யானைகளின் வாழிடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிப்பு!

-ஹம்தா லதீப்

லங்கையில் காட்டு யானைகள்- மனிதர்கள் இடையிலான மோதல்கள் அதிகரித்துச் செல்கின்றன. யானை- மனித மோதலினால் உலகில் அதிக எண்ணிக்ககையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற கோப் குழுவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானை – மனித மோதல்களுக்கு முழுமையான தீர்வு காண்பதில் இலங்கை இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை.

இலங்கையில் வருடாந்தம் யானை – மனித மோதல்களினால் 271 யானைகளும் 85 மக்களும் இறப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல பயிர்ச் சேதங்கள் மற்றும் சொத்துச் சேதம் போன்றவை கணக்குகளுக்கும் அப்பாற்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்ட்ட காட்டு யானைகள் தொகை மதிப்பீட்டின்படி காட்டு யானைகளின் எண்ணிக்கை 5879 ஆக அறியப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகம் யானைகளின் பரம்பலுடைய மாகாணமாக வடமத்திய மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையிலே விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள கல்னேவ பிரதேச சபைக்குட்பட்ட நேகம கிராமத்தை காட்டு யானை – மனித முரண்பாடுகள் இடம்பெறுகின்ற பிரதேசத்துக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

குளங்களை நம்பி இங்கு நெற்பயிர்ச் செய்சை மற்றும் சேனைப்பயிர்ச் செய்கையினை மக்கள் மேற்கொள்கின்றார். கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் பயிர்ச் செய்கைகளில் அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அக்கிராமம் உள்ளிட்ட இதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் காட்டுயானைகளினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பத்து வருடகாலப் பகுதிக்குள் காட்டு யானைகளினால் அதிக சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இரவில் தொடர்ச்சியாக தாம் காவலுக்காக சிறு கொட்டில்கள் அமைத்துத் தங்குவதாகவும் குறிப்பிட்டனர். ஏதேனும் காரணத்தினால் ஒரு இரவாவது காவலுக்குச் செல்ல முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் காட்டுயானைகளினால் அத்தனை நாள் உழைப்பும் ஒரு நாளில் அழிவடைவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

வனசீவராசிகள் திணைக்களத்தினரின் அறிக்கையின்படி, இலங்கையில் மரணமடையும் யானைகளில் 60 சதவீதமானவை மனித நடவடிக்கைகளினால் இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை யானை – மனித முரண்பாடுகளுக்குக் காரணம் காடுகள் அழிக்கப்படுவதாகும். வனப் பிரதேசசங்களை குடியிருப்புகளாகவும் பயிர்ச் செய்கை நிலங்களாகவும் மாற்றுதல், கட்டடங்களை அமைப்பதற்காக காட்டிலுள்ள மரங்களை வெட்டுதல் மற்றும் யானைகளின் போக்குவரத்து வழிகளை மறித்து கட்டடங்கள் அமைத்தல் போன்ற செயற்பாடுகளால் யானைகளின் நிம்மதி குலைக்கப்பட்டு விட்டது. அவை உணவுக்காக காடுகளை விட்டு வெளியே வந்து அலைய வேண்டியுள்ளது.

ஆசிய யானை இனங்களின் அழிவானது கவலை தரக் கூடியதாகும். இதனைத் தடுத்து நிறுத்த மாற்று வழிகளைத் தேடுவது அவசியம். காட்டு யானைகளின் அத்துமீறல்களுக்கான பிரதானமான காரணம் காடுகளில் அவற்றுக்கான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் போவதாகும். காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் உணவாகக் காணப்படும் புற்கள், புதர்கள் போன்றவற்றின் அடர்த்தி குறைவடைந்துள்ளது. அவ்வாறான நிலையில் யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்க முடியாது. ஆகவே இதற்கான மாற்று வழிமுறையாக வனங்களை அடர்த்தியாக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் யானைகளின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு வளிமண்டலத்திற்கான ஒட்சிசன் – காபனீரொட்சைட் சமனிலையும் பேணப்படும்.

காட்டு யானைகளின் பயணப்பாதை பற்றிய இரகசியங்கள் சுற்று சுவாரஸ்யமானவை. யானைகள் தமது வழித்தோன்றல்களின் சுவடுகளைப் பின்பற்றியே காடுகளுக்குள் பயணிப்பதாக விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது காட்டு யானைகளின் வழித்தடங்களில் காணப்படும் தடைகள அகற்றுவதனூடாகவும் யானை – மனித முரண்பாடுகளை குறைக்க முடியும். யானைகளின் பாதைகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அமைக்காதிருத்தல் மற்றும் குடியிருப்புக்கட்டடங்கள் அல்லது தொழிற்சாலைகள் அமைக்கும் முன்னர் அது தொடர்பான அதிகாரிகளிடம் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெறுதல் போன்ற நடைமுறைகளைக் கையாளலாம். மேலும் யானைகளின் பயணப்பாதை மாற்றமடைவதால் அவற்றின் உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது காட்டு யானைகளின் பயணப்பாதை தொர்பாக கூடுதல் கரிசனை எடுக்கப்பட வேண்டும்

காட்டு யானை – மனித முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான மற்றுமோர் நவீன உத்திமுறை யானை வேலி அமைப்பதாகும். யானை வேலி அமைப்பதற்காக 3000 மில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த வருடத்தில் மாத்திரம் 1500 கி.மீ தூரத்திற்கு யானை வேலி அமைப்பதற்கு அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் யானை வேலிகளினால் எதிர்பார்த்தபடியான பயன்களை இதுவரை பெற முடியவில்லை. அவை வேலிகளை உடைத்துக் கொண்டு உள்வருவதை அவதானிக்கலாம். இதற்கு மாற்று வழியாக வேலிகளுக்கு அப்பாற்பட்ட பிரதேச எல்லையின் சூழல் அமைவில் மாற்றங்களை ஏற்படுத்துவது காட்டாயமாகும்.

யானைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகள் மற்றும் நிதியங்களை அரசும் மக்களும் இணைந்து செயற்படுத்தல் வேண்டும். இவவ்வாறான அமைப்புகள் மூலம் காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை வழங்குதல் தனித்து விடப்பட்ட யானைக் குட்டிகளைப் பராமரித்தல் மற்றும் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகச் செயற்படுதல் போன்ற நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையில் காட்டு யானைகளைப் பேணுதல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கைத் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தல் வேண்டும். காட்டு யானைகள் போன்ற ஐந்தறிவு சீவராசிகள் மீது ஜீவகாருன்யம் காட்டப்படுவதால் மாத்திரமே இவ்வாறான பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்பது.

Tags: