ஒமிக்ரான் – உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்: WHO எச்சரிக்கை!

கொரோனா வைரசின் ஒமிக்ரான் (omicron) திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு ‘மிக அதிகம்’ என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயர் இடர்பாடு மிகுந்த மக்கள் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தவேண்டும்; அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்படும் என்பதை எதிர்பார்த்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளை பேணுவதற்கான, இடர் நீக்கும் திட்டங்களை தயார் செய்யவேண்டும் என்று தங்கள் 194 உறுப்பு நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

“முன்னர் வேறு திரிபுகள் எதிலும் இல்லாத அளவில் ஒமிக்ரான் திரிபில் முள்முடி பிறழ்வுகள் அதிகம் உள்ளன. இவற்றில் சில பிறழ்வுகள் பெருந்தொற்று உலக அளவில் எப்படிச் செல்லும் என்ற பாதையை பாதிக்கும் வகையில் உள்ளன. இந்த திரிபின் ஒட்டுமொத்த உலக அளவிலான இடர்ப்பாடு அதிகமாக உள்ளது,” என்று உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒமிக்ரான் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டதாக செய்தி ஏதுமில்லை. முன்னர் ஏற்பட்ட தொற்றினாலும், தடுப்பூசியினாலும் உடலில் ஏற்பட்ட நோய்த் தடுப்பு ஆற்றலை ஏமாற்றிவிட்டு உடலில் தொற்றினை ஏற்படுத்தும் ஆற்றல் ஒமிக்ரான் திரிபுக்கு எந்த அளவு உள்ளது என்பது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்கிறது ரோய்டர்ஸ் செய்தி சேவை நிறுவனம்.

“நோயின் தீவிரத் தன்மை எப்படி இருந்தாலும், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும். இதனால், மரணங்களும் அதிகரிக்கலாம். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான இதன் தாக்கம் அபரிமிதமாக இருக்கும். குறிப்பாக, தடுப்பூசி குறைவாகப் போட்டுள்ள நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திரிபு குறித்து முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த திரிபு உலகம் முழுவதும் பரவி வருகிறது. நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகள் பயணத் தடைகளை விதித்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள முயல்கின்றன. தங்கள் எல்லைகளை வெளிநாட்டினர் நுழைய முடியாதபடி மூடுவதாக ஜப்பான் திங்கள் கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் இது போன்ற கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags: