மேலாதிக்கமா – ஜனநாயகமா?

ப.சிதம்பரம்

ந்தியக் குடிமகளான ஐஸ்வர்யா தாடிகொண்டா (Aishwarya Thatikonda) என்ற 27 வயதுப் பெண் அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்து ஆலன் (Allen) என்ற ஊரில் இம்மாதம் 7 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். வார இறுதிநாளின்போது பொழுதுபோக்குக்காக அருகில் இருந்த வணிக வளாகத்துக்குச் சென்றபோது இச்சம்பவம் நடந்தது. பாதுகாவலராக முன்னர் பணியாற்றிய மாரிசியோ கார்சியா  (Mauricio Garcia) இந்தக் கொலையைச் செய்தார். ஐஸ்வர்யா மட்டுமல்ல மேலும் 7 பேரும் அவரால் கொல்லப்பட்டனர். கொன்றவர்களில் ஒருவரைப் பற்றிக்கூட கார்சியோவுக்குத் தெரியாது, அவர்களைக் கொல்வதற்காக தனிப்பட்ட விரோதமும் அவர்கள் மீது அவருக்கு இல்லை. 

கார்சியா ஏன் இந்தக் கொலைகளைச் செய்தார் என்று அவருடைய சமூக ஊடகப் பக்கங்களைப் பார்த்தபோதுதான், ‘வெள்ளையினம்தான் உலகிலேயே உயர்ந்தது’ என்ற மேலாதிக்க உணர்வைக் கொண்டவர் அவர் என்று தெரிந்தது. மக்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதை அவரவர் தோலின் நிறத்தைக் கொண்டே அறியலாம் என்று ஆழமாக நம்பினார் அவர். கறுப்பர், பழுப்பர், மஞ்சள் நிறத்தவர் (மங்கோலிய இனம்) அல்லது பிற நிறக் கலப்பினர் அனைவரும் வெள்ளையர்களைவிட மட்டமானவர்கள் என்று கருதி அவர்களை வெறுத்தார்.

மற்ற எல்லா நிறத்தவரைவிட வெள்ளைக்காரர்கள்தான் உயர்வானவர்கள் என்பதற்கு – அறிவியல், உயிரியல், உடற்கூறியல், பரிணாமவியல், அனுபவவியல், பகுத்தறிவியல் என்று – எந்தப் பிரிவிலும் சான்றுகளே கிடையாது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் கறுப்பு இனத்தவர்களே. உலகின் மிகப் பெரிய வங்கி மஞ்சள் இனத்தவர்களான சீனர்களுடையது. உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனம் அராபியர்களுடையது. பருத்தி, பால், திரைப்பட உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்.

மீள்கிறது நாசிஸம்

வெள்ளையின ஆதிக்க உணர்வு என்பது புதிய அதிசயம் கிடையாது. அந்த நிறத்தைச் சேர்ந்தவர்களில் பலருக்குக் காலங்காலமாக அப்படியொரு உணர்வு தொடர்கிறது. ஜெர்மனியில் நாஜி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே, ‘உலகிலேயே வெள்ளை ஜெர்மானியர்கள்தான் உயர்வானவர்கள்’ என்ற ஆழ்ந்த நம்பிக்கை மாபெரும் பாதகச் செயல்களைச் செய்யுமளவுக்கு அவர்களுக்குள் ஊறியிருந்தது. கறுப்பர்கள், ஸ்லாவியர்கள், ரோமானியர்கள், யூதர்கள் என்று பிற சமூகத்தவர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதி அதற்காகவே வெறுத்தனர். நாஜிக்கள் முதலில் தீவிர தேசியவாதிகளாகத்தான் சமூக வாழ்க்கையைத் தொடங்கினார்கள், பிறகு யூதர்களைக் கட்டோடு வெறுப்பவர்களாக மாறினர். வெவ்வேறு மனித இனங்களைச் சேர்ந்த நேச நாடுகளின் படையால் நாஜிக்கள் இரண்டாவது உலகப் போரில் ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.

தாங்கள்தான் உயர்வானவர்கள் என்ற எண்ணம் வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமல்ல – வேறு பலரிடமும் இருக்கிறது. மத அடிப்படையில் மேலானவர்கள், சாதி அடிப்படையில் மேலானவர்கள், மொழி அடிப்படையில் மேலானவர்கள் என்று வெவ்வேறு வகைகளில் இந்த மேலாதிக்க உணர்வு இருக்கிறது. இந்த மேலாதிக்க மனப்பான்மையின் அனைத்து வகைகளும் – துணை வகைகளும் இந்தியாவிலும் இருக்கிறது.

வர்ணாசிரமம் என்ற பெயரில் சாதி அடிப்படையிலான ஒடுக்குதல்களும் தீண்டாமையும் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலவிவருகிறது; மகாத்மா ஜோதிபா புலே, ஸ்ரீ நாராயண குரு, பெரியார் ஈவெரா, பாபாசாஹேப் அம்பேத்கர் ஆகியோரும் வேறு பலரும் இடைவிடாமல் சாதிரீதியிலான ஒடுக்குதல்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து அவர்களுடைய செல்வாக்கை ஒடுக்கினர். இன்னமும்கூட சாதியத்தின் கோர வடுக்கள் இந்தியாவின் முகத்தில் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆதிக்கர்களுக்கு உந்துவிசை

சனாதன தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள மத மேலாதிக்கர்களுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துத்துவ அமைப்புகள் மூலம் இப்போது புது வாழ்வு கிடைத்திருக்கிறது. நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அரசு ஏற்படும் வரையில், இந்திய அரசு என்பது பெரும்பாலும் மதச்சார்பற்ற அரசாகத்தான் இருந்தது. உன்னதமான உயர் குடும்பத்தில் பிறந்த ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்றார், மதச்சார்பற்ற கொள்கையை வாழ்நாள் முழுவதும் தீவிரமாகக் கடைப்பிடித்தார்.

பட்டியல் இனக் குடும்பத்தில் பிறந்த பாபாசாஹேப் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதோடு இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே திகழும் என்று அறிவித்தார். நாட்டின் பெரும்பான்மை சமூகமான இந்துக்கள் சிறுபான்மைச் சமூகத்தவர் மீது ஆதிக்கம் செலுத்தவிடாமலும் அவர்களை விலக்கி வைத்துவிடாமலும் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது. ஒரு சில விதிவிலக்கு சம்பவங்களைத் தவிர, நாட்டின் அரசு நிறுவனங்களும் மத நிறுவனங்களும் ஒன்று கலந்துவிடாமல் தனித்தனியாகவே அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக விலக்கியே வைக்கப்பட்டன.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்ஸிக்கள், யூதர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் சமூக வாழ்க்கையில் சில வேளைகளில் பாரபட்சமாக நடத்தப்பட்டாலும், அரசின் அதிகாரம் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறித்துவிடாமல் பாதுகாப்பாகவே இருப்பதாக உணர்ந்துள்ளனர். மதச் சிறுபான்மையருக்கு எதிராக பாரபட்சமான கொள்கையை அரசு கடைப்பிடித்ததே இல்லை. அப்படியே அரசு செயல்பட்டாலும் நீதிபதிகள் அத்தகைய ஆணைகளையும் நடவடிக்கைகளையும் தவறு என்று தீர்ப்பு வழங்கி நிறுத்திவருகின்றனர். பெரும்பாலான இந்துக்கள் பன்மைத்துவத்தை மதித்து நடக்கின்றனர். அரசியல் கட்சிகளும் அரசமைப்புச் சட்டத்தை மதித்தே நடக்கின்றன.

தலைக்கட்டு மனோபாவம் நோக்கி

ஆனால், இவையெல்லாம் அந்தக் காலமோ என்று மருள வைக்கும் வகையில் சமீபகாலமாகச் சம்பவங்கள் நடக்கின்றன. மதச்சார்பின்மை என்பதே மரியாதைக் குறைவான வார்த்தையாகிவருகிறது. பல அரசியல் கட்சிகள் தங்களை ஏதோ ஒரு மதத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ள போட்டி போடுகின்றன – அவர்களுடைய தலைவர்கள் மதச்சார்பின்மையை ஆதரித்தாலும்! மதச் சிறுபான்மையினருக்கு எதிராக ஆவேசமாகப் பேசுவது, அவர்களை அதட்டி மிரட்டி சிலவற்றைச் செய்யச் சொல்வது என்று செயல்பட்டுவரும் அரசியல் அமைப்பான ‘பஜ்ரங் தளம்’ போன்ற அமைப்புகளின் வன்செயல்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி, ‘பஜ்ரங் பலிகள்’ (ஹனுமான் பக்தர்கள்) ஒடுக்கப்படுவார்கள் என்று பிரச்சார மேடைகளில் திரிக்கப்பட்டது. இதைச் செய்தது வேறு யாருமில்லை – நாட்டின் பிரதமர்தான்.

தேர்தல் பிரச்சாரங்களை ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று கூறியே பல ஊர்களில் முடித்தார். வாக்குகளைப் போடுவதற்கு முன்னால் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று வாக்குச் சாவடிக்குள் கோஷமிடுங்கள் என்று ஆபத்தான வகையில் பிரச்சாரம் செய்தது பாரதிய ஜனதா. இப்படிச் செய்வது மிகவும் அருவருப்பான தேர்தல் விதிமீறல் ஆகும். ஆளுங்கட்சி எந்த விதிகளை மீறினாலும் அதைக் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், இதிலும் தூங்கிவழிந்தது. கர்நாடகத்தில் 2011இல் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 12.92% முஸ்லிம்கள், 1.87% கிறிஸ்தவர்கள். அவர்களை மட்டம்தட்டும் வகையில், 224 தொகுதிகளில் ஒன்றில்கூட ஒரு கிறிஸ்தவ வேட்பாளரையோ முஸ்லிம் வேட்பாளரையோ நிறுத்தவே இல்லை பாஜக. “முஸ்லிம்களுடைய வாக்குகள் எங்களுக்குத் தேவையே இல்லை” என்று சில பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர். ‘இந்துக்களுக்கே வாக்கு – இந்து அல்லாதவர்களுக்கு வெறுப்பு’ என்று வெளிப்படையாக அறிவிக்காமலேயே செயல்பட்டது பாஜக.

சிறுபான்மைச் சமூகத்தவர் குறித்து பாஜக உண்மையில் என்ன நினைக்கிறது என்பதை ஒன்றிய அரசில் அமைச்சராக இருக்கும் சத்யபால் சிங் பாகேல் மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்: “சகிப்புத்தன்மை உள்ள முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்; அப்படி அவர்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பதுகூட பதவிகளைப் பெறுவதற்கான உத்திதான். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என்று பேசுகிறார்கள். இந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை என்பது கி.பி. 1192க்கு முன்னால் இருந்த அகண்ட பாரதம்தான்.” (அகண்ட பாரதம் என்பது இன்றைய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பகுதிகள் அடங்கியது). அப்படிப் பேசியவர்தான் சட்டம் – நீதித் துறையில் அமைச்சராக இருக்கிறார்!

முஸ்லிம்களைப் பசு குண்டர்கள் அடித்துக் கொன்றதையோ, கிறிஸ்தவர்களின் தேவாலயங்களை அடித்து நொறுக்கியதையோ, மதம் கடந்த காதலில் ஈடுபட்ட இளம் ஜோடிகளைத் துன்புறுத்தியதையோ, தார்மிக அறக்காவலர்களாகத் தங்களைக் கருதிக்கொண்டு கும்பலாக உலா வந்த குண்டர்களையோ பாஜக தலைமைக் கண்டித்ததே இல்லை. மத அடிப்படையில் தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொள்வோர், சிறுபான்மைச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இப்படித் தலைக்கட்டு நாகரிகத்துக்கு மேலாதிக்கர்கள் திரும்பிவிடாமல் தடுத்து ஜனநாயகத்தைக் காக்கும் முதல் வாய்ப்பு கர்நாடக வாக்காளர்களுக்குக் கிடைத்திருக்கிறது அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது செய்திகள் மூலம் நீங்களும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

Tags: