எப்பேர்ப்பட்ட ஜனநாயகக் காவலர்கள்!

-ச.அருணாசலம்

அமெரிக்காவில் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி  பத்திரிகையாளர் கேள்வி கேட்டதில் பொங்கி எழுந்துவிட்டனர் சங்கிகள்! இதோ, இங்கே நடந்த அக்கிரமங்களின் பட்டியல்! இந்தப் பசு காவலர்களால் பலியான மனித உயிர்கள் கொஞ்சமா? ‘லவ் ஜிகாத்’ பெயரிலான அட்டூழியங்கள் என்னவாம்..?

‘உலகிலேயே எங்க ரிஷிகள்தான் முதலில் ‘ஜனநாயக அமிர்தத்தை ‘ கடைந்தெடுத்து கொடுத்தனர், அதன் கூறுகள்தான்  இந்திய அரசியல் சாசனத்திலும் இடம் பெற்றுள்ளது, எங்கள் நாடுதான் மக்களாட்சியின் தாயகம் ‘மதர் ஆப் டெமாக்ரசி’, ஜனநாயகம் என்பது  எங்களது டி.என்.ஏ.வில் DNA இருக்கிறது. எங்களைப் பார்த்தா மனித உரிமைகளுக்கு என்ன செய்தீர்கள்? சிறுபான்மையினரை மதிக்கவில்லையே என கேள்விகள் கேட்கிறீர்கள்?’ என பொங்கிய  மோடியின் பித்தலாட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள நாளேடுகள், சமூக ஊடகங்களே தோலுரித்துக் காட்டி வருகின்றன.

மோடி மறந்தவை அல்லது மூடி மறைத்தவை!

2015 டிசம்பரில் உத்தர பிரதேச மாநிலத்தில் தாத்ரி என்ற சிற்றூரில் முகமது அக்லக் என்ற இஸ்லாமிய பெரியவரை ‘மாட்டிறைச்சி வைத்திருக்கிறார்’ என்று பழி போட்டு அடித்து கொன்றதை மறந்து விட்டாரா மோடி?

முகமது அக்லக்கின் மகன் இந்திய விமானத்துறையில் பணியாற்றிய போதும் அவரது தந்தையின் கொலையாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த முடியவில்லை, இதற்கு மோடி என்ன செய்தார் ? வாய் திறந்தாரா? இந்திய ஜவான் ஒருவரின் தந்தையை கொன்றவர்களை பிடித்து தண்டனை வழங்கினாரா?

ஆனால், மூன்று வருடங்கள் கழித்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா ஜ க வேட்பாளராக தாத்ரி கொலை குற்றவாளி ஹரி ஓம் சிசோடியா நிறுத்தப்பட்டார் , அவன் தன்னை இந்துத்வ போராளி என மார் தட்டிக்கொண்டான்.

கொலையாளி ஹரி ஓம் சிசோடியா! கொல்லப்பட்ட இஸ்லாமிய பெரியவர் முகமது அக்லக்.

மனிதர்கள் அவர்களது உணவு பழக்கத்திற்காக பாகுபடுத்தப்பட்டு அடித்துக் கொல்லப்படுவதும், இக்கொடுமையை தடுக்காமல் கட்டி பாதுகாப்பதும் மோடி அரசின் கைங்கர்யம் .

அதே 2015ம் ஆண்டு புதுடெல்லியிலும்  வேறு பல இடங்களிலும் கிறித்துவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு கிறித்துவர்கள் மீதும் ஓர வஞ்சனையாக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டனவே இதெல்லாம் மறந்து விட்டாரா மோடி? அல்லது அமெரிக்கர்களுக்கு தெரியாதா?

அதே ஆண்டு , பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் Cow Vigilantism என்ற பயங்கரவாத செயல்களை சங்கிகள் நாடு முழுவதும் அரங்கேற்றினரே, ஏழை எளிய இஸ்லாமிய சகோதரர்களை பசுவின் பெயரால் அடித்துக் கொன்றார்களே மறந்து விட்டதா மோடி?

பெஃகுல் கான் என்ற பெயர் ஞாபகமிருக்கிறதா மோடி அவர்களே?  பசுவின் காவலர்கள் என கூறிக்கொண்ட காவி பயங்கரவாதிகள் பெகுல்கானை அவரது வீட்டு முன்னரே அடித்து எரித்து கொன்றதும் அக் கொடுஞ்செயல் வீடியோவாக படமெடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் சங்கிகளின் இரத்தவெறி இரசனைக்கு பார்வையாக்கப்பட்டதே மறந்து விட்டீர்களா மோடி?

இத்தகைய வெறிச் செயல்கள் இன்று வரை தொடர்கிறதே இதை நீங்கள் அறிய மாட்டீர்களா? இந்த பயங்கர வாதிகள் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக பதவிகளும் பரிசுகளும் பெறுவது உங்களது ஆட்சியில் தானே நடக்கிறது மோடி அவர்களே! இது பாகுபாடில்லையா? மனித உரிமைகளுக்கெதிரானதில்லையா?

சிறு பான்மை மக்கள் போராடினால், அவர்கள் கல்லெறிந்தனர், கலவரத்தில் ஈடுபட்டனர் என பொய் குற்றங்கூறுவதோடன்றி அவர்களது வாழ்விடங்களையும் “புல் டோசர்” கொண்டு, இடித்து தரை மட்டமாக்கியது உ.பி.யிலும், ம.பி.லும், அசாமிலும், புதுடெல்லியிலும் நடந்ததே அதை மறக்க முடியுமா?

இக் கொடுமையை தொடங்கிய உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை “புல் டோசர் பாபா” என்று நீங்களும் உங்களது கட்சியினரும் பாராட்டி பெருமிதம் கொள்ளவில்லையா?

கடல் கடந்து அமெரிக்க நீயூ ஜெர்சி மாநிலத்திலும் உள்ள சங்கிகள் புல் டோசரை முஸ்லீம்களுக்கெதிரான சங்கிகளின் ஆயுதமாக அடையாளப்படுத்தி ஊர்வலம் சென்றனரே..,! மறக்க முடியுமா மோடி அவர்களே, அவர்கள் உங்களது பக்தர்கள், நீங்கள் அவர்களது உளங்கவர்ந்த மன்னன் ஆயிற்றே?

‘லவ் ஜிகாத்’ (Love Jihad) என்ற புதிய சொல்லாடலை இந்தியாவில் உருவாக்கிய கும்பலின் தலைவனான மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற கதையாக தனது ஆட்சியில் சிறு பான்மையினர் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்கின்றனர் என நாக்கூசாமல் பேசுவதற்கு தைரியம் யார் கொடுத்தது?

இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை ‘காதலித்து’ ஏமாற்றி மணம் செய்து அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதன் மூலம் முஸ்லீம் மக்கள் தொகையை பெருக்கி இந்துக்களை இந்தியாவில் சிறு பான்மை ஆக்க முயலுகிறார்களாம், இந்த லவ் ஜிகாத் என்ற கட்டுகதையை பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதும் , இளைஞர்களின் குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்வை நாசப்படுத்துவதும், கொச்சை படுத்துவதும் ஆணவப் படுகொலைகளை ஆமோதிப்பதையும் சங்கிகள் தங்கள் கடமையாக மேற்கொண்டு சமூகத்தில் பிளவும் பதட்டத்தையும் தோற்றுவித்து ள்ளதை மறைத்து பேசுவது முறைதானா?

இத்தகைய பிற்போக்கான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து லவ் ஜிகாத் சட்டங்கள் பா ஜ க ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றி சிறு பான்மையினரை ஓரங்கட்டுவதை சட்டபூர்வமாக்கிவிட்டு, எந்த முகத்தை வைத்து கொண்டு ‘நாங்கள் சிறுபான்மையினரை பாகுபடுத்தவில்லை’  என்று பசப்புகிறார் மோடி!

2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தில் அப்பட்டமாக இஸ்லாமியர்களுக்கு தடையை ஏற்படுத்திவிட்டு பாரபட்சபடுத்திவிட்டு , அதை எதிர்த்து சிறு பான்மையினர் உச்ச நீதி மன்றம் சென்ற பிறகு இன்று வரை அவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை! அச்சட்டத்தின் விதி கள் மற்றும் நடைமுறைகளை இன்று வரை நாடாளுமன்றத்தில் மோடி அரசு  தாக்கல் செய்யவில்லை எனவே வாதத்திற்கு கூட மோடி கும்பல் கூறும் காரணங்களான இந்துக்கள் வெளிநாடுகளில் பழிவாங்ப்படுகின்றனர் என்பதை ஏற்று கொள்ள முடியாது. இஸ்லாமிய சமூகத்தினரை அச்சுறுத்தவே , பாகுபடுத்தி உரிமைகளை பறிப்பதே இச்சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமாகும்.

இதை பற்றி வெளிநாடுகளில் வாய்திறக்க மறுக்கும் மோடி ஓர வஞ்சனை செய்யவில்லை என நாடகமாடுவதை யாரும் நம்பவில்லை.

யோகி என்று கூறிக்கொள்ளும் ஆதித்யநாத், ஒன்றிய இணை அமைச்சர் சாத்வி(?) நிரஞ்சன் ஜோதி , சாத்வி . பிரக்ஞா தாக்குர், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் போன்றவர்களும் இன்னும் பல பா ஜ க தலைவர்களும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள், அவர்கள் இருக்க வேண்டிய இடம் பாகிஸ்தான் , இந்தியாவில் வாலை சுருட்டி கொண்டிராவிட்டால் கொன்று விடுவோம் என பல சந்தர்ப்பங்களில் பேசி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டியது மோடியின் கண்ணசைவில் தானே நடந்தது? இல்லையென்றால் அவர்கள் மீது சட்டம் ஏன் பாய மறுக்கிறது?

கடந்த வருடத்தில் உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள் மாநாடு நடத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும், இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டதும் இன்று உத்தரா காண்டில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என அவர்கள் வசிக்கும் வீடுகளை அடையாளக் குறி வைத்து தாக்கி விரட்டுவது இனப்படு கொலையா அல்லது சம உரிமை விருந்தா?

அமெரிக்க பத்திரிக்கைகளே மோடியை வலதுசாரி என்றும் இந்துமத அரசியல்வாதி என்று பறைசாற்றுகின்ற பொழுது யாருக்காக மோடி உண்மையை மறைக்கிறார் ?

கேள்வி கேட்டவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவாக இருந்தாலும் சரி, வால் ஸ்டீரீட் ஜர்னலின் பெண் நிருபராக இருந்தாலும சரி பதிலடி கொடுத்து விடுவார்கள்.

முட்டாள்தனமாக பதிலடி கொடுப்பதால் மோடியின் பெருமை உயராது என்ற விவரம் இந்த மரமண்டைகளுக்கு விளங்காது.

இது தவிர, ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்டோரில் ஒரு சிலர் உலகின் இரண்டு பெரிய ‘ஜனநாயக நாடுகள் ‘ அமெரிக்காவும் இந்தியாவும் என நம்புபவர்கள். இந்தியாவில் 2014 முதல் ஜனநாயகம் படும்பாட்டை அறிந்தவர்கள், மனித உரிமைகள் நசுக்கப்படுவதை உணர்ந்தவர்கள், பேச்சு சதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை மறுக்கப்படுவதை தெரிந்தவர்கள் இதற்கெல்லாம் காரணமாக உள்ள மோடி தலைமையிலான பா ஜ க வின் ஆட்சியை ‘ஜனநாயக’ காவலனான அமெரிக்க நாடு முழுமையாக ஏன் கண்டிக்க மறுக்கிறது? இத்தகைய ஜனநாயக விரோத ஆட்சியின் நாயகனான மோடியை ‘ராஜ உபச்சாரம்’ செய்யலாமா?

ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா என்ற கருத்துருவை மீட்டெடுக்க மோடியை முறியடிக்க அமெரிக்க சர்டிபிகேட் நமக்கு தேவையில்லை.

ஏனெனில், மனித உரிமைகள், ஜனநாயகம், பேச்சுரிமை, பத்திரிக்கை சுதந்திரம் ஆகியவற்றை பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உண்மையில் இவைகளை தூக்கிப் பிடிக்கின்றனரா?

அமெரிக்க முதலாளிகள் வேண்டுவதெல்லாம் மேலாதிக்கமும், அதிக லாபமும்தானே ஒழிய வேறு எந்த புடலங்காயும் இல்லை.

ஜூலியன் அஸாஞ்சே பற்றி கேள்விபடாதவர்கள் இருக்க முடியாது. உண்மையை உரக்க கூறிய ஒரே காரணத்திற்காக பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு –  சிறையில் அடைப்பதற்காக – நாடு கடத்தப்படுகிறார் அசாஞ்சே.

அசாஞ்சே அவுஸ்திரேலியா நாட்டை சார்ந்த தலைசிறந்த பத்திரிக்கையாளன். 2010 – 2011 ஆண்டு வாக்கில் ‘விக்கிலீக்ஸ்’ என்ற சஞ்சிகை மூலம் அமெரிக்க அரசு ஈராக்கில், ஆப்கானித்தானத்தில் நடத்திய போர் குற்றங்கள் (War Crimes) மற்றும் ‘கவுண்டனாமா பே’ (Guantanamo Bay) என்ற சட்டப்புறம்பான தீவாந்திர சிறையில் அமெரிக்க அரசு செய்த அட்டூழியங்களை, மோசடிகளை, ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்தினார்.

வெளிச்சத்திற்கு வராமல் மறைத்து அல்லது ஒளித்து வைக்கப்பட்ட எண்ணற்ற அமெரிக்க ஆவணங்களை- அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்ற கேபிள்கள், தூதரகங்களுக்கிடையேயான உண்மை தகவல் பரிமாற்றங்கள் – அப்படியே உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த சுதந்திரமான பத்திரிக்கைகளின் துணையுடன் (இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இருந்து வெளியாகும் ’தி இந்து‘ பத்திரிக்கையும் இதில் ஒன்றாகும்) வெளியிட்டார். அந்த உண்மை தகவல்கள் உலகை உலுக்கி எடுத்தன . அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் சொல்லி வந்த அனைத்து பொய்களும் ஏமாற்று வேலைகளும் அம்பலப்பட்டு போயின.

பிரிட்டன் நாட்டில் உள்ளதைப் போன்றல்லாமல், அமெரிக்காவில் தெளிவாக எழுதப்பட்ட அரசியல் சட்டம் உள்ளது. அது பல உரிமைகளை- எழுத்துரிமை, பேச்சுரிமை, தனி மனித உரிமை ஆகியவைகளை – வழங்கி உள்ளது .

விசாரணையின் போது அது எவ்வளவு உண்மை எனத்தெரியவரும் என்கின்றனர் பார்வையாளர்கள். மேற்கத்திய தலைவர்களும், ஜனநாயக ஆர்வலர்களும் அமெரிக்க மக்களும், அசாஞ்சேயின் விடுதலையை கோருவார்களா? அல்லது சுதந்திரம் நிரம்பிய அமெரிக்க நாடு என்ற பிம்பம் உடைவதை பார்க்கப் போகிறார்களா? என்பதே கேள்வி.

Tags: