உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேலியப் படையினர்

தெற்கு காஸாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் இன்று (29.02.2024) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது. காஸாவில் 5,00,000 இற்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் எச்சரித்துள்ளார்.

ஒக்ரோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காஸா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். உணவு, தண்ணீர் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூட வழியில்லாமல் அல்லாடி வருவது பார்ப்போரை பதைபதைக்கச் செய்கிறது.

காஸா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அங்கு உணவு கொடுக்க வந்த லொரியை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்ட காட்சி பலரது மனங்களையும் உலுக்கியுள்ளது. இன்று (29.02.2024) காலை தெற்கு காஸாவில் உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 100 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 700 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

பலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் தற்போதைய ‘இனப்படுகொலை போரின்’ ஒரு பகுதியாகும். பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி போர் நிறுத்தம்தான். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

சுட்டுத் தள்ளும் இஸ்ரேலியப் படைகள்: காஸாவில் உள்ள நுசிராத் (Nuseirat), புரேஜ் (Bureij) மற்றும் கான் யூனிஸ் (Khan Younis) முகாம்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கமால் அத்வான் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகளில் நீரழிவு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் வடக்கு காஸாவில் ஆறு குழந்தைகள் இறந்ததாகவும், மற்றவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு காஸாவில் உள்ள குடிமக்கள் அல்-ரஷித் தெருவில் கூடினர். அம்புலன்ஸ்கள் எதுவும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாததால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பலஸ்தீனர்களின் உடல்கள் அங்குள்ள டிரக்குகளில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறும்போது, “நாங்கள் மாவு வாங்கச் சென்றோம். இஸ்ரேல் இராணுவம் எங்களை நோக்கி சுட்டது. அவர்கள் சுட்டதில் பலர் இறந்து தரையிலே விழுந்து விட்டனர். இந்த தருணத்தை எங்களால் மறக்க முடியாது. முதலுதவி செய்யகூட யாரும் இல்லை” என்றார் உயிர் பயத்துடன்.

மேலும் அல் ஜசீரா ஊடகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், “இது ஒரு படுகொலை. காஸாவில் உள்ள குடிமக்களை பட்டினி அச்சுறுத்துகிறது” என்றார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த நான்கு மருத்துவ மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அந்த மருத்துவமனைகளை ஒட்டியுள்ள சாலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதால் அம்புலன்ஸ்கள் அப்பகுதியை சென்றடைய முடியவில்லை.

விவரிக்க முடியாத வலி: பலஸ்தீன நபர் ஒருவர், செய்தி நிறுவனத்திடம், “இராணுவத் தாக்குதல் ஒரு ‘குற்றம்’” என்றார். மேலும் பேசிய பலஸ்தீனர் ஒருவர், “நான் நேற்று முதல் காத்திருக்கிறேன். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காஸா வழியாக லொரிகள் வரத் தொடங்கின. நாங்கள் உதவியை தேடி அலைந்தபோது, இஸ்ரேலிய டாங்கிகளும் போர் விமானங்களும் எங்களை நோக்கி சுடத் தொடங்கின” என்று பயத்துடன் விவரித்தார்.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் செவிலியர் துறைத் தலைவர் ஜதல்லா அல்-ஷாஃபி இது குறித்து பேசும்போது, “இந்த நிலைமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மருத்துவமனையில் டசின் கணக்கான மக்கள் இறந்து கிடக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் பீரங்கி, குண்டுவீச்சு, ட்ரோன் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்” என்றார்.

காஸா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் வேகப்படுத்தியிருக்கும் நிலையில், ஜனவரி 23 முதல் வடக்கு காஸாவில் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற, கால் நடையாக தெற்கு நோக்கி நீண்ட நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். காஸா மக்கள் பசி பட்டினியில் சிக்கி தவிக்கும் நிலையில், அதிகார சக்திகள் அவர்கள் மீது ஏவப்படும் மிகப் பெரிய தாக்குதலாகதான் இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.

மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம்: உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், “காஸாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உயிர்வாழ உணவு உதவி தேவைப்படுகிறது. 500,000 இற்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கருதப்படுகிறது.

உணவுப் பொருட்களை காஸா மக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாத சூழல் இருப்பதால், அம்மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், வழியில் உணவு கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.

கடந்த ஒக்ரோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 30,035 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70,457 பேர் காயமடைந்துள்ளனர். 

இஸ்ரேல் 5 மாத காலத்தில் 30 ஆயிரம் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்தது!

காஸா மீது 2023 ஒக்ரோபர் 7 அன்று இஸ்ரேல் போர் அறிவிப்பு செய்து முழுமையாக 5 மாதகாலம் ஆகிவிட்டது. இந்த 5 மாதத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் இராணுவம். இனப்படுகொலைப் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் இனப்படுகொலைக்கு தொடர்ந்து ஆயுதங்களை கொடுத்துக் கொண்டே, போர் நிறுத்தத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறிக் கொள்கிறது.

மார்ச் முதல் வாரத்தில் தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே நடைபெறுகிறது என நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பைடன் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு அவையில் 3 முறை போர் நிறுத்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், அமெரிக்கா தீர்மானத்தை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொடூரக் கொலைகள் காஸாவில் பாதுகாப்பு என பெயரளவில் சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரே இடமாக இருந்த ரஃபா (Rafah) விலும் இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களையும் கொலைகளையும் நடத்தி வருகிறது.

பலஸ்தீன சுகாதார அமைச்சகத் தரவுகளின்படி, ஒக்ரோபர் 7 முதல், 30 ஆயிரம் பலஸ்தீனர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. இதில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள். 70,215 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அம்மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து வரும் நிலையில் குழந்தைகள் பட்டினியால் இறக்கத் தொடங்கியுள்ளதாகவும், மனிதாபிமான உதவி உடனடியாக வழங்கப்படாவிட்டால், மரண எண்ணிக்கை உயரும் என்றும் சுகாதார அமைச்சகம் கவலைகளை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

இந்நிலையில் பெப்ரவரி 27 அன்று ஜோர்டான் இராணுவம் போர் விமானங்கள் மூலம் காஸா கடற்கரை பகுதியில் பாராசூட் மூலமாக உணவுப் பெட்டிகளை வீசிச் சென்றது.

ரம்ழான் துவங்கும் நேரத்தில் ரஃபா (Rafah) பகுதியில் முழு அளவிலான தாக்குதலை நடத்தப் போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் ரஃபா தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்து, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

மேற்குக்கரையில் தொடரும் அட்டூழியங்கள்

இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஒக்ரோபர் 7 முதல் இஸ்ரேல் இராணுவத்தால் 108 குழந்தைகள் உட்பட 409 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதே போல் 7,255 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: