இலங்கைக்கு சீனா அனுப்பிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உரம்

அன்பரசன் எத்திராஜன்

சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்?

காரணம், கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் தவறாகிவிட்டது. நெருக்கமான நட்பைக் கொண்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய ரீதியிலான மிக அரிதான ஒரு மோதல் ஏற்படுவதற்கும் இது காரணமாகிவிட்டது. ஒரு வங்கி தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய அந்தக் கப்பலின் பெயர் ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit). கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து 20,000 தொன் (20,000,000 கிலோ) இயற்கை உரங்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.

இலங்கையை உலகின் முதல் முழுமையான இயற்கை விவசாய நாடாக மாற்றும் நோக்கில் அனைத்து இரசாயன உர இறக்குமதிகளையும் கடந்த மே மாதமே அரசு நிறுத்திவிட்டதால், இத்தகைய இயற்கை உர இறக்குமதி தேவைப்பட்டது.

கடற்பாசி அடிப்படையிலான உரங்களைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சீனாவைச் சேர்ந்த கிங்டாவ் சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) என்ற நிறுவனத்திடம் 49.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 99,000டன் இயற்கை உரத்தை வாங்க இலங்கை அரசு செய்யும் கொள்முதல் திட்டத்தின் முதல் தொகுதி இதுவாகும்.

ஆக, இயற்கை உரத்துக்கான தேவையைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்ட இந்த ஏற்றுதியில் அப்படி என்ன சர்ச்சை இருக்கிறது?

“நச்சு, குப்பை, மாசுபாடு”

பிரச்னை உரத்தின் தரத்தில் உள்ளது. இது பயிர்கள் செழித்து வளர உதவுவதற்குப் பதிலாக அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கறள்.

“சீன உரம் கிருமிகள் நீக்கப்பட்டதல்ல என்பது உர மாதிரிகள் மீதான எங்கள் சோதனைகள் மூலம் தெரியவந்தது” என்று இலங்கை விவசாயத் துறையின் தலைமை இயக்குநர் அஜந்த டி சில்வா (Dr. Ajantha de Silva) பிபிசியிடம் தெரிவித்தார்.

“கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.” என்கிறார் அவர்

கப்பலில் வந்திருக்கும் சரக்கு நாட்டின் உயிர் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

இந்த முடிவுக்கு கிங்டாவ் நிறுவனம் கோபமாகப் பதிலளித்திருக்கிறது. “சீன அரசு மற்றும் சீன நிறுவனங்களின் மதிப்பைக் குலைப்பதற்கு நச்சு, குப்பை, மாசு” உள்ளிட்ட இழிவான சொற்களை இலங்கை ஊடகங்கள் பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் குற்றம்சாட்டியிருக்கிறது.

“இலங்கையில் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் (NPQ) அறிவியல்பூர்வமற்ற ஆய்வு முறையும் முடிவும் சர்வதேச விலங்கு மற்றும் தாவர தனிமைப்படுத்தல் விதிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் கடிந்து கொண்டிருக்கிறது.

சர்ச்சை தீவிரமானதால், இலங்கைக்குள் நுழையக் காத்திருக்கும் சரக்குகளுக்குச் செலுத்த வேண்டிய 9 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நிறுத்துமாறு அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதற்குப் பதிலடி தந்தது. பணத்தைச் செலுத்தாததால், இலங்கை அரசின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தங்களது நன்மதிப்புக்கு பங்கம் ஏற்பட்டதாக இலங்கை தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை எட்டு மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு தர வேண்டும் கிங்டாவ் சீவின் நிறுவனம் கேட்டிருக்கிறது.

இந்தப் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்பரப்பில் இருந்து கப்பல் வெளியேறவில்லை.

ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரிகள் ஹிப்போ ஸ்பிரிட் கப்பலின் சரக்குகளை இறக்குவதற்கு அனுமதி மறுத்தபோது, அது கொழும்பு துறைமுகத்தை விட்டு நகர்ந்து தெற்கு கடற்கரையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கரையோரப் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடல் போக்குவரத்து இணையதளத்தின் சமீபத்திய படங்களில், கொழும்பு துறைமுகத்துக்கு அருகே இலங்கையின் தென்மேற்கு கடற்கரையை ஒட்டி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவருகிறது.

இதன் மூலம் கூறப்படும் செய்தி தெளிவாகிறது. சீன நிறுவனம் தனது சரக்குகளை திரும்பப் பெற தயாராக இல்லை.

சீனத் தூதரக அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் இளநிலை அமைச்சரான ஷசீந்திர ராஜபக்ச, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்றாம் தரப்பு ஆய்வகத்தின் மூலம் புதிய மாதிரியை மீண்டும் பரிசோதிக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

“நாங்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. அவர்கள் ஒரு கோரிக்கையை மட்டுமே வைத்தனர்,” என்று ராஜபக்ஷ கூறினார். “இப்போது வந்திருக்கும் சரக்கு இலங்கைக்குள் நுழைய முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கப்பலில் வந்திருக்கும் சரக்கு சீனாவுக்குத் திரும்பினால் அது கிங்டாவ் சீவின்னுக்கும் சீன அரசுக்கும் பேரிழப்பாக அமையும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரிம உரங்களை ஏற்றுமதி செய்வதாக நிறுவனம் கூறுகிறது.

அழுத்தங்களைத் தாங்குமா இலங்கை?

இருப்பினும், சீனாவின் ராஜீய அழுத்தங்களை தாங்கும் திறன் இலங்கை அரசுக்கு இருக்கிறதா என்பது குறித்து இலங்கையில் உள்ள சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆசியாவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கியிருக்கிறது. இருப்பினும் எல்லா நிதியும் இலங்கைக்கு சாதகமாக இருக்கவில்லை.

உதாரணத்துக்கு, 2017 ஆம் ஆண்டில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்புவதற்காக வாங்கிய கடனை அடைக்க இலங்கை திணறியபோது, அதன் பெரும்பகுதியை சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்தது.

சீனாவின் “கடன் பொறியில்” இலங்கை சிக்கிவிட்டதாக சில மேற்கத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், என்னதான் சீனா பொருளாரத்தில் வலிமையாக இருந்தாலும், விதிமுறைகளை மீறும் எந்த இயற்கை உரமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது என்று இலங்கை அதிகாரிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.

“உரத்தை மீண்டும் சீனாவிற்கு எடுத்துச் சென்று வேறொரு தொகுப்பிலிருந்து புதிய மாதிரிகளை அனுப்புமாறு அந்த நிறுவனத்திடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டோம். புதிதாக அனுப்பப்படும் மாதிரி தரப் பரிசோதனையைக் கடந்துவிட்டால், அவர்கள் புதிய உரத் தொகுப்பை அனுப்பலாம்” என்று டி சில்வா கூறினார்.

இலங்கைக்கு இயற்கை விவசாயத்தின் தேவை என்ன?

உரம் தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், பல்லாயிரக்கணக்கான இலங்கை விவசாயிகள் மிகவும் தேவையான விவசாய இடுபொருளான உரம் இல்லாமல், மோசமான நெல் சாகுபடி பருவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு அரசு விதித்திருக்கும் தடை, விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளதாக மொனரகலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரத்நாயக்க போன்ற நெல் விவசாயிகள் கூறுகின்றனர்.

“நாங்கள் திடீரென இயற்கை விவசாயத்திற்கு மாற முடியாது. இயற்கை உரத்தைப் பயன்படுத்துவது நல்லது என்றாலும், அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை தவறானது” என்று பிபிசியிடம் ரத்நாயக்க கூறினார்.

நாடு “படிப்படியாக” இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

நெல் போன்ற பிரதான பயிர்களின் விளைச்சல் வெகுவாகக் குறையக்கூடும் என்பதால், மொத்தமாக இயற்கை விவசாயதுக்குமாறுவது விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் புத்தி மரம்பே போன்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“இயற்கை விவசாயத்தால் மட்டும் நாம் மொத்த உணவுத் தேவையையும் நிறைவு செய்ய முடியாது” என்று கூறுகிறார் மரம்பே.

நாட்டின் புகழ்பெற்ற சிலோன் தேயிலை உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்படிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, செயற்கை உரங்கள் குறித்த சில விதிகளை அரசு தளர்த்தியது.

இரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் தீராத சிறுநீரக நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக இரசாயன உர இறக்குமதியைக் குறைப்பதில் தனது அரசு உறுதியாக இருப்பதாகவும் அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP26) இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

அதிகச் செலவுபிடிக்கும் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காகவே, இரசாயன உரங்களை அரசு தடை செய்திருப்பதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் அரசு இதை மறுக்கிறது.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒக்ரோபர் இறுதியில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சியில் ஏற்கனவே பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது.

இரசாயன உரத் தடையின் பின்னணி என்ன காரணம் இருந்தாலும், அரசு இப்போது ஒரு நெருக்கடியான சூழலில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

உள்நாட்டில் விவசாயிகளும் நிபுணர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், நெருங்கிய நட்பு நாடான சீனாவின் அதிருப்தியையும் எதிர்கொண்டிருக்கிறது இலங்கை.

[இலங்கை சீனாவிற்கு விலை போய்விட்டதென இலங்கைக்கு உள்ளிருந்தும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவற்றிலிருந்தும் ஒலிக்கும் குரல்களின் மத்தியில், இன்றைய (15.11.2021) பிபிசியில் வெளியாகியிருக்கும் இக்கட்டுரை முக்கியமானதெனக் கருதி இதனை வெளியிடுகின்றோம். அத்துடன் இக்கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களுடன் முழுமையான உடன்பாட்டையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
-சக்கரம் ஆசிரியர்
குழு
]

Tags: