கியூபா தனிமைப் படவில்லை; அமெரிக்காதான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கியூபா தனிமைப் படவில்லை; அமெரிக்காதான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது’
கியூபப் புரட்சியின் 63வது வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ரஷ்ய நாட்டு அதிபர் புட்டின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கியூபப் புரட்சியின் வெற்றிக்கும், அதன் 63வது ஆண்டுக் கொண்டாட்டத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கூறியுள்ளார். இது குறித்து கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ் கானெலுக்கு (Miguel Diaz-Canel) அவர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ராவுல் காஸ்ட்ரோவுக்கும், கியூபத் தீவின் மக்களுக்கும் வளமான 2022 ஆம் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

மேலும், “வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒரு பரந்துபட்ட பங்கு தாரராக இரண்டு நாடுகளும் சென்று கொண்டிருக்கின்றன. இருதரப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்தத் திட்டங்கள் பெரும் வளர்ச்சியைக் கொண்டு வரும். அறிவியல், பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமானத் துறைகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று எழுதியுள்ளார்.

அமெரிக்கா போட்டுள்ள தடைகளால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கியூபாவுடனான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியவில்லை. அந்தத் தடைகளை மீறி ரஷ்யாவும், சீனாவும் முக்கியமான சில திட்டங்களை கியூபாவில் செயல்படுத்த முன்வந்துள்ளன. அதோடு அண்மைக் காலங்களில் பல தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளதால் அவற்றிற்கிடையே நல்ல ஒத்து ழைப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில்தான் ரஷ்யா தனது ஒத்துழைப்பை அதிகரித்திருக்கிறது. கியூபா ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில், “அண்மைக்கால நிகழ்வுகளில் இருதரப்பு மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சனைகளில் கியூபாவுடன் இணைந்து பணியாற்ற நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். புத்தாண்டில் புதிய புதிய இலக்குகளை அடைய ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் அமெரிக்காவின் பிடி தளர்ந்து வரும் நிலையில் இது புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. கியூபாவைத் தனிமைப்படுத்தி விட்டோம் என்று கருதி வந்த அமெரிக்கா, இந்த விஷயத்தில் தனிமைப்படுவது அம்பலமாகியுள்ளது. ஐரோப்பிய – ஆசிய பொருளாதார ஒன்றியத்தின் 34 அம்ச உடன்பாட்டில் கியூபா கையெழுத்திட்டதால், ரஷ்யா-கியூபா உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தப் பொருளாதார ஒன்றியத்தில் பார்வையாளர் அந்தஸ்தோடு பங்கேற்பது கியூபாவுக்கு சாத்தியமாகியுள்ளது.

63வது கியூபா புரட்சி நாள்

-சு.பொ.அகத்தியலிங்கம்

“நம்முடைய நடப்புலக மகிழ்ச்சி என்பது ஒரு சிறிய குடியிருப்பில், ஒரு சிறிய தீவில், நம்முடைய சிறிய கோளில் ஆரம்பமாகியிருக்கலாம்; இப்போது சூரியனைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பு நம் கைக்கு வந்திருக்கிறது.” என ஹேய்தி சாண்ட் டாமரியா கவித்துவமாக கூறிய வரிகள் கியூபப் புரட்சியின் வெற்றியையும் வீச்சையும் பறைசாற்றும்.

ஹேய்தி சாண்ட்டாமரியாவும் அவரது சகோதரியும் பிடல் காஸ்ட்ரோவோடு தோள் இணைந்து போராடிய பெண் வீராங்கனைகள். கியூபப் புரட்சி, ஏகாதிபத்தியத்தின் மூக்கில் வெடிமருந்துத் திரியைச் சொருகிய புரட்சி. இன்று லத்தீன் அமெரிக்க நாடுகள், ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி முழக்கம் செய்வதன் ஆரம்ப நெருப்பு வரிகள் எழுதப்பட்டதன் 50 வது பொன்விழா ஜனவரி முதல் நாள் தொடங்குகிறது.

1959 ஜனவரி-1 கியூபா எனும் அந்த குட்டி லத்தீன் அமெரிக்க நாடு சர்வாதிகார பாடிஸ்டா ஆட்சிக்கு இறுதி மரண அடி கொடுத்த நாள். ஆனால் புரட்சி அதற்கு 2340 நாட்களுக்கு முன்னரே – அதாவது, சற்றேறக் குறைய ஆறரை வருடம் முன்பே 1953 ஜூலை 26 ஆம் நாள் தொடங்கியது. ஆம். அன்றுதான் பிடல்காஸ்ட்ரோ தலைமையில் ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் புரட்சிக் குழுவினர் சாந்தியாவோ டி.கியூபாவில் மன்கடா ராணுவ நிலையத்தைப் புயலாகத் தாக்கினார்கள்.
சுமார் 160 பேர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இத்தாக்குதலில் அங் கேயே ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் ராணுவ சர்வாதிகாரி பாடிஸ்டாவால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இரண்டாம் நிலை தளபதியாக இருந்த அபெல் சாண்டமரியாவும் தூக்கிலிடப் பட்டார். பிடல்காஸ்ட்ரோவும், ராவுல் காஸ்ட்ரோவும் கொடுஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது நீதிமன்றக் கூண்டையே மேடையாக்கி காஸ்ட்ரோ இடிமுழக்கம் செய்தார். கியூபா அடிமைப்பட்ட கதையை ஸ்பானிய அமெரிக்க நுகத்தடிகளை இனியும் சுமக்க கியூபர்கள் தயார் இல்லை என்பதை கியூபர்கள் விரும்புகிற சுதந்திரத்தின் உண்மையான பொருள் என்ன என்பதை மிக விரிவாக-வரலாறு, தத்துவம், வாழ்க்கை ஆகிய மூன்றையும் குழைத்து அவர் பேசிய போது நீதிமன்றம் மிரண்டது.ஆயினும் சர்வாதிகார நீதிமன்றம் காஸ்ட்ரோவுக்கும், ராலுக்கும் முறையே 15 ஆண்டுகள், 13 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை விதித்தது.

“வரலாறு என்னை விடுதலை செய்யும்” என முழக்கமிட்ட காஸ்ட்ரோவின் நீதி மன்ற உரை அதே பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இன்று அதை நாம் படித்தாலும் ரத்தம் சூடேறும். சிந்தனை கூர்மையாகும். கியூப தேசம் முழுவதும் கொதித் தெழுந்தது. உலகெங்கும் இச்செய்தி பெரு நெருப்பானது. ஏகாதிபத்தியம் தர்மசங்கடத்தில் நெளிந்தது. உலக நிர்பந்தம் நாளுக்குநாள் அதிகரித்தது. வேறு வழியின்றி சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அரசியல் கட்டாயம் ஏற்பட்டது. காஸ்ட்ரோவும் அவர் தம்பியும் விடுதலை செய்யப்பட்டனர். அதோடு நாடு கடத்தப்பட்டனர். அவர் மெக்ஸிகோ நாட்டிற்கு சென்றார். அங்குதான் சேகுவேராவை சந்தித்தார். அங்குதான் புரட்சிகர பயிற்சிகளை மேற்கொண்டார். அவர்கள் நெஞ்சில் லத்தீன் அமெரிக்கா அடிமைப்பட்ட சோகம் முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்தது. அதனை மாற்றிட தம் முன்னோடிகள் சைமன் பொலிவார், ஹொஸே மார்த்தி ஆகியோரின் மாபெரும் போராட்டம் இவர்களுக்கு உந்து சக்தியாகின. (தீக்கதிர் 16.11.2008, 30.11.2008 தேதி இதழ்களில் இவர்கள் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகளை வாசகர்கள் மீண்டும் வாசிப்பது பயன் தரும்.)

“கற்களை வைத்திருக்கின்ற கூடையைக் காட்டிலும், கருத்துகளை வைத்திருக்கும் கூடை அதிகப்பயனுள்ளது” என்பார் ஹொஸே மார்த்தி; அவர் கவிதை, கட்டுரை, கதை என எழுத்தா யுதம் ஏந்தி கியூபர்கள் ரத்தத்தில் சுதந்திர தாகத்தை மூட்டினார். “சுதந்திரத்தின் விலை அதிகம். அது இல்லாமல் வாழ்வதற்கு நாம் உடன்பட வேண்டும் அல்லது அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்” என்றார். ஏகாதிபத்தியங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளை சூறையாடியும்; அங்குள்ள பழங்குடியினரை கொன்று குவித்தும்; அடிமையாக்கியும் அவர்கள் இரத்தத்திலும் வியர்வையிலும் செல்வம் குவித்தது.

இந்த ஏகாதிபத்தியத்தை முறியடிக்காமல் கியூபா சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது என்கிற முடிவோடு படை திரட்டிப் போராடியவர் மார்த்தி. ஸ்பெயின் ஆதிக்கம் முறியடிக்கப் பட்டபோது மார்த்தி திருப்தி அடைய வில்லை. ஏனெனில் அமெரிக்க கழுகு லத்தீன் அமெரிக்க நாடுகளை கபளீகரம் செய்ய வட்டமடித்ததை தொலைநோக்கோடு கண்டுணர்ந்து கியூப மக்களுக்கு எச்சரித்தவர். இந்த மாபெரும் சிந்தனையாளர் புரட்சிவாதி ஹொஸே மார்த்தி மற்றும் சைமன் பொலிவாரின் அடிச்சுவட்டில் காஸ்ட்ரோ, சேகுவேரா பயணம் தொடர்ந்தது. அதற்கும் மேலாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தத்துவ வெளிச்சம் இவர்கள் கையில் கலங்கரை விளக்கமாயின. “ஒரு மனிதனை விலைக்கு வாங்கி விடலாம்; ஆனால் மக்களை ஒருபோதும் விலைக்கு வாங்கிவிட முடியாது” என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடுமக்களிடம் பேசினார். குறிப்பாக இளை ஞர்களை திரட்டுவதில் காஸ்ட்ரோ அதிக ஆர்வம் காட்டினார்.

இதுபற்றி பின்னர் ஒருமுறை இளங் கம்யூனிஸ்ட் கழகத்தில் பேசும் போது காஸ்ட்ரோ குறிப்பிட்டார்; “நமது புரட்சி தோன்றிய காலத்திலிருந்து புரட்சியும் இளைஞர்களும் இரட்டைக் குழந்தைகள் போல ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு வலிமையான பிணைப்பை உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது நீங்கள் பார்க்க முடியுமா? கியூபாவின் புரட்சி நாள்தோறும் புதிதாக பிறக்கிறது. ஏனென்றால்நமது கருத்துகள், இலட்சியங்கள், நீதி ஆகியவை பூமியிலுள்ள பலகோடி மக்களுடைய கோரிக்கைகளாகும்.” ஆம். ஜூலை 26 இயக்கத்தை தொடங்கும் போது காஸ்ட்ரோவின் வயது 25; அதன்பின் கிரான்மா கப்பலில் சேகு வேராவுடன் புறப்படும் போது சேவின் வயது 28; இன்றும் இளைஞர்களின் புரட்சி நாயகர்களாக இவர்களன்றோ திகழ்கின்றனர். ஜூலை 26 புரட்சி தோற்றதால் காஸ்ட்ரோ சோர்வடையவில்லை; மாறாக படிப்பினைகளை கற்றறிந்தார். மெக்ஸிகோவில் பயிற்சி பெற்றார். சேயோடு இணைந்தார். இளைஞர்களைத் திரட்டினார். கிரான்மா என்ற சிறிய கப்பலில் 1956ல் மீண்டும் புரட்சியைத் துவங்க புறப்பட்டனர். அதுகுறித்து எர்னஸ்டோ சேகுவேரா விரிவாக பதிவு செய்திருக்கிறார். கியூபப் புரட்சி என்பது திடீர் நிகழ்வல்ல. வரலாற் றில் தொடரும் போர் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

18 ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் ஜான்குவின்சி ஆடம்ஸ் என்ற அமெரிக்கத் தலைவர் கூறினாராம் “ஸ்பானிய மரத்திலிருந்து உதிரும் இந்த ஆப்பிள், அமெரிக்காவின் கையில் விழும் என்று முன் கூட்டியேவிதிக்கப்பட்டுவிட்டது” ஆம். அமெரிக்க ஏகாதிபத்தியம் சதி வலைகள் மூலம் லத்தீன் அமெரிக்கா முழுவதையும் தங்கள் லாப வேட்டைக் காடாக்க நெடுங்காலமாக சதி செய்வதை சே விவரிக்கிறார்; “ஏகாதிபத்திய அலையின் ஏற்றமும் இறக்கமும் ஜனநாயக அரசுகள் வீழ்த்தப்படும் போதும், அடக்க முடியாத மக்களின் போராட்டத்தின் விளைவாக மறுபடி புதிய அரசுகள் எழும் போதும் ஏற்படுகிறது. இந்தத் தன்மைகளையே லத்தீன் அமெரிக்க வரலாறு நெடுகக் காணலாம். சர்வாதிகார ஆட்சிகள் மிகமிக சிறு பகுதியினரின் பிரதிநிதிகளாக உள்ளன. ஆட் சிக் கவிழ்ப்பு சதிகளின் மூலம் அதிகாரத்துக்குவருகின்றன. பரந்த மக்கள் ஆதரவைக் கொண்ட ஜனநாயக அரசுகள் எழுகின்றன. ஆயினும் இச்சக்திகள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே தங்களது பலத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு சில்லறைச் சலுகைகளுக்கு கட்டுப்பட்டு கிடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் கியூபப்புரட்சி ஒரு விதிவிலக்கு. எனினும் வளர்ச்சியின் ஆரம்ப நிலையைச் சுட்டிக் காட்டுவதுஅவசியமாகிறது.

லத்தீன் அமெரிக்கா முழுமையும் உலுக்கிக் கொண்டிருக்கும் சமூக நிகழ்ச்சிகள் என்ற அலைகளால் அங்கும் இங்கும் தூக்கிச் செல்லப்பட்ட எனக்கு; இந்த நிகழ்ச்சியின் விளைவாக நாடு கடத்தப்பட்டு வாழ்ந்து வந்த மற்றொரு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெக்சிகோவில் குளிர் மிகுந்த ஒரு இரவு நேரத்தில் அவரைச் சந்தித்தேன், எங்களதுமுதல் உரையாடல் சர்வதேசக் கொள்கைப் பற்றியது என்பது என் நினைவு. அவரைச் சந்தித்த அன்று பொழுது புலரும் முன்பே அவரது எதிர்காலப் புரட்சியின் கூட்டாளிகளில் நானும் ஒருவனாகிவிட்டேன்”. கியூபா 50 : மரணத்தோடு விளையாடி…“நாங்கள் சுதந்திர மனிதர்களாவோம்; அல்லது வீரத்தியாகிகள் ஆவோம்” என்ற உறுதியுடன் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் ஏறத்தாழ 80 இளம் போராளிகளுடனும்; ஆயுதங்களுடனும் ‘கிரான்மா’ என்ற கப்பலில் கியூபாவை சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுவிக்கப் புறப்பட்டனர்.

1956 டிசம்பர் 2 ஆம் நாள் அதிகாலையில் பிளேயா டிலா கொலொராவில் கியூப மண்ணில் கரை யிறங்கினார்கள். ஆனால் பாடிஸ்டா ராணுவம் மோப்பம் பிடித்துவிட்டது. சதுப்பு நிலக்காடுகளில் இறங்கி வெடிமருந் துகளையும் ஆயுதங்களையும் சுமந்தவாறு இளம் புரட்சியாளர்கள் பதுங்கிப் பதுங்கி ஊடுருவினர். தாக்குதல் தொடர்ந்தது. ராணுவம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தது. “இரத்தம் கொட்டும் சண்டையில் முதல் ஞானஸ்தானம்” என சே வருணிக்கும் சம்பவம் நிகழ்ந்தது. சே குண்டடிபட்டார். தாக்குதலை தாக்குப்பிடிக்கமுடியாமல் புரட்சிக் குழு காட்டுக்குள் கரும்புத் தோட்டங்களுக்குள் நாலாபுறமும் சிதறி ஓட வேண்டிவந்தது. நாட்கள் நகர்ந்தன. அடர்ந்த காட்டில் அந்தச் சண்டையில் இறந்தது போகமீதமிருந்தவர்கள் மீண்டும் கூடினர். மேலும் புதியவர்களும் வந்தார்கள். சர்வாதிகார ஆட்சியில் வாழ்விழந்து நின்ற விவசாயிகள் பலர் இவர்களுடன் சேர்ந்தனர். 45 நாட்களுக்குப் பின் லாபிளாட்டா என்ற இடத்iத் தாக்கியது புரட்சிக்குழு. ஒரு ராணுவ நிலையத்தை கைப்பற்றி அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டதும் நம்பிக்கை மேலும் வலுத்தது. படிப்படியாக புரட்சிக்குழு முன்னேறியது.

1957 மே 28 ஆம் நாள் கடலுக்கு அருகில் செங்குத்தாக கீழே இறங்கும் உவேரா என்ற இடத்தில் ராணுவ முகாமை கைப்பற்றியது புரட்சிக்குழு. புதிது புதிதாக இளைஞர்கள் வந்தனர். விவசாயிகள்-தொழிலாளிகளின் ஆதரவுக்கரம் நீண்டது. தொழிற்சாலைகள் கைமாறின. அரசியல் செல்வாக்கு அதிகரித்தது. எங்கும் மக்கள் புரட்சிக் குழுவின் வருகையை எதிர்பார்த்தனர். ஏறத்தாழ இவ்வாறு 760 நாட்கள் காடு, மேடு, தோட்டம், வயல்வெளி எனத்திரிந்தும், பதுங்கியும், தாக்கியும், உயிர்ப்பலி கொடுத்தும், கொரில்லா யுத்தம் நடத்தினர். கிராமம் கிராமமாக; நகரம் நகரமாக; தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள் என ஒவ்வொன்றாக புரட்சிக்காரர்கள் வசமாயின. சர்வாதிகாரி பாடிஸ்டா தோல்வி மேல் தோல்வியை சுவைத்தான். இறுதியில் பாடிஸ்டா தப்பி ஓடினான்.

1959 ஜனவரி 1 இறுதித் தாக்குதல் தொடுக்கப்பட்டது. தலைமைச் செயலகம் உட்பட அனைத்தும் புரட்சிக்குழு வசமாயிற்று. இறுதிப்போரில் ஈடுபட்ட ராணுவத் தளபதிகளில் ஒருவர் ராபர்ட்டோ ரோட்ரி கியூஸ். அவரை ‘மாட்டுக்காரர்’ என்ற புனைப்பெயரில் அழைப்பர். அவர் கொல்லப்பட்டபோது சே கூறினார். “ஆயிரத் தொரு முறை மரணத்துடன் விளையாடிய வீரர். தற்கொலைப் படையின் இளந்தலைவர். புரட்சிகர உணர்வின் முன் மாதிரியானவர்” அவர் மட்டுமல்ல “எங்களை இந்த தற்கொலை யுத்தத்திற்கு சாவிற்கு அனுப்பவில்லையே எனகண்ணீர்விட்ட இளைஞர்கள் ஏராளம்! ஏராளம்” சே அவர்களைப் போற்றினார். காஸ்ட்ரோ அவர்களைப் போற்றினார். ரத்தத்தாலும் வியர்வையாலும் சோஷலிச கியூபாவை பூக்க வைத்தது அவர்கள் அன்றோ! மார்க்சிய-லெனினியத்தால் வழிநடத் தப்பட்டவர்கள்தாம் இப்புரட்சியாளர்கள். ஆயினும் கியூபாவில் சட்டப்பூர்வமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு முன்பே அங்கு இயங்கியது. அவர்கள் மக்கள் நம்பிக்கையை பெறவில்லை. சோஷலிசத்திற்கான ஏகாதிபத்திய பிரச்சாரத்தாலும் மக்கள் மனமொடிந்து கிடந்தனர். புரட்சி வெற்றி பெற்றது. மக்களிடையே உரையாற்றிய காஸ்ட்ரோ “சோஷலிசம் வேண்டுமா?” எனக்கேட்டபோது மக்கள் “வேண்டாம்! வேண்டாம்” என்றனர். “நிலம் வேண்டுமா?” என்று கேட்டார், “வேண்டும், வேண்டும்” என்றனர். “கல்வி வேண்டுமா?” எனக்கேட்டார். “வேண்டும் வேண்டும்” என்றனர். இப்படி ஒவ்வொன்றாக கேட்டுவிட்டு “இவைகளை தருவதுதான் சோஷலிசம். இப்போது சொல்லுங்கள் சோஷலிசம் வேண்டுமா?”எனக்கேட்டார். அப்போது மக்கள் “சோஷலிசம் ! சோஷலிசம்” என ஆரவாரம் செய்தனர்.

இன்று “சோஷலிசம் இல்லையேல் மரணம்” என கியூபா வில் பிரகடனம் செய்ய முடிகிறதே அது எப்படி? புரட்சி என்பது ஆட்சியைக் கைப்பற்றுவதுடன் முடிந்து விடுவதில்லை. அதன்பின் செய்ய வேண்டியது என்ன? அதுவும் அமெரிக்கக் கழுகின் மூக்கில் உட்கார்ந்த ஈ போல; சின்னஞ்சிறிய கியூபா உருவானதைக் கண்டு அமெரிக்கா பதைத்தது, சினந்தது, சீறியது. கியூபாவில் பற்றிய நெருப்பு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவிவிடுமே என மிரண்டது. ஆகவே தனது வஞ்சகச் சதி மூலம் கியூபப் புரட்சியை சிதறடிக்க காஸ்ட்ரோவைக் கொலை செய்ய ஏகாதிபத்தியம் மேற்கொண்ட முயற்சிகள் ஒன்றா? இரண்டா? செய்யப்பட்டஅவதூறுகள் கொஞ்சமா? விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இம்மட்டோ? அமெரிக்க அதிபர்கள் யார் மாறி யார் வந்தாலும் இந்த கொள்கை மாறவில்லை. ஆனால் கியூப நெருப்பை அமெரிக்கக் கறையானால் அரிக்க முடியவில்லையே ஏன்? காஸ்ட்ரோ கூறுகிறார்; “நாம் பூமியில் கருத்துகளை விதைத்தோம் . ஆகவே நம் புரட்சி நீடிக்கிறது.” “உலகமயமாக்கல் மிகவும் பரவிக் கொண்டிருக்கிறது. அநீதியான உலகப் பொருளாதார அமைப்பு வேகமாக நிறுவப்படுகிறது. இது ஒரு உலகப் போர். இந்தப் போரின் முடிவை ஆயுதங்கள் அல்ல. கருத்துகளே தீர்மானிக்கும்.

50 ஆண்டுகால கியூபாவின் சாதனைகள் உலகை வியக்க வைக்கிறது. எங்கெல்லாம் கொடுமை தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் கியூப அணிவகுப்பைக் காணலாம். அங்கோலாவில் செத்துமடிந்த வீரர்களும்; உலகெங்கும் மருத்துவசேவை செய்யும் மருத்துவர்களும் கியூப புரட்சியின் வெற்றியை சர்வதேசிய உணர்வை உரக்க பறை சாற்றுகின்றனர். புரட்சி முடிந்து சிறிது காலம் நிதியமைச்சராக செயல்பட்ட சேகுவேராபதவியை உதறி விட்டு, பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்காகப் போராட புறப்பட்டுவிட்டார். “மனிதனை மனிதன் சுரண்டுகிற நிலைமையை அழித்தொழிப்பதைவிட சோஷலிசத்திற்கு வேறு ஒரு சரியான அர்த்தம் இல்லை” என்றார் சே. மேலும் “புரட்சிக்காரன் வெறுப்பினால் உந்தப்படுவதில்லை. அன்பினால் தான்” என்று உறுதியாக நம்பிய சே சொன்னார். “எதிரி எந்த மூலைக்கெல்லாம் போரை எடுத்துச் செல்கிறானோ அங்கெல்லாம் நாமும் எடுத்துச் செல்ல வேண்டும். அவனது வீடுகளுக்கு, அவனது சினிமாபார்க்கும் அரங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். முழுமையான யுத்தம் இது. இப்போது ஒரு நிமிடம் கூட நமது எதிரி நிம்மதியாக இருக்கக் கூடாது. கியூப புரட்சியின் பொன்விழாவைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் சேவும் காஸ்ட்ரோவும் புகட்டிய சர்வதேச உணர்வை நம் குருதியில் கலப்போம். நாம் செய்ய வேண்டியது என்ன? பிடல் காஸ்ட்ரோ கூறுகிறார்.

“சித்தாந்தப் போராட்டத்தில் கருத்துகளே நமது முக்கியமான ஆயுதங்கள் . கருத்துகளே நமது தோட்டாக்கள். நமது ஊழியர்கள் கருத்துகளை செரித்துக் கொண்டு, இளைஞர்களிடமும் மக்களிடமும் அவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த ராணுவத்துக்கு செயல் திட்டமும் போர் முறையும் தெரியும். இந்தப் போராட்டத்தை முன்னணிப் படை செய்கின்ற போருடன் நான் ஒப்பிடுகிறேன். நான் புரட்சி மற்றும்கட்சியை முதலிடத்தில் வைக்கிறேன். ஏனென்றால் இவை இரண்டும் ஒன்றுதான்” இந்த கருத்துப் போராட்டம் என்பதை குறித்தும் அவர் தெளிவாக வரையறுத் துச் சொல்கிறார்; “கருத்துகளின் போராட்டம் என்பது மனிதனை சிறுமைப்படுத்துவதற்கு எதிரான மனிதநேயத்தின் போராட்டம். அப்பட்டமான சுயநலத்தை எதிர்த்த சகோதர உணர்ச்சியின் போராட்டம். காட்டு மிராண்டித்தனமான அநீக்கு எதிராக நீதியின் போராட் டம். நமது மக்களுக்காகவும் பிற மக்களினங்களுக்காகவும் நாம்நடத்துகின்ற போராட்டம்” சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ சொல்வதைப் போல “புரட்சி தொடர்கிறது”

Tags: