நீதிபதி சந்துரு
–ஷாலினி நியூட்டன்
-ஆ.வின்சென்ட் பால்
‘உங்களுக்கு சொத்தெல்லாம் சேர்த்து வைக்க முடியாதுப்பா… பதிலா எவ்வளவு முயற்சி செய்தாவது உங்களைப் படிக்க வைச்சுடறேன்…’
இவை என் அப்பா சொன்ன வார்த்தைகள். இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கும் சொற்கள்.
1951 ஆம் ஆண்டு திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் பிறந்தேன். அப்பா கிருஷ்ணசாமி. அம்மா சரஸ்வதி. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. எனக்கு ஐந்தரை வயதாகும்போது இன்சோம்னியா பிரச்சனையால் அம்மா காலமாகிவிட்டார்.
உடனே மறுமணம் செய்து கொண்டு எங்களை ஊரில் விட்டு விடும்படி உறவினர்கள் அப்பாவிடம் சொன்னார்கள். அவர் மறுத்து விட்டார். தனி ஆளாக எங்களை வளர்த்து ஆளாக்கினார். நல்ல கல்வி எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சென்னைக்கு மாற்றலாகி எங்களை அழைத்து வந்தார்.
முதலில் வட சென்னை. பிறகு தி.நகர். அங்கு இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எங்களை அப்பா சேர்த்தார். சமையல் உட்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் அப்பாவே செய்வார். ராஜகோபால், சுந்தர் என இரண்டு அண்ணன்கள், சகுந்தலா என ஒரு அக்கா, குமார் என ஒரு தம்பி என நாங்கள் மொத்தம் ஐந்து பேர்.
அது இந்திய – சீன யுத்த நேரம். உணவு, எரிபொருள் என எல்லாமே தட்டுப்பாடு. ரேஷன் கடையில் வரிசையில் நின்றுதான் சர்க்கரை, மண்ணெண்ணெய் உட்பட எது ஒன்றையும் வாங்க முடியும். தண்ணீரையும் அடி பம்ப்பில் அடித்துதான் பிடிக்க வேண்டும்.
காலையில் 10 மணிக்கு ரேஷன் கடையைத் திறப்பார்கள். ஆனால், அதிகாலை நான்கு மணி முதலே வரிசையில் மக்கள் நிற்கத் தொடங்கி விடுவார்கள். காப்பித்தூள், சீயக்காய்த் தூள் உட்பட சகலத்தையும் அரைத்துதான் வாங்க வேண்டும். அப்போது அதிகாலை நான்கு மணிக்கு எழ ஆரம்பித்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது.
ஒருகட்டத்தில் அக்கா மணமாகி புகுந்த வீடு சென்றார். இரு அண்ணன்களும் மேல் படிப்பில் மும்முரமாக இருந்தார்கள். வீட்டில் அப்பா, நான், தம்பி என மூன்றே பேர். காலையில் நான் சமைப்பேன். மாலையில் தம்பி சமைப்பார். இப்படியாக சிறு வயதிலேயே நானும் தம்பியும் சமைக்கக் கற்றுக் கொண்டோம். பெண்கள்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலை எங்கள் வீட்டில் இருந்ததே இல்லை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வோம்.
ரேஷன் கடையில் வாங்க வேண்டியதை வாங்கி வைத்து விட்டுப் பள்ளிக்குச் செல்வேன். மாலை வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள் உட்பட பொருட்களை வாங்குவேன். இதனால் சிறு வயதிலேயே எனக்கு பொறுப்பு வந்துவிட்டது!பொழுதுபோக்கு என்றால் அது புத்தகங்கள் படிப்பதுதான். வார, மாதப் பத்திரிகைகளை அப்பா வாங்க மாட்டார். செய்தித்தாள்களும் சிறுவர்களுக்கான புத்தகங்களும் தான் வாங்கி வருவார்.
வாசிப்புப் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. நூலகங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தேன். அரசியல் புத்தகங்களைப் படிக்கப் பிடித்தது. ஊரில் நடந்த அரசியல் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். அரசியல் மேடைகளுக்கு முன்னால் இரவு முழுக்க உட்கார்ந்து விடுவேன். வீட்டில் திட்டு விழும். ‘சோறு கிடையாது… கதவைத் திறக்க மாட்டோம்’ என வாசலிலேயே உட்கார வைத்து விடுவார்கள்!
அதனால் என்ன… அரசியல் கூட்டங்களில் பிரமாதமாக உணவு போட்டார்கள்! கூட்டங்களுக்குச் செல்வதும் தொடர்ந்தது. சில கூட்டங்களில் உணவு போட மாட்டார்கள். பட்டினி கிடக்கத் தயார் எனச் சென்றுவிடுவேன்! இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றபோது ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்றிருக்கிறேன். திமுக மீது ஈடுபாடு அதிகரித்தது.
அறிஞர் அண்ணா தேர்தலில் நின்றபோது பூத் ஸ்லிப் கொடுக்கும் பணியை மேற்கொண்டேன். சுருக்கமாகச் சொல்வதென்றால் அப்போது நடந்த அனைத்து மாணவர் போராட்டங்களிலும் பங்கேற்றேன். இக்காலங்களில் இடதுசாரிகள் அறிமுகமானார்கள். தொழிற் சங்கங்களுடன் நட்பு ஏற்பட்டது.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பையும் நான் விடவில்லை. மெடிக்கல் படிக்க விரும்பினேன். அப்போது நுழைவுத் தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வுதான். பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும். எனவே லயோலாவில் பி.எஸ்.ஸி தாவரவியல் சேர்ந்தேன். எனது அரசியல் நடவடிக்கைகளை அறிந்த கல்லூரி நிர்வாகம் இரண்டாம் வருடத்தில் என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்!
வேறொரு கல்லூரியில் சேர்ந்து டிகிரி முடித்தேன். இந்த வேளையில் அப்பாவின் இறப்பு நிகழ்ந்தது. இரு அண்ணன்களும் வெளியூரில் வேலையில் இருந்தார்கள். தம்பி சிறுவன் என்பதால் அவரை உறவினர் வீட்டில் தங்க வைத்தேன். ஆக, தனி ஆள். முழுமையாக அரசியல், சிறை என நாட்கள் கழிந்தன. ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி என்னைப் பார்த்து, ‘நீ படிக்கணும்… சட்டம் படிச்சு வக்கீலாகு… உனக்கு அங்கீகாரம் கிடைக்கும்…’ என்றார்.
எனக்கும் அது சரியென்று தோன்றவே கல்லூரியில் சேர்ந்து சட்டம் படிக்கத் தொடங்கினேன். நாள் தவறாமல் கல்லூரிக்குச் சென்றேன். சின்சியராகப் படித்தேன். பாஸானேன். மார்க்சிஸ்ட் கட்சியின் அடையாளம் வேறு என்னுடன் ஒட்டிக் கொண்டது! முறையாகப் பயிற்சி எடுத்து 1976ல் வழக்கறிஞரானேன். அது மிசா காலம். சிறைக் கைதி களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளைப் பதிவு செய்து வழக்குத் தொடுக்கச் சென்றேன். இப்போது திமுகவின் தலைவராக இருக்கும் ஸ்டாலினை அங்கு சிறையில் சந்தித்தேன்.
மார்க்சிஸ்ட் கட்சி நபர்களுக்காக நான் ஆஜர் ஆனேன். ஜூனியர் வக்கீலாகப் பொது நல வழக்கு தொடுத்தேன். என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்தடுத்து பல பொது நல வழக்குகளைத் தொடுத்தேன்.1968 முதல் 1988 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் நபராக இருந்த நான் திடீரென்று ஒருநாள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அதன் பிறகு வழக்கறிஞர் தொழிலில் முழுக் கவனமும் செலுத்தினேன். தொடர்ச்சியாக வழக்குகள். எல்லாமே சமூகப் பிரச்னைகள் சார்ந்தவை.
இதனால் வக்கீல்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு கிடைத்தது. பார் கவுன்சில் நபராக என்னை அறிவித்தார்கள். அனைவரும் அறிந்த வக்கீலாக மாறினேன். மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து வாதாடினேன். எனது செயல்பாடுகள் குறித்து தனது புத்தகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் காரர்களுக்காகவும் வாதாடி இருக்கிறேன். இலங்கை அகதிகளுக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். இதற்குள் சீனியர் வக்கீலாக வளர்ந்திருந்தேன். தினமும் வேலை. என்னை வெற்றிகரமான வழக்கறிஞராக உலகம் பார்க்கத் தொடங்கியது. 1996ல் எனக்கு திருமணம். அது சாதி மறுப்புக் காதல் மணம்.
அவர்கள் பெயர் பாரதி. பச்சையப்பன் கல்லூரியில் அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர். பாரதியின் வருகைக்குப் பிறகுதான் மறுபடியும் எனக்குக் குடும்பம் வந்தது. பொறுப்புகளும். தான்தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. எங்களுக்கு கீர்த்தி என்று ஒரு மகள். பொருளாதார ரீதியாக ஓரளவு நல்ல நிலை என்றாலும் பணத்துக்காக எந்த வழக்கையும் நான் எடுத்து நடத்தியதில்லை. ஏழைகளுக்காகவே அதிகம் வாதாடி இருக்கிறேன்.
இந்நிலையில் அப்போது நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக விண்ணப்பித்தேன். ‘இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல்’ என்று சொல்லி அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.
2006ல் ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதைக் காரணம் காட்டி நீதிபதி பொறுப்பைக் கொடுக்காமல் இருக்க முடியாது’ என உச்ச நீதி மன்றம் சொல்லி என்னை நீதிபதியாக நியமித்தார்கள். நீதிபதியாக நான் பணியில் இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறேன். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு யாரும் தீர்ப்புச் சொன்னதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், ‘இந்திய நீதிமன்றங்களின் சச்சின் சந்துருதான்… அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ என எழுதியிருக்கிறார்.
நான் அமர்ந்தால் எந்த வாய்தாவும் கிடையாது. தீர்ப்புதான். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட டிக்டேஷன் செய்வேன். ‘சந்துருவுக்கு மட்டும் வாரத்துக்கு 8 நாள்’ என வி.ஆர்.கிருஷ்ணய்யர் கிண்டல் அடிப்பார். நீதிபதிகளுக்குப் பாதுகாப்புக் காவலர் கொடுப்பது வழக்கம். எனக்கு அப்படி யாரும் வேண்டாம் என எழுதிக் கொடுத்தேன். மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. கார் கூட பயன்படுத்த மாட்டேன். பெரும்பாலும் பஸ், ரயில்தான்.
பதவிக்கு வந்ததுமே என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன். பல சீனியர்கள் இதனால் கோபம் அடைந்தார்கள். கடைசியில் அனைவரும் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வந்தது. மகள் கீர்த்தி பல் மருத்துவராக இருக்கிறார். ‘ஒருவேளை நான் வழக்கறிஞராகி சுமாராக இருந்தால்… ‘என்ன, சந்துரு மகளா இருந்துட்டு இப்படி சுமாரா இருக்க’ என்ற பேச்சு வரும். அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ என கீர்த்தி சொல்லி விட்டார். என் நிழலில் வாழாமல் அவர் தன் துறையில் முன்னேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு, என் மனைவிக்கு, மகளுக்கு எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது கல்விதான். எங்களுக்கு மட்டுமில்லை… என் சகோதரர் களுக்கும் சகோதரிக்கும் கூட நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருப்பது கல்விதான். நாம் மேற்கொள்ளும் பணியை எந்த அளவுக்கு சின்சியராக மக்கள் நலன் சார்ந்து செய்கிறோமோ அந்தளவுக்குச் சமூகத்தில் நமக்கு பெயர் கிடைக்கும். என் வாழ்க்கை எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.
ஓய்வுக்குப் பிறகு இன்றும் தினமும் படிக்கிறேன். படித்த நூல்களை லாரியில் ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். இப்போது நடைபெறும் வழக்குகள் சார்ந்து என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். அந்த வகையிலேயே சமீபத்தில் மிசாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என அவதூறு கிளம்பியபோது அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். மனித உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் என்றும் குரல் கொடுப்பேன்!
-2019.11.29
``தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகவே கருத வேண்டும்”-நீதியரசர் சந்துரு
நீதியரசர் சந்துரு 2013-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்:
“நீதிபதிகளுக்கு எதற்கு வானளாவிய அதிகாரம்… அளவுக்கு அதிகமான சலுகைகள்… அவர்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களா என்ன?”
“தனக்கு ‘வானளாவிய அதிகாரம்’ (Sky high power) இருக்கிறது என்று கூறிய முன்னாள் பேரவைத் தலைவர் சரித்திரப் பக்கங்களிலிருந்து காணாமல்போய்விட்டார். மக்களாட்சியில் யாருக்கும் வானளாவிய அதிகாரம் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை. அது நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். நீதிமன்றங்களும், தங்களுடைய தீர்ப்புகளையும் நடவடிக்கைகளையும் சட்ட வரையறைக்குள்தான் பொருத்திக்கொள்ள வேண்டும்!”
“தாங்கள் எளிமையாக இருந்ததால் அடைந்த நன்மைகள் என்னென்ன… தீமைகள் என்னென்ன?”
“தீமைகள் ஏதும் இல்லை. நன்மை மக்கள் மனதில் கிடைத்த அரியாசனம்தான்!”
“காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் எப்போதும் எதிரும் புதிருமாக இருப்பதன் காரணம் என்ன?”
“கறுப்புக் கோட்டுக்கும், காக்கிச் சட்டைக்கும் உள்ள பிணக்குகளுக்குக் காரணம், இரு தரப்பினரும் தங்களுக்குள்ள எல்லையை மீறி நாட்டாமை செய்ய முற்படுவதே!”
“ஒவ்வொரு வழக்கறிஞரும் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழி என்ன?”
“எங்களுடைய சமூகப் பொறுப்புகளையும் சட்டத்தின்பால் உள்ள எங்களுடைய தொழில்ரீதியான கடமைகளையும், பொதுநலன்களையும், பொதுச் சேவைகளையும் நினைவுகூர்கிறோம்’ – இதுவே ஒவ்வொரு வழக்கறிஞரின் வேதவாக்காக இருக்க வேண்டும்!”
“ஓய்வுக் காலத்தை எப்படிக் கழிக்கப்போகிறீர்கள்?”
“பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் ஓய்வு ஏதும் இல்லை. மனிதர்களுக்கும் வகிக்கும் பதவிகளிலிருந்து வேண்டுமென்றால் ஓய்வு தருவார்களேயன்றி, அவர் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்து ஓய்வு எடுக்க முடியாது. என் கடன் பணிசெய்து கிடப்பதே. மக்கள் சேவையே மகேசன் சேவை!”
“காதல் அனுபவம் உண்டா?”
“எனது திருமணம், காதல் திருமணம்தான். நான் புகுமுக வகுப்பு படிக்கும்போது நெய்வேலியிலிருந்து காதல் ஜோடி ஒன்று ஓடி வந்து என் வீட்டில் சில நாள்கள் தஞ்சமடைந்தது. அப்போது முதல் இன்று வரை பல காதல் திருமணங்களுக்கு உதவியிருக்கிறேன். நானே நடத்தியும் வைத்திருக்கிறேன். நான் வழக்கறிஞராக இருக்கும்போது காதல் திருமணம் செய்ய விழைவோருக்கு வரும் தடைகளை எதிர்த்து வழக்கு நடத்தியிருக்கிறேன்.
பின்னர், நீதிபதியான பிறகு என் முன்னால் வந்த வழக்குகளில் அப்படிப்பட்ட காதலர்களுக்கு, சட்டரீதியாக என்னவிதமான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியுமோ… அத்தனையையும் செய்தேன். பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த இரு வாரங்களுக்கு முன்னர்கூட ஒரு வழக்கு வந்தது. காதல் திருமணங்களுக்கு உதவி செய்த ஒருவர்மீது காவல்துறையினர் இ.பி.கோ. 466 பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். அதாவது, பெண்ணைக் கடத்தியதற்கு உதவி செய்ததாக, அந்த வழக்கு தள்ளுபடியான பிறகும் அவருக்கு போலீஸ் வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். ‘காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும், கௌரவக் கொலைகளைத் தடுக்க வேண்டும்’ என்று என் தீர்ப்பில் குறிப்பிட்டு, அந்த இளைஞனுக்கு வேலை கொடுக்கும்படி காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டேன்.”
“உங்களுடைய பெரும்பாலான தீர்ப்புகள் சட்டப்படி வழங்கப்பட்டனவா அல்லது கருணையின், மனிதாபிமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டவையா?”
“என்னுடைய தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படியே வழங்கப்பட்டன. சட்டத்தின் ஆட்சியில் (Rule of Law) சட்டத்தின்படியே நீதி அளிக்க முடியும். சட்டத்தின்படி நீதி (Justice according to law) என்பதே சரி. சட்டத்தின்படி தீர்ப்பளித்தாலே நீதி கிட்டியதாகத்தான் அர்த்தம். சட்டம் சரியில்லையென்றால் அதை மாற்றவேண்டியது சட்டமன்றத்தின் கடமைதானே ஒழிய, நீதிமன்றத்தின் வரையறைக்குள் அவ்விதமான அதிகாரம் இல்லை. ஆனால், அதே சமயம் சட்ட வரையறைக்குள் கருணைக்கும் மனிதாபிமானத்துக்கும் இடம் உண்டு!”
“ஒரு சாதாரண சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன. நம்முடைய சொத்தை நம்முடையதுதான் என்று நிரூபிக்கப் பல ஆண்டுகள் பிடிப்பது ஆரோக்கியமான ஒன்றா… இதனால்தானே குண்டர்கள், ரௌடிகள் துணிச்சலாகச் சொத்தை ஆக்கிரமிக்கிறார்கள்… தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகத்தானே கொள்ள வேண்டும். இதற்குத் தீர்வே இல்லையா?”
“ஒருநாள் மெரினா கடற்கரை பக்கம் நடந்துகொண்டிருந்தேன். அப்போது சாலைப் பாதுகாப்பு வாரத்தையட்டி அங்கு ஒரு விழா நடைபெற்றது. மேடையில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார், ‘இந்த காமராசர் சாலையில் காலை நேரத்தில் சிவப்பு விளக்குகள் சுழல, வெள்ளை நிற கார்களில் விரைவாகப் பயணிக்கிறார்கள் நீதித்துறைப் பிரபலங்கள். நீதிதேவன்கள் பயணிக்கும் அந்த வாகனங்கள் அந்த விரைவுப் பயணத்தில் மஞ்சள் கோட்டைத் தாண்டியும், சிக்னல் விளக்குகளை மீறியும் செல்வதைப் பார்க்கிறேன். அப்படி நீதியரசர்கள் விரைந்து பயணித்தாலும், நமது வழக்குகளை விசாரித்து முடிக்க ஆண்டுகள் பல ஆகின்றனவே… அந்த விந்தைதான் எனக்குப் புரிபடவில்லை!’ என்றார். அந்தப் பேச்சாளருக்கு ஒரு பாராட்டுக் குறிப்பு அனுப்பியதைத் தவிர, என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
`தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகவே கருத வேண்டும்’. வழக்கு விசாரிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை விவரித்தால் இங்கு இடம் போதாது. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட பிரச்னையை இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் மட்டும்தான் தீர்ப்பு வருவதை தாமதப்படுத்துவதில் சிலர் வெற்றி காண்கிறார்கள். விரைந்து நீதி கிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தாலும், அதற்குத் தடை வாங்கி தாமதத்தில் வெற்றியடைகிறார்கள். மற்ற நாடுகளில் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் கட்சிக்காரர் மிகப்பெரிய அபராதத் தொகையை இறுதியில் கட்ட நேரிடும் என்பதால் அங்கு தாமதமும் இல்லை… வல்லடி வழக்காடுவதும் இல்லை!’
“தூக்குத் தண்டனை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?”
“உங்கள் கேள்விக்கு பதிலை என் வார்த்தைகளில் கூறுவதைவிட, சமீபத்தில் ‘தென் ஆசியச் செய்தி’ இதழில் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை மேற்கோள் காட்டுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
‘ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு அன்றைய ஆளுநரிடம் நாங்கள் அளித்த கருணை மனு ஏற்க மறுக்கப்பட்டது. உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் ஆணை செல்லாது என்று வழக்கைத் தொடுத்து, ‘அரசியல் சட்டப்படி கருணை மனுக்களின் மீது முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநர்களுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கிடையாது. மாநில அமைச்சரவையும் மத்திய அமைச்சரவையும் கூடி என்ன பரிந்துரையைச் செய்கின்றனவோ, அந்தப் பரிந்துரையை ஏற்றுத்தான் ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் செயல்பட வேண்டும்’ என்ற மகத்தான தீர்ப்பைப் பெற்றுத்தந்து, அந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே சாரும். இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்து 1999-ம் ஆண்டு வரை, ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் மட்டுமே கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சட்டரீதியான முற்றுப்புள்ளி வைத்து, இன்று இந்தியா முழுவதிலும் அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே எண்ணற்றவர்களின் உயிர்கள் தூக்கு மேடைகளிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால், அதற்கான பெருமை முழுவதும் நீதிநாயகம் சந்துரு அவர்களையே சாரும்!’ ”
”வழக்கறிஞர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்வதைப்போல், உங்களுடைய பணிகள் அமைந்திருக்கின்றன. அப்படியானால், குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் வாதாடுவது சரிதானா?”
”குற்றவாளியாக ஒருவரை முடிவுசெய்யும் முன், அவரைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். ‘100 குற்றவாளிகள் விடுதலை பெற்றாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்பதே சட்ட மரபு. அரசியல் சட்டத்தின் ஷரத்து 22(1)ன் கீழ் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட ஒவ்வொருவரும், தான் விரும்பும் வழக்கறிஞர் ஒருவரைக் கலந்தாலோசிக்கவும், தனக்காக வாதாட ஏற்பாடு செய்துகொள்வதும் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சார்பில் வழக்கறிஞர் இல்லாமல் நடத்தப்படும் கிரிமினல் வழக்கு செல்லாததாகிவிடும். அப்படி வழக்கறிஞர் வைத்துக்கொள்ள ஒருவருடைய பொருளாதாரம் இடம் தரவில்லையென்றால், நீதிமன்றமே அவருக்கு வாதாட வக்கீல் ஏற்பாடு செய்துதரும். இதை state brief மற்றும் Amicus curiae என்றும் சொல்வார்கள்.
மேலும், அரசியல் சட்டத்தின் 39A பிரிவில் ஏழைகளுக்கு சட்ட உதவிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றவாளி தனக்கு சட்ட உதவி வேண்டும் என்று வக்கீல் ஒருவரிடம் சென்று கேட்கும்போது, அந்தக் கோரிக்கையை அவர் தக்க காரணங்கள் இன்றி நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தால், அது தொழில் தர்மம் ஆகாது. இதை இங்கிலாந்தில் cab rank rule என்பார்கள். சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் காத்துக்கிடக்கும் டாக்ஸிகள் வரிசைப்படி பயணிகளைப் போகும் இடம் பற்றிக் கேட்காமல் ஏற்றிச் செல்வதுபோல, வக்கீல்களும் வழக்கு பற்றித் தெரிந்துகொண்டு அதன் பிறகு ஆஜாராவேன் என்று முயல்வதைத் தடுக்கும் ஏற்பாடு இது. அதே சமயத்தில் ஒரு குற்றவாளிக்காக நாணயமற்ற முறையில் ஆலோசனைகள், ஏற்பாடுகள் செய்வது பார் கவுன்சில் விதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சாட்சிகளைக் கலைப்பதை தெஹல்கா குழுவினர் ரகசியமாகப் படம்பிடித்தனர். அதன் பிறகு அவருடைய வக்கீல் சனத் பறிக்கப்பட்டது. சமீபத்தில் ஸ்பெக்ட்ரம்(2G) வழக்கில் ஆஜரான ஏ.கே.சிங் (சிறப்பு அரசு வழக்கறிஞர்) எதிரிகளுக்கு ஆலோசனை வழங்கியது அவருடைய தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு மூலம் வெளி உலகுக்கு வந்தது. அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்!”
”உங்களுடைய மிக எளிமையான நடவடிக்கைகளை, உங்களுடன் பணியாற்றிய சக நீதிபதிகள் எப்படிப் பார்த்தார்கள்… அவர்களிடம் உங்களுக்குக் கெட்ட பெயர்தானே மிஞ்சியிருக்கும்?”
”ஓய்வுபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு தீவிர அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னுடைய ஏழு வருடப் பணியில் நான் விடுப்பு எடுத்தது அந்த மூன்று வாரங்கள் மட்டுமே. மருத்துவமனையிலும், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் என்னைச் சந்தித்த நீதிபதிகள் மொத்தம் 11 பேர் மட்டுமே. அதேபோல் ஓய்வுபெறும் கடைசி நாள் அன்று எனது சேம்பருக்கு வந்து வாழ்த்து சொன்னவர்கள் 10 பேர் மட்டுமே. தற்போது ஹைகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 47 என்பதை மனதில்கொள்ளவும்!”