை சிவன் கோயில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது? அப்படி சேர்ப்பதானால் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடைய மாட்டார்களா? மதங்களும் பிரபலமடையும்’ என்றோம்.
எல்லோரும் எழுந்து நின்று, அப்படி கோயிலுக்குள் சேர்க்கப்படாது என்று கூச்சலிட்டார். தஞ்சாவூரில் இருந்து வந்த பிரதிநிதி சிவராம சாஸ்தியாரவர்கள் எழுந்து, `உங்களுக்கு மதுரைவீரன் சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கின்றோம். சிவன் சாமியின் விஷ்ணு சாமி உங்கள் குலத்தோருக்கு உரியது அன்று’ என்று ஆட்சேபித்தார்.
யாம் அவரை நோக்கி, `ஐயா அங்ஙனம் இருக்குமாயின் உங்கள் சாமிகள் எமக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமம்தோறும் கல்வி சாலை வைத்து நான்காவது வகுப்பு வரை இலவசக் கல்வி கற்பதற்கும், இக்குலத்து கிராமவாசிகளுக்கு ஆங்காங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்றும் காருணைதாங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவி கூறுபத்திரம் ரெக்கமென்டெசன் கொடுக்கலாமே’ என்று கூறினேன். அதை ஏற்றுக் கொண்டார்கள்’ என்று 21.10.1908-ம் ஆண்டு `தமிழன்’ இதழில் அதைப் பதிவு செய்கிறார்.
`தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர்… பௌத்தமே வழி!’
அதற்குப் பின்னர்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்ற உணர்வு எழும்பி 1898-ம் ஆண்டு ஜூலை மாதம் கர்னல் ஆல்காட் அவர்கள் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றபோது அவருடன் சென்று பௌத்தத்தின் பஞ்சசீலக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, `என் முன்னோர்கள் சமயமான பௌத்தத்துக்கு திரும்பிவிட்டேன்’ என்று பதிவு செய்கிறார். சென்னை திரும்பியவர் ராயப்பேட்டையில் `தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம்’ என்ற அமைப்பை நிறுவுகிறார். இதன் கிளைகள் சென்னை ராஜதானி முழுவதும் பரவியிருக்கின்றன.
கேரள மாநிலத்தைச் சார்ந்த நாராயண குருவை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியாதவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். அவரை ஈழவர்களின் குருவாக, ஈழவர் சாதியின் மீட்பராக உணர்ச்சிகரமாகப் பேசி முன் நிறுத்தினர். ஆனால், உண்மை நிலை மானுட மக்களுக்காகச் சிந்தித்த மெய்ஞானியும், தத்துவ பேரறிஞரும், கவிஞருமான நாராயண குருவை பொதுவான சமூக சிந்தனையாளராக அல்லாமல், மாறாக ஈழவர்களுடைய சிந்தனையாளர் என்று கூட்டுக்குள் அடைத்துவிட்டனர். இதேநிலைதான் அயோத்திதாசர் விஷயத்திலும் நடந்தது. அவரின் பன்முகத்தன்மை கொண்ட ஆற்றலை, அவர் சமூகத்தின் மீது கொண்ட சிந்தனை தளத்தின் பங்களிப்புகளை ஆராயாமலேயே, படித்து, புரிந்து, உள்வாங்காமலேயே அவரை தலித் சிந்தனையாளர் என்று சொல்லி அவரின் பன்முக ஆற்றலை சட்டென்று இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.
அம்பேத்கர், பெரியாருக்கு முன்னோடி, வழிகாட்டி
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரைவிட 34 வயது மூத்தவர் அயோத்திதாசர். எனவேதான் தந்தை பெரியார் தன்னுடைய பகுத்தறிவுப் பிரசாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடியானவர்கள் தங்கவேல் அப்பாதுரை பண்டிதமணியும் அயோத்திதாசப் பண்டிதரும் என்று சொன்னார்.
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை புரட்சியாளர் அம்பேத்கரைவிட 46 வயது மூத்தவர் அயோத்திதாசர். தலைவர் அயோத்திதாசரைப் பற்றி அறிந்து, அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காகப் பலமுறை சென்னை வந்து தகவல்களை சேகரித்து அதன்பின் அவர் வழி நடந்தார்.
பீம்ராவ் என்கின்ற தனது பெயரை அம்பேத்கர் என்று வைத்துக்கொள்கிறார். `நான் இந்துவாகப் பிறந்தாலும் நான் இந்துவாக இறக்க மாட்டேன்’ என்று சொல்லி 14.10.1956-ம் ஆண்டு புத்த மதத்தை தழுவுகிறார் அண்ணல் அம்பேத்கர் என்றால், அவர் முன்மாதிரியாகப் பின்பற்றிய தலைவர் அயோத்திதாச பண்டிதர்.
இன்றைய திராவிட இயக்கங்களுக்கும், சமுதாய இயக்கங்களுக்கும் முன்னோடியாக இன உணர்வு, மொழி உணர்வு, பகுத்தறிவுடன் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் எல்லாவற்றிலும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து வந்தவர் பண்டிதர் அயோத்திதாசர். 25 நூல்கள், 30-க்கும் மேற்பட்ட தொடர் கட்டுரைகள், இரண்டு விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை எழுதியதுடன், அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள் என்று எழுதி வந்தவர். திருக்குறளின் 55 அதிகாரங்களுக்கு உரை எழுதி வந்தவர். தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு மரணம் ஒரு முற்றுப்புள்ளியானது.
இந்துத்துவவாதிகளால் கைப்பற்றப்பட்ட துளசி மாடம்
அயோத்திதாசர் சென்னை தேனாம்பேட்டையில், பிற்பாடு மலை மாவட்டம் நீலகிரி குன்னூரில் தங்கி இடம் வாங்கி பெளத்த மடத்தைக் கட்டியிருந்தார். அதில் இரண்டு புத்தர் சிலைகள் இருந்தன. அவரின் மரணத்துக்குப் பின்னால் அதைக் கவனிக்க ஆள் இல்லாத காரணத்தால் அதைக் கொண்டு வந்து துளசி மாடத்தில் வைத்தனர். துளசி மாடம் என்பது அயோத்திதாசர் தியான அறையாகப் பயன்படுத்திய சித்த வைத்திய முகாம். அதை நடத்திக்கொண்டு மலைமாவட்டத்தின் பழங்குடியினத்தவர்களான ஆதிவாசிகள், தோடர், படுகர் இன மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். அயோத்திதாசர் நடத்தி வந்த புத்த மடாலயம் துளசி மாடம் இந்துத்துவவாதிகளால் கைப்பற்றப்பட்டு அயோத்திதாசர் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. அயோத்திதாசர் மக்களுக்குச் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் மலை மாவட்டம் நீலகிரியில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும், சித்த வைத்திய கல்லூரியை உருவாக்கி அதற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என்பது மக்களுடைய வேண்டுகோள்.
வாழ்கிறார் திசைகாட்டும் தீபமாக
அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் மே மாதத்தில் பிறந்தார். அதே மே மாதத்தில் 5. 5. 1914-ல் அவர் உலக வாழ்க்கையை துண்டித்துக் கொண்டார். அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களில் ஒருவர். தென்னிந்தியாவில் சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர். தமிழன் என்ற அடையாளம் தந்தவர். திராவிடன் என்ற கட்டமைப்பை உருவாக்கியவர். அவரின் அறிவு ஞான ஒளி 5. 5.1914-ல் அணைந்துபோனது. ஆனால் இன்றும் திசைகாட்டும் தீபமாக விளக்கிக் கொண்டிருக்கின்றார்.
வாழ்க அயோத்திதாசப் பண்டிதரின் புகழ்!
-விகடன்
2021.05.20