திரிகோணமலை எண்ணெய்த் தாங்கி ஒப்பந்தம் கைச்சாத்தானமைக்கு இந்தியா பாராட்டு

திரிகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான கூட்டு ஒப்பந்தம் நேற்றையதினம் (06/01/2022) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் திறைசேரியின் செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC), ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (Trinco Petroleum Terminal) நிறுவனம் ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக உதய கம்மன்பில அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கு முன்னர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த திரிகோணமலையிலுள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளில் 85 எண்ணெய்த் தாங்கிகள் இலங்கையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) நேரடியாக 24 தாங்கிகளும், CPC இன் கீழுள்ள நிறுவனத்தின் ஊடாக 61 தாங்கிகளும் என மொத்தமாகவுள்ள 99 தாங்கிகளில் 85 தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தார்.

குறித்த எண்ணெய்த் தாங்கிகளில் 14 எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு 50 வருட குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரிகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது நன்றியை தெரிவித்துகொண்டுள்ளது.

“இந்திய-இலங்கை பொருளாதார மற்றும் சக்தி பங்குடைமையில் புதியதோர் மைல் கல். திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்காக சகல தரப்பினருக்கும் வாழ்த்துக்கள்“ தெரிவித்து்ளளத.

“இந்திய- இலங்கை தலைமைத்துவங்களின் வழிகாட்டல்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆதரவிற்கும் உளப்பூர்வமான பாராட்டுக்கள்” என்றும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’

டினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’  என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 திரிகோணமலை எண்ணெய் தாங்கிகள் திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்தியாவும் வரவேற்றது.  இலங்கை வெளிவிவகார அமைச்சர்  பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார்.

“இலங்கையின்  வெளிவிவகார அமைச்சர்  ஜி.எல். பீரிஸூக்கு புத்தாண்டு  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர்,  நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, ​​அந்த நாட்டு மக்களுக்கு அது எப்போதும் துணை நிற்கும் என்றார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாக்சி கூறினார்.

மொத்தம் 68 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை இலங்கை தடுத்து வைத்துள்ளது, இவர்களில் 12 மீனவர்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை விடுவிக்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் செயல்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடற்றொழில் தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று பாக்சி கூறினார்.

“திரிகோணமலை எண்ணெய் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகளை பார்த்தோம். இலங்கையுடனான எமது இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதி எரிசக்திப் பாதுகாப்பு” என்று அவர் கூறினார்.

“திரிகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை நவீனமயமாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது எரிபொருளைச் சேமிப்பதை அனுமதிக்கும் மற்றும் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும்,” என்று பாக்சி மேலும் கூறினார்.

திரிகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை (06/01/2022) கைச்சாத்திடப்பட்டது.  

லங்கா ஐ.ஓ.சி.யின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் உள்ள பெரும்பாலான தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டமாக வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அலுவலகம் வியாழன் (6) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கடன் வரியை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு, கடந்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பெசில் ராஜபக்சே புதுடெல்லிக்கு சென்றதை பாக்சி குறிப்பிட்டார்.

“இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்வதில் தனது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து அவர் இந்திய தரப்புக்கு விளக்கினார். இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கை நமது அண்டை நாடுகளுக்கு முதன்மையான கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்,” என்று அவர் கூறினார்.

 ராஜபக்ஷவின் பயணத்தின் போது, ​​உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதித்ததாக அவர் கூறினார். “மேலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று பாக்சி கூறினார்.  

Tags: