புலிகள் அமைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்  13.11.2021 அன்று நிராகரித்துள்ளது. 

டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டை செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சபை 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதியன்று பயங்கரவாதத்தை தடை செய்வதற்கான சட்ட வரைபொன்றை உருவாக்கியது. இதற்கமைய பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட சொத்துக்கள், தனிநபர்கள், குழுக்கள் மற்றும் எல்லைகள் ஆகியன முடக்கப்பட்டன. அத்துடன் பயங்கரவாத அமைப்புக்களின் பெயர்களை பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பதா, இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வருடத்துக்கு இரண்டு தடவைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சபையினால் இப்பட்டியல் மீளாய்வு செய்யப்படும். அந்த வகையில் 2006 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சபை விடுதலைப் புலிகள் அமைப்பை அதன் பயங்கரவாத தடைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டதுடன் அன்று முதல் அதனை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே கருதி வருகிறது. 

10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன் இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் (EU terrorist list) மீண்டும் சேர்த்தது.

இதனை நீக்குமாறு கோரி இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்தும் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: