இலங்கையில் பிராணிகள் நலன் காக்கும் சட்ட மூலம்!
பிராணிகள் நலன் பேணும் ஆர்வலர்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த பிராணிகள் நலன் சட்ட மூலத்துக்கு (Animal Welfare Bill) ஜனவரி 10ந் திகதி கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பின்னர் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு, வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்ட பின்னர் நடைமுறைக்கு வரும்.
இந்தச் சட்ட மூலத்தில் பல பயனுள்ள விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. அதில் முக்கியமான விடயம் யாதெனில், முன்னைய சட்டத்தின்படி ‘பிராணி’ என்ற சொல்லுக்கு உள்ளுரில் வளர்க்கப்படும் அல்லது பிடிக்கப்படும் பிராணி என வரைவிலக்கணம் செய்யப்பட்டிருந்தது. தற்போதைய சட்டத்தில் அது மாற்றப்பட்டு, மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் பிராணிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னைய சட்டத்தின்படி, ஒரு பிராணியை துன்புறுத்தினால் ஆகக்கூடிய தண்டமாக 100 ரூபா அபராதம் அல்லது மூன்று மாதத்துக்கு மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அது மாற்றப்பட்டு, புதிய சட்டத்தின்படி ஒருவர் பிராணியைத் துன்புறுத்தினால் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா தண்டம் அல்லது நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஒரு பிராணியைக் கொல்வது, அவற்றுக்கு உணவு, நீர் என்பன வழங்காதிருப்பது, அவற்றை சங்கிலிகள், கயிறுகள், வயர்கள் என்பவற்றால் கால்களில் கட்டி வைத்திருப்பது, அவற்றை களியாட்ட விழாக்களில் பயன்படுத்தி காயப்படுத்தி துன்புறுத்துவது என்பன குற்றங்களாகக் கணிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
ஒழுங்கு முறையற்ற ரீதியில் பிராணிகளை செல்லப் பிராணிகளாக வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த சட்ட மூலத்தில் சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தின்படி ஒரு பிராணி துன்புறுத்தப்படுவதாக பொலிசில் முறைப்பாடு செய்தால் மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் தற்போதைய சட்டத்தின்படி, தகுதியுள்ள ஒரு தனி நபரோ அல்லது குழுவோ அத்தகைய நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ளலாம்.
அரசாங்கம் இந்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியதை பிராணிகள் நலன் பேணும் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பிராணிகள் நல செயற்பாட்டாளரான சர்மினி ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ‘பிராணிகளைக் கொல்லக் கொண்டு போகும் போது அவை தாம் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறிந்து உணர்ந்து கொள்கின்றன’ எனக் கூறியுள்ளார். இன்னொரு செயற்பாட்டாளரான சானுகி டி அல்விஸ் கூறுகையில், ‘நீண்டகாலப் போராட்டத்தின் பின் இறுதியில் வெற்றிக்கனியைப் பறித்துள்ளோம். ஆனாலும் நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த பிராணிகள் சட்ட விதி 1907 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்டதாகும். 115 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அந்தச் சட்டம் காலம் கடந்த ஒன்று என பிராணிகள் நலன் பேணும் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.