எமது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுமென கூறுவோருக்கு எமது பதில் என்ன?

-சதாசிவம் வியாழேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
(முன்னாள் இராஜாங்க அமைச்சர்)

எமது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுமென கூறுவோருக்கு இதுதான் எமது பதில்!:

தமிழர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் கண்ணீரையும் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் பிழைப்புவாத அரசியவாதிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? அதனையும் கூறி விடுங்கள்!

மது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்! சத்தம் போட வேண்டும்! எங்களுக்கு கல் எறிய வேண்டும் என்று இம்மாவட்ட அரசியல்வாதிகள் சிலரும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொல்கிறார்கள். இந்த வேளையில் நாங்கள் கடந்த ஒன்றரை வருடமாக அரசாங்கத்தோடு இணைந்து எமது மாவட்ட மக்களுக்கு செய்த பணிகளை சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

01. 350 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளோம். இவர்களில் முன்னால் ஆண், பெண் போராளிகளின் பிள்ளைகளும் அடங்குவர்.

02. 16,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

03. விவசாயத்துறையில் கடந்த காலங்களில் 88 குளங்களைப் புனரமைத்து, அணைக்கட்டுக்களை அமைத்து விவசாயத்திற்கு உதவி உள்ளோம்.

04. மீன்பிடித்துறையில் அபகரிக்கப்பட்டு வந்த கடற்கரை வளத்தை முடிந்தவரை, தடுத்து நிறுத்தி நம்மவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.

05. குறுகிய காலத்துக்குள் 15 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி கொடுத்துள்ளோம்.

06. குறுகிய காலத்தில் விளையாட்டுத் துறையில் 12 கிராமிய மைதானங்களை புனரமைத்து கொடுத்துள்ளோம்.

07. குறுகிய காலத்தில் இரண்டு நகரங்களை அபிவிருத்தி செய்துள்ளோம்.

08. தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டதாரிகளில் எமது மாவட்ட பிள்ளைகள் 2147 பேர் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.

09. கடந்த 30 வருடத்திற்கு மேல் விடுவிக்கப்படாமல் இருந்த கும்புறுமலை இராணுவ முகாம் காணியை பாதுகாப்பு தரப்புடன் பேசி விடுவித்தோம்.

10. தொடர்ச்சியாக ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் உட்பட பலருடன் பேசி ஒரே தடவையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட காரணமாயிருந்தோம்.

11. வாகரைப் பிரதேச மக்களது பிள்ளைகளின் தொழினுட்ப கல்வியை விருத்தி செய்யும் பொருட்டு முதலாவது தொழினுட்ப பீடத்தை பெற்றுக் கொடுத்தோம்.

12. சில பாடசாலைகளை தரமுயர்த்தினோம். சுரவணயடியூற்று கிராமத்திற்கு முதலாவது பாடசாலையை பெற்றுக் கொடுத்தோம்.

13. படுவான்கரை மக்களுக்கு இதுவரை 300 மில்லியன் நிதிக்கு மேல் பெற்றுக் கொடுத்து குடிநீரை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

14. குறுகிய காலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறு , நடுத்தர பாலங்களை அமைத்து கிராம மக்களின் போக்குவரத்துக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

15. கிராம மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமார் 2500 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை வீதிக் கட்டமைப்புக்கு பெற்றுக் கொடுத்தோம்.

16. பண்பாட்டு மீட்பு பாசறை மூலம் மாகாண மட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈழத்தமிழரின் தனித்துவமான கலையான நாட்டுக் கூத்தை மீண்டும் பாடசாலை மட்ட போட்டிகளில் கொண்டு வந்தோம்.

17. இலங்கையில் பஸ் நூலகத் திட்டத்தில் முதலாவது திட்டத்தை பெற்றுக் கொடுத்தோம்.

18. குறுகிய காலத்தில் 03 சிறுவர் பூங்காக்களை சிறுவர்களுக்காக அமைத்துக் கொடுத்தோம்.

19. குறுகிய காலத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுத்தோம். பல காணி அபகரிப்புக்களை தடுத்து நிறுத்தினோம். அபிவிருத்தி குழுவில் தமிழர்கள் நாம் இருப்பதால் சாத்தியமாகியது.

20. குறுகிய காலத்தில் வாகரை புணானை கிழக்கினை ஓட்டமாவடியுடன் இணைக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்தினோம்.

21. முடிந்தளவு குறுகிய காலத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகள், வீட்டுத் திருத்தம், மலசல கூடம் ஆகிய பல வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

22. நீண்ட காலமாக இழப்பீட்டிற்கான நிவாரணங்களை பெறாத 450 க்கு மேற்பட்டவர்களுக்கு இழப்பீட்டுக்கான நஷ்டஈட்டு தொகைகளை பெற்றுக் கொடுத்தோம்.

இவ்வளவு பணிகளையும் எம் சமூகத்துக்காக களரீதியாக ஆற்றிய, ஆற்றிக் கொண்டு இருக்கின்ற எம்மை நோக்கி கல் எறிய வேண்டும், முற்றுகை இடவேண்டும் என்றால் இவ்வளவு காலமும் எதுவுமே செய்யாமல் வெறுமனே தமிழர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் கண்ணீரையும் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் பிழைப்புவாத அரசியவாதிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? அது மக்களுக்குப் புரியும்.

நாம் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது சராணகதி அரசியல் செய்யவதற்காக அல்ல. எம்மால் முடிந்த சேவையை கடந்த ஒன்றரை வருட காலத்தில் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறோம். அது எமது பயணத்தில் இணைந்திருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

225 பேரையும்தான் மக்கள் வீட்டுக்கு போகச் சொல்லுகிறார்கள். அதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது யார் போவது? யார் வருவது? என்பது முக்கியமல்ல. சாதாரண மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு எல்லோரும் கட்சி பேதம் மறந்து கைகோர்க்க வேண்டும். குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கும் முயற்சிக்கக் கூடாது. அதாவது அரசியல் இலாபம் தேடக் கூடாது.

எம்மைப் பொறுத்தவரை உரிமையோடு கூடிய அபிவிருத்திசார் அரசியல் என்ற நோக்கில் நாம் பயணிப்பவர்கள். அதுதான் இந்நாட்டில் எம் தமிழினத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் என்ற ஆழமான நம்பிக்கை எமக்குண்டு.

தினகரன்
2022.04.08

Tags: