இந்தியாவால் மறக்கவே முடியாதவர் நேரு
-சுஷீல் ஆரோன் (Sushil Aaron)
மோடி ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இந்தியாவிலும் உலகத்திலும் தனது செயலாற்றல் மூலம் முத்திரை பதித்த வரலாற்று நாயகர் ஜவாஹர்லால் நேரு என்று அங்கீகரிக்க உலகம் எப்போதுமே தயங்கியதில்லை. நேரு 1964-ல் மறைந்தபோது, ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ புகழஞ்சலி சூட்டியது. ‘நேரு இல்லாத உலகம்’ என்ற தலைப்பில் ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டது. இந்திய மக்கள் மீது அவருக்கிருந்த செல்வாக்கை நினைவுகூர்ந்த அது, ‘ஒரு மாபெரும் மனிதரை உலகம் இழந்துவிட்டது’ என்று துக்கம் தெரிவித்தது.
மதிப்பீடுகள் மாறுகின்றனவா?
இந்தியாவில் இப்போது, நேருவைப் பற்றிய கருத்துகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. வாழ்ந்த காலத்தில் அவரைக் கடவுளைப் போலவே வழிபட்டார்கள். இப்போதோ அவரை மறக்கவும், அவருடைய பங்களிப்பைக் குறைத்துப் பேசி சிறுமைப்படுத்தவும் முயலும் போக்கு நிலவுகிறது. “நாம் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதைப் போல – பண்டிட் நேருவால் நமக்கு ஜனநாயகம் கிடைத்துவிடவில்லை” என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருமுறை பேசியிருக்கிறார்.
பாஜக ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலத்தின் எட்டாவது வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து நேருவைப் பற்றிய பாடம் நீக்கப்பட்டிருக்கிறது. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ பற்றிய தேசிய அருங்காட்சியக காட்சிக்கூடத்தில் நேருவைப் பற்றி சிறு குறிப்புகூட இல்லை. நேருவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நிறுவப்பட்டிருந்த, நேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் அனைத்து இந்தியப் பிரதமர்களின் நினைவு இல்லமாக மாற்றும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அனைத்துத் தலைவர்களுக்கும் சம வாய்ப்பு தரும் இந்த முறை மிகவும் சூது நிறைந்த நடவடிக்கையாகவே தெரிகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இதே போல அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனுக்கான நினைவகத்தில், அமெரிக்காவை இதுவரை ஆண்ட அனைத்து அதிபர்களின் சிலைகளையும் வைத்து அலங்கரிப்பதாக!
நேருவைத் தாக்குவானேன்?
புறக்கணித்தலுக்கும் தாக்குதலுக்கும் நேரு இப்படி இலக்காவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காந்தியின் படுகொலைக்குப் பிறகு தங்களுடைய இயக்கத்தைத் தடைசெய்ததற்காக ஆர்எஸ்எஸ் அவரை வெறுக்கிறது. மதச்சார்பின்மைதான் அரசின் கொள்கை என்ற அவருடைய நடவடிக்கையை ஏற்க அது மூர்க்கமாக மறுக்கிறது. 1962 போரில் சீனத்துடன் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைச் சுட்டிக்காட்டி, நேருவுக்கு எதிராக மக்களுடைய உணர்ச்சிகளை அதனால் எளிதாகத் திருப்ப முடிகிறது. வெளியுறவுக் கொள்கையில் நேரு கடைப்பிடித்த அணிசாரா முறை, ஐந்தாண்டு திட்டங்களில் அவருக்கிருந்த நம்பிக்கை ஆகியவற்றைக்கூட தோல்விகளே என்று பாஜக பேசுகிறது.
பொது வாழ்வில் நேருவுக்குக் கிடைத்த முக்கியத்துவமும் பலருக்குப் பிடிக்கவில்லை. நாடெங்கும் அவருக்குச் சிலைகள் வைத்தது, சாலைகளுக்கு அவருடைய பெயரைச் சூட்டியது, அரசின் திட்டங்களை அவர் பெயரில் தொடங்கியது, விளம்பரங்களில் அவருடைய படங்கள் இடம்பெறுவது என்று இன்னும் பல செயல்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எங்கும் நிறைந்தவராக இருப்பதாலேயே, அவர் எவ்வளவு மகத்தானவர் என்பதை அறியவொண்ணாமல் பலருடைய கண்களை மறைத்துவிடுகிறது.
நேருவின் வாழ்க்கை வரலாற்றை நினைத்துப் பார்ப்பது, அன்றைய இந்தியாவுக்கு அவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தார், இப்போதைய காலத்துக்கு அவர் எதைத் தருகிறவராக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உதவும். நேருவின் மகத்தான வாழ்க்கை குறித்து அறிய பல நூல்கள் தேவை என்றாலும் மிகச் சில நூல்களே அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும் தனிப்பட்ட கடிதங்களாகவும், பொதுக்கூட்ட உரைகளாகவும் அவர் எவ்வளவு படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மலைப்பே ஏற்படுகிறது.
பிரௌன் நூல் பார்வை
வரலாற்றாசிரியர் ஜூடித் பிரௌன் (Judith M. Brown) 2003-ல் எழுதிய ‘நேரு: ஓர் அரசியல் வாழ்க்கை’ என்ற நூல் அந்த வகையில் பயன்படுகிறது.
பணக்கார வழக்குரைஞரும் அரசியல் தலைவருமான தந்தை மோதிலால் நேருவுக்கு, செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் மகனாகப் பிறந்தார் ஜவாஹர்லால் நேரு; இந்தியாவின் மத, சமூகப் பழக்க வழக்கங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக – படித்த இந்தியர்களுக்கு வருவாய்க்கான வழிகளையும் அரசியல் வாய்ப்புகளையும் தருவதாக காலனியாதிக்க ஆட்சி அன்றைக்கு இருந்தது. ஹாரோவிலும் கேம்பிரிட்ஜிலும் நேரு பயின்ற கல்வி, அவருடைய அரசியல் சிந்தனைகளை வடிவமைத்தன, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உணர்வை அங்கேதான் அவர் பெற்றார்.
நாடு திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பிறகு காந்திஜியாலும், 1919-20-ல் ஆங்கில அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களாலும் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் பலன்கள் குறித்தும் அது தொடர்பான வியூகங்கள், உத்திகள் குறித்தும் காங்கிரஸ் கட்சிக்குள் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த விவாதங்கள் நடப்பதுதான் அன்றைய தேசிய இயக்கத்தின் அம்சமாகத் திகழ்ந்தது. பூரண சுதந்திரம் வேண்டுமா, பிரிட்டிஷ் அரசுக்குக் கட்டுப்பட்ட டொமினியன் அந்தஸ்து போதுமா என்பதும் விவாதப் பொருளாக இருந்தது.
காந்தியுடனேயே இருக்க முடிவு
காந்தியின் அரசியல் அணுகுமுறைகளும், தார்மிக மாற்றத்துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் நேருவுக்கு அடிக்கடி எரிச்சலூட்டினாலும், சுதந்திரத்துக்கான இந்தியப் போராட்டத்தில் காந்தியுடனேயே இருப்பது என்ற முடிவை, காங்கிரஸிலேயே இரு கோஷ்டிகள் பிரிந்துநின்ற நிலையிலும் எடுத்தார்.
நேருவின் இந்தக் கண்ணோட்டத்துக்கு வேறு காரணங்களும் இருந்தன. முதல் காரணம், இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சாரரீதியாகக் கலந்துறவாடும் குடும்பத்தில் அவர் வளர்ந்தார். அலாகாபாதில் இருந்த காஷ்மீரி குடும்பமாக இருந்ததால் மோதிலால் நேரு (நேருவின் தந்தை) ஆரம்பத்தில் முஸ்லிம் ஆசிரியரிடம் அரபி, பாரசீக மொழிகளில்தான் பாடங்களைப் படித்தார். நேரு குடும்பத்தாரை உள்ளூர்க்காரர்களாக அலாகாபாத்வாசிகளும் கருதவில்லை, அதனால் நேரு குடும்பத்தாருக்கும் குறுகிய, பிராந்திய பிரதேச விசுவாசங்கள் வளரவில்லை. ஏதோ ஒரு வகையில் நேரு வெளியாளாகவே இருந்தார், பிரிட்டிஷாரை கலாச்சாரரீதியாகப் புகழ்ந்தார், அதே வேளையில் அன்னியர் ஆட்சியின் கீழ் இந்தியா அடிமையாக இருக்கிறதே என்று வருந்தினார், இந்தியாவின் மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவற்ற பழக்க வழக்கங்களையும் ஏற்க மறுத்தார்.
3,259 நாட்கள் சிறை வாழ்க்கை
வெகு விரைவிலேயே, காங்கிரஸ் கட்சி விவகாரங்களிலும் தேச அரசியலிலும் மூழ்கினார் நேரு. அதே வேளையில் இடைவிடாமல் பல்வேறு புத்தகங்களையும் வாசித்தார். சிறைவாசம் அவருக்கு அதற்கு மிகவும் உதவியது. 1921 முதல் 1945 வரையிலான 23 ஆண்டுக் காலத்தில் அவர் ஒன்பது முறை சிறைக்கு அனுப்பப்பட்டார். குறைந்தபட்சம் 12 நாள்கள் முதல் அதிகபட்சம் 1041 நாள்கள் வரையில் மொத்தம் 3,259 நாள்களைச் சிறையில் கழித்தார். இதுவே மொத்தம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள்!
அடிக்கடி சிறைக்குச் சென்றதால் சிறைச்சாலையின் சூழலுக்கேற்ப வாழும் முறைக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். சிறையில் இருந்தபோது தான் பெற்ற நண்பர்களையும் கற்றுக்கொண்ட பொழுதுபோக்கான கலைகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். சிறைச்சாலையில் தனிமைக்கு இடமே இல்லை என்பதுதான் அவரை அதிகம் எரிச்சலடைய வைத்திருக்கிறது. சிறையில் அவருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது படிப்பதுதான் என்கிறார் பிரௌன்.
அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம், நடப்பு உலக விவகாரங்கள் ஆகியவை குறித்து நிறையப் படித்தார். ‘சிறைவாசத்தின்போது அடர்த்தியாக வாசிக்க வேண்டும், இல்லாவிட்டால் மூளை தேக்கமடைந்து கெட்டுப்போய்விடும்’ என்று தனது நூலில் எச்சரிக்கிறார் நேரு. 1934 பிப்ரவரி தொடங்கி 1935 செப்டம்பருக்குள் 188 புத்தகங்களை வாசித்திருக்கிறார், சராசரியாக ஒரு மாதத்துக்கு 15 முதல் 20 தொகுப்புகள்!
இப்படி நிரம்ப வாசித்ததால்தான் அவரால் அனைவரையும் ஈர்க்கும்படியான நடையில் எழுத முடிந்தது. அவருடைய சுயசரிதையாகட்டும், ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலாகட்டும்; இந்த நடையில்தான் இருக்கிறது. உணர்ச்சி ததும்ப கடிதங்களில் எழுதுவதும், மேடைகளில் பேசுவதும் அவருக்கு எளிதாகியிருக்கிறது.
உலகளாவிய உரையாடல்
இந்தியாவில் இருந்தபோதும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றபோதும் – அந்நாட்டுத் தலைவர்களுடன் அவர் உரையாடினார். அந்தச் சந்திப்புகளால் காலனி ஆட்சியின் தன்மை, விளைவு, நாடுகளுக்குள்ளும் – நாடுகளுக்கு இடையிலும் நிலவிய சமத்துவ நிலை, இந்தியாவில் நிலச் சீர்திருத்தத்தின் அவசியம், வளர்ச்சியை ஏற்படுத்த பொருளாதார – சமூக நடவடிக்கைகளில் அரசு தலையிட வேண்டிய அவசியம், தேசிய வாழ்க்கையில் அறிவியலின் முக்கியத்துவம், தேசத்தை உருவாக்குவதில் மகளிர் ஆற்ற வேண்டிய பெரும் பங்கு, உலக அரங்கில் இந்தியா அடைய வேண்டிய உன்னத நிலை ஆகியவை தொடர்பாக நேருவுக்குத் திட்டவட்டமான எண்ணங்கள் உருவாயின.
இத்தகைய அறிவார்ந்த வளர்ச்சியே இந்தியாவின் எதிர்காலம் குறித்து நேரு தீர்மானிக்கவும், காங்கிரஸ் கட்சிக்குள் 1930-களில் அவர் முக்கிய இடத்தைப் பிடிக்கவும், கட்சித் தலைவராக வரவும் உதவின. காங்கிரஸ் என்ற தேசிய இயக்கம் – போராட்டம், அனைத்துக் கருத்துகளுக்கும் இடம் தருவது, குழுக்களாகப் பிரிந்து செயல்படுவது, மாற்றமடைய வேண்டும் என்ற உந்துதல் இல்லாமல் பழமையிலேயே ஊறித் திளைக்க விரும்புவது – என்று பல நிலைகளுக்கும் இடம் தந்துகொண்டிருந்தது. அந்தப் பத்தாண்டுகளில், தீவிர அரசியல் தலைவர் என்ற நிலையிலிருந்து விலகி, தீண்டாமையை ஒழிப்பது என்ற தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தார் காந்தி.
காந்தி 1936-ல் ‘நேருதான் தன்னுடைய அரசியல் வாரிசு’ என்று வெளிப்படையாக அறிவித்தார். பல்வேறு திறமைகளும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட நேருவால் மட்டுமே எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், தனிப்பட்ட கவலைகள் ஏதுமின்றி காங்கிரஸ் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்தச் செல்ல முடியும் என்று அவர் கணித்திருந்தார். கட்சிக் கூட்டங்களில் முக்கியமாகச் செயலாற்றுபவராக மட்டுமல்லாமல் மக்களுடைய ஆதரவைப் பெறும் மக்கள் தலைவராகவும் நேரு உருவாகிக்கொண்டிருந்தார்.
இடைக்கால அரசின் அனுபவம்
1946-ல் உருவான இடைக்கால அரசின் தலைவராக நேரு இருந்தார். நாட்டின் பிரிவினை, சுதந்திரம் ஆகியவை தொடர்பான பேச்சுகளில் மவுன்ட் பேட்டன் பிரபு, முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னா ஆகியோருடன் முழு அளவில் ஈடுபட்டார். காந்திஜிக்கும் முன்னதாகவே பூரண சுதந்திரம் கோரிய நேரு, அதற்காகப் போராடவும் தயாராக இருந்தார்.
புதிய இந்திய அரசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன்னால், மாகாணங்களுக்கு சுதந்திரம் வழங்குவதென்ற மவுன்ட் பேட்டனின் உத்தேச யோசனையைக் கடுமையாக எதிர்த்தார் நேரு. அது இந்தியாவைப் பல கூறுகளாகப் பிரிக்கும் சூழ்ச்சி என்று கண்டித்தார். அதையடுத்து மவுன்ட் பேட்டன் அந்த யோசனையைக் கைவிட்டார்.
ஆனால் சுதந்திரத்துக்கு முன்னால் நேருவும் அவருடைய சகாக்களும் பல சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. வகுப்புக் கலவரங்கள் நாட்டின் பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று சுதேச சமஸ்தானங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. சமஸ்தானங்களை மாநிலங்களுடன் இணைத்துவிட்டால் மன்னர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருந்தது.
பிரிட்டிஷ் இந்தியாவின் சொத்துகளை இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்த அடிப்படையில் பிரிப்பது என்பதில் பூசல்கள் மூண்டன. காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட திடீர் முயற்சியை முறியடிக்க வேண்டியிருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த ஆறு மாதங்களுக்குள் காந்திஜியின் படுகொலையும் நடந்தது.
1946-க்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகளால் நேருவின் புகழ் பல மடங்கு கூடியது. இந்தியா இன்றைக்கிருக்கும் குடியரசு நாடாக, நேரு எடுத்த மூன்று முக்கியமான நடவடிக்கைகளே காரணம்.
தொலைநோக்கை வெளிப்படுத்திய அரசமைப்பு
முதலாவது, தான் தொலைநோக்கோடு சிந்தித்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்திய அரசியல் சட்ட புத்தகத்திலேயே இடம்பெறுவதை உறுதி செய்தார். இந்தியக் குடியரசின் நோக்கங்களை அரசியல் சட்ட நிர்ணய சபையின் தீர்மானத்திலேயே இடம்பெறச் செய்தார். அந்தத் தீர்மானங்களை அவரே எழுதி, அவையில் கொண்டுவந்து நிறைவேற்றினார். ‘சுதந்திர இந்தியக் குடியரசின் அனைத்து அதிகாரங்களும் மக்களிடமிருந்தே பெறப்படுகின்றன’ என்பது மிகவும் முக்கியமான தீர்மானம்.
அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி வழங்கப்படுவதும், சமமான அந்தஸ்தில் நடத்தப்படுவதும், சம வாய்ப்புகள் அளிக்கப்படுவதும், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், சேர்ந்து செயல்படும் சுதந்திரம் என்று அனைத்தும் அனைவருக்கும் அரசியல் சட்டம் மூலமாக உறுதியாக கிடைக்கச் செய்தார். சிறுபான்மைச் சமூகத்தவர், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடிகளின் நலன் காக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சட்டரீதியாகவே செய்தார். இவையெல்லாம் ஏற்கெனவே இருந்த சட்டங்களில் கிடையாது.
1937-ல் நடந்த மாகாணத் தேர்தல்கள், ‘சொத்து உள்ளவர்களுக்கே வாக்குரிமை’ என்ற அடிப்படையில் நடந்தது. எனவே 3 கோடி இந்தியர்கள் மட்டுமே வாக்களித்தனர். ‘வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை’ என்று முடிவால் சுதந்திர இந்தியாவில் 1951-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் 17.30 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். “நம்முடைய ஜனநாயகத்தின் சிற்பி நேருதான் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதுடன், பல கட்சிகளும் இடம்பெறக்கூடிய ஜனநாயகம் என்பதையும் வேறெந்த அரசியல் தலைவரைவிடவும் நேருதான் கொண்டு வந்தார்” என்று வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா ‘பேட்ரியாட்ஸ் அண்ட் பார்ட்டிசான்ஸ்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.
“பல்வேறு மத, கலாச்சார பாரம்பரியங்களை பல நூற்றாண்டுகளாக சேகரித்து வளர்ந்த நாகரிகம் கொண்ட கூட்டுக் கலவையான தேசம் இந்தியா என்ற அடிப்படையில் நேருவுக்கு இந்தியா பற்றிய தொலைநோக்குப் பார்வை இதயத்தில் வளர்ந்தது. சுதேச சமஸ்தானங்களும் பல சமூகங்களும், சுதந்திர இந்தியா உருவான காலத்தில் மாற்று அரசியல் எதிர்காலத்துக்கும் தயாராகிக்கொண்டிருந்த பின்னணியில்தான் நேரு பணியாற்றிக்கொண்டிருந்தார்.
அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமைகள், மதச்சார்பற்ற அரசு நிர்வாகம், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் பிளவுகளையும் நீக்குவது நிச்சயம் என்ற உத்தரவாதம் ஆகியவற்றை அளித்தால்தான் இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக நிர்வகிக்க முடியும் என்ற நிலைமை. வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்களுக்கு அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட திட்டவட்டமான ஜனநாயகத்தை அளித்தால்தான் பயன்தரும் என்பதைத் தனது உள்ளுணர்வு மூலம் புரிந்துகொண்டார் நேரு.
திறமையும் நேர்மையும் வாய்ந்த தேசியத் தலைவர்களான பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர், வல்லபபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், சி. ராஜகோபாலாச்சாரியார் போன்றோரைப் பெற்ற அதிருஷ்டமும் இந்தியாவுக்கு அப்போது வாய்த்திருந்தது. அவரவருக்குரிய சிறப்பான அடையாளங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் அதே வேளையில், ‘வளமான இந்தியா’ என்ற பொதுவான தொலைநோக்குடன் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்வதற்கான அரசியல் கட்டமைப்பை அனைவரும் இணைந்தே உருவாக்கினார்கள்.
உலக அரசியலில் செல்வாக்கு
அடுத்ததாக, உலக அரசியலில் நேருவால் செல்வாக்கு செலுத்த முடியும் என்பது பரவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. இனவெறி, ஏகாதிபத்தியம் ஆகியவற்றைக் கண்டிப்பதற்குத் தகுதியுள்ள தலைவராக அவர் உருவானார். ஆசிய ஒற்றுமை, ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை, உலக சமாதானம் ஆகியவற்றுக்காக அவர் அயராது குரல் கொடுத்தார்.
முதலாளித்துவ உலகம் – கம்யூனிஸ உலகம் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி – அதே சமயம் இரண்டுடனும் நட்புரிமை பாராட்டி பலன்களை அடைய ‘அணி சாராக் கொள்கை’யை வகுத்து வழிகாட்டினார். இதனால் வளரும் நாடுகளின் தலைவனாகவும், பூசல்கள் கொண்ட நாடுகளுக்கு இடையில் சமரசம் செய்துவைக்கும் நடுநிலையாளராகவும் இந்தியா வளர்ந்தது.
சமூக மாற்றத்துக்கான தூண்டுகோல்
அடுத்ததாக, உள்நாட்டிலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் நேரு கவனம் செலுத்தினார். அரசின் திட்டமிடல் என்பது வளர்ச்சிக்கான ஊக்க சக்தியாக இருப்பதுடன், ஏற்றத்தாழ்வுகளையும் களையும் என்று அதைக் கையாண்டார். முதலாளித்துவம், அரசுத்துறை நிர்வாகம் ஆகிய இரண்டையும் இணைத்து அவர் கையாண்ட கலப்புப் பொருளாதார முறையைச் சமீபகாலமாக பலர் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
இது புதிய கண்டுபிடிப்புகளையும் வளர்ச்சியையும் முடக்கிவிட்டது என்பது அவர்களுடைய வாதம். ஆனால் அந்தக் கொள்கைக்கு ஆதரவு இல்லாமல் போகவில்லை. இந்தியத் தொழிலதிபர்களே தங்களுடைய தொழில்களுக்கு பிற நாடுகளின் கடுமையான போட்டியிலிருந்து பாதுகாப்பு தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தலைவர்களை அவர் வாழ்ந்த காலத்து சூழல்கள், தரநிலை ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிட வேண்டும்.
பிரௌன் சுட்டிக்காட்டுகிறபடி இந்தியாவுக்கேற்ற வளர்ச்சி மாதிரியைத் தேர்ந்தெடுக்க, நேருவுக்கு முன்னால் அப்போது நிறைய பொருளாதார முன்னுதாரணங்கள் இருக்கவில்லை. சோவியத் நாடுகளில் வெகு வேகமாக தொழில்மயம் பரவியதால் பரவசப்பட்ட நேரு, அதை இந்தியாவிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொழில்மயக் கொள்கையை அமல்படுத்தினார். சோவியத் நாடுகளில் ஏற்பட்ட வன்செயல்கள் இந்தியாவில் நிகழாமல் பார்த்துக்கொண்டார்.
இந்தியா எந்த இடத்திலிருந்து இவற்றையெல்லாம் தொடங்கியது என்பதையும் காண வேண்டும். சுதந்திர இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை வெறும் 14%. நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். பல்வேறு துறைகளில் அரசு தலையிடுவது அல்லது முன்முயற்சிகளை எடுப்பது கட்டாயத் தேவையாகவே இருந்தது. அணுசக்தித் துறையிலும் விண்வெளி ஆய்விலும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனை நாடு இன்று பல மடங்காக அறுவடை செய்துகொண்டிருக்கிறது.”
இப்படியெல்லாம் சுட்டிக்காட்டுகிறார் குஹா.
தவறுகளும் தோல்விகளும் உண்டு
பல விஷயங்களில் நேரு தோல்வி அடைந்தார் என்பதும் உண்மைதான். சீனத்தின் உள்நோக்கத்தைக் கணிப்பதில் அவர் முற்றாகத் தோற்றுவிட்டார். இந்தியா மீது சீன ராணுவத்தை மாசேதுங் ஏவுவார் என்று நேரு எதிர்பார்க்கவே இல்லை. தன்னுடைய அனுமானங்கள் காரணமாகவே இந்திய ராணுவத்தை அவர் வலுப்படுத்தவுமில்லை, தயார்படுத்தவுமில்லை.
தன்னுடைய நெருங்கிய நண்பரான வி.கே. கிருஷ்ணமேனனை ராணுவ அமைச்சர் பதவியை நீண்ட காலம் வகிக்க அனுமதித்துவிட்டார். நாட்டின் நிர்வாகப் பொறுப்புகளை கட்சியில் தகுதிவாய்ந்த இளம் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கத் தவறியதால் நாட்டின் வளர்ச்சியும் பாதித்தது, சிறந்த நிர்வாகிகளின் எண்ணிக்கையும் வளரவில்லை. இதனால் நாட்டுக்கு மதிப்பிட முடியாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
நேருவுக்கு மிகவும் நெருக்கமான கொள்கையான நிலச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த நில உடைமைச் சமூக மாநிலத் தலைவர்கள் குலைத்துவிட்டனர். நாட்டின் வலதுசாரிகள் நினைக்கின்றனர், அவர் எதற்கெடுத்தாலும் அரசு மூலமே எதையும் சாதிக்க விரும்பினார் என்று. இடதுசாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர், அவர் நாட்டு நிர்வாகத்தில் அடிக்கடி தேவையின்றி குறுக்கிட்டார் என்று.
பாசன வசதிக்காக நேரு கட்டிய பெரிய அணைகள் ஏராளமான பழங்குடிகளை, கிராம மக்களை அவர்களுடைய வாழிடத்திலிருந்து நகரங்களுக்கு துரத்தின. ஷேக் அப்துல்லாவைக் கைதுசெய்து நீண்ட காலம் சிறையில் அடைத்ததால் காஷ்மீரின் ஒரு பகுதியினர் இந்திய அரசிடமிருந்து மனதளவில் விலகிவிட்டனர். தன்னுடைய மன ஓட்டத்துக்கேற்ப மக்கள் இல்லை என்று பல சந்தர்ப்பங்களில் நேருவே வருந்தினார்.
அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மை, தலைவர்கள் தொடர்ந்து மத உணர்வுகளைக் கிளறிவிடும் வகையிலேயே மேடைகளில் பேசுவது, காங்கிரஸ்காரர்களில் சிலர் கட்சியைத் தங்களுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்திய போக்கு, குறுகிய சாதி – மாநில உணர்வுகள் போன்றவை – வலுவான தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற நேருவின் உணர்வுக்கு எதிராக வேலை செய்தன.
இவற்றையெல்லாம் கடந்து நேரு நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் என்னவோ இன்னும் கண்ணுக்கு மெய்யாக தெரிகின்றன. இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான தார்மிக சக்தியாக நேருவின் தலைமை இருந்தது என்று நிராத் சௌத்ரி சுட்டிக்காட்டுகிறார். நேருவுக்கு என்று ஒரு வாரிசு இருக்க முடியாது, அவருடைய வெவ்வேறு திறமைகளுக்கென்று தனித்தனியாகத்தான் வாரிசுகள் உருவாக முடியும் என்றார் சௌத்ரி. ஒருவகையில் இந்த மதிப்பீடுதான் நேரு, எத்துணைத் துறைகளில் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார் என்பதை உணர்த்துகிறது.
காந்தியை ஒரு முனிவராக நாடு புரிந்துகொண்டது. நேருவோ இந்திய அரசியலுக்கும் சமூகத்துக்கும் அவற்றின் லட்சியங்களையும் திசையையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி, வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மக்களுக்கு உத்வேகம் ஊட்டினார், இப்படியெல்லாம் செயல்படுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார், சில வேளைகளில் இப்படியா நடந்துகொள்வது என்று கடிந்தும் கொண்டார். சிலவற்றில் அவர் தோல்வியும் அடைந்தார்.
தன்னுடைய பதவிக்காலத்தில், களைத்து விழும் நிலை வரையில் அவர் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டேயிருந்தார். “நேருஜி தங்களுக்கு உதவத்தான் விரும்புகிறார், தனக்கென்று எதையுமே அவர் விரும்பியதில்லை என்றுதான் பெரும்பாலான மக்கள் உணர்ந்திருந்தனர். அந்தப் புரிதலை அவர்கள் எப்போதுமே இழக்கவுமில்லை” என்று ஆஸ்திரேலியத் தூதர் வால்டர் கிராக்கர் எழுதியதை குஹா நினைவுகூர்கிறார்.
இந்தியாவுக்காகவே வாழ்ந்து முடிந்த பூரணமான வாழ்வு நேருவுடையது – நேரு உருவாக்காத அல்லது செல்வாக்கு செலுத்தாத இந்தியப் பொது நிறுவனமோ, குடியரசின் அங்கமோ இருந்ததே இல்லை. அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தில் நாம் கொண்டாடவும் விவாதிக்கவும் ஏராளமானவை உண்டு.
இந்தியாவின் வளர்ச்சியில் அவருக்குள்ள பங்கைக் குறைத்துப் பேசுவதோ அல்லது அவரையே ஒரேடியடியாக மறப்பதோ இந்தியா இப்போது எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதைத்தான் காட்டுமே தவிர, அத்தகைய முயற்சிகளால்கூட வரலாற்றில் அவருக்கென்று இருக்கும் இடத்தை குலைத்துவிட முடியாது!
(இன்று நவம்பர் 14 ஆம் திகதி நேருவின் 132வது பிறந்த தினம்)
மூலம்: The Nehru That India Cannot Forget
தமிழில்: அருஞ்சொல்