ஒரு மகளின் நினைவுக் குறிப்புகள்…

-சு. அருண் பிரசாத்

சின்ன வயசுல இருந்தே கதைள்னா எனக்கு ரொம்ப விருப்பம்… தேடித் தேடி வாசிப்பேன். பொட்டலம் மடிச்சிருக்க காகிதத்துல கூட என்ன இருக்குனு வாசிப்பேன். இந்த வாசிப்பு ஆர்வம் ராஜபாளையம் காந்தி கலை மன்றம் நூலகத்துல இருந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்குனது மூலமா விரிவடைஞ்சது. அப்படித் தான் ‘அப்பா’ கி.ரா.வோட ‘கோபல்ல கிராமத்து மக்கள்’ நாவல் வாசிச்சேன்… அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே ‘உங்களைச் சந்திக்க விரும்புறேன்’ன்னு அவருக்கு ஒரு போஸ்ட் கார்டு அனுப்புனேன்” என்று கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனுடனான தன் முதல் அறிமுகத்தில் இருந்து பேசத் தொடங்குகிறார் பாரத தேவி!

கி.ராவுக்குப் பிறகு கரிசல் காட்டிலிருந்து முளைத்து வந்த இன்னொரு படைப்பாளி பாரத தேவி. ராஜபாளையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த இவர் தனித்தும், கி.ரா.வுடன் இணைந்தும் ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார். தான் ‘அப்பா’ என்று அழைத்த கி.ரா.வின் மறைவையொட்டி அவர் குறித்த தன்னுடைய நினைவுகளை பாரத தேவி பகிர்ந்துகொள்கிறார்.

“என்னோட லெட்டருக்கு அவர் பதில் போட்டிருந்தார். எந்தச் சிரமமும் இல்லாம அவர் வீட்டுக்கு வர்றதுக்கான விலாசத்த அதுல எழுதிருந்தார். என் கணவர், மகன், நான் மூணு பேரும் முதல்முறையா அவரைப் பாக்க இடைசெவலுக்குப் போனோம். லெட்டர்ல அவர் எழுதிருந்த மாதிரியே ரொம்பச் சரியா அவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்க வீட்டுல இருந்த மாதிரியே அவர் வீட்டுக்கு முன்னயும் மாடுங்க இருந்துச்சு. நாங்க போன சமயத்துல ஏற்கெனவே சிலர் அவரோட பேசிட்டு இருந்தாங்க; சிலர் வந்து போறதா இருந்தாங்க. இவங்க எல்லாம் ‘கோபல்லபுரம்’ நாவல்ல வர்ற கதாபாத்திரங்களோனு நான் மனசுல நெனச்சுட்டே இருந்தேன்” என்று நினைவில் மலரும் அந்த முதல் சந்திப்பை விவரிக்கிறார்.

“நான் முதல்முறையா அவரைப் பார்க்கும்போது எனக்கு 42, 43 வயசு இருக்கும்… உங்களை நான் அப்பானு கூப்பிடலாமானு கேட்டேன். ‘எனக்குப் பசங்கதான் இருக்காங்க… மக இல்ல. கல்யாணச் செலவு, பேறுகாலச் செலவுனு எதுவும் இல்லாம ஒரு பேரனோட எனக்கு நீ மகளா கெடச்சுருக்க… உன்னைய நான் மகளா தத்தெடுத்துக்கிறேன் – எழுத்துல’னு சொன்னார். அங்க தொடங்குச்சு எங்க அப்பா-மகள் உறவு” என்று கூறும் பாரத தேவி, கி.ரா.வின் மனைவியையும் விட்டுக் கொடுக்கவில்லை.

பாரத தேவி

“கி.ரா. அப்பா ஆளுதான் பெரிய மனுஷன்… ஆனா மனசு குழந்தை மாதிரி. அம்மா மாதிரி திறமை வேற யாருக்குமே வராது… அப்பா இவ்வளவு தூரம் எழுதுனதுக்கு முக்கியக் காரணம் அம்மாவும்தான். அவங்கனாலதான் அப்பா இயங்கிட்டு இருந்தார். அப்பா சும்மாதான்” என்று கணவதி அம்மாளின் நினைவுகளைப் பகிர்கிறார் பாரத தேவி.

‘எங்க ஊரு வாசம்’, ‘நிலாவே மேகங்களை நகர்த்துகின்றன’, ‘ ஓர் இரவின் மொழிபெயர்ப்பு’ உள்ளிட்ட நூல்களோடு, கி.ரா.வுடன் இணைந்து எழுதிய ‘பெண்மனம்’ போன்ற நூல்களும் பாரத தேவியின் முக்கியப் பங்களிப்புகள். ‘கதைகள ஒழுங்கில்லாம, ஏனோ தானோனு கொண்டு போவேன்… அப்பா அதெல்லாம் பொறுமையா பார்த்து செம்மைப்படுத்திக் கொடுப்பாங்க’ என்று தன்னுடைய நூல்கள் உருவான விதம் குறித்துக் கூறுகிறார்.

“சாகித்திய அகாடமி வெளியீடான ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ பணிகளுக்காக அப்பா என்னைய பாண்டிச்சேரிக்கு வரச் சொல்லிருந்தாங்க. ‘காவ்யா’ சண்முகசுந்தரம், கழனியூரான், அப்பா, நான் எல்லாம் அந்த வேலையில ஈடுபட்டோம். ஆனா, தொடக்கத்துல இதுசார்ந்து அவங்க பேசுற, சொல்ற எதுவுமே எனக்குச் சுத்தமா புரியவே இல்ல. அப்பாட்ட போய் நான் விலகிக்கிறேன்னு சொன்னேன்… ‘நான் இருக்கும்போது நீ ஏன்டா கவலைப்படுற’னு சொல்லி துணையா இருந்தாங்க” என்று அந்த முக்கியக் கதைக் களஞ்சிய உருவாக்கப் பணியில் தான் இணைந்தது குறித்துக் கூறுகிறார்.

அப்பாவும் மகளும் அறிமுகமான காலத்திலிருந்தே கடிதம் எழுதுவதைத் தவறாமல் கடைபிடித்திருக்கின்றனர். ‘மகளுக்கு அப்பா எழுதிய கடிதங்கள்’ என்ற தலைப்பில் அந்தக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று பெருமையாகக் கூறுகிறார் பாரத தேவி.

“அம்மா இறப்பதற்குக் கொஞ்ச நாள் முன்ன, என் கணவரைப் பார்க்கணும்னு பாண்டிச்சேரிக்கு அப்பா வரச்சொன்னார். பிறகு, தொடர்ச்சியா போன்ல பேச முயற்சி பண்ணுவேன். ‘என்னால பேச முடியலடா’னு அப்பா போன்ல சொல்லுவார்.

அம்மா இறப்புக்குப் போயிருந்தபோதுதான் அவர் எவ்வளவு தளர்ந்துபோய்ட்டார்னு தெரிஞ்சது. தானே நடந்துவர்ற மனுஷன அப்போ தூக்கிட்டு வந்தாங்க. ‘எப்பிடி இருக்கேன் பாத்தியாடா…’னு அப்பா என்னைப் பார்த்துக் கேட்டாங்க. அதுதான் நான் அப்பாட்ட கடைசியா பேசினது!” என்று மௌனமாகிறார் பாரத தேவி.

Tags: