யானைகள் இன்றேல் உலகில் காடுகள் இல்லை; வனசீவராசிகளின் இருப்பும் அழிந்து போகும்!

மர்லின் மரிக்கார்

லகில் நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினமாக யானை விளங்குகின்றது. இது காட்டு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு மாத்திரமல்லாமல் மனிதனுக்கும் கூட நேரடியாகவும் மறைமுகமாகும் நன்மைகள் செய்து வருகின்றது. மனிதனின் சுயநல செயற்பாடுகளால் புவியின் மிகப் பெரும் தரைவாழ் உயிரினமான யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறி!

இந்த உயிரினம் அண்மைக்காலமாக பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது. அவற்றின் இருப்புக்கே பெரும் சவால் உருவாகியுள்ளது. அதனால் யானைகளின் முக்கியத்துவம், அவற்றின் சிறப்பு, அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி யானைகளைப் பாதுகாக்கும் வகையில் 2012 முதல் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலக யானைகள் தினமாக வருடாவருடம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

யானைகளின் இருப்புக்கு மனிதனே சவாலாக உள்ளான். யானைகள் தந்தத்திற்காகவும், சில ஆபிரிக்க நாடுகளில் உணவுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. அதேநேரம் ஆசிய நாடுகளில் யானைகள் வாழக் கூடிய இடங்களும் அவற்றின் பயணப் பாதைகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பல்வேறு தேவைகளின் நிமித்தம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான காரணங்களினால் யானைகளின் வாழிடங்கள் குறைவடைந்து வருகின்றன.

இதன் விளைவாக யானை- மனிதன் மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் யானைகளைக் கொல்லும் நோக்கில் அவற்றின் உணவில் நஞ்சூட்டல், பட்டாசு வைத்தல், துப்பாக்கிப் பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன. அத்தோடு யானைகளின் வாழிடங்கள் மற்றும் பயணப்பாதைகளுக்கு குறுக்காகவும் அண்மித்த வகையிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களும் யானைகளுக்கு பாதிப்பாகவே அமைகின்றன. ரயில்களில் யானைகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு யானைகள் முகம் கொடுப்பது அவற்றின் எதிர்கால இருப்புக்கே சவாலாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே யானைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாக யானைகளுக்கென தனியொரு உலகளாவிய தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

உலகில் இரண்டு பிரதான வகை யானைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஆபிரிக்க யானைகள் மற்றையது ஆசிய யானைகளாகும். இயல்பாகவே யானை ஒரு தாவர உண்ணி உயிரினமாகும். சுமார் 70 வருட காலம் உயிர்வாழக் கூடிய இந்த உயிரினம் 82 வகையான தாவரங்களை உண்ணக் கூடியது. 59 வகையான மரங்களையும் 23 வகையான புற்களையும் விரும்பி உணவாகக் கொள்ளக் கூடியதாகும். யானை 8 – 10 அடி உயரத்திற்கு வளரக் கூடியதாகவும், சுமார் 5000 கிலோ கிராம் நிறை கொண்டதாகவும் இருக்கும். நாளொன்றுக்கு 200 – 250 கிலோ கிராம் உணவையும் 100 – 150 லீற்றர் நீரையும் பருகக் கூடியதாகவும் விளங்குகின்றது.

At Kruger National Park, South Africa, for World Elephant Day

குறித்து வரையறுக்கப்பட்ட இடத்தில் உணவு தேடக் கூடிய உயிரினமல்ல யானை. நாளொன்றுக்கு சுமார் 16 மணித்தியாலயங்கள் உணவு உட்கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ள இந்த உயிரினமானது தினமும் 30 கிலோ மீற்றர் பயணிக்கக் கூடியதாகும்.

அதேநேரம் மனிதனுக்கு அடுத்தபடியாக அவன் கொண்டுள்ள பலவித இயல்புகளை தன்னகத்தே கொண்டுள்ள உயிரியாகவும் விளங்குகிறது யானை. குறிப்பாக சமூகமாக (கூட்டமாக) வாழும் பண்பைக் கொண்டுள்ள யானைக் கூட்டத்திற்கு முதிர்ச்சியடைந்த பெண் யானையே தலைமை வகிக்கும். தங்களுக்கு இடையில் ஒலி எழுப்பி தொடர்பாடலை மேற்கொள்ளும் இயல்பையும் கொண்டிருக்கின்றன யானைகள்.

மேலும் நினைவாற்றல், மகிழ்ச்சி, இரக்கம், கோபம், அழுகை, குட்டிகளை பராமரிக்கும் பண்பு, விளைவுகளை எதிர்கொள்ளுதல் போன்ற தனித்துவ பண்புகளையும் யானைகள் கொண்டுள்ளன.

அதேநேரம் புயல் ஏற்படுவதை முன்கூட்டியே அறியக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள இந்த உயிரினம், தன்னைச் சுற்றி ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்கு தண்ணீர் இருப்பதைக் கண்டறியக் கூடியதாகவும் உள்ளது. இவ்வாறு தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் யானை, அவ்விடத்தைக் தோண்டி தண்ணீரைப் பருகும் இயல்பைக் கொண்டிருப்பதோடு, ஏனைய உயிரினங்களுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கின்றது. உயரமான மரங்களில் இருந்து கிளைகளை முறித்து உணவாகக் கொள்ளும் இந்த உயிரினம், அக்கிளைகளை முழுமையாக உண்ணாது மான், காட்டெருமை போன்ற பல தாவர உண்ணி விலங்குகளுக்கும் உணவுக்கு உதவுகின்றது.

அத்தோடு காட்டு விலங்களுக்கு மாத்திரமல்லாமல் பறவைகளும் கூட உணவு பெற்றுக் கொள்ள யானைகள் வழி செய்கின்றன. குறிப்பாக உண்ணிக் கொக்கு, மைனா (நாகணவாய்) போன்ற சில பறவைகள் நாள் முழுவதும் யானைகளுடனேயே காணப்படும். ஏனெனில் யானை நடமாடும் போது அதன் பாதங்கள் பதியும் நிலத்தின் கீழே காணப்படும் பூச்சிகளும், புழுக்களும், வண்டுகளும் வெளியே வரும். அவற்றை இப்பறவைகள் உணவாக்கிக் கொள்கின்றன.

மேலும் யானையின் சாணமானது நிலத்திற்கு வளமான பசளையாகும். இந்த சாணத்தில் 10 வீதம் வித்துகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பயனாக நாளொன்றுக்கு சுமார் 300 – 400 வித்துகள் என்றபடி வருடமொன்றுக்கு 36 ஆயிரம் வித்துகளை யானையொன்று நிலத்தில் விதைப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு இச்சாணத்தில் காணப்படும் வித்துகள் ஏனைய வித்துக்களை விடவும் நன்கு செழித்து வளரக் கூடியவையாகும்.

இவை இவ்வாறிருக்க, வண்ணத்துப் பூச்சிகளுக்குத் தேவையான தாது உப்புகள் யானையின் சாணத்தில் நிறையவே காணப்படுகின்றன. அதனால் தான் வண்ணத்துப் பூச்சிகள் அதிகளவில் இச்சாணத்தில் மொய்க்கின்றன. அத்தோடு யானை உணவாகக் கொள்ளும் அனைத்தும் முழுமையாக சமிபாடு அடைவதில்லை. அதனால் யானையின் சாணத்தில் சமிபாடு அடையாத பொருட்களை உணவாகக் கொள்ளும் உயிரினங்களும் உள்ளன.

இவ்வாறு காட்டு விலங்களுக்கும், பறவைகளுக்கும் உணவுக்காக உதவுகின்ற யானைகள் காடுகளின் பெருக்கத்திற்கும் தாவரங்களின் பரவலுக்கும் பெரிதும் பங்களிக்கின்றன. அந்த வகையில் காடு வளர்ப்புக்கு அதிக பங்களிக்கும் உயிரினமாக யானைகள் விளங்குகின்றன. ஒரு யானை மாத்திரம் வாழ்நாளில் சுமார் 18 இலட்சம் மரங்களுக்கு வித்தூன்றுவதாக சூழலியலாளர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அடர்ந்த காடுகளில் யானைகள்தான் பாதைகளை அமைக்கின்றன. அப்பாதைகளைத்தான் மனிதனும் ஏனைய உயிரினங்களும் காடுகளில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. யானையின் பயனாக காடுகள், காட்டு விலங்குகள் மாத்திரமல்லாமல் மனிதனும் நேடியாகவும், மறைமுகமாகவும் நன்மைகளை அடைந்து கொள்கிறான். அத்தோடு யானைக்கும் மனிதனுக்கும் இடையில் நீண்ட காலமாக தொடர்பு இருந்து வருகின்றது. இதற்கு சங்க இலக்கியங்களும், கலைச் சிற்பங்களில் யானைகளின் உருவங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும், 170 க்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்டு யானை அழைக்கப்பட்டிருப்பதும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

இருந்த போதிலும் இந்த யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையில்தான் அண்மைக் காலம் முதல் மோதல் ஏற்பட்டு அதிகரித்திருக்கின்றது. இதற்கு சனத்தொகைப் பெருக்கம் முக்கிய காரணமாகும். அதன் விளைவாக, ‘யானைகளின் வாழிடங்கள் சுருங்கி வருகின்றமை, யானைகளின் பாரம்பரிய பயணப்பாதை ஆக்கிரமிக்கப்படுகின்றமை, யானைகளின் வாழிடங்களான காடுகள் அழிக்கப்படுகின்றமை, யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்களும் தண்ணீர் வசதியும் காடுகளில் குறைவடைகின்றமை, யானைகள் காணப்படும் காடுகளுக்கு அருகில் அவை விரும்பி உண்ணும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை ஆகியன இலங்கையில் யானை – மனிதன் மோதலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் பீட பேராசிரியர் தேவக கே சமரக்கோன், இந்நாட்டில் அதிகரித்துள்ள்ள இம்மோதலால் வருடமொன்றுக்கு 300 – 400 யானைகளும் 80 மனிதர்களும் கொல்லப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை பாராளுமன்ற கணக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ‘உலகில் யானை – மனிதன் மோதலால் அதிகளவில் யானைகள் கொல்லப்படும் நாடாக விளங்குகின்ற இலங்கையில், யானைகளால் மனிதன் அதிகம் கொல்லப்படும் இரண்டாவது நாடாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் 407 யானைகள் கொல்லப்பட்டன. 122 மனிதர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நாட்டில் சுமார் 6000 யானைகள் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள 8 மாகாணங்களிலுள்ள 18 மாவட்டங்களில் யானை – மனிதன் மோதல் நிலை காணப்படுகின்றது. இதனால் யானைகளும் மனிதர்களும் கொல்லப்படுவதோடல்லாமல் கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்துக்களையும் யானைகள் சேதப்படுத்தவே செய்கின்றன. அதனால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகள் இந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. அந்நடவடிக்கைகள் அனைத்தும் மனிதனின் விருப்பத்திற்கு அமைவானதாகும். ஆனால் இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காண யானையையும் ஒரு தரப்பாகக் கருதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்துகிறார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் வனவிலங்கு ஆராய்ச்சியாளருமான கலாநிதி சுமித் பிலப்பிட்டிய.

அது நியாயமான கூற்றேயாகும். யானை – மனிதன் மோதல் விவகாரத்திற்கு மனிதனை மாத்திரம் கருத்தில் கொண்டு நிலைபேறான தீர்வு காண முடியாது. அதற்கு கடந்த கால அனுபவங்களும் நல்ல உதாரணங்களாகும்.

ஆகவே யானைகள் காடுகளில் இருந்து வெளியே வருவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப அவை விரும்பி உண்ணும் தாவரங்களை காடுகளில் அதிகம் வளர்க்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான நீர் வசதியைக் காடுகளில் தடாகங்களை அமைத்து செய்து கொடுக்கவும் தவறக் கூடாது. அத்தோடு யானைகள் விரும்பி உண்ணக் கூடிய உணவுப் பயிர்களை காடுகளுக்கு அருகில் செய்கை பண்ணுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது யானைகள் காடுகளை விட்டு வெளியே வருவது குறைவடைந்து விடும். அத்தோடு யானைகள் காடுகளை விட்டு வெளியேவருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மின்வேலி அமைத்தல் திட்டமும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அந்நடவடிக்கைகள் யானைகளின் பாதுகாப்புக்கும் பக்கபலமாக அமையும்.

Tags: