பாரதியார்: இதழியல் புதுமையாளர், பத்திரிகைத் துறை பகலவன்

-பே.ஜீவானந்தம், கம்பம்

காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்!

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்தபத் திரிகைப் பெண்ணே!

எனப் பத்திரிகையின் பேராற்றலை, மக்கள் உணரும் வகையில் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார். சமூகத்தின் காரிருளை அகற்றும் பணியையும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் செய்யும் பத்திரிகைத் துறையில், பாரதியார் பகலவனாக விளங்கினார். இந்தியா, சக்கரவர்த்தினி இதழ்களுக்கு அரசாங்கத்திடம் பதிவு செய்துகொண்ட மனுவில் ‘ஆசிரியர் பெயர், பதவி என்ற பத்தியில் ‘சி.சுப்பிரமணிய பாரதி – இதழாளர்’ என்றே குறிப்பிட்டுள்ளார். ‘எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்று இதழியலைக் கொண்டாடியுள்ளார்.

தமிழகத்தின் முதல் நாளிதழும் அரசியல் இதழுமாகிய சுதேசமித்திரனின் ஆசிரியர் சி.சுப்பிரமணிய அய்யரிடம் நல்ல பயிற்சி பெற்றிருந்த பாரதி, தாம் ஆசிரியராகப் பொறுப்பேற்ற இதழ்களில் பத்திரிகைகள் வந்தபோது ‘இந்தியா’வின் அளவைப் பெரிதாக நாளிதழ் போல் மாற்றினார்.

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதியின் திறமைகளைக் கண்டு ஜி.சுப்பிரமணிய அய்யர் சென்னையில் அவரது சொந்த பத்திரிகையான ‘சுதேசமித்திரனில்’ பணிக்கு அமர்த்தினார். மதுரையிலிருந்து பாரதி சென்னை சென்றதற்கு மூன்று காரணங்களை முனைவர் பா.இறையரசன் தனது “இதழாளர் பாரதி” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

Ø ஜி.சுப்பிரமணிய அய்யர் மதுரை வந்தபோது மதுரை நேட்டிவ் கல்லூரி தமிழாசிரியர் கோபாலகிருஷ்ண அய்யரின் உதவியால் பாரதியைச் சந்தித்து, அவரை அழைத்துச் சென்றார்.

Ø பாரதி, சென்னையில் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் முதல்வராக இருந்த தனது உறவினர் லட்சுமண அய்யர் என்பவருக்குக் கடிதம் எழுதி, சென்னையில் தனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு வேண்ட, அவருடைய முயற்சியால் ‘சுதேசமித்திர’னில் பணிக்குச் சேர்ந்தார்.

Ø மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பாரதியாருடன் பணியாற்றிய அய்யாசாமி அய்யர் என்பவர், ‘இந்து’ பத்திரிகை செய்தியாளராக இருந்த தனது மாமா மூலம் ‘சுதேசமித்திர’னில் வேலை வாங்க உதவினார்.

சுதேசமித்திரன்

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பதினேழரை ரூபாய் சம்பளத்துக்குப் பணியாற்றிய பாரதி ‘சுதேசமித்திர’னில் மாதம் நாற்பது ரூபாய் ஊதியமாகப் பெற்றார். ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பாரதியின் வேலை தந்தி மூலம் வரும் செய்திகளையும், ஆங்கில இதழ்களில் வரும் செய்திகளையும், ஆங்கிலச் சொற்பொழிவுகளையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வது; அச்சுப் பிழை திருத்துவது முதலியன.

சுதேசமித்திரனில் கதை, கவிதை, கட்டுரை, தலையங்கம் ஆகியவை எழுதும் வாய்ப்பு அவருக்கு அப்போது கொடுக்கப்படவில்லை. ‘சுதேசமித்திர’னில் அவர் சுமார் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தபின், அதிலிருந்து ஜி.சுப்பிரமணிய அய்யரின் அனுமதியோடு விலகிக்கொண்டு ‘இந்தியா’ பத்திரிகையை வேறு சிலரின் உதவியோடு தொடங்கி, அதில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அறிஞர் திருப்பழனம் வ.ராமசாமி ஐயங்கார் பாரதியாரின் அன்பிற்குப் பாத்திரமானவர். பாரதியார் ‘சுதேசமித்திரனை’ விட்டு நீங்கியதற்கு இவர் கூறும் காரணம் கவனிக்கத்தக்கது. “பாரதியார் ஜி.சுப்பிரமணிய ஐயரோடு ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக ‘சுதேசமித்திர’னை விட்டு நீங்கவில்லை. மாறாக ஜி.சுப்பிரமணிய அய்யர் கோபாலகிருஷ்ண கோகலேயைப் போல மிதவாதி அல்ல என்றாலும், காந்தியைப் போலப் புரட்சிக்காரரும் இல்லை. எனவே அரசியலில் அதிதீவிரரான பால கங்காதர திலகரின் சீடரான பாரதியார் ‘சுதேசமித்திர’னை விட்டு நீங்கியதில் வியப்பொன்றும் இல்லை” எனும் கருத்தினை வெளிப்படுத்துகிறார்.

சக்கரவர்த்தினி

பாரதியார் ‘சுதேசமித்திர’னில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே 1905-ல் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட “சக்கரவர்த்தினி” எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இந்தப் பத்திரிகையை பி.வைத்தியநாதய்யர் என்பவர் நடத்தி வந்தார். “சக்கரவர்த்தினி” எனும் பெயரே இங்கிலாந்தின் மாட்சிமை பொருந்திய மகாராணி விக்டோரியாவின் பெயரால் அவருடைய ஆட்சியின் பொன்விழாவை முன்னிட்டுத் தொடங்கப்பட்டது என்பது தெரிகிறது.

இந்த இதழ் 32 பக்கங்களில் ஆண்டு சந்தா ரூ.2 என்றும் தனியிதழ் 3 அணா என்றும், நோக்கம் ‘பெண்கள் முன்னேற்றம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பத்திரிகையில் பாரதியார் குழந்தைத் திருமணம், சதி, வரதட்சணைக் கொடுமை, கைம்பெண் கொடுமை, பெண் கல்வி ஆகிய நடைமுறைகளைப் பற்றி வலியுறுத்தி எழுதியிருக்கிறார். ‘சுதேசமித்திர’னில் பணியாற்றியபோது அடக்கி வைக்கப்பட்டிருந்த இவரது எண்ணங்கள் அனைத்தும் ‘சக்கரவர்த்தினி’யில் வெளிப்படலாயிற்று.

“பெண்மை யறிவோங்கப் பீடுயரும் பெண்மைதான்
ஒண்மையுற வோங்கும் உலகு”- எனும் குறள் சக்கரவர்த்தினி பத்திரிகையின் நோக்கமாக வெளிவந்தது. இது பாரதியார் எழுதியதாகக் கருதப்படுகிறது.

‘இந்தியா’

இந்தப் பத்திரிகையை மண்டையம் திருமலாச்சாரியார் தொடங்கி பாரதியாரை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தாலும், பத்திரிகையில் ஆசிரியர் என்று மண்டையம் திருமலாச்சாரியாரின் உறவினர் சீனிவாசன் என்பவர் பெயர்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வரும் எழுத்துகள்தான் பாரதியாருடையதே தவிர , ஆசிரியர் என்ற பெயர் சீனிவாசனுக்கே. மண்டையம் குடும்பத்தார்கள் தொடங்கி அதில் பாரதியார் பணியாற்றினார் என்பதே சரியான செய்தி.

‘இந்தியா’ பத்திரிகையில் பாரதியாரின் எழுத்துகள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை மிகக் கடுமையாகத் தாக்கின. ‘இந்தியா’ 4-8-1906 இதழில் பாரதியார் “வேதாந்தி” எனும் புனைபெயரில் “சுவாமி அபேதானந்தா” எழுதி வெளியிட்டிருந்தார். பிறகு 6-10-1906இல் ஓவியர் மணி ரவிவர்மா பற்றிய கவிதையை வெளியிட்டார்.

1906-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டுக்கும் பாரதியார் சென்று வந்தார். வார இதழாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் வெளிவந்த ‘இந்தியா’ இதழின் ஓராண்டு சந்தா ரூ.3, ஆறு மாத சந்தா ரூ.1 அணா 12. இந்தப் பத்திரிகையில் குறிக்கோளாக “சுதந்திரம்”, “சமத்துவம்”, “சகோதரத்துவம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘இந்தியா’ இதழின் எழுத்துகளில் வெளியான உஷ்ணத்தைப் பொறுக்க மாட்டாத ஆங்கில அரசாங்கம் அதன் உரிமையாளர் திருமலாச்சாரியாருக்கும் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்த சீனிவாசன் என்பவருக்கும் வாரண்ட் பிறப்பித்தது.

பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகையைக் கண்டு ஆங்கில அரசாங்கம் கடும் கோபம் கொண்டு சட்டப்படியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் பாரதியாருக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவு ‘இந்தியா’ பத்திரிகை பொதுமக்களுக்குச் சரியாகப் போய்ச்சேர முடியாத நிலை ஏற்பட்டது. நஷ்டமோ ஏராளமாக, தாங்கமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் 1910 செப்டம்பரோடு ‘இந்தியா’ இதழ் நின்றுபோனது. பத்திரிகை மகாகவி பாரதியாரின் வரலாற்றோடு இண்டறக் கலந்துவிட்ட பெயர் என்பதும், இந்தப் பத்திரிகையில் வெளிவந்த காரசாரமான கட்டுரைகள், கார்ட்டூன்கள் காரணமாகத்தான் பாரதியார் கைது செய்யப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதும் மறுக்கமுடியாத செய்திகள்.

பாரதி, வார இதழாக வெளிவந்த ‘இந்தியா’ பத்திரிகையின் அளவை நாளிதழ் அளவில் வெளியிட்டுப் புதுமை செய்தார். ‘இந்தியா’ இதழின் மூலமாக மிகத் திறமையாகப் பணியாற்றி அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் முன்னணியில் விளங்கினார். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில்தான் இவர் 1906-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று வந்தார். அதுபோலவே ‘பாலபாரதா’ இதழின் ஆசிரியர் என்ற முறையில்தான் 1907 சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குக்கும் இவர் சென்று வந்தார்.

ஆக, இவர் பத்திரிகையாளராகத்தான் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு பெற்றார் என்பதும் இந்தத் துறையின் மீதுதான் பாரதி ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரிகிறது. இலக்கியப் பகுதி, கைத்தொழிற் பகுதி, ராஜரீகப் பகுதி, வர்த்தமானங்கள், இந்தியாவில் குழப்பம் என்னும் தலைப்புகளில் பல பகுதிகளை ‘இந்தியா’ இதழில் அமைத்தார். அரசியல் இதழ் என்றாலும் உழவுத் தொழில், அறிவியல், கல்வி, பெண்கள் பற்றிய செய்திகள், தல வரலாறு, சமயக் கருத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு ‘இந்தியா’ இதழை வெளியிட்டார்.

பாலபாரதா

‘இந்தியா’ இதழ் நடந்து கொண்டிருந்தபோதே “பாலபாரதா” எனும் ஆங்கில ஏட்டைத் தொடங்கினார் பாரதி. இது வார இதழா, மாத இதழா என்பதில் குழப்பம் நிலவிய போதிலும், பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன், இது வாரப் பத்திரிகை என்றும், இதன் பொறுப்பாசிரியராக பாரதி பொறுப்பேற்றார் என்றும் தெரிவித்தார். முதலில் இது வாரப் பத்திரிகையாக இருந்து 1907 நவம்பர் முதல், மாத இதழாக வெளிவந்தது. ‘இந்தியா’ 1906 அக்டோபர் 27-ம் தேதி இதழில் “நமது ஆபீஸிலிருந்து “பாலபாரத்” என்ற ஆங்கில வாரப் பத்திரிகை பிரசுரமாகப் போகின்றது” என்று விளம்பரப்படுத்தப் பட்டிருக்கிறது. இது ‘இந்தியா’ பத்திரிகையின் துணை ஏடாக வெளிவந்திருக்கிறது. இதனைப் பின்னர் மைலாப்பூர் டாக்டர் எம்.சி.நஞ்சுண்ட ராவ் வாங்கி நடத்தியதாகத் தெரிகிறது.

புதுச்சேரியில் ‘பாலபாரதா’ இதழ் ‘இந்தியா’ அலுவலகத்தில் இருந்தே வெளிவந்தது. பாரதியார் தான் குடியிருந்த 22-ம் எண் இல்லத்திற்கு “பாலபாரத மந்திரம்” என்று பெயரிட்டிருந்தார். 1910 வாக்கில் இந்த ‘பாலபாரதா’ பத்திரிகைக்கு உள்நாட்டு ஆண்டு சந்தா ரூ.3 என்றும், மாணவர்களுக்கு ரூ. 2 என்றும், வெளிநாட்டுக்கு 6 ஷில்லிங் என்றும் விளம்பரப்படுத்தியிருந்தது.

இந்தப் பத்திரிகையின் முகப்பு அட்டையில் ‘பாலபாரதா ஆர் யங் இந்தியா’ என்ற பெயர் அச்சிடப்பட்டு அதன் கீழ் சுவாமி விவேகானந்தரின் “Arise, Awake and stop not till the Goal is reached” எனும் வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே குண்டலினி சக்தியைக் குறிக்கும் படமும், பாலபாரதக் கொடி ஏந்திய இளைஞனின் படமும் இருக்கும். கீழே ஒரு தாமரையின் படம். அதன் இதழ்களில் Unbounded Light of Liberation என எழுதப்பட்டிருக்கும். இந்தப் பத்திரிகை தொடக்கத்தில் எட்டுப் பக்கங்களோடு வார இதழாகவும், பிறகு மாத இதழாக மாறியபின் முன்பின் அட்டைகளைச் சேர்த்து 24 பக்கங்களோடும் வெளிவந்தது.

விஜயா

‘விஜயா’ இதழும் சென்னையிலிருந்து பாரதியோடு புதுச்சேரிக்கு வந்து அங்கிருந்து வெளியாகத் தொடங்கியது. பாரதியார் ஆசிரியராக இருந்த ஒரே நாளிதழ் ‘விஜயா’தான். பாரதியார் நடத்திய பத்திரிகைகள் அனைத்தும் குரல்வளை நசுக்கப்பட்டுக் கிடந்த அந்தக் காலகட்டத்தில் அவரது கருத்துகளை, கட்டுரைகளைத் தாங்கி வந்த ஒரே இதழ் ‘விஜயா’தான். சமீபகாலம் வரை ‘விஜயா’ இதழ் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆய்வாளர்கள் அனைவரும் ‘விஜயா’ என்றொரு பத்திரிகை வெளிவந்தது என்றுதான் எழுதினார்களே தவிர அந்தப் பத்திரிகை இதழ்கள் எதையும் எடுத்துக்காட்டாகக் காட்ட முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் பாரதி ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும் Madras Institute of Development Studies எனும் நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகவும், தமிழ்ச் சமூக வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வுகளை நடத்தியவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி பெருமுயற்சி மேற்கொண்டு பாரிஸ் நகரத்தில் ‘விஜயா’ இதழ்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனை வெளிக் கொணர்ந்திருக்கிறார். நாகர்கோவிலில் உள்ள ‘காலச்சுவடு’ பதிப்பகம் இதனை நூலாக வெளியிட்டிருக்கிறது.

‘விஜயா’ பத்திரிகையில் மகாகவி பாரதியார் உலக நாடுகளில் நிலவிய பிரச்சினைகள் குறித்தெல்லாம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 2007-08ஆம் ஆண்டில் பாரதி இலக்கியப் பயிலகம் நடத்திய அஞ்சல் வழிப் பயிற்சியில் ஏழாவது பாடமாக “பாரதியாரின் ‘விஜயா’ பத்திரிகை கட்டுரைகள்” எனும் தலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதியின் நூலிலிருந்து சில பகுதிகளைப் பாடமாக வெளியிட்டு மகிழ்ந்தது. ‘விஜயா’ கட்டுரைகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவரங்களை நன்கு தெரிந்துகொள்ளலாம். இந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் “விஜயா” என்று பெரிய எழுத்துகளால் தலைப்பு காணப்படுகிறது. அதன் கீழே ஆங்கிலத்திலும் VIJAYA என எழுதப்பட்டிருக்கிறது.

தலைப்பில் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ எனும் மூன்று வாசகங்கள் காணப்படுகின்றன. இதன் பிரெஞ்சு வடிவத்தையும் மேற்புறத்தில் காணலாம். இப்பத்திரிகை பிரதி தினம் மாலையில் பிரசுரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மக்களால் மிகவும் விரும்பி படிக்கப்பட்ட இந்த பத்திரிகை 1910ஆம் ஆண்டு பத்திரிக்கைகள் சட்டம் பிரிவு 4, உட்பிரிவு 1-ன்படி தடை செய்யப்பட்டது. அது முதல் இந்த இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.

கர்மயோகி

மகரிஷி அரவிந்தர் கல்கத்தாவிலிருந்து “கர்மயோகின்” எனும் தலைப்பில் ஒரு வார இதழை நடத்தி வந்தார். அவர் சதி வழக்குகளிலிருந்து விடுதலையானபின் சந்திரநாகூரிலிருந்து கப்பல் மூலம் புதுச்சேரி வந்த நாளோடு அந்த பத்திரிகை நின்றுபோய்விட்டது. மகான் அரவிந்தர் நடத்தி வந்த அந்த பத்திரிகையின் பெயரிலேயே பாரதியார் தமிழில் “கர்மயோகி” எனும் வாராந்திர பத்திரிகையை வெளியிட்டார். சைகோன் சின்னையா என்பவரின் அச்சுக்கூடத்தில் இந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டதாக எல்லா ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.

இந்த இதழில் பாரதியார் “ஆரிய நாகரிகம்”, “நமது சொந்த நாடு”, “ஒற்றுமையே வலிமை” என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார். சீர்திருத்தத்தின் மூலமாய், மாகாணச் சட்டசபைகளில் ஜனங்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையில் இருப்பார்களென்று மார்லி பிரபு கூறினார். இது தவறு என்று அரவிந்தர் தமது ‘கர்மயோகின்’ பத்திரிகையில் தெளிவாக எடுத்துக் காண்பித்தார். சட்டசபையில் கேள்வி கேட்கும் உரிமைதான் ஜனப்பிரதிநிதிகளுக்கு மிச்சப்படும் என்றும், கேள்விகளுக்குச் சரியான பதிலை சர்க்கார் பிரதிநிதிகளிடமிருந்து பெற முடியாது என்றும் அரவிந்தர் எழுதியிருந்தார்.

அரவிந்தர் 1909ஆம் ஆண்டில் எழுதியதை, தேச மக்கள் இருபது வருடங்களுக்குப் பிறகு அனுபவத்தில் தெரிந்து கொண்டார்கள். சில்லறைச் சீர்திருத்தங்கள், புரட்சிகரமான பெரிய சீர்திருத்தங்களுக்கு விரோதிகள் என்று மார்லி பிரபு ஓரிடத்தில் கூறிய உண்மையைத் தேசபக்தர்கள் எடுத்துக் காண்பிப்பதற்கு அப்பொழுது சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தை பாரதியார் கை நழுவ விடவில்லை. ‘கர்மயோகி’யில் அழுத்தமாக எழுத்து வேலை நடந்து கொண்டு வந்தது.

தர்மம்

‘கர்மயோகின்’ போலவே அரவிந்தர் கல்கத்தாவில் ‘தர்மா’ என்றொரு இதழையும் நடத்தி வந்தார். அவரது வழியைப் பின்பற்றியே பாரதியாரும் ‘தர்மம்’ என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கி நடத்தினார்.

இந்தப் பத்திரிகை வெளியீட்டில் ஒரு விசேஷம் என்னவென்றால், இது இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பத்திரிகைக்கு சந்தா கிடையாது எனினும் நன்கொடை கொடுத்தால் வாங்கிக் கொண்டார்.

சூரியோதயம்

1908-ம் வருஷத்தில் ‘சூரியோதயம்’ எனும் தமிழ் வார இதழ் புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது. இந்த பத்திரிகை 300 பிரதிகள் வரை விற்றதாகவும் தெரிகிறது. 5-7-1908இல் நின்று போன இந்த இதழ் மீண்டும் பாரதியாரால் 1910-ல் இந்து வெளியிடப்பட்டது. இந்த இதழின் ஆசிரியர் நீலகண்ட பிரம்மச்சாரி என்றாலும், பாரதியாருடைய கட்டுரைகள் இந்தப் பத்திரிகையில் வெளிவந்தன. பரலி சு.நெல்லையப்பர் இந்த இதழில் உதவி ஆசிரியராக இருந்து பணியாற்றினார். ‘சூரியோதயம்’ இதழும் ஆங்கில ஆட்சியாளர்களின் தடையுத்தரவினால் நிறுத்தப்பட்டது.

மீண்டும் சுதேசமித்திரன்

1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பாரதி தொடங்கிய அனைத்துப் பத்திரிகைகளும் அரசாங்கத்தின் கெடுபிடியால் மூடப்பட்ட நிலையில் அவர் வறுமை நிலை எய்தினார். அவருடைய தீப்பிழம்பினைக் கக்கும் எழுத்துகள் நின்று போயின, எப்போதாவது ஏதாவதொரு சிறு பத்திரிகையில் வெளிவருவதைத் தவிர. நண்பர்கள் வற்புறுத்தவே பாரதியார் மீண்டும் ‘சுதேசமித்திர’னுக்கு எழுதத் தொடங்கினார். என்றாலும் இது ஒன்றுதான் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்திரிகை, இதற்கும் நான் எழுதுவதால் ஆபத்து நேராமல் இருக்க வேண்டுமே என்று பாரதி கவலைப்பட்டாராம்.

1915-ல் ஜி.சுப்பிரமணிய அய்யர் ‘சுதேசமித்திரனை’ ஏ.ரங்கசாமி ஐயங்காருக்கு விற்றுவிட்டார். இவர் பாரதியின் எழுத்துகளை தைரியமாக ‘சுதேசமித்திர’னில் வெளியிட்டு அவருக்குப் பணமும் அனுப்பலானார். ஆனால், ரங்கசாமி ஐயங்கார், பாரதியிடம் அரசியல் கலப்பில்லாத கட்டுரைகளையும், பாடல்களையும் தந்து உதவும்படி கேட்டுக் கொண்டார்.

நிர்ணயம் இல்லாமல் மாதம் முப்பது ரூபாயைக் கொடுத்து விடுவார். மாதம் முழுவதும் பாரதியார் எதுவும் எழுதாவிட்டாலும் இந்த முப்பது ரூபாய் புதுச்சேரிக்கு மணியார்டரில் சென்றுவிடும். 1915-ல் இருந்து பாரதியார் ‘சுதேசமித்திர’னில் தொடர்ந்து எழுதலானார். புதுச்சேரி வாழ்க்கைக்கு இந்த முப்பது ரூபாய் பாரதிக்குப் பெரிதும் பயன்பட்டது.

பாரதி கடையத்தில் தம்முடைய நூல்களைப் பிரசுரம் செய்வதற்கு பெரிதும் முயற்சி செய்தார். நூல்களை வெளியிடப் பணம் வேண்டுமெனப் பலருக்கும் கடிதங்கள் எழுதினார். இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துவிட்ட நிலையில் மீண்டும் 1920 ஆகஸ்ட் மாதத்தில் பாரதியார் சென்னை வந்து சேர்ந்தார். அவருடைய நண்பர் எஸ்.துரைசாமி அய்யர் பாரதியை அழைத்துக் கொண்டு சென்று ‘சுதேசமித்திரன்’ ரங்கசாமி ஐயங்காரிடம் மீண்டும் சேர்த்துவிட்டார்.

பாரதியார் ‘சுதேசமித்திரனில்’ அரசியல் கலப்பில்லாத பொதுச் செய்திகளையே பெரிதும் எழுதினார். ஆயினும் விடுதலை உணர்வும் தேசபக்தியும் அவர் எழுத்துகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படவே செய்தது. எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் போன்ற பல புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் அப்போது பாரதியாருடன் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

‘சுதேசமித்திரன்’ பத்திரிகைதான் பாரதியாரை முதன்முதலில் பத்திரிகை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அவர் காலமாகும்போதும் அந்தப் பத்திரிகையில்தான் பணியாற்றி வந்தார். புதுச்சேரியில் இருந்த காலத்தில் அவ்வப்போது அவர் ‘சுதேசமித்திர’னுக்கு எழுதி வந்தார்.

விவேகபானு

பாரதியார் சென்னைக்கு வந்து பிரபலமான பத்திரிகையாளராக ஆவதற்கு முன்பாக மதுரையில் இருந்தபோது, முதன் முதலில் அவருடைய கவிதை விவேகபானு இதழில் வெளியானது, மேலும் இந்தக் கவிதை அவருடைய மற்ற கவிதைகளைப் போலன்றி பண்டிதத் தமிழில் அமைந்திருந்தது. திருநெல்வேலியில் இருந்து சுவாமி வள்ளிநாயகம் என்பவரால் நடத்தப்பட்டு வந்த விவேகபானு பத்திரிகை சமயம் சார்ந்த பத்திரிகை. 1904-ல் இந்த இதழில் மகாகவி பாரதி எழுதி “தனிமை இரக்கம்” எனும் கவிதை வெளியாகியது. அந்தப் பாட்டில் அடியில் இங்ஙனம் எட்டயபுரம் ஸி.சுப்பிரமணிய பாரதி என்று கையெழுத்திட்டு வெளியிடப்பட்டது.

சர்வஜனமித்திரன்

இந்தப் பத்திரிகை திருநெல்வேலியிலிருந்து வேதமூர்த்தி எனும் ஆசிரியரால் வெளியிடப்பட்டதாகும். இது வாரம் இருமுறை பத்திரிகை. சென்னைக்கு வந்து பிரபலமான பத்திரிகையாளராக ஆவதற்கு முன்பாக இந்த இதழில் 1904-ம் ஆண்டில் பாரதியார் கட்டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் பொதுவாகச் செல்வந்தர்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டித்திருந்ததாகவும், இந்த விஷயம் எட்டயபுரம் ஜமீன்தாருக்குச் சொல்லப்பட அவர் பாரதியிடம் மன வேறுபாடு கொண்டார் என்றும் பாரதியாரின் தம்பியான சி.விஸ்வநாத ஐயர் எழுதியிருக்கிறார்.

ஞானபானு

இந்தப் பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரரும், வ.உ.சியின் நண்பருமான சுப்பிரமணிய சிவா ஆசிரியராக இருந்து நடத்தினார். 1913 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகை சென்னை மைலாப்பூரிலிருந்து வெளியானது. பாரதியார் 1913 தொடங்கி 1915-ல் பத்திரிகை நின்று போகும் வரை இதில் எழுதினார். இதில் பாரதியார் தனது சொந்தப் பெயரிலும், புனைபெயரிலும் எழுதியுள்ளார். மற்ற பத்திரிகைகள் பாரதியாரின் கட்டுரைகளை வெளியிடத் தயங்கிய நேரத்தில் அச்சமின்றி அவற்றை சுப்பிரமணிய சிவா வெளியிட்டார். பாரதியாரின் கவிதைகள் பல, ‘ஞானபானு’வில்தான் வெளியாகின. முன்பு எழுதிக் காணாமல் போன ‘சின்ன சங்கரன் கதை’யை மீண்டும் இதில் தொடராக எழுதினாலும், அது 6 பகுதிகளோடு நின்றுபோனது. தொடர்ந்து அவர் அதை எழுதி முடிக்கவில்லை.

தி இந்து

1904 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பாரதியார் ‘தி இந்து’ பத்திரிகையில் எழுதிய ஆங்கிலக் கடிதங்களைத் தேடி ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். பாரதியாரின் ஆங்கிலப் புலமை ஆங்கிலேயரே படித்து ஆச்சரியப்படும்படியாக இருந்தது.

காமன்வீல்

அன்னிபெசன்ட் 1914-ல் தொடங்கிய ஆங்கில வார இதழ் ‘காமன்வீல்’. இதில் பாரதியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. இதே அன்னிபெசன்ட்டைக் கேலி செய்து பாரதியார் முன்பு “A Fox with Golden Tail” எழுதியிருந்தாலும், அவர்களுக்குள் இருந்த நட்பு முறியவில்லை. அடுத்ததாக ‘ஆர்யா’ எனும் ஆங்கில இதழ். இதனைப் புதுச்சேரி வந்த பிறகு அரவிந்தர் நடத்தினார். அரவிந்தர் அன்னை இதனை பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார். 1914 ஆகஸ்ட் 15, அரவிந்தரின் பிறந்த நாளில் இதன் முதல் இதழ் வெளியானது.

‘சக்கரவர்த்தினி’ இதழில் பாரதியார் முதலில் ஆங்கில ஆண்டும், ஆங்கில மாதமும் குறிப்பிட்டு வெளியிட்டார். பின்னர் ‘இந்தியா’, ‘விஜயா’ முதலிய இதழ்களில் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் மற்றும் தேதி குறிப்பிட்டு அவற்றோடு ஆங்கில ஆண்டும், ஆங்கில மாதமும் வெளியிட்டுள்ளார். இவ்வாறு இதழியலில் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், நாள் இவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதியே.

இது மட்டுமல்லாமல் ‘விஜயா’ இதழில் பக்க எண்களையும் தமிழில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இதழியலில் தமிழ் எண்களை முதன் முதலில் பயன்படுத்தியவர் பாரதியே. ‘சக்கரவர்த்தினி’ இதழில் 1905 மற்றும் 1906 & ‘இந்தியா’ இதழில் 1906 மற்றும் 1907 பாரதி ஆங்கிலத் தலைப்பும் கீழே தமிழ் தலைப்பும் வைத்து எழுதும் வழக்கம் கொண்டிருந்தாலும் பின் ‘இந்தியா’, ‘விஜயா’, ‘கர்மயோகி’ முதலிய இதழ்களில் தமிழில் மட்டுமே தலைப்பு அமைத்துள்ளார். தமிழில் மட்டும் தலைப்பிடுவதை திருவிகவுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தியவர் பாரதியே.

இதழியலின் இன்றியமையாத நோக்கங்களான தெரிவித்தல், மகிழ்வித்தல், அறிவுறுத்தல், விலையாக்கல் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் பத்திரிகைகளை நடத்தி , இதழியல் துறையில் முத்திரை பதித்தவர். பாரதியார் அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செரிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக்குறுகிய செயல்கள் தீர்த்துக்குவலயம் ஓங்கச் செய்வாய் நறுமண இதழியப் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் என்ற வரிகளை உள்வாங்கி, உணர்வுபூர்வமாக இதழியல் துறையில் புரட்சி செய்தவர் பாரதியே.

முண்டாசுக் கட்டுடையான் முழுநிலவுப் பொட்டுடையான் பதினெட்டு மொழியுடையான் பார்புகழும் பாட்டுடையான் புகழை நாளும் பரப்புவோமாக!!!

-இந்து தமிழ்
2021.09.11

Tags: