அம்பேத்கர் 65வது நினைவுதினம்: என் சமூகத்திற்காக இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறேன்!

– மல்லை சத்யா

`கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர்’ என்கிற தாரக மந்திரத்தை வார்த்தைகளாக அல்லாமல், வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த அந்த மாமனிதன் மறைந்து, இன்றோடு (டிசம்பர்-6) 65 ஆண்டுகள் நிறைகின்றன.

படித்தார்; மேலும் படித்தார்; மேலும் மேலும் படித்தார்; மேலும் மேலும் மேலும் படித்தார்… இப்படி மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவர்?

`இந்த சாதிக்காரனுக்கெல்லாம் படிப்பு எதற்கு?’ என்று துரத்தித் துரத்தி அடிக்கப்பட்ட அம்பேத்கர்.

B.A., M.A., Ph.D., M.Sc., Barrister-at-Law., D.Sc., L.L.D., D.Litt…

என்று நீள்கிறது அவருடைய படிப்பு.

ஆம், `உன் சாதிக்காரனுக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா?’ என்று மட்டுமல்ல, `உங்களுக்கெல்லாம் படிப்பே வராது! நீங்க படித்தால்… அது தெய்வகுத்தம்டா’ என்றெல்லாம் சாபமிடப்பட்ட சாதி மக்களுக்கு, நீதி கிடைப்பதற்காகப் படித்தார்… படித்தார்… படித்துக் கொண்டே இருந்தார் அம்பேத்கர்.

`அவர் அளவுக்குப் படித்தவர் இந்தியாவிலேயே இல்லை’ என்று நாடு கடந்தும் பேசப்படும் அளவுக்குப் படித்தார். அவர் அப்படி படித்ததுதான், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் படிக்கற்களாக இன்றளவும் நீண்டுகொண்டிருக்கின்றன.

`கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர்’ என்கிற தாரக மந்திரத்தை வார்த்தைகளாக அல்லாமல், வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த அந்த மாமனிதன் மறைந்து, இன்றோடு (டிசம்பர்-6) 65 ஆண்டுகள் நிறைகின்றன. ஆனால், அந்த மனிதன் எதற்காகப் போராடினாரோ… அந்த நோக்கமெல்லாம் முழுமையாக நிறைவேறியதா என்பது கேள்வியாகவேதான் நிற்கின்றது.

“நான் மரணமடைந்த பின், என் உடலின் மீது நாட்டின் தேசியக் கொடியைப் போர்த்துவதாலோ அல்லது என் தோழர்கள் மலர்மாலைகளைப் போட்டு அஞ்சலி செலுத்துவதாலோ மரியாதை கிடைத்துவிடாது. என் மரணத்தருவாயிலும் என் உடற்கட்டில் இருந்து உயிர்ப்பற்றவை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறும் தறுவாயிலும் என் சமூக மக்களின் நலனுக்காக ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். உயிர் பிரியும் தறுவாயில் அப்புத்தகத்தின் பக்கங்கள் என் மீது விழுவதுதான் நான் எதிர்பார்க்கும் மரணம்” என்று சொன்னவர் அம்பேத்கர்.

`என்னைவிட, என் நாடு பெரியது. என் நாட்டைவிட, என் சமுதாயம் பெரியது. அந்தச் சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய பணிகள் மலைபோல் கொட்டிக்கிடக்கின்றன’ என்பதைத் தினம் தினம் மனதில் அசைபோட்டவராக, வண்ணத்து மண்டபத்தையும்… வைரமணி பஞ்சணையும் தூக்கியெறிந்த மகத்தான தலைவர் பாபா சாகேப் அம்பேத்கர்.

உயர் கல்வி பயில்வதற்காக அமெரிக்காவிலிருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம் சென்ற முதல் இந்தியர், அம்பேத்கர். அரசியல், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, மதம், வர்க்கம் என்று அனைத்துத் துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். வாழ்ந்த காலத்திலும் அவருக்குப் பின்னும் அவர் கற்ற கல்வியை, அவர் பெற்ற பட்டங்களைப் பெற்றவர் எவரும் இல்லை.

இந்திய நாடு விடுதலை அடைந்து குடியரசு நாடாக ஆவதற்குச் சொந்த அரசியல் சாசனம் தேவைப்பட்டபோது, இந்தியாவின் ஆகச்சிறந்த படிப்பாளியாக இருந்த அறிவுலக மேதை அம்பேத்கரிடம்தான் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அரசியல் சட்ட முன்வரைவு முடியும்வரையில் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, பெரும்பாலும் தன்னந்தனியாக இரவு, பகல் பாராமல் எழுதிக்கொண்டிருந்தார்.

விடுதலையடைந்த இந்தியா எப்படி இருக்கிறது, இந்தியத் தலைவர்கள், இந்திய மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவுக்கு வந்தார்.

இரவு நேரத்தில் காந்தியின் வீட்டுக்குச் சென்றார். `காந்திஜி உறங்கச் சென்றுவிட்டார்’ என்றார் காவலாளி.

நாட்டின் பிரதமர் நேருவின் வீட்டுக்குச் சென்றார் அந்தப் பத்திரிகையாளர். நேருவும் உறங்கியிருந்தார்.

அடுத்து, அம்பேத்கரின் வீட்டுக்குச் சென்றார். அங்கே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த அம்பேத்கரைச் சந்தித்த அந்தப் பத்திரிகையாளர், “காந்தி, நேரு இருவரையும் நேரில் சந்தித்துப் பேட்டி காணச்சென்றேன். இருவருமே உறங்கிவிட்டார்கள். நீங்களோ… நடுநிசி கடந்தும் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கின்றீர்களே!” என்று வியப்பு மேலிடக் கேட்டார்.

அம்பேத்கர் சொன்ன பதில் –

``அவர்களின் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்காக நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.”

தூக்கத்தைக்கூட தன் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகப் பலிகொடுத்தவர் அம்பேத்கர். அப்படிப் படித்துக்கொண்டே இருந்ததால்தான் வாழ்நாள் முழுவதும் சிந்தித்துக்கொண்டே இருந்தார்.

உலகிலேயே அதிக அளவுக்குச் சிலைகள் செய்து ஆராதிக்கப்பட்டிருப்பது புத்தருக்குத்தான். இந்தியாவில் அப்படி ஆராதிக்கப்படுபவர், அம்பேத்கர் ஒருவரே!

“என்னதான் வான் உயரப் பறந்தாலும் இங்குள்ளவர்களுக்கு நான் ஒரு சாதாரண தாழ்த்தப்பட்டவன்தானே. நான் இந்தியாவின் அல்லது உங்களின் தேசியத் தலைவன் அல்ல. இந்த நிலைகூட எனக்கு மறுக்கப்படுகிறது. எனவேதான் என்னை “மகர் மக்களின் தலைவர்” என்கிறார், தக்கர் பாபா. ஒட்டுமொத்த தீண்டப்படாதோரின் தலைவர் என்றுகூட என்னை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு சிறு வட்டத்துக்குள் என்னை அடைக்கும் முயற்சியில் இந்தியத் தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்” என்று வருத்தம்பொங்கச் சொன்னார்.

அம்பேத்கரின் அரும்பெரும் சாதனைகளைப் போற்றி மக்கள் ஒன்றுகூடி தங்கள் தலைவனுக்குப் பட்டம் அளித்துப் பாராட்டு விழா எடுத்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு பேசும்போது அம்பேத்கர் சொன்னார் –

“நீங்கள் அளித்த பட்டத்துக்கு நன்றி. இப்பட்டயம் முழுவதிலும் எனது பண்புகளையும் பணிகளையும் பற்றிய உயர் நவிற்சிகள் பல நிறைந்துள்ளன. எளிய மனிதனாகிய என்னைக் கடவுளாக்க முயல்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது. தனிமனிதனைக் கடவுளாக்குவது, துதிபாடுவது என்பதெல்லாம் உங்கள் விடுதலைக்கும் பாதுகாப்புக்கும் தனியொரு மனிதரை எப்போதுமே சார்ந்து இருப்பதைத்தான் காட்டுகிறது.வறுமை, அறியாமை, ஏழ்மையை அகற்றிக்கொள்வதற்காக உங்கள் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்ததையே நீங்களும் செய்கிறீர்கள். அவர்களின் புனிதப் பயணங்கள், சமயநூல்கள் எல்லாம் கடவுள் அவதரித்துக் காப்பாற்றுவார் என எண்ணி எண்ணிக் காலங்காலமாய் மூடநம்பிக்கையில் உழல்கின்றனர். இருப்பினும், உங்கள் முன்னோர் போன்றே நீங்கள் கட்டுவதும் கந்தல்தானே!

வேதங்களை நம்புகிறவனே இந்து என்கிறார்கள். வேதத்தை நாங்கள் நம்பவேண்டும். ஆனால், தெரிந்துகொள்ளக்கூடாது. எறும்புக்குச் சர்க்கரை போடுகிறவர்கள், பாம்புக்குப் பாலும் முட்டையும் கொடுப்பார்கள். ஆனால், தாகத்தால் தவிக்கும் சகமனிதனுக்குக் குடிக்கத் தண்ணீர் தரமறுப்பார்கள். இத்தகைய கேவலமான எண்ணத்தைப் போதிக்கும் மதம், எப்படி என் மதமாக இருக்கமுடியும்? எனவேதான் சொல்கிறேன் இந்து மதம் உயர்சாதி மக்களின் சொர்க்கம்; தாழ்ந்த ஜாதி மக்களின் நரகம்!”

செல்வம் இல்லாதவர் உண்மையில் ஏழையல்ல. ஒருநாள், அவர் செல்வந்தனாகக் கூடும். ஆனால், கல்வியறிவு இல்லாதவர்கள் எல்லாவிதத்திலும் ஏழைதான். எனவேதான், தன் மக்கள் கல்வி கற்கவேண்டும், அரசியல்படுத்தப்பட வேண்டும் என்று காலம் முழுவதும் சிந்தித்தார்… போதித்தார் அம்பேத்கர். ஆனால், நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை? – படிப்போம்!

-விகடன்
2021.12.06

Tags: