யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு நடந்தது என்ன?

அஷ்ரப் ஏ சமத்

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, ‘மனித உரிமை மீறல்கள் ஜனாதிபதி ஆணைக்குழு’ நடத்திய மூன்றாவது அமர்வு கடந்த 14.07.2021 அன்று பி.எம்.ஜ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் நடைபெற்றது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மீறல் ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதியரசருமான திலீப் நவாஸ் தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.

இந்த அமர்வின் போது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும், சமூகசேவைகள் செயற்பாட்டாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் அன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஏனைய 3 உறுப்பினர்களுடன், சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் சட்ட அலுவலர்கள் இருவரும் அங்கு சமுகமளித்திருந்தனர்.

இங்கு சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்ததாவது:

“வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவடைந்த பின்னர் பரணவிதாரண ஆணைக்குழு மற்றும் எல்.எல்ஆர் சி (LLR Commission), ஒ. எம். பி (OMP உண்மைக் கமிஷன்) என பல ஆணைக்குழுக்கள் கடந்த கால அரசாங்கத்திலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் உருவாக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என தெரியாது. அதனையே இந்த ஆணைக்குழுவிடமும் வினவுகின்றேன்.

ஓய்வு பெற்ற நீதிபதி பரணவிதாரண கமிஷனின் விசாரணை 2015 இல் ஆரம்பிக்கப்பட்டு 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவைகள் கொண்ட அறிக்கைகளும் சில தீர்வுகளும் இருந்தன. அவ்வறிக்கையின்படி ஒருசில நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். பின்னர் அக்கமிஷன் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அறிக்கைகள் யாவும் கொழும்பில் உள்ள சுவடிக் கூடத்தில் போடப்பட்டுள்ளன என அறிகின்றேன்.

இந்த ஆணைக்குழுக்களில் முதலில் மனித உரிமை மீறல்களுக்கே, மனித வதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் இந்த அரசும், முன்னைய அரசும் இதுவரை மனித உரிமை மீறல்கள் பற்றி எவ்வித விசாரணைகளோ அல்லது அதற்கான செயற்பாடுகளையோ இதுவரையிலும் செயற்படுத்தவில்லை. ஓ.எம்.பி என்று ஒரு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று மக்களுக்கு தெளிவுபடுத்துதல் வேண்டும்.

மனித உரிமை விடயத்தில் இந்த அரசாங்கம் முதலில் செய்ய வேண்டிய காரியம் உள்ளது. தற்போதைய அரசில் பதவி வகிக்கின்றவர்களில் ராஜபக்ஷ குடும்பத்தினர் 4 அல்லது 5 பேர் கபினட் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவருக்கேனும் தேசிய நல்லிணக்க புனர்வாழ்வு அமைச்சு வழங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்க இணக்கப்பாடு விடயத்தினை விரைவாகக் கொண்டு செல்ல முடியும் என மக்கள் நம்புவார்கள்.

ஜெனிவாவின் தீர்மானங்களில் முதலில் முன்வைக்கப்பட்டது மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்டதாகும். ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் வெளிநாட்டு நீதிபதி தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிட்ட எதனையும் இந்த நாட்டில் பதவியில் இருந்த எந்த அரசாங்கமும் நிறைவேற்றத் தவற விட்டன. 2015 ஆம் ஆண்டில் முன்னைய அரசு புனர்வாழ்வு தேசிய நல்லிணக்கத்திற்காக 4 நிறுவனங்களை அமைப்பதாக ஜெனிவாவில் கூறியிருந்தது.

அவற்றில் இரண்டினை செயல்படுத்தியுள்ளார்கள். ஓஎம்.பி. ஒன்று. அடுத்தது Office Preparation.

மிகுதியாக உள்ளது ‘ரூத் கமிஷன்’ மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம். இவை இரண்டையும் ஒருபோதும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த மாட்டர்கள் என நினைக்கின்றேன். அதேபோன்றுதான் தற்போதுள்ள கமிஷன் அறிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்துவார்களா என காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக அவர்களது இயக்கத்தில் சோ்த்தார்கள். ஆனால் ஏன் மரணமான சிறுவர்களின் பெற்றோர் அவர்களை நினைவு கூர முடியாது? ஒரு நாடு, ஒரு சட்டம் என்றால் தெற்கில் ஜே.வி.பி காலத்தில் படையினரால் கொல்லப்பட்ட ஜே.வி.பியினரை நினைவு கூர முடியுமென்றால் ,ஏன் தமிழ் மக்களுக்கு அவ்வாறு முடியாது எனக் கேட்க விரும்புகின்றேன்.

வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் இடங்களென்று 2000க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் கண்டு, நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அங்கு வாழும் சகல சமூகங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அரசினால் நியமிக்கப்பட்ட தொல்பொருள் அடையாள குழுவில் இராணுவத்தினரும், பௌத்த குருமார்களும் உள்ளனர். சிறுபான்மை சமூகத்தினர் அக்குழுவில் நியமிக்கப்படவில்லை.

மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையின்படி வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வந்து மனித உரிமைகளை அவதானிக்கவோ அல்லது விசாரிக்கவோ முடியாது என்றால், எவ்வாறு கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கு வெளிநாட்டவர்களும் இங்கு, வந்து முதலிடலாம் என கூற முடியும்? .

வடக்கு, கிழக்கில் தங்கியிருந்த இந்திய சமாதானப் படையினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுமன்றி, அங்கு சொத்துகளை களவாடியும் சென்றார்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரத்தினை சகல சமூகத்தினரும் சேர்ந்தே பெற்றுத் தந்தனர். முன்னர் சுதந்திர சதுக்கத்தில் பெளத்த குருமார், இந்து குருமார், இஸ்லாமிய, கிறிஸ்தவ குருமாரின் மத ஆசிர்வாதங்கள் நடைபெற்றன. சுதந்திர சதுக்கத்தில் தற்பொழுது இவை எதுவும் நடைபெறுகின்றதா? சட்டம் சகலருக்கும் சமமாக இருத்தல் வேண்டும்.

நீதி நியாயம் சகலருக்கும் சமமாக இருந்தால் ஏன் இன்னும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் இந்த நாட்டில் கிடைக்கவில்லை?”

இவ்வாறு கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அங்கு சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

Tags: