நிருபிக்க முடியா குற்றச்சாட்டு! நிகரில்லா அடக்குமுறை!

-சாவித்திரி கண்ணன்

ரண்டாண்டு விசாரணைகள், நூற்றுக்கணக்கான ரெய்டுகள்! இது வரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

நேர்மையான ஆம் ஆத்மியின் இமேஜை சிதைக்க, பா.ஜ.க அரசு செய்யும்  மூர்க்கத்தனமே கைது! ‘அதிகார’ பாஜகவுக்கு ஏற்பட்ட அச்சமே, அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகும்! இதோ வழக்கின் முழு விவரங்கள்;

”இது தேர்தல் நேரத்தில் நடந்துள்ள மாபெரும் ஜனநாயக படுகொலை” என சர்வதேச ஊடகங்களும், தலைவர்களும் கண்டிக்கின்றனர். ஊழலின் ஊற்றுக் கண்ணாய் திகழும் பா.ஜ.கவானது, ஆம் ஆத்மியிடம் மட்டும் அடங்கா ஆத்திரம் கொள்வது ஏன்?

‘காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்துள்ள நிலையில் டெல்லியின் ஏழு பாராளுமன்றத் தொகுதிகளில் கணிசமானவற்றை அள்ளக்கூடும்’ என்ற அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து முடக்கியுள்ளது பா.ஜ.க அரசு!

இந்த விவகாரத்தை பொறுத்த அளவில், ஏற்கனவே சி.பி.ஐ. தொடுத்துள்ள ஊழல் வழக்கில், ”கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் , வெறும் செவி வழி செய்தியை (hearsay) ஆதாரமாக கொண்டு- அப்ரூவர்களின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு – எந்தவித ஆதாரமும் இல்லாமல் தொடுக்கப்பட்டுள்ளது” என நீதிபதிகள் கடுமையாகச் சாடியது நினைவிருக்கலாம்.

புதிய மதுபான கொள்கையின்படி மதுபான மாபியாக்களை ஒழித்துக் கட்டுவது, கறுப்பு சந்தைக்கு முடிவு கட்டுவது ஆகியவறை தான் ஆம் ஆத்மி செய்தது. மதுபான விற்பனையில் இருந்து அரசு வெளியேறுவது. தனியாரை அனுமதிப்பது, அவர்கள் எம்.ஆர்.பி விலையை விட குறைத்து விற்பனை செய்து கொள்ள அனுமதிப்பது என்பது வாடிக்கையாளர்க்கு அனுகூலமானவற்றைத் தான் ஆம் ஆத்மி அரசு செய்தது. அதன் விளைவாக மதுபானங்களின் விலை குறைந்தது கண் கூடான விஷயம். விலை குறைந்ததால் விற்பனையும் அதிகப்பட்டு அரசின் வருமானமும் 27 சதவிகிதம் கூடியது.

குற்றச்சாட்டு உண்மை எனில், குற்றம் சாட்டப்பட்ட  கலால் துறை அதிகாரிகள்,  மதுபான உற்பத்தியாளர்கள், வணிகர்கள், விநியோகஸ்தர்கள்  உள்ளிட்ட யாரையுமே இது வரை ஏன் கைது செய்ய முடியவில்லை.

உச்சபட்சமாக இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 6,000 கோடிகள் இழப்பு என்றது பா.ஜ.க. ஆனால், ரூ.2,800 கோடி வரை இழப்பு என சி.பி.ஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், அரசு கஜானாவிற்கு 890 கோடிகள் இலாபம் வந்திருப்பதை துல்லியமாக நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளது ஆம் ஆத்மி!

இதனால் தான் ஏற்கனவே இந்த வழக்கில் மணிஸ் சிசோடியா கைதான போது, ”லிக்கர் லாபியிடமிருந்து  குற்றப்பணம் ஆம் ஆத்மியை வந்தடைந்த தொடர்பை தெளிவாக நீங்கள் நிரூபிக்க வேண்டும். பணத்தை ஆம் ஆத்மி தலைவர்கள் பெற்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோது அவர்களை எப்படி வழக்கில் சேர்க்க முடியும்” என நீதிமன்றம் கேட்டது.

இந்தியாவை கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்ய முடிந்த பா.ஜ.கவிற்கு – எத்தனையோ மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியும், கோல்மால் செய்தும் ஆட்சி பீடம் ஏறிய பா.ஜ.கவிற்கு – தலைநகர் டெல்லியை மாத்திரம், ஆம் ஆத்மியிடம் இருந்து பறிக்க முடியவில்லை.

டெல்லி அரசின் அதிகாரங்களை பறித்தது..,

ஆளுநரை வைத்து குடைச்சல் கொடுத்தது,

ஊடகங்களை பயன்படுத்தி ஆம் ஆத்மி கட்சி மீது அவதூறுகளை பரப்பியது..

என எத்தனையெத்தனையோ முயற்சிகள் செய்தும் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவு பலப்பட்டு வருகிறதே அன்றி, பலவீனமாகவில்லை. காரணம், அரசு நிர்வாகத்தில் ஊழலின்றி உடனுக்குடன் மக்கள் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவைகள் நிறைவேற்றப்பட்டன! குடிநீர் வழங்கல், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றல், தரமான கல்வியை அரசு பள்ளீகளில் சாத்தியப்படுத்தல், மொகல் கிளினிக் என்ற பெயரில் சுமார் ஆயிரம் இலவச மருத்துவமனைகளை ஏற்படுத்தி சிறந்த மடுத்துவத்தை ஏழைகளுக்கு வழங்கியது என ஆம் ஆத்மி ஒரு வரலாறு படைத்துவிட்டது.

இதனால் தான் பக்கத்தில் உள்ள பஞ்சாப் மாநிலமும் ஆம் ஆத்மிக்கு ஆட்சியை தூக்கி கொடுத்துவிட்டது. ஹரியாணாவிற்கும், பஞ்சாப்பிற்கும் தலைநகரான சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். அதில் கோல்மால் செய்து வெற்றி வாய்ப்பை பறித்த பா.ஜ.கவின் சூழ்ச்சி அரசியலை உச்ச நீதிமன்றமே கண்டித்தது.

இரண்டு மாநிலங்களை ஆட்சி செய்யும் ஒரு அகில இந்திய கட்சியின் தலைவராகவும், டெல்லி முதல்வராகவும் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலின் உச்சகட்ட பிரச்சார நேரத்தில் கைது செய்து அவர் மீது கிரிமினல் முத்திரை குத்த துடிக்கிறது பா.ஜ.க அரசு.

சரத் சந்திரா ரெட்டி என்ற தெலுங்கானவைச் சேர்ந்த சந்திரசேகராவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவரை இந்த வழக்கில் இணைத்துள்ளது அமுலாக்கத் துறை. இவரை நிர்பந்தித்து பொய் சாட்சியம் சொல்ல வைத்தே வழக்கு வேகப்படுத்தப்பட்டுள்ளது. இவரது அரவிந்தோ ஃபார்மா கம்பெனி 55 கோடி ரூபாயை பா.ஜ.கவுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது. அவர் ஒரு குற்றவாளி எனில், அவரிடம் பணம் பெறுவது ஒரு ஆட்சியாளர்களுக்கு அவமானமில்லையா..? இதில் சந்திரசேகராவ் மகள் கவிதாவும் கைதாகி உள்ளார்.

டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கின் ஆரம்பத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்ட நிலையிலும், முதலமைச்சர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடஙக்ளில் சோதனை நடத்தப்பட்டதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையிலும், நேரில் ஆஜராக மீண்டும், மீண்டும் அழைத்து அலைக்கழிக்கபடுவதை தவிர்த்து வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!

எப்படியாவது அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணை என்ற பெயரில் அழைத்து அப்படியே கைது செய்து சிறையில் தள்ளிவிடலாம் என்ற அமுலாக்கத் துறையின் உள் நோக்கத்தை புரிந்து கொண்டதால் தான் ஒன்பதாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமுலாக்கத்துறை அனுப்பிய சம்மனை, ”சட்டவிரோதமானது” எனக் கூறி, அவர் நிராகரித்ததுடன் தேர்தல் நேரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், நீதிமன்றம் நிலைமையில் சீரியஸ்னசை உணராமல் கைதுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையே பா.ஜ.க சாதகமாக எடுத்துக் கொண்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதையடுத்து நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள்!

ஏறக்குறைய எமர்ஜென்சி காலத்தைப் போல் உள்ளது, தற்போதைய நிலைமைகள்!  டெல்லியின் மெட்ரோ ரயிலை ஓட்டத்தையே முடக்கிவிட்டது பா.ஜ.க. மக்கள் திரண்டு வந்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்கவோ, போராடவோ வரக் கூடாது என பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலத்தின் முன்பும், தலைவர்கள் வீட்டு முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைது நடவடிக்கை இப்போது தேர்தல் காலத்தில் எடுக்கப்பட வேண்டியது அல்ல. வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் மணிஸ் சிசோடியாவும், சஞ்சய் சிங்கும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ளனர்.

ஏன் இப்போது இதை உடனே செய்தார்கள் என்றால், பி.எம்.எல்.ஏ சட்டத்திருத்தம் சார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது.

இந்த சட்டத்தை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 2018 இல்தான் திருத்தியது. அந்தத் திருத்தத்திற்கு பிறகுதான் புதியதாகக் கைது சம்பந்தமான புதிய நடைமுறை சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் இப்படியான கைதுகள் தொடர்கின்றன. இப்படி கைது செய்வதன் மூலம் அரசியல் எதிரிகளை அடக்கிவிடலாம் அல்லது ஒடுக்கிவிடலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. இது பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். இதை பா.ஜ.கவின் மிகப் பெரிய கோழைத்தனமாகத் தான் டெல்லி மக்கள் பார்க்கிறார்கள்!

நடந்து வரும் வழக்கானது, ‘கைது செய்யப்படுபவரை விசாரணை கைதியாகவே நான்காண்டுகள் வைத்திருக்கலாம்’ என்ற பா.ஜ.க அரசு கொண்டு வந்த சட்டப்பிரிவு 45 விதியை நீக்க வேண்டும் என்பதாகும். மனித உரிமை மீறலான அந்த சட்டப் பிரிவை – அந்த ஷரத்தை – அநேகமாக நீதிமன்றம் நீக்கி விடும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த பா.ஜ.க மக்கள் செல்வாக்கு பெற்ற டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவை முடக்கி சிறையில் தள்ளியதைப் போல, அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிறையில் தள்ளிவிட்டால் ஆம் ஆத்மியை அழித்துவிடலாம் என கணக்கு போடுகிறது. பாவம், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

Tags: