நீ வாழ்ந்தாக வேண்டும், நார்சிஸா

-பிருந்தா சீனிவாசன்

ரண்டாம் உலகப் போருக்கு முன்னும், போரின்போதும் ஜப்பான் நாட்டு இராணுவத்தினரால் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் குழந்தைகள், பெண்களின் நினைவாக உலகின் பல நாடுகளிலும் ‘ஆறுதல் மகளிர்’ (comfort women) சிலைகள் நிறுவப்பட்டன. போர்கள் எப்போதுமே மனித குலத்தை அழிவை நோக்கி இட்டுச் செல்பவை என்கிறபோதும் போர்களால் பெண்களும் குழந்தைகளும் எந்த அளவுக்குச் சீரழிக்கப்படுகிறார்கள் என்பதற்கான சாட்சியாகவும் அந்தச் சிலைகள் நிறுவப்பட்டன.

சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் 2017 இல் நிறுவப்பட்ட சிலைகள் ஸ்டீவன் வைட் என்ப வரால் வடிக்கப்பட்டன. பெரிய உருளையின் மீது 12 முதல் 18 வயதுக்குள்பட்ட மூன்று சிறுமியர் தங்களது கைகளைப் பிணைத்தபடி நின்றிருப்பது போலச் சிலைகள் வடிக்கப்பட்டன. சீனா, கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்போல் அந்த மூன்று சிறுமியரும் வடிவமைக்கப்பட்டிருக்க, நான்காவதாக ஒருவர் நின்று சிறுமியரின் கைகளைப் பிடிக்கும்படி இடைவெளி விடப்பட்டிருந்தது.

கொடுமைகளின் சாட்சி

அந்த மூன்று சிறுமியரும் தளராத உறுதியோடு இந்தச் சமூகத்தை நேர்ப்பார்வை பார்த்தபடி இருந்தனர். தங்களுக்கு அங்கீகாரமும் நீதியும் நியாயமும் வேண்டும் என்பதை உணர்த்துவதாக அவர்களது பார்வை இருந்தது. சற்றுத் தொலைவில் நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் மூத்த பெண்மணி ஒருவரது சிலையும் வடிக்கப்பட்டது. அந்த மூத்த பெண்மணியின் சிலை, ‘ஆறுதல் மகளி’ரின் பிரதிநிதிபோல் வடிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரிலும் 2020 இல் ‘ஆறுதல் மகளிர்’ சிலை ஒன்று நிறுவப்பட்டது. கொரியப் பாரம்பரிய உடையணிந்த சிறுமியின் சிலை அது. நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் சிறுமியின் இடது தோளில் பறவையொன்று அமர்ந்தபடி இருக்க, பக்கத்தில் காலி நாற்காலி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழியே செல்லும் சிறார்கள், சிலையாக அமர்ந்திருக்கும் சிறுமியின் கையில் மஞ்சள் மலர்களை வைத்துவிட்டுச் செல்கிறார்கள். இந்தச் சிலையை அகற்றும்படி ஜப்பான் கேட்டுக்கொண்டபோது, இரண்டாம் உலகப் போரின்போது பெண்கள் மீது ஜப்பான் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடுமையைக் கண்டிக்கும் விதமாகவே இந்தச் சிலை நிறுவப்பட்டதாக ஜெர்மனி தரப்பில் சொல்லப்பட்டது.

களங்கத்தைப் போக்கும் முயற்சி

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அரங்கேற்றிய கொடூரங்களைக் கற்பனையிலும் நிகழ்த்த முடியாது. ஜெர்மனி நடத்திய இன அழித்தொழிப்பு கொடூரங்கள், மனித குலம் எதிர்கொண்ட வன்முறைகளின் உச்சம். அதேபோல் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இழைத்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது குண்டுகளை வீசித் தாக்கி அழித்த கொடுமையை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அகற்றிவிட முடியாது. இன்றைக்கும் அமெரிக்காவின் நிறவெறிக்கு அவ்வப்போது சிலரைப் பலிகொடுத்தபடிதான் இருக்கிறோம். ஆனால், ஜப்பான் இழைத்த கொடுமையைச் சிலைகளின் வழியாக அமெரிக்கா உணர்த்துகிறதாம்! போர்களின்போது இப்படி மனிதத் தன்மையற்ற செயல்களைச் செய்த நாடுகளும் சக மனிதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் நாடுகளும் தங்கள் மீதான களங்கத்தைத் துடைக்கிற நோக்கில்கூட ‘ஆறுதல் மகளிர்’ சிலைகளை நிறுவியிருக்கலாம் என்று நினைப்பதற்கான சாத்தியம் உண்டு. இருந்தபோதும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும் இந்தச் சிலைகள், ஆணாதிக்கக் கொடுமைக்குப் பலியான பெண்களின் வரலாற்றைச் சுமந்தபடி நீதிகேட்டு நிற்கின்றன.

சிலைகள் சொல்லும் சேதி

இந்தச் சிலைகள் மற்றுமொரு செய்தியையும் நமக்குச் சொல்கின்றன. சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் நிறுவப்பட்டிருக்கும் மூன்று சிறுமியர் சிலைகளில் நான்காவதாக ஒருவர் நிற்பதற்கு இடம் விடப்பட்டுள்ளது. பெர்லினில் அமைக்கப்பட்டுள்ள சிறுமியின் சிலைக்குப் பக்கத்தில் காலியான நாற்காலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் நிற்க வேண்டிய நபர் யார்? காலியான நாற்காலியில் யார் அமர வேண்டும்? நாம்தான் அந்த நான்காம் நபர். நாற்காலியில் அமர வேண்டியவர்களும் நாம்தாம். பாதிக்கப்பட்டவர்களோடு நாமும் கரம்கோக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சிலைகள் சொல்லும் சேதி. நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கிறோம் என்கிற கேள்வியையும் அந்தச் சிலைகள் நம் முன் வைக்கின்றன.

நம்மில் பலருக்கும் எப்போதும் மரத்த மனநிலை உண்டு. நமக்கு நிகழாதவரைக்கும் எதுவுமே நமக்கு ஒரு பொருட்டல்ல. உலகம் முழுவதுமே பெரும்பான்மைச் சமூகம் அப்படித்தான் இருக்கிறது. நமது இந்த மௌனத்தால்தான் ‘ஆறுதல் மகளிர்’ குறித்து இந்த உலகம் அறிந்துகொள்ள 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. நம்மைப் பற்றித் தெரிந்தால் ஊர் என்ன சொல்லுமோ, உலகம் நம்மைத் தூற்றுமோ, குடும்பங்கள் நம்மைக் கைவிட்டுவிடுமோ, நம் கண்ணியம் கேள்விக்கு உள்ளாக்கப்படுமோ என்கிற அச்சத்திலேயே அந்தப் பெண்கள் வாய்மூடி இருந்திருக்கக்கூடும்.

Filipina Narcisa Claveria

நாம் துணை நிற்க வேண்டும்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நார்சிஸாவின் (Filipina Narcisa Claveria) கூற்றும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. 2020 இல் நார்சிஸாவுக்கு 89 வயது. அவர் 12 வயதுச் சிறுமியாக இருந்தபோது ஜப்பான் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். 1943 இல் அவரது கண் முன்னே அவருடைய தந்தையும் சகோதரர்களும் ஜப்பான் ராணுவத்தினரால் கொல்லப்பட, செய்வதறியாது திகைத்து நின்றவரைத்தான் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்கள். அவரது குடும்பத்தில் நார்சிஸாவோடு அவருடைய அம்மாவும் சகோதரிகளும் உறவுப்பெண்மணி ஒருவருமாக மொத்தம் ஏழு பேர் ஜப்பான் இராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு இரையானார்கள். ஆறுதல் மையங்களில் சமையல், சுத்தப்படுத்துதல், துணி துவைத்தல் எனப் பகல் முழுவதும் வேலை இருக்குமாம். “எனக்கு மட்டும் சூரியனை மறையாமல் நிறுத்திவைக்க முடிகிற சக்தி இருந்தால் அதைச் செய்திருப்பேன். காரணம், இரவுகள் கொடுமையானவை. இரவில்தான் அவர்கள் எங்களைச் சிதைப்பார்கள்” என்று 75 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வைச் சொல்லும்போது நார்சிஸாவால் நடுங்காமல் இருக்க முடியவில்லை.

போருக்குப் பிந்தைய வாழ்க்கை நார்சிஸாவுக்கு வசந்தத்தைக் கையளிக்கவில்லை என்கிற போதும் உயிரோடு இருக்கும் வாய்ப்பை வழங்கியது. அவருடைய கணவர், ‘ஆறுதல் மகளிர்’ சிலைகளில் நான்காம் நபராகவும் காலியான நாற்காலியில் அமரும் நபராகவும் இருந்தார். ஆண்களைக் கண்டாலே பதறும் அளவுக்கு மனநலப் பாதிப்புக்கு ஆளான நார்சிஸாவை அதிலிருந்து மீட்டதில் அவருடைய கணவருக்குப் பங்கு அதிகம். “ஜப்பான் இராணுவ வீரர்கள் நிகழ்த்திய கொடுமைகளைத் தூக்கிப்போட்டுவிடு. நீ எந்தவிதத்திலும் குறைந்தவள் அல்ல. நீ உயிரோடு இருப்பதுதான் வேறெதையும் விட முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வார்த்தைகளையும் இதுபோன்ற ஆதரவையும்தான் இந்தச் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அதை நாம் செய்கிறோமா என்கிற கேள்வியைக் கண்களில் சுமந்தபடி உலகம் முழுவதும் ‘ஆறுதல் மகளிர்’ சிலைகள் நின்றுகொண்டிருக்கின்றன. போர்களின்போது மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் பெண்களின் உடல் மீது போர் தொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அது மறைமுகமான போர். உலகம் முழுவதும் விரிந்திருக்கிற பிரம்மாண்டமான வியாபார வலைப்பின்னலைவிட உறுதியானது அது.

Tags: