இயலுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுங்கள்!

Dr. Harsha Atapattu

யலுமானால் கர்ப்பம் தரிப்பதனை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் (Gynaecologist of the De Soysa Maternity Hospital for women) ஹர்ஷ அதபத்து (Dr. Harsha Atapattu) தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது, உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் காரணமாக கர்ப்பிணிப் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடம் என்பது மருத்துவ விஞ்ஞானத்துக்கு மிகவும் நீண்டகாலம் என்றும், அந்த காலப்பகுதியில் தற்போது பாவனையிலுள்ள தடுப்பூசிகளை விடவும் சிறந்த தடுப்பூசி உற்பத்தி செய்யப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே, இன்னமும் இந்த வைரஸ் தொடர்பில் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாக விசேட வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வைரஸின் செயற்பாடு தொடர்பில் மருத்துவ துறையினருக்கு இன்னும் முழுமையான விளக்கம் கிடைக்கப்பெறவில்லை என்றும், மேலும் ஒரு வருட காலத்தினுள் மிகவும் வினைத்திறனான சிகிச்சை முறைகளை கண்டறிய முடியுமானதாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்காரணமாக, இந்த ஆபத்தான காலகட்டத்தை கடந்ததன் பின்னர் குழந்தை பேறு தொடர்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு, அத்தியாவசிய காரணம் இன்றி குழந்தை தொடர்பான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள பெண்களுக்கு விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் தொடர்பில் சிந்திக்குமாறு வைத்தியர் மேலும் கோரியுள்ளார்.

Tags: