வெனிசுவேலாவின் துருப்புச்சீட்டு!

எஸ்.ராஜாராம்

A handout photo made available by Miraflores press shows Venezuelan President Nicolas Maduro addressing members of his government cabinet, in Caracas, Venezuela

தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நடைபெற்றுவரும் அரசியல் அதிகாரப் போட்டி காரணமாக கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு அந்நாட்டு மக்கள் பெரும் விலையைக் கொடுக்க வேண்டிய ஆபத்து உருவாகியுள்ளது.

சுமார் 2.8 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில், கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் சுமார் 2,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 20 பேர் இறந்துள்ளனர். சர்வதேச சராசரியை ஒப்பிடுகையில் இது பெரிய பாதிப்பு எனக் கருத முடியாது என்றாலும், இதைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது வெனிசுவேலா அரசு.

மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவமனைகளில்கூட மின்சாரம், தண்ணீர்த் தட்டுப்பாடு என ஏராளமான பிரச்னைகள். பொருளாதாரச்  சரிவு, மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, தலை விரித்தாடும் ஊழல் என இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அங்கு செயல்பட்டுவரும் இரட்டை அதிகார மையங்கள்தான் மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.

2018-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோவும் (Nicolas Maduro), எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடோவும் (Juan Guaidó) போட்டியிட்டனர். அதில் மடூரோ தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குவைடோ ஆதரவாளர்கள் அறிவித்தனர்.

தொடர்ந்து, தன்னைத் தானே அதிபராக குவைடோ அறிவித்தார். அவரின் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 50  நாடுகள் அங்கீகாரம் அளிப்பதாகக் கூறின. இருப்பினும், ராணுவத்தின் ஆதரவுடன் மடூரோ தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அதற்கு இணையாக சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்துடன்  குவைடோ தலைமையிலான அரசும் செயல்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக வெனிசுவேலாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

தனது நாட்டில் உள்ள வெனிசுவேலா அரசுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துகளையும் அமெரிக்கா முடக்கியது. இதனால், வெனிசுவேலாவில் பணவீக்கம் அதிகரித்து, கடந்த ஜனவரியில் நிலைமை மிக மோசமானது. அந்நாட்டு பணமான பொலிவர் (Bolívar Soberano) செல்லாக்காசாகி, உணவுப் பற்றாக்குறை, வணிக வளாகங்கள் சூறை, எங்கு பார்த்தாலும் போராட்டம் என நாடே ரணகளமானது.

இந்தச் சூழ்நிலையில்தான் கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்துசேர்ந்துள்ளது. கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள வெனிசுலாவுக்கு 75 கோடி டாலர் நிதி தேவைப்படும் என ஐ.நா. அரசியல், அமைதி கட்டமைப்பு விவகாரங்கள் பிரிவு (United Nations Development Programme – UNDP) மதிப்பிட்டுள்ளது. தனது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 25% எண்ணெய் ஏற்றுமதியையே வெனிசுவேலா நம்பியுள்ளது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக எண்ணெய் மூலமாக வரும் வருமானமும் அடியோடு குறைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறது வெனிசுவேலா அரசு.

Bar of gold in the Bank of England vaults
Venezuela has $1bn worth of gold stored in the Bank of England

இந்தச் சூழ்நிலையில்தான் பிரிட்டனில் இருப்பு வைத்துள்ள தனது நாட்டுக்குச் சொந்தமான தங்கத்தை துருப்புச்சீட்டாக கையிலெடுத்துள்ளது வெனிசுவேலா அரசு. பிரிட்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் (Bank of England) வெனிசுவேலாவுக்குச் சொந்தமான 100 கோடி டாலர் ($1bn) மதிப்புள்ள தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

2018-இல் மடூரோ மீண்டும் ஆட்சிக்கு வந்ததுமுதலே இந்தத் தங்கத்தை தனது நாட்டுக்கு கொண்டுவர வெனிசுவேலா அரசு முயன்று வருகிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக தங்கத்தை விடுவிக்க இங்கிலாந்து வங்கி மறுத்து வருகிறது. இப்போது கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், தனது நாட்டுக்குச் சொந்தமான தங்கத்தை விடுவிக்க இங்கிலாந்து வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வெனிசுவேலா அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

“வங்கியில் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை விற்று, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்புக்கு அந்தத் தொகையை அனுப்ப வேண்டும். இதன்மூலம் கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள உதவுவதற்காக மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியும்’ என தனது மனுவில் வெனிசுவேலா அரசு தெரிவித்துள்ளது.

வெனிசுவேலா மக்களுக்குச் சொந்தமான தங்கத்தை தனது இருப்பில் வைத்துக் கொள்வதற்கு இங்கிலாந்து வங்கிக்கு எந்தத் தார்மிக உரிமையும் இல்லை. கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்திலும் தங்கத்தை விடுவிக்க மறுப்பதன் மூலம் வெனிசுவேலா மக்களின் உயிருடன் பிரிட்டன் விளையாடுகிறது. பிற நாடுகளின் உள்அரசியலில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவது இதன்மூலம் நிரூபணமாகிறது’ என தனது வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுகளை வெனிசுவேலா தெரிவித்துள்ளது. கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. வெனிசுவேலா போன்ற பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் நாடுகளும் ஏதோ முடிந்த அளவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

என்னதான் அந்த நாட்டின் அரசியல் தலைமைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நிலைப்பாடு கொண்டிருந்தாலும், அரசியல் ரீதியாக ஆதாயம் தேடுவதற்கு உகந்த காலம் இதுவல்ல. ஆதலால், வெனிசுவேலாவுக்குச் சொந்தமான தங்கத்தை விடுவிப்பதே பிரிட்டன் செய்யும் உதவியாக இருக்க முடியும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கம் எனும் துருப்புச்சீட்டு வெனிசுவேலாவை கரை 
சேர்க்குமா?

தினமணி
2020.06.03

Tags: