உலகப் பொருளாதார மேதை அம்பேத்கர்!

-பசுபதி தனராஜ்

டாக்டர் அம்பேத்கரை சமூகப் போராளியாக, சட்ட நிபுணராக, அரசியல் தலைவராக, அமைச்சராகத் தான் இந்திய மக்கள் அறிவர் ! அண்ணல் அம்பேத்கர், ‘தலைசிறந்த பொருளாதார மேதை’ என்பதை பலர் அறியார் !

நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் அவர்களின் மொழியில் சொன்னால், “இந்தியாவின் முற்போக்கு பொருளாதாரத்தின் தந்தையே டாக்டர் அம்பேத்கர் தான்.”

கொலம்பியா பல்கலை வளாகம் அளப்பரிய சுதந்திரத்தை அவருக்கு வாரி வழங்கியிருந்தது.  தலைசிறந்த பல்கலைக் கழகம் தனக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அறிவார்ந்த மேதைகள் அவரின் ஆசிரியர்களாக இருந்தார்கள்.

பேராசிரியர் ஜான் டேவே,எட்வின் ஆர்.ஏ.செலிக்மேன்,ஜெம்ஸ் ஹார்வே ராபின்சன்,ஃபிராங்லின் கிட்டிங்ஸ் போன்ற புகழ் பொலிந்த பேராசிரியர்களின் பேரன்புக்குரியவராக அம்பேத்கர் திகழ்ந்தார்.

அவர்களின் தெளிவான முற்போக்கு கருத்துகள் அம்பேத்கரை கவர்ந்தன.

அவர்களிடமிருந்து பீம்ராவ் அம்பேத்கர் ஆறுவகைத் துறைகளில் பாடங்களைக் கற்றார்.

அரசியல் விஞ்ஞானம்,பொருளாதாரம்,வரலாறு,சமூகவியல்,மாநுடவியல் மற்றும் தத்துவம் ஆகிய ஆறு துறைகளில் அவருக்கு அறிவின் வாயில் திறந்து வைக்கப்பட்டது. அறிவின் பெருவளத்தை முழுமையாக பெற்றிட பெரிதும் உழைத்தார்.

அனைத்து நேரத்தையும் நூலகத்திலேயே கழித்தார் .தினமும் 16 மணி நேரம், 18 மணி நேரம், ஏன் சில நாட்களில் 20 மணி நேரம் கூட படித்தார் என்பது விந்தைக்குரிய வியப்புறும் தகவல் !

குறிப்பாக பேராசிரியர்கள் ஜான் டெவேயும்,எட்வின் செலிக்மேனும் அம்பேத்கரின் ஆதர்ச நாயகர்கள் ! அவரது அறிவின் இரு விழிகள் !

1915 — ல் எம்.ஏ பொருளாதாரக் கல்விக்கான தனது ஆயவினை சமர்பித்தார். இன்று நமது பல்கலைக் கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெறவே மாணவர்கள் தத்தம் ஆய்வினை சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் அன்று எம்.ஏ.பட்டம் பெறவே ஆய்வினை சமர்ப்பிக்க வேண்டும் !

“கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும், நிதியும்” ( The  Administration and Finance of the East India Company )  என்பது அம்பேத்கரின் முதுகலைப் பாடப் பொருளாயிற்று !

அதுநாள் வரை பிரிட்டிஷ் பேராசிரியர்களும்,ஆய்வாளர்கள்களும் முன்வைத்த வாதங்களை மாணவர் பி.ஆர். அம்பேத்கர் முழுமையாக மறுதலித்தார்.” இந்தியர்களை விட பிரிட்டிஷார் மூளைவளம் படைத்தவர்கள் ” என்ற வாதத்தை நிராகரித்தார்!

” இந்தியர்களுக்கு வாழும் கலை  தெரியாது ” என்று சொல்லப் படுவதை செல்லாதாக்கினார் !

உலகின் பல நாடுகளோடு பண்டைக் காலம் தொட்டு இந்தியா கொண்டிருந்த கடல்வழி வணிகத் தொடர்புகளை நினைவுறுத்தினார். கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டிஷ் நிர்வாகமுமே இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்ததை சாடினார்.

இந்தியாவின் வளத்தை சுரண்டுவதிலே கிழக்கிந்திய கம்பெனியின் கவனம் இருந்ததையும்  அதுவே  பிரிட்டிஷ் அரசின் எண்ணமாகவும் இருந்தது என்பதையும் எடுத்தெழிதினார்.

பிரிட்டனில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இந்தியா பெரியதொரு விற்பனை சந்தையாக நீடிப்பதை கவனமாக கண்காணித்துக் கொண்டிருப்பதாக தன் பார்வையை பதித்தார் !

வேளாண்மை ஒனறைத் தவிர இந்தியாவில் வேறெந்த தொழிலும் வளர்ந்திடா வண்ணம் அரசு விழிப்புடன் இருந்தது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் விவசாயம் என்பது மழையை நம்பியிருக்கும் சூதாட்டம். அது விவசாயிகளுக்கு வரமாக இருப்பதற்கு பதிலாக சாபமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு கிழக்கிந்திய கம்பெனி எவ்வித ஊக்குவிப்பையும் தரவில்லை என்பதையும் தனதாய்வில் விளக்கியிருந்தார்.

” தேசிய ஆதாயப்பங்கு : வரலாற்றின் ஒரு பகுப்பாய்ந்த கல்வி ”

(National Dividend : A Historical and Analytical Study — என்பது அம்பேத்கர் முனைவர் பட்டம் பெறும் பிறிதொரு நூலாயிற்று.

1916 –ல் மாணவர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு சமர்ப்பித்த இந்த ஆய்வு மேலை உலகத்துக்கு பிரிட்டிஷார் இதுகாறும் இந்தியாவுக்கு செய்து வரும் தீமையை  தோலுரித்து காட்டியது.

இந்திய மண்ணில் தொழில் முனைப்பு எவ்வாறு பிரிட்டிஷாரால் மழுங்கடிக்கப் பட்டது என்பதை பட்டியலிட்டார். அந்த ஆய்வு பிரிட்டனின் நன்மைக்காக இந்தியாவை சுரண்டும் ஏகாதிபத்திய வரலாற்றை எடுத்தியம்பியது.

இந்தியாவின் புராதன தொழிலான வேளாண்மையைத் தவிர பிற தொழில் உற்பத்தி பொருள்களுக்கு பிரிட்டிஷாரை எதிர்பார்த்து கையேந்தும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட இழிநிலையை  எடுத்துரைத்தார்.

அம்பேத்கரின் புதிய பார்வை ஆங்கிலேயர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது !

இந்தியாவின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் பிடிப்பதிற்கு முன்னர் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி இருந்தது ! அந்த ஆட்சியாளர்களுக்கு இந்திய மக்களின் மீதிருந்த பரிவுணர்ச்சி ஆங்கிலேய  அரசுக்கு இல்லை என்றார் !

இந்தியாவின் கைவினைத் தன்மை திட்டமிட்டு படிப்படியாக பாழடிக்கப்பட்டதென்றார் !

இந்த திறனாய்வு இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அறிஞர்களிடையே பெருத்த அதிர்வை உண்டாக்கியது !

அது லண்டனில் உள்ள உள்துறை செயலாளரையும் பெரிதாக தாக்கியது !

இந்த ஆய்வுக் கட்டுரையில் இறுதியாக அம்பேத்கர் குறிப்பிட்டார் :

” இந்தியா சுதந்திரம் அடைய இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று, படை பலம் ! பிறிதொன்று, நியாய பலம் ! இந்த இரண்டில் ஒன்றினை தேர்ந்தெடுக்க ஓர் இந்திய அரசு வேண்டும்! ” என்று எழுதினார்.

வெறும் 26 வயதே நிரம்பிய ஆராய்ச்சி மாணவர் அம்பேத்கரின்  அதிரடிக் கருத்து அனைவரையும் அதிசயிக்க வைத்தது !

புகழ் நிறைந்த பொருளாதார மேதை ஜான் எம்   கேனிஸ் இக் கட்டுரையைப் பற்றி குறிப்பிடுகையில்  ” கிளர்ச்சியை கிளப்ப இயலாத ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு அனைவரையும் ஆர்வத்தோடு வாசிக்க வைக்கும் கட்டுரையாக மாற்றிய அம்பேத்கரின் ஆற்றல் அளப்பரியதென்றார் !

A very prosaic subject has written in a very attractive style made readable

பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண வளர்ச்சியின் கோட்பாடு

( The Evolution of  Provincial Finance in India )

அம்பேத்கரின் இந்த பொருளாதார நூல் பெரிதும் பாராட்டப்பட்ட நூல்.

இந்த ஆய்வு நூல் ” தி எக்கனாமிக் ஜர்னல்” என்ற பொருளாதார இதழில் வெளியானது.

இந்த நூல் வெளியான 90 ஆண்டுகளுக்குப் பிறகு, 1926 — ல் புகழ்பெற்ற பொருளாதார விற்பன்னர்  டாக்டர் டபிள்யூ எம் தாட்சர் எழுதினார் :

அனைவரும் படித்திட வேண்டிய நூலினை அம்பேத்கர் படைத்திருக்கிறார்.இந்திய மாகாண நிதியினை படித்து அனைவராலும் புறக்கணிக்கப் பட்ட நிலையில் இந்திய பொருளாதாரத்துக்கு பொருத்தமான முன்னுரையை இந் நூல் மொழிகிறது. இது உண்மையிலேயே முன்னேற்றப் பணியாகும். இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் இக்கட்டான இத்தகு இரட்டை நிலையில் இப்பணியை விளக்க வந்த அம்பேத்கர் நமது பாராட்டுக்குரியவர் ” என நன்றி பாராட்டுகிறது !

அன்றைய காலத்தில் முதன் முதலாக பொருளாதாரத் துறையில் பிரிட்டன் இந்தியாவை வஞ்சிக்கிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்க ஆரம்பித்தவர் அம்பேத்கர் தான் !

அம்பேத்கர் ஆய்வுக்கு எழுதிய அவரது கையெழுத்து பிரதிகளை கொலம்பியா பல்கலைக் கழகத்து ஆவணக் காப்பகத்தில் பத்திரப்படுத்திஷகாத்து வருகிறது !

அங்கு படித்த எந்த மாணவருக்கும் கொடுத்திராத கௌரவமிது !

கொலம்பியா பல்கலைக் கழகத்தின் தென் ஆசிய நிறுவனத்தின் நூலகத்தில் அம்பேத்கரின் படம் இன்னும் மாட்டப் பட்டிருக்கிறது !

பேரரசின் நிதியை மாகாணங்களுக்கு வழங்கலைப் பற்றி  அம்பேத்கரின் ஆய்வு இன்றும் பேசப்படுகிறது.

Decentralisation of Imperial Finance in  British India என்ற அவரது கட்டுரை ” முதுநிலை முனைவர் ” (Master of Science )– என்ற பட்டத்தை ஈட்டித் தந்தது..

ரூபாயின் பிரச்சனை : மூலமும் அதன் தீர்வும் ”

( The Problem of Rupee : It’s Origin and it’s Solution )  — என்ற கட்டுரை அவருக்கு

M.Sc  பட்டத்தை பெற்றுத் தந்த ஆய்வு.

” ரூபாயின் பிரச்சனை”யில் பல பொருளாதார விவரங்களை தந்துள்ளார். அதுவரை அப் பிரச்சனைகள் தெளிவற்றதாக, குழப்பம் நிறைந்ததாகவே கருதி வந்தனர் !

கி.பி.1800 முதல் 1893 வரை  — அதுதான் நிலையாக இருந்தது.ரூபாயின் தன்மையை நிலைப்படுத்த  தங்கத்தை ஓர் அளவுகோலாக கொண்டிட பிரிட்டிஷார் எடுத்த முயற்சி உண்மையிலேயே துணிவானது என்கிறார் அம்பேத்கர்.

கரன்சியை கையாளுவது;

” அம்பேத்கரின் இந்த ஆய்வு ஒளிமிகுந்தது; போற்றுதலுக்குரியது ;  அது மூலப்படிவான நூல் மட்டுமல்ல, மதிப்பு வாய்ந்தது ; மாற்றுத் திட்டங்களை அளித்திடும் மகத்துவம் பெற்றது. கேள்விகளை எழுப்புவதோடு விட்டு விடாமல் அதற்கான தீர்வையும் சொல்லிடும் ஆய்வு ! இதனை வங்கியாளர்களும், வணிகர்களும், நாணய பரிமாற்றம் குறித்து நல்லறிவு பெற  விழைவோரும் அவசியம் படித்திட வேண்டிய நூல் ” என்றது.

அம்பேத்கர் படித்த காலத்தில் அவரளவுக்கு படித்தவர் யாருமில்லை எனக் கூறிட முடியும்.ஒரு செய்தியை வாசகர்களின் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன் :

இந்திய ரூபாயை ஒழுங்கு படுத்த இந்தியாவில் ஒரு நிதியமைப்பை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்ற அம்பேத்கரின் அறிவுரையை ஆங்கிலேய அரசால்  புறந்தள்ள முடியவில்லை !

இந்தியாவில் ரிஸர்வ் பாங்க் !

இந்தியாவில் ரிஸர்வ் பேங்க்கினை நிறுவுவது குறித்து பரிந்துரைக்க  ஹில்டன் யங் (Hilton Young )  தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தார்கள் ! அது இந்தியாவுக்கு வருகை தந்தது. அப்போது அதற்கு பெயர் : ” ராயல் கமிஷன் ஆஃப் இந்தியா கரன்சி அன்ட் ஃபைனான்ஸ் ( Royal Commission of India on Currency and Finance ) என்பது.

அந்த பெருங்குழுவின் முன் தம் கருத்துகளை பதிவு செய்ய அம்பேத்கரும் அழைக்கப் பட்டார்.

அது நவம்பர் 15, 1926.அந்த குழு அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்த அம்பேத்கர் அதிர்ச்சி அடைந்தார் !  ஆம். அது ஒருவகை ஆனந்த அதிர்ச்சி தான் !

அந்த குழுவில் இருந்த ஒவ்வொரு உறுப்பினரும் அம்பேத்கர் மாணவராக இருந்த போது எழுதி வெளியான “ரூபாயின் பிரச்சனை : அதன் மூலமும் தீர்வும் ( The Problem of Rupee : Its Origin and It’s Solution)  என்ற அம்பேத்கரின் நூலினை தத்தம் கைகளில் வைத்துக் கொண்டு அம்பேத்கரிடம் தங்களின் ஐயங்களை அகற்றிக் கொண்டார்கள்.

அதன் விளைவு தான் இந்தியாவில் ரிஸர்வ் பாங்க் பிறப்பு ! 1935 –ல் ரிஸர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அமைக்கப் பட்டது

இந்தியாவின் புகழ்மிகுந்த பொருளாதார விற்பன்னர்  பேராசிரியர் ஏ.கே.சென்  சொல்கிறார் : Ambedkar is my Father in Economics. He is the true celebrated  champian of under privileged. he deserves more than what he has achieved  today. However he was highly controversial figure in his home country, though it was not the reality.’’

”அம்பேத்கரே பொருளாதாத்தில் தன் தந்தை” என பெருமை பொங்க பேராசிரியர் ஏ.கே.சென் உரைக்கிறார்:

உரிமைகளற்றவர்களுக்கு  உழைத்தவர். அவர் இன்று என்ன அடைந்திருக்கிறாரோ அதைவிட பெருமைக்குரியவர். அவர் பொருளாதாரத்துக்கு அளித்த சேவை அளப்பரியது: என்றென்றும் நம் நினைவில் நிற்பவர் ” என குறிப்பிட்டுள்ளார் !

பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் (06/12/2021) பொருளாதாரப் பேரறிஞரின் புகழ் பாடி பெருமிதம் கொள்வோம்.

ஜெய்பீம் ! ஜெய்ஹிந்த் !

Tags: