கல்லாறு யானைகள் வழித்தடம்

-து. பூமிநாதன்

கல்லாறு வழித்தடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையின் வாகனப் பெருக்கத்தால் யானைகளுக்கு ஏற்படும் இன்னல்கள்

லகில் ஆசிய யானைகள் அதிகமாக வாழும் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கல்லாறு வனப்பகுதி. இது தமிழகத்தில் உள்ள யானை வலசைப் பாதைகளில் மிக முக்கியமானதாகும். மேலும், நீலகிரி வன உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த யானை வழித்தடம் இரு பெரும் யானைகள் வாழிடங்களை இணைக்கும் பாலமாக அமையப் பெற்றுள்ளது. கல்லாறு யானை வழித்தடம் இதன் வட பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களைத் தென்பகுதியிலுள்ள கோயம்புத்தூர் மற்றும் அட்டப்பாடி வனப்பகுதிகளுடன் இணைக்கிறது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் மேற்கொண்ட யானைகள் வாழ்விடம் பற்றிய ஆராய்ச்சியில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, ‘வென்டி’ எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு யானைக் கூட்டம் முதுமலையிலிருந்து அட்டப்பாடி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தபோது அறிவியல் பூர்வமாக கல்லாறு யானை வழித்தடம் கண்டறியப்பட்டு அதன் பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வன உயிரின ஆய்வாளர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு கல்லாறு வழித்தடம் பாதுகாப்பு குறித்த விவரங்களை நிறுவியுள்ளனர்.

இவ்வழித்தடத்தின் வடபுறம் உள்ள வனப்பகுதி செங்குத்தான மலைச்சரிவாகவும் தென்புறம் கட்டிடங்களும், குடியிருப்புகளும் மற்றும் மின்வேலிகள் பொருத்தப்பட்ட விவசாய நிலங்களாகவும் அமையப்பெற்று குறுகலான பகுதியாக உள்ளது.

ஆண்டுதோறும் சுமார் நூறு யானைகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன எனக் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் யானைகள் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன. இதன் முக்கியக் காரணம், இந்த வழித்தடத்தில் குறுக்கே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் (NH-181) ஏற்பட்டுள்ள வாகனப் பெருக்கம்.

வாகனப் பெருக்கம்

2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாகனக் கணக்கெடுப்பின்படி இந்த தேசிய நெடுஞ்சாலையை தினசரி 4500 வாகனங்கள் உபயோகப்படுத்துகின்றன எனக் கண்டறியப்பட்டது. அது 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 8450 வாகனங்கள் என இரட்டிப்படைந்து யானைகளின் இடப்பெயர்வுக்குப் பேரிடராக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையின் படி, ஏறக்குறைய 10 வினாடிகளுக்கு ஒரு வாகனம் இந்தச் சாலையைக் கடக்கிறது.

மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ள தனியார் நிலங்களைக் காலங்காலமாக யானைகள் இடம்பெயரப் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும் சமீப காலங்களில் இந்த தனியார் நிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் யானைகள் கடந்துசெல்ல நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி இந்த வழித்தடத்தை ஒட்டி அமைந்துள்ள பழப்பண்ணை, பசுமை வரி வசூல் செய்யும் சோதனைச் சாவடி மற்றும் கல்வி நிறுவனங்கள் என யானைகள் இடம்பெயர நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.

சாலையைக் கடக்கும் யானைகள்

இந்த இக்கட்டான தருணத்திலும் ஒருசில வேளைகளில் யானைகள் சாலையைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் சாலையருகே வெகுநேரம் காத்திருந்து முயல்வதைக் காண நேரிடுகிறது. எனினும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக யானைகள் சாலையை வழிமறித்து நிற்கின்றன எனவும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன எனவும் நாம் யானைகள் மீது குற்றம் சுமத்துவது வியப்பானது.

யானைகள் மட்டுமின்றி கல்லாறு வழித்தடம் ஊனுண்ணிகளுக்கும், மான் இனங்களுக்கும் மற்றும் காட்டு மாடுகளுக்கும் முக்கியமான வழித்தடமாகப் பயன்படுகிறது. மேலும், கல்லாறு பட்டாம்பூச்சிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 325 வகை பட்டாம்பூச்சிகளில் கல்லாறு பகுதியில் மட்டுமே 200 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளதென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் பறவை இனங்கள் செறிந்து காணப்படுவதால் பறவை ஆர்வலர்களை வசீகரிக்கும் பகுதியாக கல்லாறு அமைந்துள்ளது.

யானைகளின் வழித்தடங்கள் பாதிப்புக்குள்ளாவதனால் யானைகள் இடம் பெயர இயலாமல் அந்தந்தப் பகுதியிலேயே தேக்கம் அடைவதன் மூலம் மனித யானை முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கல்லாறு பகுதியில் பாக்கு மரத் தோட்டம் அதிக அளவில் இருந்தது. ஆனால், தற்போது பாக்கு மரத் தோட்டம் முற்றிலும் யானைகளால் அழிக்கப்பட்டு காணாமல் போனது என்பது மனித யானை முரண்பாடுகள் அதிகரித்ததற்குச் சான்றாக உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

மேம்பாலம் அவசியம்

கல்லாறு வழித்தடத்தில் யானைகள் தடையின்றி இடம்பெயர்வதற்கு சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு (தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவிலிருந்து கல்லாறு ஆற்று பாலம் வரை) வாகனங்கள் செல்வதற்கு ஒரு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். 2014ஆம் ஆண்டு வனத்துறை உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழு கல்லாறு யானைகள் வழித்தடத்தை நேரில் கள ஆய்வு செய்து இங்கு யானைகள் தடையின்றி நடமாடுவதற்கு ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உறுதி செய்தனர்.

நமது சௌகரியத்திற்காக பல மேம்பாலங்களை அமைத்துக் கொள்வதைப் போல யானைகள் தடையின்றி இடம்பெயர ஏதுவாய் அவற்றின் வழித்தடங்களில் அமைந்துள்ள சாலைகளிலும் மேம்பாலங்கள் அமைத்துத் தர வேண்டியது நமது கடமை.

தனியார் காடு அறிவிப்பு

அண்மையில், கல்லாறு யானை வலசைப் பாதையில் உள்ள 50.79 ஹெக்டர் தனியார் நிலங்கள், தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் 1949-ன்கீழ் தனியார் காடாக அறிவிக்கப்பட்டது, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் சார்ந்து இயங்கும் தொண்டு நிறுவனங்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த தனியார் காடுகளை, பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் காணும் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பாக அமைப்பதன் மூலம் வன உயிரினங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமில்லாமல் நில உரிமையாளர்களுக்கு வருமானமும் ஈட்டித் தரும் திட்டமாக அமையும்.

ஒவ்வொரு யானை கூட்டத்திற்கும் அதற்கென வாழிட எல்லை உள்ளது. அந்த வாழிட எல்லைக்குள்ளேயே பரம்பரை பரம்பரையாக அவை பயன்படுத்தி வரும். அவற்றின் வாழிட எல்லையில் ஏற்படும் வாழிட சிதைவுகள் அந்தக் கூட்டத்தைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும். இதுவே மனித யானை முரண்பாடுகளுக்கு வித்திடுகிறது.

தென்னிந்தியாவில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரி 600 சதுர கிலோ மீட்டர் வாழிடம் தேவை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது போல ஆண் யானைக்கு சராசரி 300 சதுர கிலோ மீட்டர் வாழிடம் தேவைப்படுகிறது. இத்தனை பெரிய வாழிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழித்தடங்கள் யானைகளுக்கு இன்றியமையாதது. பருவகால நிலைகளுக்கேற்ப யானைகள் அவற்றுக்குப் பொருத்தமான வாழிடங்களை நோக்கி இடம் பெயரும். யானைகள் தனக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் இனப்பெருக்கத்திற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வழித்தடங்களைப் பயன்படுத்தி இடம்பெயர்கின்றன.

ஒருபுறம் செங்குத்தான மலைச் சரிவுகளும் மறுபுறம் கட்டுமானங்களாலும் கல்லாறு வழித்தடம் குறுகியுள்ள காட்சி

யானை வழித்தடங்களை மீட்டெடுப்போம்

சமீபகாலங்களில் வன உயிரினங்களுக்கு நெருக்கடி தரும் செயல்பாடுகளால் யானைகள் இறப்புக்குள்ளாவதை நாம் காண முடிகிறது. இச்சம்பவங்கள் நடக்கும்போது நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஆணி வேராக உள்ள வாழிடம் மற்றும் வழித்தடங்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கத் தவறுகிறோம்.

சட்டபூர்வமாக, யானைகள் வழித்தடங்களை ஆவணப்படுத்தி, அப்பகுதிக்குள் நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்கு விதிமுறைகள் கொண்டுவந்தால் மட்டுமே, இவ்வழித்தடங்களைச் சிறப்பாகப் பாதுகாக்க இயலும்.

உலகிலேயே தொடர்ச்சியான வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழும் நிலப்பரப்பாக பிரம்மகிரி-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த நிலப்பரப்பு உள்ளது. இது நமக்குப் பெருமை சேர்க்கும் அம்சமாகும். இத்தகைய சிறப்பு பொருந்திய நிலப்பரப்பில் வாழும் நாம், நமது தேசிய பாரம்பரிய வன உயிரினமான யானைகளைப் பாதுகாப்போம் என உறுதி பூணுவோம்!

Tags: