கனடிய தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டம்!

னடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லைகளின் ஊடாக தினசரி ஆயிரக்கணக்கான பாரவூர்திகள் (Trucks) பொருட்களை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடுவது வழமை. கொவிட் – 19 பரவியதை அடுத்து கனடா அமெரிக்காவுடனான தனது எல்லையைக் குறிப்பிட்டதொரு காலம் மூடியும் வைத்திருந்தது. பின்னர் இரு நாட்டு எல்லையூடான பயணத் தடையை கனடா நீக்கியிருந்தாலும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் (Justin Trudau) கனடிய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அந்தப் புதிய சட்டத்தின்படி, கொவிட் – தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் மட்டுமே கனடிய எல்லையைத் தாண்டி அமெரிக்காவுக்குள் நுழையலாம் என கனடிய அரசு அறிவித்தது.

இந்த புதிய உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு குறிப்பிட்ட பாரவூர்தி உரிமையாளர்களும், சாரதிகளும் கனடிய அரசின் உத்தரவைத் திரும்பப் பெறுமாறு கோரி பல்லாயிரக்கணக்கில் தமது வாகனங்களுடன் பேரணியாகச் சென்று தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டுள்ளனர். ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்துக்கு ‘Freedom Convey’ ஆர்ப்பாட்டக்காரர்கள் பெயரிட்டுள்ளனர். (ஆனால் புள்ளிவிபரங்களின்படி எல்லை கடந்த சேவையில் ஈடுபடும் மொத்த பாரவூர்தி சாரதிகளில் 90 சத வீதமானோர் – சுமார் 120,000 பேர் – ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றிக் கொண்டு விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் தலைநகர் ஒட்டாவாவின்(Ottawa) இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டப்பட்டுள்ளன. அரசாங்க அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவைகள் நடைபெறவில்லை. பாராளுமன்ற சுற்றுப் பகுதியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தொகை சுமார் ஒரு இலட்சம் பேர் வரை இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் ஜெர்மன் நாஜிகளின் சுவாஸ்திகா சின்னம் பொறித்த கொடிகளைத் தாங்கியிருந்ததாகவும், சிலர் அங்குள்ள போர் நினைவுச் சின்ன நினைவிடத்திலும், வேறு பல சரித்திப் பிரசித்தி பெற்ற நினைவிடங்களிலும் ஏறி நின்று நடனமாடி அவற்றைக் கேவலப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச் செயல்கள் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கனடாவின் பழமைவாதக் கட்சியான கொன்சவேர்டிக் கட்சியின் (Conservative Party) ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேவேளை, பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பு கருதி வேறு ஒரு மறைவான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கனடாவிலும், ஏனைய மேற்கு நாடுகளிலும் உள்ள வலதுசாரி சக்திகளின் ஆதரவும், நிதியுதவியும் கிடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

கோவிட் – தடுப்பூசியை கட்டாயப்படுத்தியதிற்கு எதிராக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இப்பொழுது ட்ரூடோ அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ளது.

Tags: