கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக ‘உருவாக்கப்பட்ட’ சர்ச்சை
–ச.கிருஷ்ணசாமி
மதுரை காமராசர் பல்கலைக்கழக உயிரிதொழில்நுட்பத் துறையில்
பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்
–டி.ஆர்.கோவிந்தராஜன்
சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறையில்
பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்
சீனாதான் கொரோனா தொற்றுநோய்க்கு காரணம் என்று ஆதாரமற்று ஊக்கமளிக்கப்பட்ட கோட்பாடுகள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுபவையாக இருப்பதால் அறிவியலும், அறிவியல் முறைகளும் காற்றில் வீசப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில் மிகவும் சரியாக, நுணுக்கமாக மனிதர்களைப் பாதித்து, அவர்களிடம் பரவுகின்ற இந்த வைரஸ் இயற்கையான பரிணாம வளர்ச்சியின் மூலமே சாத்தியம் என்கிற வாதத்தை முன்வைத்திருக்கிறோம். இந்த வைரஸ் வடிவமைத்து உருவாக்கப்பட்டது, ஆய்வகத்திலிருந்து கசிவுகள் மூலம் வெளியானது என்பது போன்று ஊகத்தின் அடிப்படையில் வெளியாகி இருக்கின்ற பல்வேறு அறிக்கைகளும், கட்டுரைகளும் அறிவியல் நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக அவை சதிக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. உயிரிபாதுகாப்பு கண்காணிப்பு என்ற போர்வையில் வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்திலிருந்து (WIV) வைரஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சில அறிவியலாளர்களும், அரசாங்கங்களும் வலியுறுத்தி வருவது உண்மையில் அவர்கள் மனநோயால் அல்லது சீனாபோபியா எனும் சீனாவிற்கு எதிரான மனநிலையால் இயக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.
இந்த உலகம் பரிணாம வளர்ச்சியால் உருவானதா அல்லது படைக்கப்பட்டதா என்ற மிகவும் பிரபலமான கேள்விக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பரிணாமத்திற்கு ஆதரவாகவும், மதவெறிக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இருந்த போதிலும் அந்தப் பழைய ‘விவாதம்’ இந்த தொற்றுநோய்க் காலத்தில் வேறொரு வடிவில் மீண்டும் தோன்றியுள்ளது. வெளவால்களிடமிருந்து இடைப்பட்ட மற்றொரு உயிரினம் வழியாக மனிதர்களிடம் கோவிட்-19 தொற்றுநோயை ஏற்படுத்துகின்ற சார்ஸ்-கோவி-2 வைரஸானது இயற்கையாகவே உருவானதா அல்லது ஹூபே மாகாணத் தலைநகரான வூஹானில் உள்ளதொரு ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டு தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ கசிய விடப்பட்டதா என்ற கேள்விகள் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.
கோவிட்-19 கடந்த நூறு ஆண்டுகளில் வந்திருக்கும் மிகவும் மோசமான தொற்றுநோய்களில் ஒன்றாக இருக்கின்றது. உலகெங்கிலும் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அதிக எண்ணிக்கையில் பறித்திருப்பதன் மூலம் பல நாடுகளிலும் உள்ள பொது சுகாதார அமைப்புகளின் பலவீனங்களை அது அம்பலப்படுத்தியுள்ளது. ஆனாலும் குறிப்பாக தரவுகளை, ஆய்வு முடிவுகளை வெளிப்படையாக, விரைவாகப் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றலையும் அது இப்போது வெளிக் கொணர்ந்துள்ளது. நேர்மாறாக இந்த பாண்டெமிக் (தொற்றுநோய்), அடுத்தடுத்து பரவி வருகின்ற தவறான தகவல்களை உள்ளடக்கிய இன்போடெமிக்கையும் (தகவல் தொற்று) நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதுபோன்ற தவறான தகவல்களால் சாரஸ்-கோவி-2 வைரஸ் இயற்கையாகவே உருவானதா அல்லது சீன அறிவியலாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு வேண்டுமென்றே பரவ விடப்பட்டதா என்பது போன்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளன.
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய ‘உயிரிகளின் தோற்றம்’ என்ற நூலில் சார்லஸ் டார்வின் பின்வருமாறு கூறியிருந்தார்: ‘பொருத்தமற்ற அனைத்து தகவமைப்புகளுடன் இருக்கின்ற கண் இயற்கைத் தேர்வு மூலம் உருவாகியிருக்கலாம் என்று கருதுவது…. மிகமிக அபத்தமானது என்று நான் தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன். முதன்முதலாக சூரியன் அசையாமல் நடுவே நின்று கொண்டிருக்க பூமி அதைச் சுற்றிச் சுழல்கிறது என்று கூறப்பட்ட அந்தக் கோட்பாட்டை மனிதகுலத்தின் பொதுப்புத்தி பொய் என்றே அறிவித்தது… எளிய மற்றும் முழுமையடையாத கண்ணிலிருந்து துவங்கி சிக்கலான, முழுமையான கண் வரையிலும் பல தரத்திலான கண்கள் இருப்பதாகவும்…இயற்கைத் தேர்வாலேயே முழுமையான, சிக்கலான கண் உருவாக முடியும் என்று நம்புவதில் இருக்கின்ற சிரமம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றாலும், அது கோட்பாட்டை நிலைகுலைய வைப்பதாகக் கருதக்கூடாது என்றே பகுத்தறிவு என்னிடம் கூறுகிறது.’
முழுக்க சந்தர்ப்பவாதிகளாகவே இருக்கின்ற வைரஸ்கள் அசாதாரண சூழ்நிலைகளையும், தங்களுடைய ஓம்புயிரிகளின் பலவீனங்களையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பிற விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உயிரியல் வெளிகளுக்குள் நுழையும் மனிதர்கள் அந்த வெளிகளை ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம் வைரஸ் நோய்க்கிருமிகளை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்களுக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள். தங்களைப் பாதிப்பதற்கான அதிக வாய்ப்புகளை அதன் மூலம் வைரஸ்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட வைரஸ் தன்னுடைய இருப்பிடத்திலிருந்து மனிதர்களுக்குத் தாவி வருகின்ற துல்லியமான பாதை பெரும்பாலும் அதிர்ஷ்டவசமானதாகவே இருக்கிறது. அந்தப் பாதையைக் கண்டறிவது மிகவும் கடினமாகவும், சில சந்தர்ப்பங்களில் முடிவை எட்ட முடியாததாகவுமே அமைந்து விடுகின்றது.
1918 இன்ஃப்ளூயன்சா தொற்றுநோய்
1918ஆம் ஆண்டில் உருவான இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் ஸ்பெயின் காய்ச்சல் என்றே அப்போது பிரபலமாக இருந்தது. ஆனால் அதன் தோற்றம் உண்மையில் ஸ்பெயினில் நடந்திருக்கவில்லை. அது அமெரிக்காவில் கான்சாஸில் உள்ள ஹாஸ்கெல் கவுண்டியில் முதன்முதலாக அறியப்பட்டது. பிறகு உலகெங்கும் சுமார் ஐம்பது கோடி மக்களைப் பாதித்தது. ஐந்து கோடிப் பேர் அதன் விளைவாக இறந்து போயினர். தற்போது அது பறவையிலிருந்து தோன்றிய எச்1என்1 வைரஸ் மரபணுக்களால் உருவானதாக அறியப்படுகிறது. அந்த வைரஸ் பறவைகளிடமிருந்து தோன்றுகின்ற – விலங்கிலிருந்து வருகின்ற (ஜூனோடிக்) – வைரஸ் என்று கருதப்படுகிற போதிலும் அதன் சரியான தோற்றம் குறித்து இன்னும் உறுதியாக நிறுவப்படவில்லை. அதற்குப் பின்னர் அதேபோன்ற பல இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுநோய்கள் – 1958 (H2N2), 1968 (H3N2), 2009 (H1N1 pdm09) – வந்திருக்கின்றன. 1992ஆம் ஆண்டு தோன்றிய யூரேசிய ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் மரபணுத் தொடர் பிரிவைக் கொண்டிருந்த H1N1 pdm09 வைரஸானது ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா (பன்றிக் காய்ச்சல்) என்றும் அழைக்கப்பட்டது. H1N1 pdm09 வைரஸ் புழக்கத்தின் முதல் பன்னிரண்டு மாதங்களில் அந்த வைரஸால் ஏற்படுத்தப்பட்ட சுவாசம் தொடர்பான சிக்கல்களால் உலக மக்கள்தொகையில் 0.001 சதவீதம் முதல் 0.007 சதவீதம் பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வைரஸ் எங்கிருந்து தாவியது? அதற்கென்று எந்தவொரு இடைநிலை ஓம்புயிரியும் இருப்பதாக இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை. நல்லவேளையாக அந்த நிகழ்விற்கு ஆய்வகக் கசிவு சதிக்கோட்பாடு என்று எதுவும் உருவாக்கப்படவில்லை.
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற (Highly Pathogenic Avian Influenza – HPAI) பறவைக் காய்ச்சல் வைரஸான A(எச்5என்1-H5N1) ஹாங்காங்கில் கோழிகளுக்கு மத்தியில் பரவிய போது முதன்முதலாக மனிதர்களிடம் 1997ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகின்ற எச்5என்1 பல்வேறு நேரங்களில் குறிப்பாக 2003 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகின்ற பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் (Low Pathogenic Avian Influenza Viruses – LPAIV) பொதுவாக அவற்றின் இயல்பான பறவை ஓம்புயிரிகளில் அறிகுறியற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த LPAIVகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்ற நோய்க்கிருமி வடிவங்களாக (HPAI) உருவாகி பறவைகள் மற்றும் மனிதர்களை பேரழிவு விளைவுகளுடன் பாதிக்கக் கூடும். நேர்மறை மின்னாற்றல் கொண்ட லைசின் (K) மற்றும் ஆர்ஜினைன் (R) போன்ற பல அமினோ அமிலங்களுடனான பக்கச் சங்கிலிகளை ஹீம்அக்ளூட்டினின் பிளவு தளத்தில் பெறுவதன் மூலம், அந்தப் பக்கச் சங்கிலிகளில் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஹைட்ரஜன்களைக் கொண்டு காரங்கள் பலவற்றைக் (பாலிபேசிக் – polybasic) கொண்ட சிறப்புக்கூறு உருவாகிறது. மனித ஓம்புயிரியில் உள்ள புரதங்களைப் பிளவுக்குள்ளாக்குகின்ற ஃபுரின் (furin) போன்ற நொதிகளால் (புரோட்டியேஸ்) அந்த பாலிபேசிக் சிறப்புக்கூறு (RERRRKKR) பிளவுபடுத்தப்படுவதன் மூலம் LPAIV முன்னோடிகள் HPAI வைரஸ்களாக மாறுவதற்கு வழிகிடைக்கிறது. அத்தகைய புரதப் பிளவு உடல்நலம் மற்றும் நோய்கள் தொடர்பான ஏராளமான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதாக இருக்கிறது.
பாலிபேசிக் சிறப்புக்கூறு உள்ள ஏராளமான புரதங்களை பரவலாக வெளிப்படுத்தப்படுகின்ற புரோட்டியேஸான ஃபுரின் பிளக்கிறது. பாலூட்டிகளில் இந்த ஃபுரினின் அடிமூலக்கூறுகளாக சைட்டோகைன்கள், ஹார்மோன்கள், வளர்ச்சி காரணிகள், ஏற்பிகள் உள்ளன. வைரஸ் நோய்க்கிருமிகள் மனித செல்களுக்குள் நுழைவதற்கு பொதுவாக அந்த செல்களில் உள்ள ஏற்பியுடன் வைரஸ்கள் பிணைக்கப்பட வேண்டும். செல்களில் உள்ள ஏற்பியுடனான அந்த பிணைப்பே வைரஸ் தொற்றக்கூடிய செல்களின் வகையைத் தீர்மானிக்கின்றது. ஏற்பியுடனான பிணைப்பு பெரும்பாலும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்ற வைரஸின் புரதத்தில் ஏற்படுகின்ற புரதப் பிளவுகளாலேயே மேம்படுத்தப்படுகிறது. செல்களுக்குள் நுழைந்த பின்னரே இனப்பெருக்கம் செய்து வைரஸால் தனக்குத் தேவையான புரதங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதால், ஓம்புயிரியில் உள்ள புரோட்டியேஸ்களை அது பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ஃபுரினின் எங்கும் நிறைந்த தன்மையைப் பயன்படுத்தி ஏராளமான வைரஸ் நோய்க்கிருமிகள் தங்களுடைய தீவிரத் தன்மையையும், பரவலையும் மேம்படுத்திக் கொள்கின்றன என்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சார்ஸ்-கோவி-2இல் இருக்கின்ற ஃபுரின் பிளவுதளமே சதிக்கோட்பாடுகளுக்கான மையப்பகுதியாக, ‘முடிவான ஆதாரம்’ என்பதாக அழைக்கப்படுகிறது.
எச்ஐவி தொற்றுநோய்
நியூயார்க் நகரத்திலிருந்து 1981ஆம் ஆண்டில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட, எய்ட்ஸ் எனப்படும் ‘கையகப்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி’ இதுவரையிலும் சுமார் மூன்றரைக் கோடி மக்களைக் கொன்றுள்ளது. சமீபத்திய வரலாற்றில் தோன்றிய மிகவும் அழிவுகரமான தொற்று நோய்களில் ஒன்றாக அது மாறியிருப்பதற்கான காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ள ரெட்ரோவைரஸ் இப்போது ‘மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸ் வகை 1’ (எச்ஐவி-1) என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் விலங்குகளிடமிருந்து எச்ஐவி-1இன் தோற்றம் (ஜூனோடிக்) குறித்து தெளிவு ஏற்பட்டிருக்கவில்லை. கடின உழைப்பு மற்றும் வெறுமனே அதிர்ஷ்டத்தால் மட்டுமே அது கண்டறியப்பட்டது.
எச்ஐவி-1 மரபணு வரிசை மற்றும் அமைப்பில் சிம்பன்ஸிகளில் காணப்படும் வைரஸ்களை (சிமியன் நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்-SIVcpz எஸ்ஐவிசிபிஇஜட்) ஒத்ததாகவே இருக்கிறது. இருப்பினும் SIVcpz நோய்த்தொற்று காட்டு-வாழ் விலங்குகளில் மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும் எய்ட்ஸ் தொற்று சிம்பன்சிகள் இருந்த ஆப்பிரிக்க புவியியல் பகுதிகளில் ஆரம்பத்தில் காணப்படவில்லை. அது மட்டுமல்லாது எச்ஐவி-1, எஸ்ஐவிசிபிஇசட் ஆகியவற்றிற்கிடையில் இருந்த வேறுபாடுகளும் அந்த வைரஸ்களுக்கான இயற்கையான ஓம்புயிரிகள், எச்ஐவி-1க்கான இருப்பிடமாக சிம்பன்சிகள் இருக்கின்றன என்ற கருத்துகளின் மீது சந்தேகங்களையே ஏற்படுத்தின. SIVcpz மற்றும் எச்ஐவி-1க்கான இயற்கையான ஓம்புயிரி இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், வேறொரு உயர்பாலூட்டி (பிரைமேட்) இனம் ஓம்புயிரியாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக 1999ஆம் ஆண்டு அந்த இணைப்பு நிறுவப்பட்டது. பான் ட்ரோக்ளோடைட்டஸ் ட்ரோக்ளோடைட்டஸ் உயிரினம் சேர்ந்த சிம்பன்சி குட்டி (மரிலின் என்று பெயரிடப்பட்டது) ஆப்பிரிக்க காடுகளில் பிடிபட்டது. பின்னர் ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு அது கொண்டு செல்லப்பட்டது. அந்த பெண் சிம்பன்சியின் ரத்தம் எச்ஐவி கிருமிகளைக் கொண்டிருக்கவில்லை. 1985ஆம் ஆண்டில் 98 சிம்பன்ஸிகளிடம் நடத்தப்பட்ட சீரம்வழி கணக்கெடுப்பின் போது, எச்ஐவி-1க்கு எதிரான அதிக அளவு ஆன்டிபாடிகள் மரிலினிடம் இருப்பது கண்டறியப்பட்டது. இறந்து பிறந்த இரட்டையர்களைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே மரிலின் இறந்து போனது. உறைய வைக்கப்பட்ட மண்ணீரல் மற்றும் நிணநீர் திசுக்களின் மாதிரிகளில் 1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை பகுப்பாய்வு, இப்போது எச்ஐவி-1 உடன் நெருக்கமாக இருக்கின்ற SIVchzptt எனப்படும் வைரஸ் இருப்பதைக் காட்டி, அதன் ஜூனோடிக் தோற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
செல் சவ்வுடன் வைரஸ் உறைகளின் இணைவை எச்ஐவி-1 வைரஸின் உறையில் உள்ள புரதம் ஏற்படுத்தித் தருவதன் மூலம் தொற்றுநோயைத் தொடங்கி வைக்கிறது. இந்த நிகழ்விற்கு இரண்டு பகுதிகளை இணைக்கின்ற பகுதியில் உள்ள பாலிபேசிக் சிறப்புக்கூறில் வைரஸ் உறை புரதம் ஃபுரின் போன்ற ஓம்புரியின் புரோட்டியேஸ்களால் பிளவுபடுத்தப்பட வேண்டும். சார்ஸ்-கோவி-2 மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற சதிக்கோட்பாட்டை தூக்கி நிறுத்துகின்ற முயற்சியில், தேசிய சுகாதார நிறுவனங்களைச் (NIH) சார்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அந்தோனி ஃபௌசி ‘கோவிட்-19ஐ உருவாக்கப் பயன்படுத்தப்படும் எச்ஐவி கூறுகளின் காப்புரிமையை வைத்திருக்கிறார்’ என்று கூறப்படுகிறது.
சார்ஸ் தொற்றுநோய்
சார்ஸ்-கோவி என்றழைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைரஸால் 2002 நவம்பர் முதல் 2003 ஜூலை வரையிலான காலகட்டத்தில் தோன்றிய மிகவும் மோசமான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) தொற்றால் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் எட்டாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2003 மே மாதத்தில் ஹாங்காங்கில் உள்ள ஈரச் சந்தையில் எடுக்கப்பட்ட இருபத்தைந்து விலங்குகளின் மாதிரிகளில் கொரோனா வைரஸ் மூன்று மாஸ்க்ட் பாம் சிவெட்கள், ஒரு ரக்கூன் நாய் மற்றும் இரண்டு சீன ஃபெரெட் பேட்ஜர்களில் இருந்தது. அதன் மரபணு வரிசை 99.8 சதவிகிதம் மனித சார்ஸ்-கோவியை ஒத்ததாக இருந்தது. பாம் சிவெட் வர்த்தகர்கள் சார்ஸ் போன்ற வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததை சீரம் வழி மற்றும் தொற்றுநோயியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டின. 2003 பிப்ரவரி நடுப்பகுதியில் சார்ஸ் ஹாங்காங்கை அடைவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஹாங்காங்கில் ஆரோக்கியமான நபர்களில் சிறுபகுதியினர் சார்ஸ்-கோவி தொடர்பான வைரஸ்களின் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக 2004ஆம் ஆண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2005ஆம் ஆண்டில் சார்ஸ் போன்ற வைரஸ்களின் இயற்கையான இருப்பிடங்களாக வௌவால்கள் இருப்பதை இரண்டு ஆய்வுக் குழுக்கள் நிரூபித்தன. இப்போது விலங்கிலிருந்து மனிதனுக்கு, விலங்கிலிருந்து விலங்குக்கு, மனிதனிடமிருந்து மனிதனுக்கு, மனிதனிடமிருந்து விலங்குக்கு என்று சார்ஸ்-கோவியின் பரவலுக்கு நான்கு சாத்தியமான பாதைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தொற்றுநோய் தோன்றுவதற்கு அவசியமானவையாக, போதுமானவையாக இனங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் இனங்களுக்கு குறுக்காக வைரஸ் பரவுதல் (அதாவது கசிவு – ஸ்பில்ஓவர்) போன்றவை இருப்பதை சார்ஸ்-கோவியால் பாதிக்கப்படுவதாக இருக்கின்ற விலங்குகள் மீதான ஆய்வுகள் காட்டுகின்றன. கசிவு இனங்களுக்கிடையே உள்ள நீடித்த பரவுதல், வைரஸ் இணக்கம் போன்றவையே அடுத்தடுத்து நிகழ்கின்ற நோய் பரவலின் அளவு மற்றும் நோக்கத்தை தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஆஞ்சியோடென்சின்-மாற்றும் நொதியை (ஏஸ்2 -ACE2) சார்ஸ்-கோவி தன்னுடைய ஸ்பைக் புரதத்திற்கான ஏற்பியாக மனித செல்களுடன் பிணைத்துக் கொண்டு நுழைவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது. ஓம்புயிரி புரோட்டியேஸால் (ஃபுரின் அல்ல) ஸ்பைக் புரதம் பிளவுபடுகிறது. அது செல் சவ்வுடன் வைரஸ் உறைகளின் பிணைப்பு மற்றும் இணைவைச் செயல்படுத்துகிறது. பாம் சிவெட்டுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் 2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிதமான பாதிப்பின் போது மனிதர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ்களில் கண்டறியப்பட்டதைக் காட்டிலும் 2002-03 பரவலின் போது மனித நோயாளிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸில் இருந்த ஸ்பைக் புரதம் ஏஸ்2 ஏற்பியுடன் அதிகம் பிணைப்புடன் இருந்தது கண்டறியப்பட்டது. சார்ஸ்-கோவி பரவல் நிகழ்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே இதை நிறுவ முடிந்திருக்கிறது.
இருந்த போதிலும் 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மனிதர்கள், சிவெட்டுகள், சீன குதிரைலாட வெளவால்களில் செல் நுழைவுக்கு ஏஸ்2ஐப் பயன்படுத்திக் கொள்ள முடிந்த சார்ஸ் போன்ற கொரோனா வைரஸைத் தனிமைப்படுத்திக் காட்டியது. இந்த வைரஸ் (வௌவால் SL-CoV-WIV1) வௌவால் இருப்பிடத்திலிருந்தே சார்ஸ்-கோவி வைரஸ் தோன்றியது என்பதற்கான வலுவான சான்றுகளை வழங்கியது. மேலும் அந்த ஆய்வின் மூலம் மனித ஏஸ்2 உடன் இணைவதற்கு வசதியாக இடைநிலை ஓம்புயிரி எதுவும் தேவையில்லை என்றும் கண்டறியப்பட்டது. 2009ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் நடவடிக்கைக் குறிப்புகள் என்ற இதழில் வெளியான கட்டுரையில் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த குழு சார்ஸ்-கோவி புரோட்டியேஸின் செயல்பாட்டை ஆய்வதற்காக ஃபுரின் பிளவு பாலிபேசிக் தளத்தை உருவாக்கிட சார்ஸ்-கோவியை வடிவமைத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது அறியத்தக்கது.
மெர்ஸ் தொற்றுநோய்
2012 நவம்பரில் முதலில் உருவான நோய் 2013 மே மாதத்திற்குப் பிறகு ‘மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி’ (மெர்ஸ்-MERS) என அழைக்கப்படுகிறது. மெர்ஸ் கொரோனா வைரஸ் (மெர்ஸ்-கோவி) காரணமாக அது ஏற்படுகிறது. இந்த தொற்று பரவல் மத்திய கிழக்கில் தொடங்கி இப்போது சுமார் இருபத்தி நான்கு நாடுகளில் பரவி, கோவிட்-19ஐ விட குறைவான எண்ணிக்கையில் மக்களைப் பாதித்தாலும் இறப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஜூன் மாதத்தில் மெர்ஸால் நோய்வாய்ப்பட்ட மனிதரிடமிருந்து பெறப்பட்ட வைரஸின் மரபணு வரிசை, அவர் வளர்த்து வந்த ஒட்டகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுப் பெறப்பட்ட வைரஸின் மரபணு வரிசையுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்த ஒட்டகம் மனிதர்களுக்கு வைரஸ் தாவியிருக்கக்கூடிய இடைநிலை ஓம்புயிரியாக இருந்தது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு அந்த வைரஸ் பரவுவது மிகவும் அரிதானது என்று தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வு வைரஸ் பரவுதலுக்கான இடைநிலை விலங்காக ஒட்டகம் உண்மையில் இருந்ததா என்ற கேள்விகளை எழுப்பியது. மெர்ஸ்-கோவி வைரஸ் ஏஸ்2ஐ ஏற்பியாகப் பயன்படுத்துவதில்லை, ஆனால் டைபெப்டிடைல் பெப்டிடேஸ் 4 (டிபிபி 4) உடன் பிணைத்துக் கொள்கிறது. இருப்பினும் அது சார்ஸ்-கோவி-2 இல் உள்ளதைப் போன்ற ஃபுரின் பிளவு தளத்தைக் கொண்டுள்ளது, அதன் தொற்றுக்கு அதுவே உதவுகிறது.
கோவிட்-19 தொற்றுநோய்
2003ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட சார்ஸ் பரவலை அடுத்து ‘அறியப்படாத காரணங்களால் உருவான நிமோனியா’வை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட செயல்முறையைப் பயன்படுத்தி 2019 டிசம்பர் 29 அன்று வூஹானில் உள்ள உள்ளூர் மருத்துவமனைகள் கோவிட்-19இன் முதல் நான்கு நோயாளிகளை அடையாளம் கண்டு கொண்டன. வூஹானில் உள்ள கடல் உணவு மொத்த சந்தையுடன் தொடர்புடையவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தார்கள். தொற்றுநோயியல் மற்றும் காரணங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்த ஹூபே மாகாண மற்றும் வூஹான் நகர சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து வூஹானுக்கு செல்லுமாறு விரைவு எதிர்வினைக் குழு ஒன்றை சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் டிசம்பர் 31 அன்று அனுப்பி வைத்தது. வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியலாளர்கள் அந்த வைரஸின் மரபணு வரிசையை 2020ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று நேச்சர் பத்திரிகைக்கு சமர்ப்பித்த பிரதி மூலமாக சர்வதேச சமூகத்திற்குக் கிடைக்கச் செய்தனர். பிப்ரவரி 3 அன்று அந்தக் கட்டுரை இணையவெளியில் வெளியிடப்பட்டது. மனித நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரஸின் மரபணு வரிசை சார்ஸ்-கோவியை 94.4 சதவீதம் ஒத்ததாகவும், அதற்கு முன்னர் யூனானில் உள்ள குகைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட வௌவால் மாதிரிகளிலிருந்து (RaTG13) பெறப்பட்ட வைரஸை 96.2 சதவீதம் ஒத்ததாகவும் அந்த மரபணு வரிசை இருந்தது.
சார்ஸ்-கோவியுடன் இருந்த நெருக்கமான உறவின் காரணமாக, 2021 பிப்ரவரி 11 அன்று அதற்கு சார்ஸ்-கோவி2 என்று வைரஸ்களை வகைபிரிப்பதற்கான சர்வதேசக் குழு பெயரிட்டது. உலக சுகாதார அமைப்பு (WHO) அந்த நோயை கோவிட்-19 என்று அழைத்தது, முந்தைய சார்ஸிலிருந்து வேறுபட்டிருந்த அந்த நோய் பல நாடுகளுக்கும் விரைவாகப் பரவியது. உலக சுகாதார அமைப்பு அதை தொற்றுநோய் என்று மார்ச் 11 அன்று அறிவித்தது. ஏஸ்2 ஏற்பியை பிணைப்பு மற்றும் செல் நுழைவிற்காக அந்த வைரஸ் பயன்படுத்திக் கொள்வதாகவும், புரோட்டியேஸ் டிரான்ஸ்மெம்ப்ரேன் சீரைன் புரோட்டியேஸ்2 (TMPRSS2) பிளவுபடுதலுக்கு உதவியது என்றும் காணப்பட்டது.. சார்ஸ்-கோவியில் காணப்படாத ஃபுரின் புரோட்டியேஸ் பிளவு தளம் அந்த வைரஸில் காணப்பட்டது, மேலும் அந்த தளத்தில் உள்ள பிளவு வைரஸ் செல்லுக்குள் நுழைய உதவுகிறது.
இன்றுவரையிலும் இந்த நோய் உலகளவில் 17.75 கோடி நோயாளிகளையும் 38 லட்சம் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து 19.9 லட்சம் மரபணுத் தொடர்கள் பகிரங்கமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. வைரஸில் நிகழும் பரிணாம மாற்றங்களை இந்த தொடர்கள் காட்டியுள்ளன. வரலாற்றில் வேறு எந்த வைரஸோ அல்லது நோயோ இந்த அளவிற்கு நெருக்கமான ஆய்விற்கோ, பொது விவாதத்திற்கோ உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. நாம் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட நவீனத் தொடர்புகள் மூலம் கிடைத்திருக்கும் தரவுகள், பகிர்வுகளுக்கே நன்றி சொல்ல வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் முக்கிய நாடாக மாறி வருகிற, தற்போதுள்ள அதிகார மையங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்ற சீனாவிலிருந்தே இந்த வைரஸ் மற்றும் நோய் குறித்து முதல் அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனம் கொரோனா வைரஸ்கள் குறித்த நிபுணத்துவம் கொண்டிருப்பது, இந்த வைரஸ்கள் அந்தப் பிராந்தியத்தில் பரவலாக இருப்பதால் செயல்பாட்டு ஆராய்ச்சியைப் பெறுவதற்காக அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டுப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுவது போன்றவையே வலதுசாரி அரசாங்கங்கள், அறிவியலாளர்களால் பரப்பப்படுகின்ற சதிக்கோட்பாடுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றன.
அரசியல் சூழல்
இயற்கை பரிணாம வளர்ச்சியின் விளைவாக வைரஸ் உருவானதா என்ற கேள்விக்கு ஆம் என்று உறுதியாகப் பதிலளிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடனே 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவியலாளர்கள் / வைராலஜிஸ்டுகள் பலரும் இருந்தனர். ஆனால் அமெரிக்கத் தேர்தல்கள் காரணமாக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் முன்னெச்சரிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, தொற்றுநோயை தான் மோசமாகக் கையாண்டதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற வகையில் குற்றம் சாட்டி தாக்குவதற்கான எதிரி அப்போது அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்குத் தேவைப்பட்டார். இறந்து போனவர்கள் நியூயார்க்கில் புதைக்கப்பட்டது குறித்த படங்கள் ஊடகங்களில் பரவிய போது, ‘சீனா வைரஸ்’ என்றே அவர் அந்த வைரஸை அழைக்க ஆரம்பித்தார். ஹைட்ராக்ஸி குளோரோகுயினே தீர்வு என்றும் அவர் அறிவித்தார். புகழ்பெற்ற அறிவியலாளர்கள் சிலர் ஆரம்பத்தில் ஒரு சாதாரண காய்ச்சல் என்றே அந்த நோயை அறிவித்தனர். ஆனால் பின்னர் தொற்றுநோய் விளைவிக்கிற தீமைகள் தெளிவாகிய போது, ஒட்டுமொத்த உலகமும் தற்காலிகமாக குறுகிய காலத்திற்கும், நிரந்தரமாக நீண்ட காலத்திற்குமான தீர்வுகளைத் தேட வேண்டியதாயிற்று.
அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்ததும் புதிய அதிபர் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவுவது, தடுப்பூசிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். வைரஸின் தோற்றம் குறித்து அறிவியலாளர்கள் எழுப்பி வந்த கேள்வி அரசியல்மயமாக்கப்பட்டு, உருவாகி வரும் சீனாவின் ஆற்றலுக்கு எதிரான புதிய கொள்கையுடன் இணைக்கப்பட்டது. வூஹானில் உள்ள ஆய்வகத்தில் உயிரிஆயுதமாக இந்த வைரஸ் தயாரிக்கப்பட்டது என்ற மதிப்பிழந்து போன சதிக்கோட்பாடு, இப்போது அதே ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்திருக்கிறது என்று பழைய பாட்டில்களில் புதிய ஒயின் என்ற அடிப்படையில் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு ஆதரவாக என்ன சான்றுகள் முன்னிறுத்தப்பட்டன, மேலும் இப்போது என்ன செய்ய வேண்டும்? கொரோனா வைரஸ்கள் புதியவை அல்ல; குறைந்தது சில காலமாகவே அவை இருந்து வருகின்றன. கோவிட்-19க்கு எதிரான நியூசிலாந்தின் உடனடி எதிர்வினையில் முக்கியத்துவம் வாய்ந்தவராக நன்கு அறியப்பட்ட வைராலஜிஸ்டான ஜெம்மா ஜியோகேகன் ‘கோவிட்-19ஐ ஏற்படுத்துகின்ற சார்ஸ்-கோவி-2 வைரஸ் இயற்கையில் இருந்து வருகின்ற பிற வைரஸ்களுடன் நெருக்கமான தொடர்புடையது (https://www.abc.net.au/news/science/2020-04-09/how-did-coronavirus-start-where-did-bats-getcovid-19-from/12132312) இந்த வைரஸ் 2003ஆம் ஆண்டு சார்ஸைப் போன்ற பாதையை அதாவது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கலாம்’ என்று கூறியுள்ளார். ‘ஒரு வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி தொற்றுநோயை உருவாக்குமா என்ற கணிப்பில் வைரஸ்களின் அளவு, கட்டமைப்பு, அவை பரவும் பரிமாற்ற முறை ஆகியவற்றிற்கான பங்கை ஜெம்மா ஜியோகேகன் வலியுறுத்தியுள்ளார்.
ஏராளமான வைரஸ்கள் இருப்பதால் அதைக் கணிப்பது கடினம் என்று விளக்கிய ஜெம்மா ஜியோகேகன் ‘புதிதாகக் கண்டறியப்பட்ட விலங்கு வைரஸ் மனிதர்களுக்குள் தாவி தொற்றுநோயை ஏற்படுத்துமா என்று கணிப்பது…வெறுமனே சாத்தியமில்லை…” என்று கூறினார். கடந்த காலங்களில் ஐந்து கொரோனா வைரஸ்கள் உருவாகியிருப்பதாகவும், கோவிட்-19க்குப் பொறுப்பான இடைநிலை விலங்கு குறித்த தெளிவு இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல வைரஸ்களுக்கான இடைநிலை விலங்காக முயல்கள் போன்ற பண்ணை விலங்குகள் இருக்கக்கூடும் என்றாலும், உறுதியாக அதை நிறுவுவதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பொதுவாக சார்ஸ்-கோவி-2இன் மரபணு வரிசையின் தொண்ணூற்றாறு சதவீதம் வௌவால் கொரோனா வைரஸ்களில் காணப்படுகிறது. சார்ஸ்-கோவி-2இன் ஸ்பைக் புரதம் மனித செல்களுடன் தன்னைத் திறம்பட பிணைத்துக் கொள்ள முடியும் என்பது பெரும்பாலும் ஆய்வகத்தில் கையாளுவதாக இருப்பதைக் காட்டிலும் இயற்கைத் தேர்வின் விளைவாகவே இருக்கும். வைரஸின் முக்கிய ஆதாரம் வெளவால்கள், பேங்கோலின்களுடன் தொடர்புடையதாகவே தோன்றுகிறது. ஆய்வகங்களில் கிடைக்கின்ற வைரஸ்களிடமிருந்து அது முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது.
ஐக்கியப் பேரரசில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ரெட்ரோவைரஸ்-ஓம்புயிரிகளுக்கிடையிலான தொடர்புகள் குறித்த ஆய்வகத்தின் குழுத் தலைவரான ஜொனாதன் ஸ்டோய், சார்ஸ்-கோவி-2இன் மரபணு அதனுடன் நெருக்கமான உறவினரிடமிருந்து ஆயிரக்கணக்கான வேறுபாடுகளைக் காட்டுவதாகக் கூறுகிறார். ஆய்வகத்தில் இவ்வளவு பெரிய பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் நிகழ்வது மிகவும் சாத்தியமற்றது என்பதை இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட சார்ஸ்-கோவி-2 மரபணுக்களின் நியூக்ளியோடைடு வரிசையில் காணப்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த மாற்றங்கள் விலங்குகளில் கொரோனா வைரஸ்களுக்கான இருப்பிடத்தை உருவாக்கித் தந்த வெளவால் அல்லது காடுகளில் இருந்த இடைநிலை விலங்கில் நிகழ்ந்தன என்று கருதப்பட்டாலும் அது இன்னும் கண்டறியப்படாததாகவே இருக்கிறது.
குறிப்பிட்ட ஏஸ்2 ஏற்பியுடன் வைரஸைப் பிணைக்க உதவுகிற ஸ்பைக் கிளைக்கோபுரதம் இதில் மிக முக்கியமான வில்லனாகக் கூறப்படுகிறது. ஓம்புயிரியின் புரோட்டியேஸால் – ஃபுரின் அவற்றில் ஒன்றாக உள்ளது – ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் பிளவு செல்லுக்குள் நுழைவதை எளிதாக்க உதவுகிறது. அது திட்டவட்டமான தடயமாக இருப்பதாக நோபல் விருது பெற்ற டேவிட் பால்டிமோர் கூறியதாக (https://thebulletin.org/2021/05/the-origin-of-covid-did-people-or-nature-open-pandoras-box-atwuhan/) அறிவியல் பத்திரிகையாளர் நிக்கோலஸ் வேட் குறிப்பிடுகிறார். இந்த தகவலைப் பயன்படுத்திக் கொண்ட வேட் ஏற்கனவே அறியப்பட்டவற்றைத் தாண்டிய கதைகளை உருவாக்கினார். வேட் முன்வைத்த இத்தைகைய ஊகக் கருத்துக்களில் இருந்து பால்டிமோர் விலகிக் கொண்டார் (https://www.latimes.com/business/story/2021-06-08/nobel-laureate-baltimore-smoking-gun-for-the-covid-lab-leak-theory). பேராசிரியர்.பி.பலராம் 2021 ஜுன் 10 நாளிட்ட கரண்ட் சயின்ஸ் (Current Science) ஆய்விதழில் வெளியான கட்டுரையில், வேட் முன்வைத்த வாதங்களை மேம்படுத்தி வைரஸ் வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தால் கையாளப்பட்டு / வடிவமைக்கப்பட்டு கசிந்தது என்ற சாத்தியமே இல்லாத ஆய்வறிக்கைக்கு உத்வேகம் அளித்திருந்தார். ஆரம்பத்தில் இதுபோன்ற நிலைமை சதிக்கோட்பாட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. ஆயினும் அமெரிக்க அறிவியலாளர்கள் மெதுவான பரிணாமச் செயல்முறைகள் வழியாக இடைநிலை விலங்கின் மூலம் மனிதர்களை வைரஸ் அடைவதற்கு இயற்கையே காரணமாக இருந்தது என்று உடனடியாக எதிர்வினையாற்றினர். ஃபுரின் பிளவு தளத்தைப் பல வைரஸ்கள் பயன்படுத்துவதால் அது சார்ஸ்-கோவி-2க்கு என்று தனித்துவமானதாக இருக்கவில்லை. 2020 டிசம்பரில் ஸ்டெம் செல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட அனைத்து கொரோனா வைரஸ்களின் மரபணு வரிசைகள் குறித்த பகுப்பாய்வு ஸ்பைக் புரதங்களில் உள்ள ஃபுரின் பிளவு தளங்கள் கொரோனா வைரஸ்களில் இயல்பாகவே பல முறை தன்னிச்சையாக நிகழ்ந்தன என்பதைக் காட்டுகிறது.
ரைனோலோபஸ் புசிலஸ் (Rhinolophus pusillus) என்ற குதிரைலாட வெளவால்களில் பல்வகையான வைரஸ்கள் இருப்பதை (https://doi.org/10.1016/j.cell.2021.06.008) சமீபத்தில் செல் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை காட்டியது. ஒட்டுமொத்த மரபணுவிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட RaTG13 கொரோனா வைரஸ் மாதிரியைத் தவிர, RpYN06 மற்றும் RmYN02 ஆகிய இரண்டு மரபணுக்களும் ஒற்றுமையைக் கொண்டுள்ளன என்பதை அந்த அறிக்கை காட்டியது. hCoV, சார்ஸ்-கோவி-1, சார்ஸ்-கோவி-2, மெர்ஸ்-கோவி ஆகியவை குறித்து கிடைக்கக்கூடிய 1,58,118 பொது மரபணு வரிசைகளை 2021 மார்ச் மாத பயோ ஆர்கைவ் (bioRxiv) மறுபதிப்பு பயன்படுத்திக் கொண்டது. பருவகால கொரோனா வைரஸ்களின் தற்போது அறியப்பட்டுள்ள பன்முகத்தன்மை எழுபது ஆண்டு கால அளவிலானது. ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரையிலான இடைவெளியில் புதிய மரபுவழிகள் தோன்றுவதன் மூலம் அது உருவாக்கப்பட்டுள்ளது. 2020 ஜூலையில் அப்போது கிடைத்த 45,000க்கும் மேற்பட்ட சார்ஸ்-கோவி-2 மரபணு வரிசைகளை குழு ஒன்று பகுப்பாய்வு செய்தது. ஃபுரின் பிளவு தளத்தில் ஏற்பட்டிருந்த பிறழ்வுகள், நீக்குதல்களை அது காட்டியது. மனித செல்களுக்குள் நுழைவதற்கு சார்ஸ்-கோவி-2க்கு ஃபுரின் பிளவு தளம் தேவைப்படாது என்று அது முடிவு செய்தது. மனித செல்கள் வழியாகச் செல்லும் வைரஸ்கள் ஃபுரின் பிளவு தளத்தை இழக்கும் திறன் கொண்டவை என்பதையே அது காட்டியது. எனவே அது வைரஸ் தொற்றுக்கு அவசியமான தளம் அல்ல என்பதோடு புதிய வைரஸை உருவாக்க இந்த வரிசையின் செயற்கையான செருகல் தேவை என்பதையும் மிகவும் குறைவான ஈர்ப்பு கொண்டதாக்கியது. 2021 மார்ச் மாதம் பிஎல்ஓஎஸ் பயாலஜி இதழில் வெளியிடப்பட்டதொரு ஆய்வில் சார்ஸ்-கோவி-2க்கு மிகவும் நெருக்கமான வௌவால் வைரஸான RmYN02 (1976ஆம் ஆண்டில் முதல் மூதாதையரைப் பகிர்ந்து கொள்வது) வெளவால்களில் உள்ள கொரோனா வைரஸ்களுக்குள் ஏற்பட்ட மீள்சேர்க்கை மூலம் உருவானதாக, சார்ஸ்-கோவி-2ஐப் போன்ற மரபணு அம்சங்களைப் பகிர்ந்து கொள்வதாக இருக்கிறது. சார்ஸ்-கோவி-2 வெளவால்களில் உருவாகி இடைநிலை விலங்கு எதுவும் தேவை இல்லாமல் நேரடியாக மனிதர்களிடம் தாவியிருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பையே அது குறிக்கிறது.
இதுவரையிலும் கண்டறியப்படாத ‘உதவுகின்ற’ இடைநிலை இனங்கள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வரமுடியும் என்றாலும், வௌவால்களில் கொண்டிருக்கும் – மனிதர்களிடம் அல்ல – தகவமைப்பு பரிணாம வரலாற்றின் விளைவாக மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய திறன் கொண்டதாக இருந்த சார்ஸ்-கோவி-2இன் முன்னோடி உயிரினமே ஒப்பீட்டளவில் பொதுவான, பல ஓம்புயிரிகளைப் பாதிக்கின்ற திறன் கொண்ட வைரஸை உருவாக்கியது என்ற கருத்திற்கு ஆதரவாகவே கிடைத்திருக்கும் முடிவுகள் இருக்கின்றன. எனவே சார்ஸ்-கோவி-2 உடன் நெருக்கமான உறவினரைக் கண்டறிவதற்காக மாறுபட்ட வௌவால்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். அது திட்டவட்டமான ஆதாரம் இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் சார்ஸ்-கோவி-2 இயற்கையாகத் தோன்றவில்லை என்ற அவசரமான முடிவிற்கு நாம் வருவதற்கு எதிராகவே எச்சரிக்கிறது. 2021 மே 14 அன்று சைன்ஸ் இதழில் வெளியான (https://science.sciencemag.org/content/372/6543/694.1.full) கடிதத்தில் ‘போதுமான தரவு கிடைக்கும் வரை நாம் இயற்கை, ஆய்வகக் கசிவுகள் போன்ற கருதுகோள்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரமான மேற்பார்வைக்கு உட்பட்டதாக, கருத்து மோதல்களின் தாக்கத்தை குறைக்கின்ற பொறுப்புடன் வெளிப்படையானதாக, உணர்வு எதையும் சாராததாக, தரவுகளின் அடிப்படையில், பரந்த நிபுணத்துவத்தை உள்ளடக்கியதாக முறையான விசாரணை இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சதிக்கோட்பாடுகளை உறுதியாக நிராகரித்து ‘தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் தகவல் பகிர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னர் தி லான்செட் இதழ் (https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(20)30418-9/fulltext) கடிதம் ஒன்றை வெளியிட்டது. தரவு மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள பிரச்சனை அரசியல் முழக்கமாக இருக்கிறது. இதில் அறிவியலற்று சில அறிவியலாளர்களும் இணைந்துள்ளனர். சார்ஸ்-கோவி-2இன் மரபணுக்களை ஆராய்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் காடுகளில் பிற நோய்க்கிருமிகளைப் போலவே இந்த வைரஸும் தோன்றியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அமெரிக்காவில் தேசிய அளவிலான அறிவியல், பொறியியல், மருத்துவ அகாடமிகளின் தலைவர்கள் இதை ஆதரிப்பதோடு, பயம், வதந்திகள் மற்றும் தவறான எண்ணங்களை மட்டுமே உருவாக்குகின்ற சதிக்கோட்பாடுகள் வைரஸுக்கு எதிராக உலகளாவி நடைபெறுகின்ற போராட்டத்தைப் பாதிக்கும் என்று எச்சரித்திருக்கின்றனர். தவறான தகவல்கள், அனுமானங்களுக்கு மாறாக அறிவியல் சான்றுகள் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலின் அழைப்பை தாங்கள் ஆதரிப்பதாக அவர்கள் கூறினர்.
ஊக அடிப்படையிலான கோட்பாட்டாக்கம்
வழக்கமாக. ஊகங்களின் அடிப்படையிலான ஆதாரத்தை வழங்குவதே சதிக்கோட்பாடுகளில் இருக்கின்ற மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. அவை ஊகத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து தங்களுடைய சதிக்கோட்பாட்டிற்கான அடிப்படையை உருவாக்கிக் கொள்கின்றன. தங்கள் முடிவை நிரூபிக்கும் வகையில் ‘இறுதி’ உறுதியான ஒற்றை ஆதாரத்தையே அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். வூஹானில் ஏற்பட்ட அலட்சியத்தால் அல்லது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கையாலேயே கொரோனா தொற்றுநோய் உருவானது என்ற வதந்தி ‘அணு அறிவியலாளர்களுக்கான செய்திமடல்’ (Bulletin of the Atomic Scientists) என்ற இதழில் நிக்கோலஸ் வேட் வெளியிட்ட ஊகத்தின் அடிப்படையிலான ஆய்வறிக்கையைப் பயன்படுத்தியே பரப்பப்பட்டது.
‘சிக்கலான மரபுரிமை: மரபணுக்கள், இனம் மற்றும் மனித வரலாறு’ (2014) என்ற தலைப்பில் (A Troublesome Inheritance: Genes, Race and Human History) வேட் எழுதிய புத்தகத்தில் காணப்பட்ட இனவெறி குறித்து 130 அறிவியலாளர்கள் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தி நியூயார்க் டைம்ஸுக்கு (https://cehg.stanford.edu/letter-from-population-geneticists) எழுதிய கடிதத்தில் ‘மனித மரபணு வேறுபாடுகள் குறித்த நமது ஆய்வுகள் குறித்து முழுமையற்ற, தவறான விளக்கங்களைப் பயன்படுத்தி சமீபத்திய இயற்கைத் தேர்வு நுண்ணறிவுத் திறன், அரசியல் நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சியில் உலகளாவிய வேறுபாடுகளுக்கு வழிவகுத்திருப்பதாக வேட் கூறியுள்ளார். நமது ஆய்வு முடிவுகள் அவரது ஊகத்தை உறுதிப்படுத்துகின்றன என்ற வேட் குறிப்பிடுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். அந்த ஆய்வு முடிவுகள் அவ்வாறு உறுதிப்படுத்தவில்லை. வேட் முன்வைக்கின்ற கருத்துக்களுக்கு மக்கள்தொகை மரபியல் துறையில் இருந்து எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தங்களுடைய கருத்துக்களை கடந்த காலங்களில் வேட் தன்னுடைய கட்டுரைகளில் மிகவும் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று பலரும் அவரை விமர்சித்திருந்தனர்.
வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் நடைபெறுகின்ற ஆய்வுகளின் தன்மை குறித்து கூடுதல் தரவுகள் தேவைப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆய்வு நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா (உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் – என்சிபிஎஸ்) ஆகியவற்றைச் சார்ந்த அறிவியலாளர்கள் அந்த நாடுகளின் நிதியுதவியுடன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்கின்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமாகும். மிக உயர்ந்த உயிரியல் பாதுகாப்பு நிலை 4 (Biosafety Level of 4) உடன் சீனாவில் உள்ள இரண்டு ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் திட்டங்களுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறையும் நிதியுதவி அளித்துள்ளது. வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் உள்ள விபத்துக்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைப் பதிவு செய்தல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிக அளவு வெளிப்படைத்தன்மையை இந்த நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கோருவது இயற்கையானதே ஆகும்.. வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனம் இந்திய அணுசக்தித் துறையால் நிதியளிக்கப்பட்ட என்சிபிஎஸ்சில்கூட இல்லாத உயர்மட்டப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டுள்ளது, நாகாலாந்தில் என்சிபிஎஸ் அறிவியலாளர்களைக் கொண்டு நடத்தபப்டும் வௌவால் வைரஸ்கள் குறித்த ஒத்துழைப்பும் வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்திடம் உள்ளது. அதுபோன்ற ஆய்வுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் மேலும் பல நிறுவனங்களிடமிருந்து முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்து இப்போது தேவையற்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுடன் சர்வதேச அறிவியல் ஒத்துழைப்புகளைத் தகர்த்தெறியும் நோக்கத்துடனே அந்தப் பிரச்சனை வேண்டுமென்றே அரசியலாக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 எதிர்வினையின் முகமாக அமெரிக்காவில் இருந்து வரும் டாக்டர் ஃபௌசியை ஆய்வக கசிவுக் கோட்பாட்டுடன் இணைப்பதற்கு சதிக்கோட்பாட்டாளர்கள் முயற்சித்துள்ளனர். வூஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை மேற்கொண்ட ஈகோஹெல்த் அலையன்ஸ் என்ற அமெரிக்க அமைப்பிற்கு ஃபௌசியின் அலுவலகம் ஆறு லட்சம் டாலர் ஆய்வு மானியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கியது (அது இறுதியில் தேசிய சுகாதார நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது). ஆய்வக கசிவுக் கோட்பாட்டை நிராகரித்ததற்காக ஈகோஹெல்த் கூட்டணியின் ஊழியர்கள் சார்பாக விலங்கியல் நிபுணரான பீட்டர் தாஸக் 2020 ஏப்ரல் 18 அன்று டாக்டர் ஃபௌசிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
உண்மையில், டாக்டர் ஃபௌசி அதை நிராகரிக்கவில்லை. ஜூனோடிக் தோற்றம் என்ற கோட்பாட்டுடன் ஒப்பிடும்போது அது குறைவான வாய்ப்புடன் இருப்பதாகவே அவர் கூறியிருந்தார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அதிபர்கள் பலருக்கும் ஆலோசனைகளை வழங்கி வந்த பதவியில் இருந்து டாக்டர் ஃபௌசியை நீக்குவதற்கான மசோதாவை அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் கொண்டு வந்தனர்.
சதிகள் குறித்து தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது சர்வதேச ஒத்துழைப்பைக் கோருகின்ற ஆய்வுகள் குறிப்பாக வைரஸ் பிறழ்வுகள், தேவையான எதிர்வினைகள் தொடர்பான ஆய்வுகளுக்கான சூழலை அதிக அளவிலே பாதிக்கின்றது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் வைரஸைப் பற்றி கூறப்பட்டுள்ள கடுமையான கருத்துக்களைப் பட்டியலிட்டிருக்கிற (https://www.forbes.com/sites/startswithabang/2021/06/11/ask-ethan-how-can-you-be-so-sure-that-covid-19-didnt-happen-from-a-lab-leak/?sh=605eaf9b4c4e) ஈதன் சீகல் அவற்றை அறிவியல் மொழியில் கருதுகோள்கள் என்று கூட அழைக்க முடியாது என்கிறார்
1. இது வூஹானில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் ஆகும்.
2. வைரஸை உருவாக்கிய ஆய்வகத்தில் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதில் டாக்டர் ஃபௌசி நேரடியாக ஈடுபட்டிருந்தார்
3. ’‘வௌவால் பெண்மணி’ டாக்டர் ஷி.ஜெங்லி, வைரஸைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ஆய்வின் மூளையாகச் செயல்பட்டவர்
4. கொரோனா வைரஸை மாற்றியமைக்கும் செயல்பாட்டிற்காக தடைசெய்யப்பட்ட/கட்டுப்பாடற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது; அதன் விளைவாகவே கோவிட்-19ஐ ஏற்படுத்தும் வைரஸ் உருவானது.
இதுபோன்ற கருத்துகள் அனைத்தும் இந்த நோய் ஜூனோடிக் (விலங்கிலிருந்து) தோற்றம் கொண்டது என்ற கருதுகோளுடன் ஒப்பிடும்போது சாத்தியமற்றவையாகவே இருக்கின்றன.
அறிவியலாளர்கள், வைராலஜிஸ்டுகள், மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார நிர்வாகிகள் மத்தியில் இந்த தொற்றுநோய் கொண்டு வந்திருக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அசாதாரணமானது. அவர்கள் இறுதியில் டார்வின் இன்னும் செல் உயிரியல் உலகை ஆளுகிறார் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்!
மூலம்: Frontline, Jully 16 – ‘The controversy being created about the origins of the virus that causes COVID-19’
தமிழில்: தா.சந்திரகுரு