துருக்கி, சிரியா பூகம்பம்: உயிரிழப்பு 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது!

துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000 தாண்டியுள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 30,000 தாண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

துருக்கி – சிரியா எல்லையில் நேற்று (06.02.2023) அதிகாலை 04:17மணிக்கு 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென் மேற்கு பகுதியில் உள்ள காஸியான்ரெப் (Gaziantep) நகர் அருகே 17.9 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்தது.

அடுத்தடுத்து 3 பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 2 நாட்களில் உணரப்பட்டுள்ளன.

இதனால் துருக்கி மற்றும் சிரியா என இரு நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து மலை போல் குவிந்துள்ளன. இன்னும் பல கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் காட்சியளிக்கின்றன.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த சிரியா, மெல்ல மீண்டு கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு மக்களை இந்த நிலநடுக்கம் மீண்டும் பெருந்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது குறித்து நார்வே அகதிகள் அமைப்பு கூறும்போது, “உள்நாட்டுப் போரினால் உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது” என்றது.

7 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் தப்பிக்க வழியின்றி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

துருக்கி நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையத்தின் (AFAD) அதிகாரி ஓர்ஹான் டாடர், சுமார் 11,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த 27,000 மீட்புப்படை வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

எட்டு மடங்கு உயரக்கூடும்

இதற்கிடையே சிரியாவின் எல்லைக்கு அருகே தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை எட்டு மடங்கு உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பாவிற்கான WHO இன் மூத்த அதிகாரி கத்தரீன் ஸ்மோல்வூட் (Catherine Smallwood) அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த 25 ஆண்டுகளில் துருக்கியை தாக்கியுள்ள 7 நிலநடுக்கங்களில் இது மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக தாமதமாகும் மீட்பு பணிகளால் பலி எண்ணிக்கை அடுத்த வாரத்தில் எட்டு மடங்கு உயரக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் துருக்கி மற்றும் சிரியாவில் நிலவும் கனமழை மற்றும் பனியின் காரணாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: