வறிய பெற்றோராயினும் பிள்ளைகளின் கல்விக்கான உரிமையை மறுப்பது குற்றம்!

எம்.ஏ.அபாஹுல்வான்

வ்வொரு மனிதனும் தம் வாழ்க்கையின் சிறுவர் எனும் பருவத்தில் இருந்து வாழ்வியல் நடைமுறைகளை ஆரம்பிக்கின்றான். ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் உறுப்புரை – 01 இன்படி 18 வயதுக்குட்பட்ட பருவத்தினர் அனைவரும் சிறுவர்கள் ஆவர். அந்த வகையில் இவ்வயதிற்கு உட்பட்டவர்களின் உரிமைகள் சரியாக பேணப்படாத போது எதிர்காலத்தில் சிறந்த சமூகம் எனும் நாமம் இல்லாது அழிந்து விடும் எனலாம்.

ஆகவேதான் சிறுவர் உரிமைகள் ஒவ்வொரு தேசத்திலும் கட்டாயம் பாதுகாக்கப்பட்டு வழங்கப்படல் மிகவும் அவசியமாகவுள்ளது. உலக வங்கியின் அறிக்கைப்படி இன்று உலகின் மொத்த சனத்தொகையில் 29.3% ஆனோர் சிறுவர்களாக உள்ளனர்.

ஐ.நா சமவாயத்தின் உறுப்புரை – 2 இன் படி ‘சிறுவர் உரிமைகள் யாவும் சகல பிள்ளைகளுக்கும் உரித்தானதாகும். இதன்பிரகாரம் உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் சாதி, மத, பேதம், நிறம், பால், மொழி, பிறப்பிடம், உடல் ஊனம், குடிவழி, அரசியல் நடைமுறைகள் போன்ற எந்தவொரு பிரிவுகளாலும் பாகுபடுத்தப்படாமல் அவர்களுக்கான உரிமைகள் சமதன்மையான முறைகளில் வழங்கப்படல் வேண்டும்.

இன்று உலகில் அதிகமான சிறுவர்கள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், வன்முறையான தண்டனைகள், சிறுவர் கடத்தல், பெற்றோரால் வேலைக்கமர்த்தப்படல், போதைவஸ்து விற்பனைக்குரிய தொழிலாளர்களாக பயன்படுத்தப்படல், உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்டு கொல்லப்படல், பிச்சை எடுக்கும் பிள்ளைகளாக மாற்றப்படல், பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தப்படல், பெற்றோர், பாதுகாவலரின் கடுமையான மற்றும் முறைகேடான தண்டனைகளும் கண்டிப்புகளும், கல்வி பெறுவதிலிருந்து தடுக்கப்படல், இடைநிறுத்தப்படல், வீட்டு வன்முறைகள் போன்ற பல்வேறு காரணிகளால் பல சிறார்கள் தினமும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் அந்நாடுகளின் உயர்வுக்கு தடைகளாக அமைகின்றன. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் அதிகமான சிறுவர்கள் பல்வேறு விடயங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

சில வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சிறுவர்களின் உரிமைகளைப் பேணும் விடயத்தில் UNESCO இன் 2020 இற்கான அறிக்கையில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அந்நாடு சிறுவர்களின் ஆர்வம், விருப்பம் போன்ற விடயங்களை மதித்து செயற்பட்டமையால் முதலிடத்தைப் பெற்றுள்ளது.எம் நாட்டைப் பொறுத்தவரை சிறார்ககளின் உரிமைகளைப் பேணுவதில் காலத்திற்குக் காலம் அரசுகள் சிறந்த முன்னெடுப்புக்களை செய்து கொண்டே வருகின்றன. இருந்த போதிலும் எம் நாட்டில் பல சிறுவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இச்சட்டங்கள் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் விரைவுபடுத்தப்பட வேண்டியவைகளாக உள்ளன.

கட்டாயக்கல்வி 5 -16 எனும் பருவத்தினருக்குரியது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான கல்விச் சட்ட நடைமுறையூடாக எம் தேசத்தை கட்டியெழுப்புவதில் சிறுவர்களுக்கு அவசியமான உரிமைகள் சாத்தியமாக்கப்படல் வேண்டும்.

ஐ.நாவின் சமவாய உறுப்புரை -03 ஆனது, ‘மேம்பட்ட நலன்களில் எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளிலும் சிறுவர்களின் நன்மைகளே முழுமுதலாக அமைதல் வேண்டும்’ என்கின்றது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பற்றிய சாசனம் குறிப்பாக நான்கு பிரிவுகளில் சிறுவர் உரிமைகள் இடம்பெறுவதாக கூறுகிறது.

1) உயிர் வாழ்வதற்கான உரிமை:

ஒரு நாட்டில் உள்ள சிறுவர்கள் உயிர் வாழ்வதற்காக அந்த நாட்டு அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள், இருப்பிட வசதிகள், உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

2) மேம்பாட்டுக்கான உரிமைகள்:

ஒவ்வொருவரினதும் தனித் திறமைகளுக்கு ஏற்ப அனைத்து சிறுவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கான உரிமையை வழங்குதல் அவசியமாகும்.

3) பாதுகாப்பு உரிமை:

உடல், உள ரீதியில் ஊனமுற்ற சிறுவர்கள், அநாதைகள், பெற்றோரை விட்டுப் பிரிந்த சிறுவர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும், துஷ்பிரயோகத்திற்கு இலக்காவதை தடுப்பதும் சிறுவர் பாதுகாப்பினை குறிப்பிடுகிறது.

4) பங்குபற்றும் உரிமை:

பங்குபற்றுதல் என்பது பிள்ளைகள் மற்றும் சிறுவர்களை சுயமாக சிந்திக்க செய்தலாகும். ஏனையோருடன் ஆக்கபூர்வமாக பழகுதல், சமுதாய நிகழ்வுகளில் தீவிர ஈடுபாடு காட்டுதல், ஏனைய சிறுவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவை இதில் அடங்குகின்றன.

மேற்கூறிய நான்கு வகையான பொதுவான உரிமைகள் மிகவும் கட்டாயம் பேணப்படல் வேண்டியவைகளாக உள்ளன.சிறுவர்களுக்கான தேவைகள் சிறப்பாக நிறைவேறும்போது அவர்களின் வளர்ச்சி மற்றும் விருத்தி சிறப்பாக முன்னேற்றமடைகின்றன.

சிறுவர்களுக்கான உணவு, உடை, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாத போது அல்லது கிடைக்காத போது அவன் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றான். எனவே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தல் மிகவும் அவசியமாகின்றது. பிள்ளைகளின் வெற்றிகரமான ஆளுமை அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவை பல விடயங்கள் உள்ளன.

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் முதன்மையானவர்களாக உள்ளனர். பெற்றோர் வறுமையாக இருந்தாலும் தம் பிள்ளை கல்வி பெறுதலை தடுத்து வேலைக்காக அமர்த்துதல் பிள்ளையின் கல்வி பெறும் உரிமை மறுக்கப்படுகின்ற ஆரம்பமான குற்றமாக அமைகின்றது. மேலும் இலங்கையின் கட்டாயக்கல்விச் சட்டத்தின்படி ஒரு பெற்றோர் தம் வறுமையால் கூட தமது பிள்ளையின் கல்வி பெறுதலை 5 – 16 வயது வரையில் நிறுத்துவது குற்றமாகவே அமைகின்றது. ஏனெனில் கல்வி பெறும் வயதில் பெற்றோரால் ஒரு பிள்ளை வேலைக்கு அமர்த்தப்படும் பட்சத்தில் அதற்குப் பின்னால் பிள்ளைக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து விடும் எனலாம்.

இந்த விடயத்தில் ஒரு பிள்ளை கட்டாயம் பெற வேண்டிய உரிமையில் பெற்றோர் மிகவும் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். மேலும் பிள்ளைகள் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகள் எதுவாகினும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். எல்லாப் பிள்ளைகளும் எம் தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள் எனும் நோக்கத்தில் கையாளப்பட வேண்டும்.

ஐநா சபையின் உறுப்புரை 14 (2) ஆனது பெற்றோர், குடும்பம், அரசு என்பவற்றின் பங்கை சிறுவர்களாகியவர்கள் ஏற்க வேண்டும் என்பதுடன் மூத்தோர்களை மதிக்கின்ற பொறுப்பும் கடமையும் அவர்களுக்குண்டு என குறிப்பிடுகின்றது.

ஆகவே சிறுவர்கள் தம் உரிமைகளை பெற்றுக் கொடுக்கின்ற பெற்றோர், குடும்பம், பாடசாலை, அரசு, அரச நிறுவனங்கள் போன்றவற்றுக்கு நன்றியுடையவருகளாக இருக்கும் வகையில் தங்களால் முடியுமான கடமைகளை செய்தல், உதவி செய்தல், மதித்தல் போன்றன அவசியம் என்பதை இவ்வுறுப்புரை வலியுறுத்துகின்றது.

பிள்ளை கல்விப் பாதையில் செல்லும் போது வகுப்பாசிரியர், அதிபர் என்போர் மிகவும் முக்கிய இடம் பிடிக்கின்றனர். குறிப்பாக பிள்ளையின் பாடசாலை வருதலை உறுதிப்படுத்தல் என்பது வகுப்பாசிரியரின் முக்கிய கடமையாகும். இதன் மூலம் Drop out நிலைமை கண்டறியப்பட்டு அதிபர் ஊடாக பிள்ளையின் தொடர்ச்சியான கல்வி பெறுதலை ஏற்படுத்த முடியும்.

அந்த வகையில் சிறார்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தலில் பெற்றோருக்கு அடுத்து பாடசாலை இருக்கின்றது. இன்று எம் நாட்டில் சுமார் 40 இலட்சம் பாடசாலை செல்லும் சிறார்கள் உள்ளனர். அதேவேளை சுமார் 4.5 இலட்சம் சிறார்கள் பாடசாலை செல்லாதவர்களாக உள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் கிராமப்புற சிறார்கள் ஆவர்.

இவ்வாறு பாடசாலை செல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கான கல்வி பெறும் உரிமை கட்டாயம் அளிக்கப்பட வேண்டியுள்ளது.மேலும் அவர்களின் வளர்ச்சி, விருத்திக்கு அவசியமான சுகாதார நலனோம்பல் விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். சிறார்களின் விருத்திப் பாதையில் பாடசாலை மிகவும் முக்கிய இடம் பிடிக்கின்றது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சிறார்கள் நன்கு கவனிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பெற்றோரால் விரும்பி வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

சில சிறுவர்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களாலும் வேறு நபர்களாலும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டின் கீழ் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளனர்.

இப்படியான சிறுவர்கள் பெரும்பாலும் யுத்தம் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பிரதேசங்கள், கிராமப் பகுதிகள், மலையக தோட்டங்கள் ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் உள்ளனர்.

இப்பிள்ளைகள் பெரும்பாலும் கடுமையான குடும்ப வறுமை, பெற்றோரின் விவாகரத்து, தாய் வெளிநாடு செல்லல், தாய் வேறு ஒரு நபரை திருமணம் முடித்தல், பிள்ளையை உறவினர் வீட்டில் வளர்க்க விடுதல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பிள்ளைகளுக்கான கல்வி பெறும் உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் இலங்கையானது சிறுவர் உரிமைகளைப் பேணுவதில் முதன்மை பெறுகின்றது. அவர்களுக்கான இலவசக் கல்வி, இலவசப் பாடநூல்கள், இலவசப் பாடசாலைச் சீருடை, பாடசாலை மதிய போசனம், கருவுற்ற தாய்மார்களுக்கான போசணைத் திட்டம், பாடசாலைகளில் இலவசமான மருத்துவ சிகிச்சை முறைகள், பாடசாலையின் சுரக்ஷா காப்புறுதித் திட்டம் போன்ற விடயங்கள் பொதுவாக எம் சிறார்களின் கல்வி பெறுதலை ஊக்குவிக்கின்ற சிறப்பான ஏற்பாடுகளாக உள்ளன.

எனினும் அரசினால் இவ்வாறான சேவைகள் அனைத்து சிறார்களுக்கும் பூரணமாக திருப்திகரமான நிலையில் கிடைக்கச் செய்வதில் மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளன. ஏனெனில் பாடசாலை செல்லாத பிள்ளைகள் தொடர்பாக மேலதிகமான கண்காணிப்புத் திட்டங்கள் அவசியமாகின்றன.

நீங்கள் ஒரு சிறுவனா ?
நீங்கள் பேச வேண்டுமா ?
‘1929’ இலக்கத்தின் ஊடாக சிறுவர் தொலைபேசிச் சேவையை அழையுங்கள்

இலங்கை தனித்துவமாக சிறுவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடுகின்றது. அந்த வகையில்…

1. சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சேவைத் திணைக்களம்

இணையத்தளம் : www.probation.lk

2. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

இணையத்தளம் :

www.childprotection.gov.lk

3. சிறுவர் மற்றும் மகளிர் செயற் பிரிவு

(இலங்கை பொலிஸ் தலைமை அலுவலகம், நுகேகொட)

4. சிறுவர் நலன்புரி மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கு பொறுப்பாகவுள்ள பிரதேச செயலக காரியாலயங்கள் போன்றன இலங்கைச் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னிற்கின்றன.

அண்மைக் காலமாக சிறுவர்கள் மீதான கவனிப்பு மற்றும் கல்வி பெறுதலில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலைகள் பல காணப்படுகின்றன. அவை தொடர்பான நிலைமைகள் ஆராயப்பட்டு பிள்ளைகளின் உரிமைகளை சீராகப் பெற்றுக் கொடுப்பதில் சிறப்பான மேலதிக ஏற்பாடுகள் புதிப்பிக்கப்பட வேண்டியுள்ளன.

உண்மையில் எந்தவொரு நாட்டினதும் எதிர்கால வளர்ச்சியும் அந்நாட்டினது தற்காலச் சிறுவர்களின் உடல் ரீதியான வளர்ச்சியிலும் கற்றல் ரீதியான விருத்தியிலும்தான் தங்கியுள்ளது எனலாம். ஏனெனில் அவர்கள் தான் நாளை உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கப் போகின்றவர்கள்.

எதிர்கால அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற இன்னோரென்ன காரணிகளைத் தீர்மானிப்பதில் இன்றைய சிறுவர்களே பிரதானமானவர்களாக இருப்பர்.

அவர்களின் ஆளுமைத்திறன், மென்திறன்கள் எந்தளவிற்கு வளர்ந்திருக்குமோ அந்தளவிற்கு அவர்களின் எதிர்கால சமூகத்தினர் இந்நாட்டின் எதிர்கால அபிவிருத்தியின் பங்குதாரர்களாக இருப்பர்.

அந்த வகையில் எமது தாய்நாடு எதிர்காலத்தில் சுபீட்சமான நிலையை அடைய வேண்டுமாயின் நிச்சயம் எம் சிறார்களின் உரிமைகள் பூரணமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது ஒரே நாடு ஒரே மக்கள் என்ற எண்ணக்கருவினூடாக எவ்வித பாகுபாடுகளுமின்றி சிறுவர் உரிமைகள் பேணப்பட வேண்டும்.

இதற்கு மிகவும் பெறுமதி வாய்ந்தவர்களாக ஆசிரியர்களும் கல்விமான்களும் அவசியமானவர்களாக உள்ளனர். அவர்கள் மூலமாக ஒவ்வொரு பிள்ளையும் அறியப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். இங்கு பிரதானமானவர்கள் ஆசிரியர்கள் ஆவர். இவர்கள் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை வாழ வைக்கும் பகுதிநேரப் பெற்றோர்(Loco parents) ஆக தொழிற்படுகின்றனர்.

குறிப்பாக வகுப்பாசிரியர்கள் தினமும் வரவுப் பதிவு செய்து நாளாந்த, வாராந்த, மாதாந்த மற்றும் வருட முடிவில் பிள்ளைகளின் வரவு தொடர்பான விடயத்தை அறியக் கூடிய நிலையில் உள்ளனர். அதன் மூலம் ஒரு பிள்ளை பாடசாலைக்கு தொடர்ச்சியாக வராமல் இருந்தால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.

பொதுவாக வகுப்பாசிரியர்கள் அதிபர் மூலம் பாடசாலையின் கட்டாயக் கல்வி குழு ஊடாக பாடசாலை வராத பிள்ளை தொடர்பான விபரம் அறியப்படல் அவசியமாகும்.

மேலும் தர வட்டம் (Grade Circle) மூலமாகவும் பிள்ளைகளின் வரவு தொடர்பாக வகுப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய பாடசாலைக் குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு அதிபர் ஊடாக அப்படியான பிள்ளைகளின் பெற்றோருக்கு தெளிவூட்டுதல், பாடசாலைக்கு வரவழைத்தல், பிள்ளையின் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதம், பாடசாலையில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியமாகின்றன.

பிள்ளையின் பெற்றோர் வறியவர்களாக இருப்பின் அதற்காக நன்கொடை நிதியினை பெற்றுக் கொடுப்பதில் அப்பிள்ளையின் பாடசாலை இனங்கண்டு உதவ வேண்டும். அப்பிள்ளைகளின் வறிய பெற்றோர்களுக்கான சுயகைத்தொழில் முறைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் சிறந்த முன்னெடுப்புக்கள் செய்யப்படல் வேண்டும்.

இந்த வகையில் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம், அதன் நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் மாணவர் சங்கம், பாடசாலை நலன்விரும்பிகளும், தொண்டு நிறுவனங்கள், கிராம நிலதாரி, பிரதேச செயலகம், அரசியல்வாதிகள் மூலமாக ஏற்பாடுகளை செய்ய முடியும்.

மேலும் இவை தொடர்பான மேலதிகமான ஏற்பாடுகளை கல்வியமைச்சு மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பாடசாலைச் சமூகம் உதவல் வேண்டும். அதாவது பாடசாலையில் கண்டறியப்பட்ட Drop out தொடர்பான பிள்ளைகளின் குடும்பப் பின்னணிக்கு உதவும் ஏற்பாடுகளை பாடசாலைக் கல்விக்கு பொறுப்பான கோட்டம், வலயம், மாகாணம் என்ற ரீதியில் Drop out தொடர்பான தகவல்கள் ஒரு சீரான முறையில் அறிக்கைப்படுத்தப்படல் வேண்டும்.

இவை துரிதமாக அரசின் கவனத்திற்கு வருடா வருடம் அறியப்படுத்தப்படுவதால் பிள்ளைகளின் கட்டாயக் கல்வி பெறுதலை உறுதிப்படுத்த உதவுகின்றது. அரசும் Drop out ஆன பிள்ளைகளை கவனமெடுப்பதில் மிகவும் ஆர்வமாகவுள்ளது. ஏனெனில் உலக வங்கியின் நிதியுதவியுடன் GEMP நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது குறிக்கோளான ‘அனைத்து சிறுவர்களுக்குமான பாடசாலைக் கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதில் அதிக கவனமெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாடசாலைச் சமூகம் பிள்ளைகளின் Drop out விடயத்தில் உரிய ஏற்பாடுகளை செய்தல் அவசியமாகின்றது. இவ்வாறு சுமார் 10155 பாடசாலைகளிலும் Drop out ஆன பிள்ளைகள் தொடர்பான விபரங்கள் சரியாக தொகுக்கப்பட்டு அப்பிள்ளைகளின் குடும்பப் பின்னணி மற்றும் ஏனைய காரணிகள் சீராக்கப்படுவதன் மூலம் சுமார் 4.5 பாடசாலை செல்லாத பிள்ளைகளின் தொகையை நிச்சயம் குறைக்க முடியும் எனலாம்.

எனவேதான் ஒரு பிள்ளை வாழுகின்ற சமூகமும் அதற்குரித்தான பாடசாலையும் அப்பிள்ளை கல்வி பெறுகின்ற உரிமையை உறுதிப்படுத்தல் அவசியமாகின்றது.

அந்த வகையில் சமூக மட்டத்தில் கிராம நிலதாரி (GS) பிரதான நபராக உள்ளார். பிரதேச செயலகம் சமூகச் சிக்கலை இனங்கானும் அரச நிறுவனமாக உள்ளது.

அந்த வகையில் பாடசாலைச் சமூகம் பிள்ளைகளின் Drop Out தொடர்பான விடயங்களை கிராம நிலதாரி, பிரதேச செயலகம் ஊடாக பகிர்ந்து பாடசாலை செல்லாத பிள்ளைகள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு உதவுதல் வேண்டும். இவ்வாறான ஏற்பாடுகள் வருடாவருடம் அரசின் கவனத்திற்கு துரிதப்படல் வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை சமூக மட்டத்திலும், பாடசாலை மட்டத்திலும் ஒழுங்குமுறையில் நாம் செய்யும் போது பிள்ளைகள் பாடசாலையில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்பார்வை ஊடாக Drop out ஆன பிள்ளைகள் மீண்டும் தொடர்ச்சியாக கற்பதற்கான உரிமை வழங்கப்படும் நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு பிள்ளையும் தொடர்ச்சியான கல்வியை பெறுவதில் அவர்களின் உரிமைகள் முழுமையாக, சீராகவும் வழங்கப்பட வேண்டும்.

இன்று ஏனைய ஆசிய நாடுகளையும் விட எம் நாட்டில் சிறுவர்கள் தொடர்பான விடயத்தில் அரசும் கல்வியமைச்சும் சிறப்பான விடயங்களை முன்னெடுக்கின்றன.

இருந்த போதிலும் தற்காலத்தில் பல சவாலான விடயங்கள் சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவதில் தடைகளாக காணப்படுகின்றன. இவை மேலும் ஆராயப்பட வேண்டியுள்ளன. அவை சிறுவர்களின் எதிர்கால சுபீட்சத்திற்கு வழிவகுக்கும் விடயங்களாக அமைதல் அவசியமாகும்.

எனவே எம் தேசத்தில் வாழ்கின்ற அனைத்து சிறுவர்களினதும் உரிமைகள் எவ்வித பாகுபாடுகளின்றி பூரணமாக பெற்றுக் கொடுக்கும் வகையில் அவர்களின் சீரான வளர்ச்சி மற்றும் விருத்திக்கேற்ப பாடசாலையின் mission, Vision ஊடாக நாட்டின் பிரதான கல்விக் குறிக்கோள்களை ( Goals ) சிறப்பாக அடையும் வகையில் அவர்களின் உரிமைகள் கட்டாயம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

அப்போதுதான் பல்லினம் கொண்ட எம் தாய்நாடு எதிர்காலத்தில் ஒரு சுபிட்சமான தேசமாக உலகில் நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆகவேதான் நாம் யாவரும் எவ்வித பாகுபாடுகளுமின்றி சிறுவர்களுக்கான உரிமைகளைப் பேணி ஒளிமயமான எம் தேச வளர்ச்சிக்கு வழிவகுப்பது மிகவும் அவசியமாகும்.

Tags: