உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாதே!

பெப்ரவரி மாதத்தின் வார இறுதியில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கு எதிராகக் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.  இத்தாலி, கிரீஸ், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போர் தொடர்வதற்கு எதிராகவும், அமெரிக்க இராணுவக் கூட்டணியான நேட்டோவின் செயல்பாடுகளைக் கண்டித்தும் பெருந்திரள் பேரணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் ஆயுதங்களை அனுப்புவதற்குப் பல நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், ஆயுதங்களை அனுப்பி போரை நீட்டிக்க வேண்டாம் என்று பேரணிகளில் பங்கேற்ற  மக்கள் முழக்கமிட்டவாறு வலம் வந்தனர்.

இத்தாலியின் ரோம் (Rome), புளோரன்ஸ் (Florence), கெனோவா (Genoa) ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடந்துள்ளன.  உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் தடைகள் மற்றும் நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்கிறது. இத்தாலி நகரங்களில்  நடந்த  ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் “போர் வேண்டாம்” என்றும் “அமைதி வேண்டும்” என்ற முழக்கங்களை எழுப்பினர். “ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, ஊதியத்தை உயர்த்துங்கள்” என்று கோரினர்.

ஜெனோவாவில் நடந்த பேரணியில் ஒரு படி மேலே சென்று மக்கள் முழக்கமிட்டனர். “நேட்டோவில் இருந்து இத்தாலி வெளியேறட்டும்” என்ற முழக்கத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ரோம் நகரில் நடந்த பேரணியில் பேசிய இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான மவுரிசியோ லாண்டினி, “பெரும்பாலான மக்களின் கருத்தே போர் வேண்டாம் என்பதாகவே உள்ளது. அவர்கள் அமைதியையே விரும்புகிறார்கள். நாடுகளுக்கிடையிலான சச்சரவுகளைப் போர்  மூலமாகத் தீர்ப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மற்றொரு தலைவர், “பிரச்சனை வேறு என்பது எங்களுக்குத் தெரிகிறது. இந்த அமைப்பு தான் போரை உருவாக்குகிறது. உழைப்பாளிகளாகிய, மாணவர்களாகிய நாங்கள் வேறு மனங்களைக் கொண்டவர்கள். பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. 60 விழுக்காட்டிற்கும் அதிகமான இத்தாலியர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இராணுவ சாகசங்களை அவர்கள் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளால், இத்தாலியில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைகள் கடுமையாக எகிறியுள்ளன. கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அந்நாடு சந்தித்து வருகிறது.

லண்டன் மற்றும் பெர்லின்

பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் போராட்டங்கள் நடந்தன. அமைதியை நிலைநாட்டுங்கள் என்ற வேண்டுகோளுடன் இலண்டனின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று  கோரிக்கை வைத்தனர். ஆர்ப்பாட்டங் களில் பேசிய தலைவர்கள், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியை ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு விரிவாக்கம் செய்தால், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தாங்கள் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டினார்கள். அதோடு அணு ஆயுதக் குறைப்பு உடன்பாட்டில் இருந்து  ரஷ்யா வெளியேறுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ளதையும் அவர்கள் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள்.  

பெர்லினில் நடந்த பேரணியில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. பேரணி ஏற்பட்டாளர்களோ அதை விட ஐந்து மடங்கு அதிகமான அளவில் மக்கள் பங்கேற்றனர் என்கிறார்கள். “பேச்சுவார்த்தை நடத்து, போரை வளர்க்காதே” போன்ற முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகள் அதிகமாக இருந்தன. ஆயுதங்களை அனுப்புவதன் மூலம் போர்  தொடரவே செய்யும் என்று போராட்டங்களுக்கு அழைப்பு விடும் அமைப்புகள் எச்சரிக்கின்றன. உக்ரைனுக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான ஆயுதங்களை அனுப்புவது ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

https://countercurrents.org/2023/02/anti-nato-anti-eu-anti-war-protest-rallies-hit-germany-france-italy/

Tags: