நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளார்!

லங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க சக்தி நிறுவனமான New Fortress Energy Inc. இற்கும் இடையில் மின்சார உற்பத்தி சம்பந்தமான கெரவலபிட்டிய யுகடனவி ((Kerawalapitiya Yugadanavi Power Plant ) என்ற பெயரில் உள்ள மின்சக்தி நிலைய உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி 40 சத வீதமான பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு உரித்துடையவையாகும்.

இந்த உடன்படிக்கை இலங்கையின் இறைமைக்கு ஊறு விளைவிக்கக் கூடியது எனத் தெரிவித்து எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பனவும், கொழும்பு பேராயர் மற்றும் சில சிவில் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இலங்கையின் பிரதம நீதியரசரை உள்ளடக்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாமினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வழக்குக்கு ஆதரவாக அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில்ல, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சத்தியக் கடதாசி (Affidavit) ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களது சத்தியக் கடதாசி சம்பந்தமான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அமைச்சர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த எகலஹேவா (Uditha Egalahewa) முன்னிலையாகி வாதங்களை முன் வைத்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,

‘அமைச்சர்களின் சத்தியக் கடதாசி அரசியல் சாசனத்தின் அத்தியாயம் 43(1) இன்படி அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறுவதாக அமைச்சரவையின் செயலாளர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் அத்தியாயம் 45(3) இன்படி ஒவ்வொரு அமைச்சரும் அமைச்சரவையின் ஏனைய முழுப் பகுதியினருக்கும், பாராளுமன்றத்துக்கும் பொறுப்பானவர்கள். ஆனால் குறித்த உடன்படிக்கை சம்பந்தமான பத்திரம் எந்தவொரு அமைச்சருக்கும் வழங்கப்படவில்லை. அத்துடன் இந்த அமைச்சரவைப் பத்திரம் சம்பந்தமாக எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்பட்டிருக்கவுமில்லை. எனவே, எனது கட்சிக்காரர்கள் தமது அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அரசியல் சாசன அடிப்படையில் செயற்பட்டுள்ளார்கள். அதனால்தான் இந்த விடயம் சம்பந்தமாக ஒரு விவாதத்தை நடத்துமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் எழுத்து மூலம் கோரியிருந்தார்கள். உண்மையில் இந்த விடயத்தில் நிதியமைச்சரே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளார்.’ என வாதிட்டார்.

அத்துடன் அமைச்சர்கள் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி இந்த விடயம் சம்பந்தமாக வேறு பல பாரதூரமான விடயங்களையும் முன் வைத்தார்.

இந்த அமெரிக்க நிறுவனத்தின் ஆவணங்களின்படி, இந்த நிறுவனம் அமெரிக்காவில் உள்ள New York Stock Exchange இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. இந்த நிறுவனத்தின் நிதிப் பலம் குறித்து பல பிரச்சினைகள் உள்ளன. இந்த உடன்படிக்கையின் விதிகளை இந்த நிறுவனம் எவ்வாறு பூர்த்தி செய்யும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டின் வளங்களை இம்மாதிரியான ஒரு நிறுவனத்துக்கு வழங்கியமை ஆபத்தானதாகும். இந்த நிறுவனத்தின் சில திட்ட அறிக்கைகள் ஒன்றோடொன்று முரண்பட்டவையாக உள்ளன. அங்கே வெளிப்படைத் தன்மை பற்றிய பிரச்சினை இருக்கின்றது.’

மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி எகலஹேவா கூறுகையில், இந்த ‘யுகடனவி’ ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் இந்த நிறுவனம் குறித்து சரியான மதிப்பீடு செய்யப்படாததுடன், ஏலத்தில் விடுவதற்கான சரியான நெறிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அப்படியிருக்க, இந்த அமைச்சரவைப் பத்திரம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறாத நிலையில், எவ்வாறு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் அதிகாரத்தை திறைசேரி மற்றும் நிதியமைச்சு செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல (S.R.Attygalle) பெற்றுக் கொண்டார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதங்களுக்குப் பதிலளித்த சட்ட மாஅதிபர் சஞ்சய் இராஜரட்ணம் ((Attorney General Sanjay Rajaratnam),

‘இங்கே மறைப்பதற்கு எதுவுமில்லை. இந்த விடயம் வெளிப்படையாகவே செய்யப்பட்டது. அமைச்சர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.

Tags: