கல்வியில் மாணவர்களின் வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

-இஸ்மாயில் ஹுஸைன்தீன்

பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு மாணவன் எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறனை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும். ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். பாடங்களை கற்க முடியாமை, பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை, கல்வியில் பின்தங்குதல், மனவெழுச்சிப் பிரச்சினைககள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் அப்பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும். இதனால் பாடசாலையிலிருந்து இடைவிலகக் கூடிய பாதிப்பு ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு

உலகம் முழுவதும் பரவியுள்ள கொவிட் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனஉறுதியைக் கட்டியொழுப்புவதற்கு ‘தொலைதூர வாசிப்பு’ என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இவ்வருடத்திற்கான தேசியவாசிப்பு மாத நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஒரு பிள்ளையின் வாழ்நாள் முழுவதுமான கல்விக்கு அத்திவாரமாகவும் அடிப்படையாகவும் அமைவது ஆரம்பக் கல்வியேயாகும். இதனாலேதான் ஆரம்பக் கல்வி இன்றைய உலகில் அதி முக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பக் கல்வி என்பது முறையாக திட்டமிடப்பட்ட கலைத்திட்டத்திற்கேற்ப 5வயது தொடக்கம் 10வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு. வழங்கப்படுகின்ற கல்வியாகும் .அதாவது முறைசார்கல்வியின் 5வருடங்கள்(தரம்1-5வரை)வழங்கப்படுகின்ற கல்வியாகும்.

அறிவு விருத்திப் படிகளில் முதன்மையாகக் கருதப்படுவது மொழி விருத்தியாகும். இம்மொழியானது வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது. நல்ல வீட்டுச் சூழலில் அது வளம் பெறுகிறது. இதற்கு பெற்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

ஆரம்பக் கல்வி நோக்கங்களை அடைவதற்கு மொழி விருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோரின் சிறந்த பேச்சு, கதை கூறல், பிள்ளைகளின் கதைகளை செவிமடுத்தல், படம் பார்த்து கதை சொல்லுதல், வினாக்களுக்கு விடையளித்தல், கீறுவதற்கும் வரைவதற்கும் இடமளித்தல், வேறு சூழல்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுதல், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலமாக பிள்ளையின் படைப்பாற்றல், சிந்தனையாற்றல், கற்பனையாற்றல், பிரச்சினைகளை விடுவிக்கும் ஆற்றல் போன்ற திறன்கள் விருத்தியடைகின்றன .

எனவே பிள்ளைகளை வாசிப்பு விடயத்தில் ஈடுபடுத்த வேண்டும். மொழியில் வாசிப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. மொழியின் ஆரம்பம் சைகையாகும். பின்பு எழுத்துருவம் பெற்ற காலகட்டத்தில் வாசிப்பு முக்கியத்துவம் பெறலாயிற்று. பாடசாலைக் கலைத்திட்டத்தில் மொழித்திறன்களை அதிகரிப்பதற்குரிய வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை நோக்கும் போது முதலாவது தொடர்பாடல் தேர்ச்சிகள், எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு ஆகிய நான்கு வகை துனணத் தொகுதிகளாக தொடர்பாடல் தேர்ச்சிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கவனமாக செவிமடுத்தல் தெளிவாகப் பேசுதல், கருத்தறியவாசித்தல், சரியாகவும் செம்மையாகவும் எழுதுதல், பயன்தரும் கருத்துப் பரிமாற்றம் என்பன தொடர்பாடல் தேர்ச்சியினூடாக. முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவேதான் கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்பக் கல்விப்புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

மௌனமாக வாசித்தல், உரத்து வாசித்தல் என்கின்ற சொற்கள் கற்றல் கற்பித்தலில் மொழிப்பாடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என்பன மொழியின் அடிப்படைத் திறன்களாகும். இவற்றில் கேட்டல், பேச்சு என்பவற்றை பிள்ளையானது பாடசாலைக்கு வருவதற்கு முன்னே கற்றுக் கொள்கின்றது. வாசிப்பு, எழுத்து இரண்டையும் பிள்ளையானது பாடசாலையில் கற்றுக் கொள்கின்றது.

தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக வாசித்தல், பொழுது போக்கிற்காக வாசித்தல் என்றெல்லாம் ஒருவரின் நாளாந்த வாழ்க்கையில் வாசிப்பின் பயன் முக்கியத்துவம் பெறுகிறது. வாசிப்பானது கற்கின்ற ஒரு வழிமுறை. வாசிப்பின் மூலம் ஒருவன் (மாணவன்) கற்றுக் கொள்கின்றான். அறிவைப் பெற்றுக் கொள்கின்றான். அவனது விளக்கம் விருத்தியடைகிறது. இவ்விருத்தியானது பிள்ளையின் புத்திசார் விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நூல்கள் மூலம் காலம், நேரம் மற்றும் ஏனையோரில் தங்கியிருப்பதிலிருந்து மாணவன் விடுதலை பெறுகின்றான்.

பாடசாலையிலோ அல்லது வெளியிலோ அவன் விரும்பும் போது தானாகவே கற்று முன்னேறிச் செல்வதற்கான இயலுமையை வாசிப்பானது அவனுக்கு பெற்றுக் கொடுக்கின்றது. வாசிப்பானது புதிய அறிவைப் பெற்று அனுபவத்தை விரிவாக்கிக் கொள்ள உதவுகிறது. மற்றைய சமயத்தவர்களின் கலாசார விழுமியங்களை அறிந்து இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைப். பெறுவதற்கும் இன ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் வாசிப்பானது முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

மேலும் எழுத்துத்திறனைப் பெறுவதற்கு வாசிப்புத்திறன் அவசியம். பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு பிள்ளை எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறணை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும், ஆரம்பப்பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

பாடங்களை கற்க முடியாமை, பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை, கல்வியில் பின்தங்குதல், மனவெழுச்சிப் பிரச்சினைககள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும். இதனால் பாடசாலையிலிருந்து பிள்ளை இடைவிலகக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு.

வாசிப்பானது ஒரு பிள்ளையின் ஆரம்ப சிறுபராயத்திலிருந்து உருவாக வேண்டும். ஆனால் இன்றைய நவீன உலகில் வாசிப்புத்திறன் அருகி வருகின்றது.

நவீன இலத்திரனியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பினால் வாசிப்பானது இளம் சந்ததியினரிடம் அருகி வருகின்றது. அதிகமானோர் ஸ்மாட் போன்களில் கேம் விளையாடுதல், பாடல் கேட்டல், படம் பார்த்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதை காணக் கூடியதாகவுள்ளது.

இதனால் பொது அறிவுத்திறனானது மாணவர் மத்தியில் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகிறது. இது பிள்ளையின் வாசிப்புத்திறனில் ஏற்பட்டுள்ள. பின்னடைவைக் காட்டுகின்றது. ஸ்மாட்போன் பாவனை கணனித்தொடர்புகள், தொலைக்காட்சி நிழ்ச்சிகள் போன்ற ஊடகங்கள் உள்ளதன் காரணமாக இன்று நூல்ளையும் பத்திரிகைகளையும் வாசிப்பதிலிருந்து. அதிகமானோர் தவிர்த்து வருகின்றனர். இந்த சாதனங்கள் வாசிப்புக்கு போட்டியாக இருக்கின்றன. மேலும் முகநூல்களில் செய்திகளை, தகவல்களை பதிவிடும் அதிகமானோர் தமிழ் இலக்கணப் பிழைகளுடனும் எழுத்துப்பிழைகளுடனும் எழுதுகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கு வாசிக்க வேண்டும். வாசிக்க வாசிக்க அறிவு கூர்மையடைகிறது.

வாசிப்பில் சிறுவரை ஆர்வமூட்டுவதற்கு கதைகூறல், நடித்தல், பாவனை செய்தல், செய்து காட்டல், வாசித்தல், பேசுதல், உரையாடுதல், எழுதல், வரைதல் போன்றவற்றை உள்ளடக்கிய செயற்பாடுகளிலும் பிள்ளைகளை ஈடுபடுத்துவதன் ஊடாக மொழித்திறனை மேம்படுத்தலாம்.

Tags: