நேட்டோவின் அட்டூழியங்களை நினைவு கூர்ந்த நிகழ்வு

24 ஆண்டுகளுக்கு முன்பாக யூகோஸ்லேவிய கூட்டுக் குடியரசு மீது அமெரிக்க இராணுவக் கூட்டணியான நேட்டோ நடத்திய கொடூரமாக தாக்குதல்களை நினைவு கூரும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யூகோஸ்லேவியா மீதான தாக்குதலை 1999 மார்ச் 24 அன்று நேட்டோ தொடங்கியது. இந்தத் தாக்குதல்கள் 78 நாட்கள் நடந்தன.  பெரும் குண்டுமழைக்கு 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

நேட்டோவின் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது என்பது, 1999 மே 7 அன்று அங்கிருந்த சீனாவின் தூதரக அலுவலகம் மீதும் அவர்கள் குண்டுவீசித் தாக்கியதன் மூலம் அம்பலமாகியது. சர்வதேச சமூகம் இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. தங்கள் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 24ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் சீனாவின் தற்போதைய செர்பியாவுக்கான தூதுவர் சென் போ (Chen Bo) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செர்பியாவின் அமைச்சர்களில் ஒருவரான ஜோரன் கஜிச் (Zoran Gajic) மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

இந்தக் கொடூரமான தாக்குதலை நினைவு கூரும்  வகையில் அங்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்ட சின்குவா செய்தி நிறுவனத்தின் ஷாவோ யுன்ஹுவான் (Shao Yunhuan), குவாங்மிக் தினசரியின் சு சிங்கு (Xu Xinghu) மற்றும் அவரது துணைவியார் சூ யிங் (Zhu Ying) ஆகியோர் நினைவாக அங்கு அந்த நினைவுச்சின்னம் உள்ளது.

தீமைகளின் விதைகளை விதைக்கப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்

அந்தத் தாக்குதலைக் கோழைத்தனமான ஒன்று எனவும் செர்பியாவின் அமைச்சர் கஜிச் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி மேலும் பேசிய அவர், “தீமைகளின் விதைகளை விதைக்கவே இத்தகைய நடவடிக்கைகளில் நேட்டோ படையினர் ஈடுபட்டனர். தங்கள் உயிர் களை இழந்தவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம். உயிர்பிழைத்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் வேண்டுகிறோம். அவர்களுக்கு ஒளிமயமான, மகிழ்ச்சியான மனித வாழ்க்கையைக் கொண்டு வர நாம் முயலலாம்” என்றார்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர், “குண்டுவீச்சால் உயிரிழந்த தியாகிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். ஆனால் 24 ஆண்டுகள் கழிந்தபிறகு உள்ள அமைதி மனித குலத்திற்கு நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச நிலைமை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அதிகார அரசியல் மற்றும் அதிகார மேலாண்மை ஆகியவை இன்றும் உலகம் உள்ள மோசமான நிலைமைக்குக் காரணமாக உள்ளன. ஆனால், அமைதியான வளர்ச்சியை வேண்டும் சக்திகளும் பலமடைந்து வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்

அப்போதைய யூகோஸ்லேவியா நாட்டின் மீது வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் குண்டுகளில் பெரும்பாலானவை தடை செய்யப்பட்டவையாகும். கொத்துக் குண்டுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்துபவையாகும். இவற்றை போரில் பயன்படுத்துவது இல்லை. ஆனால், யூகோஸ்லேவியா மீதான தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பெரும் அளவில் பயன்படுத்தினார்கள். அப்பாவி மக்களின் கொலைகளுக்கும் இந்தத் தாக்குதலே காரணமாக அமைந்தது.

கொல்லப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டுமின்றி, அமைதியை நினைவூட்டக்கூடிய மையமாக தனது பழைய  தூதரகக் கட்டிடத்தை சீனா மாற்றியிருக்கிறது. சீனக் கலாச்சார மையம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரங்கள் நடக்கக்கூடாது என்ற செய்தியைத்தான் ஆயிரக்கணக்கானோரின் தியாகம் சொல்ல விரும்புகிறது. அதை நோக்கிய பாதையில் நாம் நடைபோடுகிறோம் என்றும் சென் போ தெரிவித்தார்.

Tags: