இந்திய முப்படைத் தளபதியின் மூர்க்கமான அணுகுமுறைகள்!
–ச.அருணாசலம்
இந்திய முப்படைத் தளபதி மறைந்துவிட்டதால், அவர் குறித்த உண்மைகளையும் சேர்த்தே மறைத்துவிட முடியாது. பிபின் ராவத் (Bipin Rawat) சொந்த நாட்டு மக்களை அழித்தொழிக்கும் கவுன்டர் இன்சர்ஜன்சி நடவடிக்கையில் புகழ்பெற்றவர்! இராணுவத்தின் அப்பட்டமான அத்து மீறல்களை ஆதரித்தவர்..!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 08.12.2021 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 15.12.2021 அன்று உயிரிழந்தார்.
அகால மரணம் , விபத்து, அதையொட்டிய அனுதாபம் இயற்கையானதே! இராணுவ உடுப்பின்மீதும், ராணுவ வீரன் மீதும் மக்களுக்கு உள்ள இயல்பான ஈர்ப்பும் , மரியாதையும் ஒருவகைப்பட்டதாகும். கடமைக்காக உயிர் துறக்கும் இராணுவ வீரர்களின் தீரத்தின் மீது ஒருவித ஈர்ப்பும், மரியாதையும், அனுதாபமும் ஏற்படுகிறது. இதில் வியப்பில்லை.
மலர் வளையமும், அஞ்சலியும் இவர் செய்தார் அவர் செய்தார்,வெவ்வேறுவிதமான மரியாதை அஞ்சலி நிகழ்வுகள் நடந்தன எல்லாம் சரி தான்! இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் நாமும் நம்முடைய அஞ்சலியை அவருக்கு உரித்தாக்குகிறோம். ஆனால், இவற்றைக் கடந்து நாட்டுக்கு பிபின் ராவத் விட்டுச் செல்லும் மரபு, மாண்பு , வழிமுறை என்ன என்று அவதானிக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.
அல்லாவிடில் அனுதாபத்தை தூக்கிப்பிடித்து நடந்த அத்துமீறல்களை, அவலங்களை நியாயப்படுத்துவதும், புனிதப்படுத்துவதும் நடைபெறும் , அதை அனுமதிக்க இயலாது.
ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல் சாசனத்தை அடித்தளமாகக்கொண்ட குடியாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை, ராணுவத்தலைமை ஆகியவற்றின் பொறுப்பும், செயல்பாடும் தெளிவாக அரசியல் சாசனத்தில் இடம்பெற்றிருந்தாலும் , இரண்டிற்கும் இடையிலான சமனும் உறவும் சீராக செல்ல வேண்டும்.
அந்தச்சமநிலை – தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் (சிவில்) தலைமையின் கீழ் இயங்கும் ராணுவம் என்ற சமநிலை- குலைவதை நாம் அனுமதிக்க முடியாது அல்லவா?
இந்தச்சமநிலையை சீர்குலைக்கும் விதமாக அரசியல் தலைமையோ அல்லது ராணுவத்தலைமையோ நடந்தால் அதை அம்பலப்படுத்துதல் அனைவரின் கடமையாகும்.
ஆனால், இயல்பாக ராணுவத்தின் மீது நாட்டு மக்களுக்கு, குறிப்பாக வட கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் வாழும் நாட்டு மக்களுக்கு உள்ள ஈர்ப்பை பயன்படுத்தி அரசு சந்திக்கும் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க ராணுவத்தை உபயோகிப்பதும் அவர்கட்கு மட்டற்ற அதிகாரமும், ஆளுமையும் வழங்குவதும் நமது நாட்டில் 1950களில் தொடங்கி இன்று வரை தொடர்கதையாய் வளர்வதை யாரும் மறுக்க இயலாது.
இத்தகைய சீர்கேட்டை ஆரம்பித்து வைத்ததில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பங்கு உண்டு.
அதற்கு உறுதுணையாக இருந்ததில் அனைத்து கட்சிகளுக்கும் பெரும்பங்கு உண்டு.
அசாம், நாகாலந்து, மணிப்பூர்,மிசோரம்,மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் எழுந்த அரசியல் பிரச்சினைகளை தீர்க்க ராணுவத்தின் பங்கை அளவிற்கதிகமாக ஈடுபடுத்துவதும் அவர்களுக்கு மட்டற்ற அதிகாரத்தை வழங்கியதும் இன்றுவரை இந்திய நாட்டை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (1958) AFSPA இத்தகைய அவலங்களுக்கு அத்து மீறல்களுக்கு மனித உரிமைகளை அழித்தொழிப்பதற்கு பொறுப்பற்ற தன்மையை வளர்ப்பதற்கு உதவும் கறுப்பு சட்டமாகும்.
சமநிலை சீர்குலைந்ததை சுட்டிக்காட்டும் இந்த கறுப்பு சட்டம் அரசியல் தலைமை தன் ஆதாயத்திற்கு ராணுவ உதவியை நாடியதையும் , ராணுவ அத்துமீறல்களுக்கு இந்த கறுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பும், கண்டனங்களும் கிளம்பிய போது தமது இயலாமையை மறைக்க ராணுவ மாண்பை துணைக்கிழுப்பதும் யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தொடர்ந்து நடைபெறுகிறது.
எதிரிகளிடமிருந்து நாட்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய ராணுவம் சொந்த நாட்டு மக்களை வேட்டையாடி பதக்கங்கள் பெற்றுக்கொள்வதும், பதவி உயர்வுகளும் சிறப்பு விருதுகளும் பெற்றுக்கொள்வதும், இந்தியாவில்தான் நடக்க இயலும் என்பது வெட்கக்கேடானது. ஆனால் இது பெரிதளவு யாரையும் பாதித்தாக தெரியவில்லை என்பது வேதனையானது.
இவ்விதமான உள்நாட்டு மக்களுக்கெதிரான சண்டையில் ஈடுபடும் ராணுவ நடவடிக்கைகளுக்கு Counter Insurgency Operations – எழுச்சிக்கெதிரான ராணுவ நடவடிக்கை – என்று பெயர் . இந் நடவடிக்கையில் இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக பெரும்பங்காற்றியவர் பிபின் ராவத். அவர் எதிரகளை வீழ்த்திய வீரதீரர்(War Hero) அல்ல! கவுன்டர் இன்சர்ஜன்சி நடவடிக்கையில் புகழ்பெற்றவர்! அதாவது உள்நாட்டு மக்களை, சொந்த நாட்டினரை அழித்தொழிப்பதில் வல்லவர்!
ராணுவத்தினர் மீது புகார்களும், கடும் குற்றசாட்டுகள் எழுந்தாலும், உச்ச நீதி மன்றமே கண்டித்தாலும் அதற்கு எதிர்வினையாற்றுபவர். அதனால் இவரை ‘வெளிப்படையான தளபதி’ Outspoken General என்று அவரை அறிந்த ஊடகத்தினரும் ஆதரவாளர்களும் குறிப்பிடுவர்.
ராணுவத்தினரால் அப்பட்டமான அத்து மீறல்களும், படுகொலையும் நடந்தாலும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உச்ச நீதி மன்றமே ஆயுதப்படை சிறப்பு சட்டங்களுக்கு திருத்தம் அறிவுறுத்தினாலும், சக தளபதிகள் உண்மையை ஒத்துக்கொண்டாலும் அந்த கறுப்புசட்டத்தை தூக்கிப்பிடிப்பதில் முதன்மையாக நின்றவர் பிபின் ராவத். அதை நீட்டிப்பதில் முன் நின்றவர்.
காஷ்மீரில் போராட்டகாரர் ஒரவரை ராணுவ ஜீப் முன்பகுதியில் கேடயமாக கட்டி வலம்வந்த மேஜர் லீட்டுல் கோகோய் என்ற அதிகாரிக்கு கடும் கண்டனங்களுக்கு மத்தியில் தலைமை தளபதிகளின் பாராட்டு விருதை வழங்கி 2017ல் மகிழ்ந்தது இவரின் மனித நேயப்பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.
கும்பல்களே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு “பயங்கரவாதிகள” அடித்துக் கொல்லலாம் என்று வாதிட்டவர்தான் இந்த பிபின் ராவத்.
அரசியல்வாதிகள் தங்களது இமேஜை கட்டமைக்க தங்களை உறுதிவாய்ந்த தலைவர்களாக காட்டிக்கொள்ள ராணுவ அத்துமீறல்களை, அக்கிரமங்களை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாத அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் அவற்றை தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பதும் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அவற்றில் ஒன்றுதான் ராணுவ தளபதிகள் தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதும், கருத்து கூறுவதும் ஆகும் . இத்தகைய உளறல்களினால் விபரீத விளைவுகளும், விரும்பத்தகாத நிகழ்வுகளும் அரங்கேறும்.
உள்நாட்டு அரசியல் நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளின் ஊடாடுதலிலும் ராணுவத்தலைமை கருத்து கூறுவதோ, மூக்கை நுழைப்பதோ விரும்பத்தகாதது மட்டுமல்ல, அது அரசியலமைப்பிற்கு புறம்பான செயலாகும்.
ஆனால் மதிப்பிற்குரிய பிபின் ராவத் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கெதிராக போராடிய மக்களை கண்டித்தார் ஏளனம் செய்தார்! வெளிப்படையாக தன்னை ஆளுங்கட்சியுடன் அடையாளப்படுத்தினார்.
மேலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் தன் உளறலை இந்த தலைமை தளபதி நிறுத்தவில்லை. உதாரணமாக, ‘சீனா யாரும் எதிர்பார்த்தற்கு முன்னரே வல்லரசாக மாறி இன்று ஈரான் துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமாயிருப்பதால் சைனிக்-இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும், மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் இடையில் மோதல் உண்டாகிறது, இதில் இந்தியா தனது பங்கைஒரு பக்கம் நின்று உறுதிப்படுத்த வேண்டும்’ என்று செப்டம்பர் 2021ல் திருவாய் மலர்ந்தார்.
இரண்டு நாள்கள் கழித்து ‘ இந்தியா கலாச்சார மோதல் Clash of Civilisations என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை , எங்களுக்கு இதில் எந்த உடன்பாடும், பங்கும் கிடையாது’ என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை வெளியிட அவசியம் வந்தது பிபின் ராவத்தின் உளறலினால்.
ஆகஸ்ட் 2020ல் இந்திய சீன எல்லையில் கல்வான் மோதல் உயிர் சேதத்திற்குப்பிறகு பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில் பிபின ராவத், ‘ பேச்சு வார்த்தை பலனளிக்காவிட்டால் இந்தியாவிடம் மற்றொரு வழி உள்ளது, அது ராணுவ நடவடிக்கைதான் ‘ என்று வழக்கம்போல்பிதற்றியதால், மீண்டும் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.
இதற்காகவே இவரை ஒருசாராருக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. மற்றொரு சாராருக்கு மிகவும் பிடிக்கும், இவர் சொல்வதை பாராட்டி பெருமையடைவர், இவர்களின் துவேஷம் நிறைந்த மத அரசியலுக்கு, மற்றும் வன்முறை அரசியலுக்கு (Vigilantic violence) இவரின் பேச்சுக்களும் கருத்துக்களும் பெரும் வலு சேர்த்தன என்பதில் ஐயமில்லை.
இந்தப் பாராட்டுகளாலோ அல்லது இவரின் இயல்பான ஆசையினாலோ இவரும் தன்னை ஆளுங்கட்சியின் அரசியல் சாயத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டார்.
கடற்படை வீர்ர்களின் நினைவுநாள் நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் கோரக்பூர் மடத்திற்கும், கோவிலுக்கும் சென்று தன்னை அடையாளபடுத்திக்கொண்டார்.
இராணுவத் தலைமை தன் நடுநிலைமையை, பொதுதன்மையை எப்போதும் இழக்கலாகாது.
ஆளுங்கட்சியினர் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இராணுவத்தை பயன்படுத்த இடையறாது முயலுகின்றனர், ‘வலிமையான இந்தியா, வலிமையான தலைமை’ என கூறிக் கொண்டு இராணுவத்தை புகழ்வதில் உள்ள உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் , அதை மறுதலிக்காமல் இராணுவம் தன்னை அரசியலில் , மதச் சார்பில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டால் அது இந்திய ஜனநாயக குடியாட்சி (Democratic Republic) முறைக்கு சாவுமணியாகவே முடியும்.
ஆட்சியாளர்கள் தங்கள் ஆதாயத்திற்காக இராணுவத்தை பயன்படுத்துவது எவ்வளவு மோசமான செயலோ அதைப்போன்றதுதான் ராணுவத்தலைமை தன்னை ஆளுங்கட்சியுடன் அதன் சித்தாந்தத்துடன் தன்னை அடையாளப்படுத்துவதும்.
ஆனால், இத்தகைய தவறுகளுக்குபரிசாகவே சி டி எஸ் Chief of Defence Staff முப்படை தலைமை தளபதி பதவி ஏற்படுத்தப்பட்டு பிபின் ராவத்திற்கு அவர் இராணுவத்தலைமை தளபதி பதவி பணி மூப்படைந்த நாளே வழங்கப்பட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பண்டிதர் நேரு காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் ஒரு சில தளபதிகளுடன் நெருக்கமாக இருக்கிறார் ஆதரவு காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது, கண்டன குரல்களும் பெருமளவு எழுந்தன.
ஆனால், இன்றோ இந்த நெருக்கமும் சமநிலை சீர்குலைதலும் வரம்பு மீறியுள்ளன. ஆனால், கண்டனக்குரல்கள் ஏனோ வெளியில் உரக்க ஒலிக்கவில்லை.
இனி புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் எவரும் இவ்வித சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாகும்.