’எங்கேயும் எப்போதும்’ எம்.எஸ்.வி! – ஜுலை 14: எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள்
-வி. ராம்ஜி
ஒருகாலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள். மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினார்கள் மக்கள். அவர்… எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன்.
கேரளாவில் பிறந்து, தமிழகத்தில் மையம் கொண்ட எம்.எஸ்.வி.யின் இசை, தனி ராஜாங்கமே நடத்தியது. தமிழ்த் திரையுலகில், கர்நாடக் சங்கீதம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், கர்நாடக சங்கீதத்தைக் கூட, ஜூஸ் போட்டுக் கொடுத்தார் எம்.எஸ்.வி. அதிலிருந்துதான், தமிழ் சினிமா இசை, இன்னும் போஷாக்கானது.
ஆரம்பகட்டத்தில், ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்து வந்தார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் டைட்டிலில் பெயர் போடும் போதே, கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள்.
பிறகு, எம்ஜிஆர், ஜெயலலிதா முதன்முதலாக சேர்ந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், இந்த இரட்டையர்கள் இணைந்து இசையமைத்த கடைசிப்படமானது. பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று தனியே இசையமைத்தார். முன்னரும் சரி… பின்னரும் சரி… வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவரின் பாடல் நம்முடன் சேர்ந்தே பயணித்தது; பயணித்துக் கொண்டிருக்கிறது.
இப்போதைய நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் தந்தை எம்.ஆர்.சந்தானம், சிவாஜியை வைத்து தயாரித்த, பீம்சிங் இயக்கிய ‘பாசமலர்’ திரைப்படம்தான், இன்றுவரை அண்ணன் தங்கைக் கதைக்கான டெம்ப்ளேட் இலக்கணம். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களிலும் ஓர் தனித்துவத்தை இசையில் தவழ விட்டிருந்தார்கள் மெல்லிசை மன்னர்கள். உச்சபட்சமாக, ‘மலர்ந்தும் மலராத…’ பாடலைக் கேட்டால், இன்றைக்கும் அழுதுவிடுவார்கள், அண்ணன் தங்கச்சிகள். ‘அம்மம்மா… தம்பி என்று நம்பி…’ என்கிற ‘ராஜபார்ட் ரங்கதுரை’ பாடல் இன்னொரு சோகம்; சுகம். ‘பச்சை விளக்கு’ படத்தின் ‘ஒளிமயமான எதிர்காலம்’ பாடல், அப்படியொரு நம்பிக்கை ஒளியை நம் வாழ்வில் பாய்ச்சும் இனியதொரு பாடல்.
‘புதிய பறவை’ படத்தில் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ நம்மை ரசிக்கவைக்கும். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல், நம்மைக் கிறங்கடிக்கும். ‘எங்கே நிம்மதி’ பாடல், நம்முடைய விரக்திக்கும் சோகத்துக்குமான மருந்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்றெல்லாம் தொடங்கி, கமல், ரஜினி வரைக்கும் எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்து அசத்தினார் எம்.எஸ்.வி. எல்லா இயக்குநர்களுக்கும் எல்லா நடிகர்களுக்குமான வெற்றியில் தன் இசையாலும் பங்கு போட்டுக்கொண்டார். அப்போது பாட்டுப்புஸ்தகம் வாங்கி, அந்தப் பாடலை மனனம் செய்தார்கள் ரசிகர்கள். பிறகு, ரிக்கார்டரும், டேப் ரிக்கார்டர் கேசட்டும் சக்கைப்போடு போட்டன.
இயக்குநர் ஸ்ரீதரும் கே.பாலசந்தரும், எம்.எஸ்.வியை விதம்விதமாக, ரகம்ரகமாகப் பயன்படுத்தினார்கள். புதுப்புது இசையை கேட்டு வாங்கினார்கள். அவரும் சளைக்காமல், முழு ஈடுபாட்டுடன் போட்டுக் கொடுத்து அசத்தினார். ‘சிவந்த மண்’ படத்தில், ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாடல்… ஏழு நிமிடப் பாடலில் நான்கைந்து டியூன்களைச் சேர்ந்து பின்னிப்பெடலெடுத்திருப்பார். ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலில் ஒரு கல்யாணப் பத்திரிகையை அப்படியே வாசிக்கவிட்டு இசைத்திருப்பார். அதேபோல், மிகக்குறைந்த வாத்தியக் கருவிகளுடன் ‘முத்துக்களோ கண்கள்’ பாடலைக் கொடுத்திருப்பார். ‘ஊட்டி வரை உறவு’ படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாடலின் ஹம்மிங் நம்மை காதல் மூடுக்குக் கொண்டுவந்துவிடும்.
எம்ஜிஆர் படங்களுக்கும் இப்படித்தான். ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலைக் கேட்டு ஆடாதவர்களே இல்லை. ‘விழியே கதை எழுது’ பாடலும் ‘கல்யாண வளையோசை’யும் நம்மை இல்லறத்துக்குள்ளேயும் காதலுக்குள்ளேயும் கொண்டு சேர்த்து, குடும்பம் நடத்த வைக்கும். ‘சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா’ பாடலின் இசைக்கருவிகள், மேற்கத்திய பாணியில் அப்படியொரு ஸ்டைலீஷாக இருக்கும். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலும் இந்த ரகம்தான். ‘நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட எத்தனையோ பாடல்கள், எம்ஜிஆரின் அரசியலுக்கு புதியபாதை போட்டுக்கொடுத்தன.
பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’யில், ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ பாடலில், மிமிக்ரிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ‘அவர்கள்’ திரைப்படத்தில், ‘இருமனம் கொண்டு’ என்ற பாடலில், அந்த ஜூனியர் பொம்மையின் குரலையும் அதன் குதூகலத்தையும் குழைத்துத் தந்திருப்பார்.
‘மூன்று முடிச்சு’ படத்தில், ‘வசந்தகால நதிகளிலே’, ‘ஆடிவெள்ளி தேடி உன்னை…’ பாடல்களில் அந்தாதி ஸ்டைல் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதற்குத் தகுந்த இசையை வழியவிட்டிருப்பார். ’வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தின் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ பாடல் புது முயற்சி. ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்றெல்லாம் காதல் மெலடி தந்த எம்.எஸ்.வி.யின் விரல்கள்… ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில், ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல பாடல்களில், புது ரத்தம் பாய்ந்து கும்மியடிக்கும்.
‘பொல்லாதவன்’ படத்தில், ‘அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்’ பாடலை இப்போது கேட்டாலும், மெல்லிசை மன்னரின் இசையுடன் வாணிஜெயராமின் குரலும் சேர்ந்து கலந்துகட்டி நம்மை ரவுசு பண்ணும். ’தில்லுமுல்லு’ படத்தின் ‘ராகங்கள் பதினாறு’ ஏழாம் சுவையென நமக்குள் இறங்கி இன்றைக்கும் தித்திக்கும்.
நாகேஷுக்கு, ‘சர்வர் சுந்தரம்’ படத்தில், ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலைத் தந்திருப்பார். நம்மையும் நாகேஷைப் போல் துள்ளிகுதித்து ஆடச் செய்திருப்பார். பாடலின் தொடக்கத்தில், நடுநடுவே, பாடலின் நிறைவில் என்று இவர் ஹம்மிங் போடுவதே ஜிம்மிக்ஸ்தான். ‘முத்துக்களோ கண்கள்’, ‘பொட்டு வைத்த முகமோ’, ‘அடி என்னடி ராக்கம்மா’ என்று இசையுடன் ஹம்மிங்கும் ஓர் கருவியாகும். ஹம்மிங்குடன் கருவிகளும் இனிய குரல்களாகும். இது எம்.எஸ்.வியின் மாயாஜாலம்.
தமிழ் சினிமா உலகில், இசையில் தனித்துவத்துடன் பீடுநடை போட்ட மெல்லிசை மன்னர், சகாப்தம். இன்னும் பல நூற்றாண்டுகளின் சாதனை. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு நாள் இன்று (14.7.2021). அவரைப் போற்றுவோம். சாகாவரம் பெற்ற அவர் பாடல்கள், நமக்கெல்லாம் வரம். வரம் தந்த எம்.எஸ்.வி.யின்… வரமாகவே வந்த எம்.எஸ்.வி.யின் பாடல்களைக் கேட்டு அகம் மகிழ்வோம்!
நெஞ்சம் மறப்பதில்லை….
– ஆர்.சுகுமார்
எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசை இமயம் 2015 ஜூலை 14-ல் மறைந்திருந்தாலும், அவரது இசை எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாது.
நிகழ்வுகள் என்று எதுவாகயிருந்தாலும் எம்.எஸ்.வி., யின் இசையை கேட்கலாம். ‘நீராடும் கடலுடுத்த நில மடந்தை கெழிலொழுகும்,’ என்ற தமிழ்த்தாய் பாடல் எம்.எஸ்.வி., யின் இசையில் உருவானதே.
உள்ளத்தால் உணர்வால் நம்மை மயக்க வைக்கும் அற்புத சக்தி எம்.எஸ்.வி., இசைக்கு உண்டு. அத்தகைய அற்புத சக்தி அந்த ஹார்மோனியம், தபேலா, கிதார், வயலின், ஷெனாய் போன்ற இசை கருவிகளுக்கு உண்டு. அவரது இசையால் நாம் மட்டுமின்றி அந்த இசை கருவிகளும் ஒருவித மயக்க நிலைக்கு சென்றிருக்கக்கூடும். ஒரு பாடலை நுாறு முறை கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது, அவர் அதே பாடலில் ஏதோ ஒன்று செய்திருக்கிறார் என்று புதிதாக நம்மால் உணர முடிகிறது.
எம்.எஸ்.வி., தனது மானசீக குருவாக இந்தி இசையமைப்பாளர் நவுஷத்தை ஏற்றார். நவுஷத் பாடல்களை கேட்பதற்காகவே இளம் வயதில் கோவையில் டீக்கடை ஒன்றில் எம்.எஸ்.வி., வேலை பார்த்ததாகக் கூறுவர்.
பாசமலர், பாலும் பழமும், பாவம் மன்னிப்பு போன்ற பாடல்களை கேட்டு விட்டு லதா மங்கேஷ்கர், ”இதுபோன்ற பாடல்களை நான் தமிழிலில் பாட ஆசைப் படுகிறேன்,” என கூறியிருக்கிறார்.
பாடல்களுக்கு மட்டுமின்றி சம்பவங்களுக்கான பின்னணி இசை, தலைப்பிற்கான இசை வடிவம் என்று ஒரே படத்திற்கு தனது வித்தைகளை காட்டியவர் எம்.எஸ்.வி.,இவரது இசையில் டி.எம். சவுந்திரராஜன், பி.சுசீலா, ஏசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் போன்ற பாடகர்கள் பாடும்போது ஒருவித மொழி சுத்தம் இருப்பதை உணர முடியும்.
பாடகர்கள் பாடல் வரிகளை உச்சரிக்கும்போது மொழியின் ஒலியில் எவ்வித சிதைவும் ஏற்படாமல் கவனித்து இசையமைத்தமையால் உன்னதமான பாடல்களை இவரால் தர முடிந்தது. இது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், இவர் செய்த மகத்தான சேவை.
எம்.எஸ்.வி., இசையமைத்ததற்காக கறாராக பேசி பணத்தை கேட்டு வாங்க மாட்டார். மார்க்கெட் ஏறி விட்டதற்காக பணத்தை எந்த தயாரிப்பாளரிடம் இருந்தும் உயர்த்தி கேட்டதில்லை. ஒரு சில நேரங்களில் படம் தோல்வியை தழுவி னாலும், இவரது பாடல்கள் வெற்றியடைந்து காலங் காலமாக ஒலித்து கொண்டிருக்கும். 1962ல் வெளிவந்த பாசம் திரைப்படம் தோல்வியடைந்து ரசிகர்களின் பாசத்தை இழந்தது. பாடல்கள் வெற்றி பெற்றன.
உலகம் பிறந்தது எனக்காக,” போன்ற பாடல்களை மறக்க முடியுமா? பெரும்பாலும் கவிஞர்கள் ‘ரேண்டம் தாட்ஸ்’ முறையில் கவிதைகள் எழுதுவார்கள். அதாவது கற்பனையில் மனம் போன போக்கில் ஆழ்ந்த கருத்துக்களில் எழுதுவது பொருள் நிறைந்ததாகவும், ரசிக்கக்கூடிய தாகவும் இருக்கும்.
”உலகம் பிறந்தது எனக்காக,ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தால் எனக்காக,” போன்ற வரிகளும் எம்.எஸ்.வி.,யின் இசையில் சேரும் போது தமிழ் திரையுலகம், சிறந்த பல்கலையாக இருந்தது என சொல்லத்தோன்றும்.
எம்.எஸ்.வி.,யின் இசைக் குழு இவரது குழுவில் தாத்தா, மகன், பேரன் என மூன்றுதலைமுறையினர் வேலை பார்த்து உள்ளனர். கிதார் வாசிக்கும் பிலிப், மாண்டலின் ராஜூ, தபேலா, மிருதங்கம் வாசிக்கும் கோபால கிருஷ்ணன், டிரம்பட் தாமஸ், ஷெனாய் சத்தியம், பியானோ மங்கல மூர்த்தி, புல்லாங்குழல் நஞ்சுன்டையா, ஹென்றி டேனியல், ஜோசப் கிருஷ்ணா போன்ற இசைக் கலைஞர்கள் எம்.எஸ்.வி.,யின் முதுகெலும்பாக இரவு பகல் பாராமல் பணியாற்றி யுள்ளனர். இவர்கள் அனைவரும் வெறும் பணத்திற்காக மற்றும் பணியாற்றவில்லை.
எல்லா ராகமும் இவருக்கு சொந்தம்
எந்த ராகத்திலும் இசையமைக்கும் சரஸ்வதி கடாட்சம் எம்.எஸ்.வி.,க்கு இறைவனால் அருளப்பட்டது என்பர். இந்துஸ்தானியில் ‘கர்ணன்’ படப்பாடல்கள், கிளாசிக்கல் பாணியில் ”மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்,” போன்ற பாடல்கள், ”என்னை மறந்ததேன் தென்றலே” என்று கஜல் வகை பாடல்கள், வெஸ்டர்ன் மியூசிக், தத்துவம், சோகம், வீரம், சகோதரப்பாசம், நட்பு, தேசப்பற்று, தாய்ப்பாசம் என்றுஎல்லாவற்றிருக்கும் பாடல்களை கொடுத்த இசை சக்ரவர்த்தி ஆவார்.
கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். 1952ல் பணம் படத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். இரட்டையர் இணைந்து 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை பணியாற்றினர். பின்னர் இருவரும் தனியாக இசைப்பயணங்களை மேற்கொண்டனர்.
உயர் பண்புகள் : தலைக்கனம் இல்லாமல்எவரிடமும் வெளிப்படையாக எளிதாக பழகும் தன்மை கொண்டவர். சிறு குழந்தை போல் பழகுவார். பிறர் மனம் புண்படாமல் பேசுவது இவரது இயல்பு. இவர் இசையமைத்த படங்களில் ஒரு நடிகரோ, நடிகையோ தொடர்ந்து நடித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்து உறுதி. இவர்களின் வெற்றி என்பதற்கான அடிப்படை கூறு இவரையே சார்ந்தது.
உழைக்க தெரிந்த இவருக்கு பிழைக்க தெரியவில்லை என்பர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ல் விழா எடுத்து எம்.எஸ்.வி.,யை கவுரவித்தார். இசைச்சக்ரவர்த்தி என்ற பட்டமும் வழங்கினார்.