அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் – மேல்முறையீடு செய்ய அசாஞ்சே தரப்பு முடிவு
பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்சேவை (Julian Paul Assange) அமெரிக்காவுக்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்றம் விதித்த தடையை, இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் 10.12.2021 அன்று இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அசாஞ்சே-வின் தனிமனித உரிமை பாதுகாக்கப்படும் என்று அமெரிக்கா தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், அவரை நாடு கடத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கீழைமை நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடுவதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பிற்கு பொறுப்பான உள்துறை அமைச்சகம், அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும்.
ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க இராணுவ இரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, அவர் மீது அமெரிக்க அரசு உளவு பார்த்தாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை நாடு கடத்த வேண்டும் என்ற அமெரிக்க அரசின் கோரிக்கையை, இங்கிலாந்தின் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனேசா பாரிட்சர், அசாஞ்சே தற்போது இருக்கும் மனநிலையில், கடுமையான சூழல் நிலவும் அமெரிக்காவின் சிறையில் அவரை அடைத்தால், அசாஞ்சே தற்கொலை செய்துகொள்ளக் கூடும் என்று தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அசாஞ்சே தன்னையே வருத்திக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு கடந்த காலத்தில் மனநலப் பிரச்சனை எதுவும் இருந்ததில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் என்ற வலைதளத்தின் நிறுவனர். தகவல் வெளிப்படைத்தன்மையினைத் தன் வாழ்நாள் பணியாக வகுத்துக்கொண்டவர். உலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா போன்ற பெரும்பலம் பொருந்திய நாடுகள், உலக மக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் கொடூரமான வன்முறை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முறைகேடுகள், ஊழல் குற்றங்கள் போன்ற அரசின் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகத்தையே விக்கித்துப்போக வைத்தவர்.
ஈராக் வீதிகளில் அமெரிக்க விமானங்கள் நடத்திய கோர தாக்குதல்கள், போர்க்குற்றவாளிகளை அடைத்து வைக்கும் `குவாண்டனமோ பே’ சிறைச்சாலை என இவர் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் அதிமுக்கியமானவை. அதிகார மையத்தின் உண்மை முகத்தைத் தோலுரிக்கும் ஒருவரை சும்மாவா விடுவார்கள்? மிக ரகசியமான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது அமெரிக்கா; விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்ட சுவீடன் நாட்டில், அவர்மீது பாலியல் புகார்கள் எழுப்பப்பட்டன; அசாஞ்சே பிறந்த நாடான ஆஸ்திரேலியா அவருக்கு உதவ மறுத்தது; அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்ய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டது. ஈகுவடோர் நாடு மட்டும் அவருக்கு ஏழு ஆண்டுகள் புகலிடம் கொடுத்தது. ஆனால், அவருக்கு வழங்கிய பாதுகாப்பை திடீரென ஈகுவடோர் விலக்கிக்கொள்ள, கடந்த ஏப்ரல் மாதம் ஈகுவடோர் தூதரகத்திற்குள்ளே சென்று பிரிட்டன் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
ஜூலியன் அசாஞ்சே உளவு பார்த்ததாக அவர் மீது 17 வழக்குகளை அமெரிக்க அரசு தொடர்ந்துள்ளது. அத்துடன், இராணுவத்தின் இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக, கணினியை தவறாக பயன்படுத்தியதாகவும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இருந்தபோதும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ள இதுபோன்ற குற்றங்களுக்கு இதற்கு முன்னர் அதிகபட்சமாக 63 மாதங்கள் (சுமார் 5 ஆண்டுகள்) மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜேம்ஸ் லூயிஸ் (James Lewis QC) தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அசாஞ்சே-வின் பெண் நண்பர் ஸ்டெல்லா மோரிஸ் (Stella Moris) கூறியுள்ளார்.
“எந்த நாடு அசாஞ்சேவை கொலை செய்ய திட்டமிட்டதோ, அதே நாட்டிடம் அவரை ஒப்படைப்பது எப்படி நியாயமாகும், இது எப்படி சரியாகும், இது எப்படி நடக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள மோரிஸ் “நாங்கள் உடனடியாக மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசு பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டது மற்றும் அமெரிக்க இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டார்.
இங்கிலாந்தில் உள்ள ஈகுவடோர் நாட்டின் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தஞ்சமடைந்த ஜூலியன் அசாஞ்சே அடுத்த ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஈகுவடோர் நாடு அசாஞ்சேவுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது. இதைத்தொடர்ந்து தூதரகத்திலிருந்து வெறியேற்றப்பட்ட அசாஞ்சேவை, இங்கிலாந்து காவல்துறை கைது செய்தது.
50 வயதான அசாஞ்சே தற்போது இலண்டன் உள்ள பெல்மார்ஷ் சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.
யாரிந்த ஜூலியன் அசாஞ்சே? அவர் என்ன செய்தார்?
தன்னை பன்னாட்டு ஊடகவியல் அமைப்பு மற்றும் நூலகம் என்று அறிவித்துக் கொள்ளும் விக்கிலீக்ஸ் 2010 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ அதிகாரி செல்ஷி மேன்னிங் ஒப்படைத்த இலட்சக் கணக்கான போர், ராஜதந்திர மற்றும் இராணுவ ஆவணங்களை வெளியிட்டது. அமெரிக்காவின் அப்பாச்சே ஹெலிகாப்டர் இரண்டு ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் உட்பட 12 பேரை சுட்டுக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய பல்வேறு போர் ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
டிசம்பர் 2018 இல், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களால் செய்யப்பட்ட 16,000 க்கும் மேற்பட்ட கொள்முதல் கோரிக்கைகளின் தேடக்கூடிய தரவுத்தளத்தை இணையதளம் வெளியிட்டது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்சே 2006 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸை நிறுவினார். விக்கிலீக்ஸ் என்பது உலகின் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆவணங்களின் மாபெரும் நூலகமாகும். நாங்கள் இந்த ஆவணங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறோம், அவற்றை பகுப்பாய்வு செய்து, விளம்பரப்படுத்துகிறோம், மேலும் பலவற்றைப் பெறுகிறோம் என்று 2015ம் ஆண்டு ஸ்பீகலுக்க் அளித்த பேட்டியில் ஜூலியன் கூறினார். தற்போது இந்த தளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் உள்ளன. விக்கிலீக்ஸ் ஆவணங்களை அதிகமாக படிக்கும் மக்கள் இந்தியர்களாக உள்ளனர். அவர்களை தொடர்ந்து அமெரிக்கர்கள் படிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்தில் அசாஞ்சே இருக்க காரணம் என்ன?
2010 ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் அசாஞ்சேவின் மீது வைத்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக சுவீடன் நாடு விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த சமயம் இங்கிலாந்தில் இருந்த அசாஞ்சேவை நாடுகடத்த வேண்டும் என்றும் சுவீடன் கேட்டு கொண்டது. சுவீடிஷ் வாரண்டிற்கு எதிராக போராட முயற்சித்த அசாஞ்ச், 2011 இல் பிரிட்டிஷ் நீதிமன்றத்தை அணுகினார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாகப் போகவில்லை, பின்னர் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தோல்வி அடைந்தார்.
ஜாமீனில் வெளிவந்த அசாஞ்சே இலண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது இடதுசாரி தலைவர் ரஃபேல் கொரியா தலைமையில் இலத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடோர் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அப்போது இருந்து அவர் இலண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தான் தங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈகுவடோர் தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் (Westminster magistrates court ). அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அமெரிக்காவிற்கு அவரை நாடு கடத்தவே இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றும் கூறினார்.