இந்திய வேளாண்மைக்குத் தேவை புதிய கொள்கை
–யோகேந்திர யாதவ்
விவசாய இயக்கத்துக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி, ‘மீண்டும் பழைய பாணியிலேயே விவசாயம்’ என்ற நிலைக்குச் சென்றுவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது விரும்பத்தக்கதும் அல்ல, நீண்ட காலத்துக்குத் தொடரக் கூடியதும் அல்ல. இரண்டு எதிரெதிரான முகாம்கள் நம்மைப் படுகுழியில் தள்ளிவிடக்கூடும்.
ஒருபக்கம், சந்தைச் சீர்திருத்த சுவிசேஷகர்கள் அரசியல் – அறிவார்ந்த தளத்தில் முட்டுச்சந்துக்குள் தாங்கள் தள்ளப்பட்டதை உணர்ந்து, இந்திய விவசாயத்தை இனிமேல் யாராலும் திருத்தவே முடியாது என்று தங்களுடைய ஆத்திரத்தை வெளிப்படுவார்கள். மறுபக்கம், விவசாய இயக்கத்தின் சில பிரிவினர் பழையபடி விதைத்தோம், அறுத்தோம், கொண்டுபோய் கொடுத்தோம் என்ற பழைய வழிமுறைக்கே திரும்பிப்போய்விடுவார்கள்.
அப்படியொரு நிலைமை மிகவும் பரிதாபகரமானது.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும் இயற்றப்படுவதற்கு முன்னால், இந்திய விவசாயம் நல்ல நிலையில் இருந்துவிடவில்லை. அது பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் தளங்களில் பிரச்சினைகளுடனேயே இருந்தது.
மூன்று சட்டங்களும் விவசாயத்துக்கு மிகப் பெரிய சேதத்தை உண்டுபண்ணுவதாக இருந்தன. அவற்றை விலக்கிக்கொண்டுவிட்டதால், விவசாயத்துக்கு ஆரம்பத்திலேயே இருந்த நெருக்கடி தீர்ந்துவிடவில்லை. இந்திய வேளாண் துறைக்குச் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். விவசாயிகள் மீது அரசால் திணிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் அல்ல – விவசாயிகளுக்குத் தேவைப்படும், விவசாயிகளின் நலன்களுக்கான சீர்திருத்தங்கள் அவசியம்.
எப்படிப்பட்ட சீர்திருத்தம் தேவை?
இந்திய விவசாயிகள் கற்றுக்கொள்வதற்கும், மாறுதலை ஏற்கவும் தயாராக இருக்கிறார்கள், அதில் அவர்களுக்கு ஆதாயங்கள் இருக்க வேண்டும். இப்போது விவசாயிகள் தங்களுடைய சுயகௌரவத்தை மீட்டுக்கொண்டுவிட்டனர், ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர், தேசிய அளவில் மைய அரங்குக்கு வந்துவிட்டனர், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய வேளாண்மையை மேம்படுத்துவதற்கான எதிர்காலச் செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். விவசாய இயக்கத்தின் முன்னுள்ள மிகவும் அவசரமான கடமை இதுதான்.
விவசாயிகள் பெற்றுள்ள அரசியல் தன்னம்பிக்கை அவர்களுடைய அறிவுத் தளத்திலும், கலாச்சாரத்திலும் எதிரொலிக்க வேண்டும். இந்திய விவசாயிகளின் எதிர்காலம் என்பது, ஐரோப்பியர்கள் அல்லது வட அமெரிக்கர்களின் கடந்த காலமாக இருந்துவிட முடியாது. பசுமைப் புரட்சி முன்னுதாரணத்தை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தும் கனவை நாம் கைவிட வேண்டும். அதிக இடுபொருள்கள், தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள், ரசாயனத்தை அதிகம் நம்பியிருக்கும் விவசாய முறை என்பது இனியும் சாத்தியமுமல்ல, விரும்பத்தக்கதும் அல்ல.
சிறிய அளவிலான விவசாய நிலங்கள் என்பது இங்கே நிலையான அம்சமாகிவிட்டது. மாற்று வேலைவாய்ப்புக்கான வழிகள் இப்போதைக்குத் தென்படாததால், வேளாண்மையும் அதைச் சார்ந்த தொழில்களும் நாட்டின் தொழிலாளர்களில் ஐந்தில் இரண்டு பங்கினருக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும். பெரும்பாலான விவசாயிகளிடம், விவசாயத்தில் முதலீடு செய்வதற்கான மூலதனம் அதிக அளவில் இல்லை. நாட்டின் அனைத்து வானம் பார்த்த நிலங்களுக்கும் (மானாவாரி) வாய்க்கால் மூலம் பாசன நீரைக் கொண்டுசெல்வது சாத்தியமே இல்லை. இந்த உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் விவசாயத் துறைக்கான எதிர்காலத் தீர்வுகளை ஆலோசிக்க வேண்டும்.
சராசரி வயது எழுபதாக இருக்கிற 140 கோடி மக்களுக்குத் தேவைப்படும் அளவுக்குப் போதிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு தானியங்களை விளைவிக்கும் தேவை ஏற்பட்டுவிட்டதால், மீண்டும் பாரம்பரிய முறை விவசாயத்துக்கே நாம் திரும்பிவிட முடியாது. அனுபவ அடிப்படையிலான, அறிவுபூர்வ விவசாய நடைமுறைகளை நாம் முந்தைய தலைமுறைகளிடமிருந்து பெற்றுள்ளோம். நவீன அறிவியலுக்கேற்ப அந்த நடைமுறைகளை மேலும் செழுமைப்படுத்தி, கைக்கொள்ள வேண்டும்.
இங்கே, உணவு தானிய உற்பத்திக்கும், சேமித்து வைக்கவும் அரசு தானே வந்து அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உணவு தானியங்களை அனைவரும் வாங்கும் வகையில் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட வேண்டும், உள்நாட்டு, சர்வதேசச் சந்தைகளை விளைபொருள்களை விற்க வசதியாக ஒழுங்குபடுத்த வேண்டும்.
மூன்று இலக்குகள்
நாம் மூன்று இலக்குகளை ஒரே சமயத்தில் அடைய முயற்சி எடுக்க வேண்டும்.
விவசாயம் என்பது விவசாயிகளுக்குப் பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகக் கூடியதாக இருக்க வேண்டும், விவசாயிகள், நுகர்வோர் நலனுக்கு ஏற்ப நிலைத்திருக்கும்படியான சூழலுக்கேற்ற விவசாய முறைகளுக்கு மாற வேண்டும், விவசாயத்திலும் விவசாயம் அல்லாத துறைகளிலும் உள்ள சமூகங்களைச் சேர்ந்த விளிம்புநிலை மக்களுக்கும் சமூகநீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இதுவரை வெவ்வேறு அமைப்புகளாலான விவசாய இயக்கங்கள் இந்த மூன்று நோக்கங்களையும் முன்னெடுத்தன. பிரதான விவசாய இயக்கங்கள், பொருளாதாரரீதியாக கட்டுப்படியாகக் கூடிய விவசாயத்துக்காக பாடுபட்டன. இடதுசாரி விவசாய இயக்கங்கள் சமூகநீதிக்காகப் போராடின. சிறிய எண்ணிக்கையிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடினார்கள். இந்த மூன்றையும் ஒன்றிணைக்கும் வரலாற்று வாய்ப்பை ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (எஸ்கேஎம்) அளிக்கிறது.
சட்டபூர்வமான உறுதிமொழி
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக திட்டவட்டமான உறுதிமொழி எதையும் அளிக்காமல் அரசு தப்பித்துவிட்டாலும், விவசாயிகளின் நிரந்தர வருமானத்துக்கு உத்தரவாதம் தந்தாக வேண்டிய தொடர் நெருக்கடி அரசியல் துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான சீர்திருத்தம், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உறுதிமொழியைப் பெற்றுத்தருவது ஆகும்.
பலமுறை விளக்கியதைப் போல, விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்தையும் அரசு கொள்முதல் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. தேவை எதுவென்றால், கொள்முதலை அனைத்துப் பயிர்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
எங்கே சந்தை விலையானது, குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைகிறதோ அங்கே மட்டும், அந்தப் பற்றாக்குறையை அரசு சாகுபடியாளர்களுக்குத் தந்தால் போதும்.
சர்வதேச வர்த்தகக் கொள்கையை இந்திய விவசாயத்துக்கு சாதகமாக மாற்றிப் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை ஊக்குவிப்புகளை, அரசு விரும்புகிற மாற்றுப் பயிர்ச் சாகுபடிகளுடன் இணைக்கலாம். அரசு கொண்டுவந்த ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’ தோல்வியடைந்துவிட்டது. அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் வகையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அடுத்து கொண்டுவர வேண்டும்.
விவசாயத் துறை சார்ந்த தன்னார்வலர்கள் விவசாயச் சந்தைகளுக்கு பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர். மண்டிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும், மண்டிகளில் அதிகம் பேர் கொள்முதலுக்கு வர வேண்டும், வரிகளைக் குறைக்க வேண்டும், கிடங்குகளில் பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான ரசீதுகளை வழங்கும் முறை மேம்படுத்தப்பட வேண்டும், நுகர்வோர்களுடன் விவசாயிகளுக்கு நேரடித் தொடர்பு ஏற்பட வேண்டும். விவசாயிகளின் இயக்கத்தால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம், விவசாயத்துக்கு அரசு மேலும் அதிக நிதியை ஒதுக்கீடு செய்து செலவுசெய்வதாக அமைய வேண்டும்.
வேளாண்மையில் சமூக நீதி
விவசாய இயக்கங்கள் சமூக நீதியை வேளாண் சமூகங்களுக்குள் வழிநடத்திச் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்திய விவசாயிகளுக்குள் இருக்கும் தீவிரமான வேறுபாடுகள் குறித்த விழிப்புணர்வை அது வெளிப்படுத்தியிருக்கிறது. வேளாண் துறை மீது கவனம் திரும்பியுள்ள இதுவே, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலேயே தொடரும் சில சமூக நீதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உரிய தருணமாகும்.
நிலங்கள் அடுத்தடுத்த தலைமுறையில் பாகப்பிரிவினை செய்து அளவு குறுகிவிட்ட இந்நிலையில், 1950-களில் கருதியதைப் போல விவசாய நிலங்களை உழுபவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது இப்போது சாத்தியமல்ல. அதேசமயம், தரிசாகக் கிடக்கும் நிலங்களையும் விவசாயிகள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றிய நிலங்களையும் அவர்களுக்கே பட்டா செய்து தர வாய்ப்புகள் உள்ளன. ‘பூமி அதிகார் ஆந்தோலன்’ இந்தப் பிரச்சினையை வெகு காலத்துக்கு முன்னதாகவே எழுப்பியது.
ஆதிவாசி விவசாயிகளுக்கு வன உரிமைகள் சட்டம் 2006-ன் பலன்கள் கிடைக்க வேண்டும். காடுகளில் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு லாபகரமான விலை தரப்பட வேண்டும். பெண் விவசாயிகளுக்கு இணை உரிமையாளர் சான்று வழங்கப்பட வேண்டும். குடிவாரதாரர்களாக இருக்கும் விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு ஏதாவது ஒரு வகை அரசுப்பூர்வ அடையாளம் அளிக்கப்பட வேண்டும். இது எந்த வகையிலும் நில உடமையாளரின் உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது.
விளிம்புநிலை விவசாயிகளுக்கு தேசிய அளவில் கூட்டுறவு ஊக்குவிப்புகள் உருவாக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டும். விவசாய உற்பத்தியாளர் அமைப்பு என்பதைப் போன்ற பெயர்களில் அது செயல்பட வேண்டும். அந்த விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு விவசாயிகளின் கூட்டுறவுச் சங்கங்கள் மையமாகத் திகழ வேண்டும்.
விவசாய இயக்கங்களின் உரிய கவனத்தைப் பெற்றாக வேண்டிய ஒரு பிரச்சினை, சுற்றுச்சூழல் ரீதியாக விவசாயத்தை நிலையாக மேற்கொள்வதாகும். இந்த விவகாரத்தை இனியும் கவனிக்காமல் தள்ளிவைக்க முடியாது.
பசுமைப் புரட்சிக் காலம் முடிந்துவிட்டது. பருவநிலை மாறுதல் பெரிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. இனியும் நாம், நிலத்தடிநீரை வரம்பின்றிக் குடிக்கும் பயிர்ச் சாகுபடி, மண்ணைச் சாரமற்றுப் போகச் செய்யும் உரப் பயன்பாடு, விவசாயிகளின் சாகுபடிக் கடன் சுமையை அதிகரிக்கும் விவசாய முறை, நுகர்வோருக்கு விஷமாக மாறும் உரம்-பூச்சிக்கொல்லிப் பயன்பாடு ஆகியவற்றைத் தொடர முடியாது. குறைந்த அளவு சாகுபடிச் செலவு, குறைந்த அளவிலான இடுபொருள் பயன்பாட்டுக்கான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.
ஊட்டச்சத்து மிகுந்த, ரசாயன நச்சுகளற்ற, மக்களால் எளிதில் விலை கொடுத்து வாங்க முடிந்த, குறைந்த அளவு இடுபொருள்கள் தேவைப்படுகிற, குறைந்த சாகுபடிச் செலவை ஏற்படுத்துகிற விவசாயத்துக்கு மாற வேண்டும். அதற்குப் பயிர்வாரி முறையைத்தான் கைக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே விவசாயத்தில் நமக்குள்ள அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளுக்கும் நிலங்களுக்கும் ஏற்ற பயிர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். பயிர்களைச் சுழற்சி முறையில் மாற்றி நிலங்களுக்கு உரம் ஊட்ட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களைக் கலந்து சாகுபடி செய்ய வேண்டும், பயிர் ஒருங்கிணைப்புத் திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மிகப் பெரிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும். சிறு பாசனத் திட்டங்களுக்கும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
விவசாயிகளின் செயல்திட்டத்தில் இப்படிப் பல்வேறு நோக்கங்களை இணைப்பது குறித்து சில அமைப்புகளும் சிந்தனையாளர்களும் ஏற்கெனவே முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதைச் செயல்படுத்துவதற்கான நேரம் இதுவே!