ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

-சந்திர மோகன்

“ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டி எழுப்ப முடியும் ” என்ற லெனினியத்தை நடைமுறைப் படுத்தும் சவால்மிக்க கடமைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட தோழர். JV ஸ்டாலின் [ ஜோசப் வி ஸ்டாலின் 18.12.1878] அவர்களின் 143 வது பிறந்த நாள் இன்று!

ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் துவங்கி இலக்கியவாதிகள், இடதுசாரிகள் வரை தொடுக்கும் வெறுப்பு விமர்சனங்கள் தாக்குதல்கள் இதுநாள் வரையும் குறையவில்லை.

புனையப்பட்ட பொய்களும் ஏராளம். “ஸ்டாலின் மீது எவ்விதமான குறைகளும் இல்லை!” என மொட்டையாக, பக்திபரவசமாக வாதிடுவது அல்ல, நமது நோக்கம்.

எத்தகைய சர்வ தேசிய அரசியல் பின்னணியில் , சோவியத் ருஷ்யாவில் அவரது சோசலிஸ கட்டுமான முயற்சிகள் & ஆட்சி அதிகாரம் மற்றும் போல்ஸ்விக் கட்சியின் அரசியல் செயல்பாடுகள் இருந்தது என்பதை புரிந்து கொள்வது கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அவசியமாகும்.

பாசிஸ்டுகளுடனான போர்

1942 செப்டம்பர் : அமைதி ஒப்பந்தத்தையும் மீறி ஹிட்லரின் பாசிசப்படை லெனின்கிராடு வரை சென்றுவிட்டது. நாஜி ஹிட்லர் தன்னுடைய மிகச்சிறந்த படைகளை இந்த போருக்கு அனுப்பி வைத்தான். லெனின்கிராடு சுற்றி வளைக்கப்பட்டது; வன்மையாக தாக்கப்பட்டது. கம்யூனிசத்திற்கு சாவுமணி அடிக்கும் பணியை ஹிட்லர் ஏற்றிருந்தான்.

எக்காரணத்தைக் கொண்டும் ஹிட்லரின் படை ‘லெனின்கிராடு’ வந்துவிடக்கூடாது’ என ஸ்டாலின் முடிவு எடுத்தார். செஞ்சேனை, படை வீரர்கள் மற்றும் அத்தனை மக்களும் கொதித்து எழுந்து ஹிட்லரின் படைக்கு எதிராக கடும் தியாகத்தோடு போரிட்டு வென்றனர்.

உழைக்கும் மக்கள் ஆண்களும் பெண்களும் செஞ்சேனையுடன் சேர்ந்து போரிட்டு, பாசிச சக்திகளிடம் இருந்து, உலகின் முதல் சோசலிச அரசைக் காப்பாற்றினார்கள்.

இதன் மூலமாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்னவென்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு நிரூபித்துக் காட்டியவர்தான், தோழர் ஜேவி. ஸ்டாலின்.

தோழர் ஸ்டாலினோடு அமெரிக்க அதிபர் ரூஸ் வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்

சோசலிச இலட்சியத்திற்கு மகனை தியாகம்செய்த மகத்தான தலைவர்

வாரிசு அரசியல் கோலோச்சும் உலகில், சொந்த மகனுக்கு சொத்து, அதிகாரம், பதவிகள் எல்லாம் கைமாற்றிக் கொடுக்கும் அரசியல்வாதிகள் நிறைந்த சூழலில் … ஸ்டாலின் என்ன செய்தார் எனத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சோவியத் படைக்கும் – பாசிச ஹிட்லர் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சோவியத் படையுடன் நேரடியான மோதலில் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்த ஹிட்லர் படை, சோவியத் படைப்பிரிவில் போர் வீரனாக பணியாற்றிய தோழர் ஸ்டாலினின் மூத்த மகன் யாக்கோவ்-ஐ சிறை பிடித்தது.

சோவியத் ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் முக்கியமான ஜெர்மானிய தளபதியை விடுதலை செய்தால்தான் யாக்கோவை விடுவிப்பதாகவும், இல்லாவிட்டால் ‘யாக்கோவ்’-ஐ கொன்று விடுவதாகவும் ஹிட்லர் மிரட்டினான்.

அந்த ஜெர்மானிய தளபதி விடுவிக்கப்பட்டால், அவன் வகுக்கும் திட்டங்களின் மூலம் பல லட்சம் வீரர்கள் கொல்லப்படுவர் என்று ஸ்டாலின் உறுதியாக கருதினார்…

”ஒரு போர் வீரனுக்காக [தனது மகன்] உங்களது தளபதியை நிச்சயம் விடுவிக்க முடியாது” என உறுதியாக மறுத்தார். இறுதியில், ‘யாக்கோவ்’ ஹிட்லர் படைகளால் கொல்லப்பட்டான்.

தனது வாழ்நாள் முழுவதும், லெனின் வென்றெடுத்த பாட்டாளி வர்க்க புரட்சியை அணையாமல் கட்டிக்காத்து ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் சோவியத் சோசலிச ரஷ்யாவை கட்டமைக்க அரும்பாடு பட்டார், ஸ்டாலின்.

அதனால் தான் ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே முதலாளித்துவ சக்திகள் மிரண்டு போகிறார்கள். ஸ்டாலினின் புகழ் பரவினால் உலகின் முதலாளித்துவ, பாசிச சக்திகள் நொறுக்கப்படும் என்பதால், அவரைப் பற்றிய மிகையான விமர்சனங்களை, கட்டுக்கதைகளை இன்றும் தொடர்ந்து உலவவிடுகின்றனர்.

அதிகரிக்கும் செல்வாக்கு!

ஒவ்வொரு முறை நெருக்கடியில் சிக்கும்போதும் ரஷ்ய மக்களின் நினைவு ஜோசப் ஸ்டாலினையே நோக்கிச் செல்கிறது என்று அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது; ஆய்வு விபரங்கள் ஸ்டாலின் மீதான மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

குறிப்பாக, விளாடிமிர் புடின் ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் குரல் பெருகியுள்ளது. லட்சக்கணக்கான ரஷ்ய மக்களின் ஆதரவு மட்டுமின்றி, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இருந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் கிறித்தவ தேவாலயக் குருமார்கள் சிலர் கூட ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.

இதேபோன்ற ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்பாகவும் வெளியானது. அப்போதும் கூட, லெனினையும், ஸ்டாலினையும் உயர்த்திப் பிடிப்பது ரஷ்யாவில் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி வந்தது; தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

மக்களிடம் ஸ்டாலினுக்குக் கிடைத்து வரும் ஆதரவு ஆளும் விளாடிமிர் புடின் அரசு மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 9 ஆம் தேதியன்று நாஜி ஜெர்மனி மீதான சோவியத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் 70வது ஆண்டு நிறைவு விழாவை ரசிய அரசு நடத்தியது. அப்போது, அரசு ஊடகங்களில் வெற்றியைக் கொண்டாடும் செய்திகள், கட்டுரைகளோடு, அதை சாத்தியமாக்கிய ஸ்டாலின் பற்றியும் ஏராளமான செய்திகள் வெளியிடப்பட்டன.

கிரீமியாவில் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் சிலையொன்றையும் அமைத்து பிப்ரவரி மாதத்தில் திறந்தனர். சோவியத் யூனியன் சிதறுண்டபிறகு, ஸ்டாலின் சிலையை வைப்பதற்கு இங்குதான் முதன்முறையாக அனுமதி அளித்துள்ளனர். அந்த சிலையில் ஸ்டாலினோடு அமெரிக்க அதிபர் ரூஸ் வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய இருவரும் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிரீமியாவின் யால்டா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு கிரீமிய மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் நடந்த நிகழ்வுகளை யால்டாவில் இந்த மூன்று தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைதான் தீர்மானித்தது. அதை நினைவுகூரும் வகையில்தான் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதும், மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டாலினின் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக, சுவரொட்டிகள், பதாகைகள், பேருந்துகள் மற்றும் ரஷ்யாவின் பல நகரங்களில் ஸ்டாலினின் முகங்கள் பளிச்சென்று தெரிகின்றன. ஸ்டாலின் பற்றிப் பேசுவதற்கு இருந்த தயக்கத்தைப் பலர் உதறிவிட்டதை பேருந்துகளில், ஓட்டல்களில், ரயில்களில், அலுவலகங்களில் நடைபெறும் உரையாடல்கள் காட்டுகின்றன.
கருத்துக் கணிப்புகளில் ஸ்டாலின் மதிப்பு பெருமளவில் உயர்ந்திருப்பது தெரிய வருகிறது.

ஸ்டாலினைப் பற்றி எப்போதும் எதிர்மறையான ஆய்வுகளை மேற்கொள்ளும் லெவாடா மையத்தின் ஆய்வில் கூட, 2008 ஆம் ஆண்டில் ஸ்டாலினுக்கு 27 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்தனர் என்றும், தற்போது அது 45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் வெளியாகியுள்ளது.
ஸ்டாலினின் தவறுகளை விட, அவரது சாதனைகள் அளப்பரியது என்று ஐந்தில் மூன்று பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

நமது நாட்டிலும் கூட ஸ்டாலின் பற்றிய மறுவாசிப்பு அவசியமாகிறது! பாசிச ஹிட்லரின் வாரிசுகள் சூழ்ந்துள்ள இந்திய அரசியல் நிலைமைகளில் ஸ்டாலின் நமக்குத் தேவைப்படுகிறார்!

[இக்கட்டுரை தோழர் ஸ்டாலின் அவர்களின் 140வது பிறந்ததினத்தையொட்டி (18.12.2018) எழுதப்பெற்றது]

Tags: