எழுத்தாளர் அம்பைக்கு 2021 இற்கானஆண்டுக்கான இந்திய சாகித்ய அகாடமி விருது

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக அம்பை இந்த விருதைப் பெறுகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ஆகும். 13 கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.

சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட அம்பை, புனைவெழுத்தில் பெண் இருப்பைக் காத்திரமாகப் பதிவுசெய்த எழுத்துக்குச் சொந்தக்காரர். ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளின் வழியே இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவர். ‘காட்டில் ஒரு மான்’. ‘சக்கர நாற்காலி’ உள்ளிட்ட படைப்புகளை எழுதியவர். இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

மும்பையில் வசித்துவரும் அம்பை, பெண் எழுத்தாளர்கள், அளுமைகளை அடையாளம் கண்டு அவர்களின் நேர்காணல்களை ஆவணங்களாகத் தொகுத்து ஒரு ஆவணக் காப்பகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கென ‘ஸ்பாரோ’ விருதுகளை உருவாக்கித் தமிழிலும் பிற மொழிகளிலும் எழுதுகிற படைப்பாளிகளை ஒவ்வொரு ஆண்டும் கவுரவித்து வருகிறார்.

சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது குறித்து அம்பையிடம் கேட்டபோது, “விருது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றுதான் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு முன்பு எத்தனையோ மூத்த எழுத்தாளர்களுக்கு இந்த விருது கிடைக்கவே இல்லையே! சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் போன்றோருக்குக் கிடைக்கவில்லை. எனவே, ஒரு புறம் இந்த விருது கிடைத்திருப்பதில் சந்தோஷமாக இருந்தாலும், சிறு கூச்ச உணர்வும் இருக்கிறது” என்றார்.

சாகித்திய அகாதமி விருது பெறும் தமிழின் 4-வது பெண் எழுத்தாளர் அம்பை பற்றிய சில குறிப்புகள்!

-சு. அருண் பிரசாத்

1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரையிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.

சி.எஸ். லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர், திரைப்பட இயக்குநர் விஷ்ணு மாத்தூரைத் திருமணம் செய்துகொண்டார்.

அம்பையின் இலக்கியச் செயல்பாடு, 1960-களில் அவருடைய பதின்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற நூலின் மூலம் எழுத்துலகில் நுழைந்த அம்பையின் முதல் தீவிர இலக்கிய ஆக்கம், 1966-ல் ‘அந்திமழை’ என்ற பெயரில் வெளிப்பட்டது. 1967-ல் ‘கணையாழி’ இதழில் வெளியான ‘சிறகுகள் முறியும்’ சிறுகதை அம்பையின் வருகையை அறிவித்தது. 1976-ல் இதே பெயரில், அம்பையின் முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. 1988-ல் வெளியான அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘வீட்டில் மூலையில் சமையலறை’ தவிர்க்க முடியாத இடத்துக்கு அவரைக் கொண்டுசென்றது. தமிழின் முக்கியச் சிறுகதையாசிரியராக அம்பை உருவெடுத்தார். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியாக, தமிழ் நவீனப் பெண்ணிலக்கியத்தில் அம்பை உருவாக்கிய தடம் அழுத்தமானது.

அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நூல், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்திய மொழிகளில் புனைவு மொழிபெயர்ப்புக்கான Vodafone Crossword Book Award-ஐ லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமுடன் இணைந்து 2016-ல் பெற்றார் அம்பை. தமிழிலக்கியத்துக்கான அம்பையின் பங்களிப்புகளுக்கான, கனட இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2008-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

‘SPARROW’ (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டுவரும் அம்பை, டாக்டர் சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

Tags: