உலகில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துச் செல்கிறது!

-பி.எம்.நடராஜன்

க்ஸ்பாம் (Oxfam)) என்பது உலகளாவிய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். அது அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கொவிட் – 19 பெருந்தொற்று ஏற்பட்டு முதல் இரண்டு வருடங்களில் 160 மில்லியனுக்கு மேலான மக்கள் மேலதிகமாக வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், உலகின் 10 பெரும் செல்வந்தர்கள் தமது பணத்தை 700 பில்லியன் (Billion) டொலர்களிலிருந்து 1.5 றில்லியன் (Trillion) டொலர்களாகப் பெருக்கிக் கொண்டுள்ளார்கள். இத்தொகை உலகின் 3.1 பில்லியன் வறிய மக்களின் பண வசதிகளை விட ஆறு மடங்கு அதிகமானதாகும். தரவுகளின்படி, 2020 மார்ச்சில் 8.6 றில்லியன் டொலர்களாக இருந்த கோடீஸ்வரர்களின் செல்வம் 2021 நவம்பரில் 13.8 றில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 றில்லியன் தொகை அதிகமானதாகும்.

செல்வந்தர்களுக்கும் வறிய மக்களுக்குமான இந்த இடைவெளி அமெரிக்காவும் இதர வளர்ச்சியடைந்த நாடுகளும் பின்பற்றிய நீதியற்ற கொள்கைகளால் ஏற்பட்டதாகும் என பொருளாதார வல்லுனர்கள் கூட்டிக் காட்டியுள்ளனர். பல்வேறு வழிமுறைகளினூடாக இந்தப் பணத்தை செல்வர்கள் ‘சட்டப்படி’ பெற்றுள்ளனர். 2008 இல் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது, அமெரிக்க அரசாங்கம் அமெரிக்காவிலுள்ள பெரும் வோல் ஸ்றீட் கொம்பனிகளுக்கு (Wall Street companies) பல மானிய சலுகைகளை வழங்கியது. அந்த நடவடிக்கை திரும்பத் திரும்ப இப்பொழுதும் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்தச் சலுகைகள் அமெரிக்காவின் வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழங்கப்படவில்லை. அமெரிக்க அரசாங்கத்தால் சலுகையாக வழங்கப்பட்ட 29.7 பில்லியன் டொலர்கள் நிதி, மூன்று பெரிய வோல் ஸ்றீட் நிதி நிறுவனங்களின் (Morgan Stanley, JP Morgan Chase, Goldman Sachs) நிறைவேற்று அதிகாரிகளால் பங்கிடப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே ஆத்திரமடைந்த மக்களால் ‘வோல் ஸ்றீட்டை முற்றுகையிடல்’ Occupy Wall Street) என்ற எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த தோல்வி நிலைமை, உண்மையில் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவத்திடம் தீர்வு இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. இதை மறைப்பதற்கான திரையாக முதலாளித்துவம் அரசாங்க நலனோம்பும் திட்டங்கள், வரி விதித்தல் என்பனவற்றைப் பயன்படுத்துகிறது. ஆனால் அவற்றால் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாததால், நிலைமை முன்னரை விட மோசமடைந்துள்ளது. அமெரிக்காவிலும் மற்றைய வளர்ச்சியடைந்த நாடுகளிலும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியானது 1929 – 1932 காலகட்டத்தில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலையையும் தாண்டிவிட்டது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட சமூக செல்வம் பெரும் இராட்சத நிறுவனங்களின் கைகளைச் சென்றடைந்து, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்த பணக்காரன் – ஏழை இடைவெளி கொவிட் – 19 பெருந்தொற்றிலும் பிரதிபலிக்கிறது. செல்வந்த நாடுகள் தமது தேவைக்கும் அதிகமாகத் தடுப்பூசிகளைப் பெற்றிருக்க, வறிய நாடுகள் தமது தேவையின் 10 வீதத்தைத் தன்னும் பெற முடியாமல் திணறுகின்றன.

இந்த நிலைபரங்கள் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கின்றன. அதாவது, ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழ் சாதாரண மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என்பதே அது.

முழு அறிக்கையினையும் படிக்க: Inequality Kills

Tags: