குடியரசுதின விழாவா? முடியரசு காணும் முனைப்புகளா..?

– சாவித்திரி கண்ணன்

ப்படி எல்லாம் கூட நடக்க முடியுமா? நம்பவே முடியவில்லை.

தேச ஒருமைபாட்டுக்கு எதிராக சிக்கலை, தேவையில்லாத பிரச்சினைகளை ஒரு அரசே வலிந்து உருவாக்கலாமா?

குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் சார்பிலும் தலா இரு ஊர்திகளோ அல்லது ஒன்றோ அணிவகுத்து வந்தால் தில்லி சாலைகள் திணறிவிடுமா? இந்தியாவில் இருப்பதே 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் தானே! மொத்தம் 225 ஊர்திகள் இடம் பெறும் அணி வகுப்பில் 16 மாநிலங்களுக்கு மட்டும் வாய்ப்பு என்பது சிறுபிள்ளைத் தனமில்லையா?

நாம் எல்லோரும் இந்தியர்கள் என்பதை உணர்வுபூர்வமாக ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்த அரிய தருணத்தை பாழ்படுத்துவதை எப்படி புரிந்து கொள்வது?

ஏற்கனவே, ”நாம் இந்தியாவின்ஒரு அங்கமா? இல்லையா?” என தடுமாறி நிற்கும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்து, அஸ்ஸாம், மிசோராம், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் இது போன்ற புறக்கணிப்புக்கு ஆளாகும் போது அங்கு பிரிவினைவாத போக்கிற்கு ஊக்கமளிப்பது போல மத்திய அரசே நடந்து கொள்வதை உண்மையில் நம்பவே முடியவில்லை.

தமிழகத்தை பொறுத்த வரை இது தேசிய சிந்தனை மிகவும் வலுப்பெற்ற பிரதேசமாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசின் போக்குகள் தேச பக்தர்களையே கூட அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன! தமிழகத்தை இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் இந்தியாவின் ஒரு அங்கமாக பாவிக்க மறுத்துவிட்டு, வெறும் பாவனைக்கு பாரதியார், திருவள்ளுவர்..ஆகியோர் பெயரை சொல்கிறார்களோ… என்ற சந்தேகம் வலுப்பட்டு வருகிறது.

குடியரசு தின அணிவகுப்பில் எந்த ஒரு மாநிலத்தை புறக்கணிப்பதும் தேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகமான விளைவைத் தான் உருவாக்கும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை அவர்களின் விருப்பமே அது தானோ என்னவோ..?

மூன்று சுற்று பேச்சுவார்த்தையாம்! ஆலோசனைகளாம்! அதன் பிறகு மாற்றங்களாம்! இறுதியில் நிராகரிப்பாம்! என்ன அக்கிரமம்? காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழ்நாட்டு அரசே முடிவு செய்யும். மத்திய அரசு மூக்கை நுழைக்காது! அது தானே நாகரீகம்!

பாரதியார்,                                                            வ.உ.சிதம்பரனார்

பாரதியார், வ.உ.சி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் போன்ற தமிழ் மக்களின் ரத்ததிலும்,சித்ததிலும் கலந்து நிற்கும் ஆளுமைகளை நிராகரித்து இருப்பதால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வும் இன்று மிகக் கடுமையாக காயப்பட்டு உள்ளது! இந்தக் காயத்தை ஆயிரம் கோடி செலவழித்தாலும், இன்னும் அளவற்ற திட்டங்களை அறிவித்தாலும் கூட மாற்ற முடியாது.

வேலு நாச்சியார்,                                                  மருது சகோதரர்கள்

நாம் மட்டுமில்லை. மேற்குவங்க மாநிலம், இந்தியாவிற்கு சுபாஷ் சந்திரபோஷை, தாகூரை, வந்தே மாதரம் கோஷத்தை தந்த பக்கிம் சந்திர சட்டர்ஜி..போன்ற எண்ணற்ற தேசபக்த ஆளுமைகளை தந்த மாநிலம். அவர்களின் உருவம் கொண்ட ஊர்திக்கே அனுமதி மறுக்கப்படுகிறது! ஒரு வேளை ஜனசங்கத்தை தோற்றுவித்த ஷியாம் பிரசாத் முகர்ஜி பொம்மையை ஊர்தியில் வைத்திருந்தால் அனுமதித்து இருப்பார்களோ என்னவோ? மாபெரும் விடுதலைப் போராளி சுபாஷ் சந்திர போஸ்சையும் தேசிய கீதம் தந்த தாகூரையும் புறக்கணிக்கும் துணிவு பாஜக அரசுக்கு எப்படி வந்தது? மன உளைச்சலுக்கு ஆளான மேற்குவங்க மக்கள் இனி பாஜகவை ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்! தங்களுக்கு அங்கு ஆட்சி செய்ய வாய்ப்பு இல்லாததால் ஒன்றிய பாஜக அரசு அந்த மாநிலத்தை புறக்கணித்து விடுவதா?

கேரளாவும் தேசபக்திக்கு பேர் போன தேசம்! அங்கே மாபெரும் சமூக புரட்சியாளரும், ஆன்மீகவாதியுமான நாராயணகுரு இடம் பெற்ற ஊர்தியை மறுத்துள்ளார்கள். இன்றைய கேரள வளர்ச்சியின் ஒவ்வொரு அணுவிலும். அவர்கள் ஒவ்வொருவர் ஆன்மாவிலும் நாராயணகுரு கலந்துள்ளார். அவரை புறக்கணிப்பது மலையாள மக்களின் மாபெரும் குமுறலுக்கு வழி வகுக்குமே! அவருக்கு பதிலாக ஆதிசங்கரர் இடம் பெற்று இருக்க வேண்டும் என வல்லுனர் குழு கூறினார்களாம். உங்கள் நோக்கம் என்ன? இப்படி ஒரு நிர்பந்தத்தை தருவது கேவலம் அல்லவா?

இந்த புறக்கணிப்புக்கு இவர்கள் சொல்லிய காரணங்கள் படு அபத்தமாக உள்ளது!

இந்த தலைவர்கள் எல்லாம் அங்கு கலந்து கொள்ள வருகிற வெளிநாட்டாருக்கு தெரியாமல் போய்விடுமாம்! அப்படியானால், இந்த குடியரசுதின அணிவகுப்பு என்பது நம் நாட்டாருக்கு நடத்தப்படவில்லையா? முதலில் இது நமக்கான விழா. நாம் பெருமிதம் கொள்ளும் விழா என்ற உணர்வு தானே மேலோங்கி இருக்க வேண்டும். வெளிநாட்டுக்காரர்களிடம் இருந்து விடுதலை பெறத்தானே விடுதலை போராட்டத்தை நடத்தினோம்? பிறகு இன்னும் நம் நாட்டு விழாவிற்கு ஏன் வெளி நாட்டாரின் அங்கீகாரத்தை எதிர் நோக்க வேண்டும்? இது அடிமை மனோபாவமில்லையா?

இப்ப புதுப்புதுக் காரணங்களை தேடிக் கண்டுபிடித்து ராஜ்நாத் சிங் விளக்கமளிக்கிறார்! கொரானா காலம் என்பதால் இந்த மாதிரி கட்டுபாடுகள் தவிர்க்கமுடியாதாம்! 225 ஊர்திகள் இடம் பெறும் ஊர்வலத்தில் தவிர்க்கப்பட்ட மாநிலங்களின் 20 வாகனங்கள் இடம் பெறுவதால் கொரானா இந்தியா முழுமையும் காட்டுத் தீயாக பரவிவிடப் போகிறதா? அல்லது மத்திய அரசு தங்கள் ஊர்திகளில் 20 ஊர்திகளை குறைத்து மாநில பங்களிப்பை அரவணைத்து ஏற்று இருக்கலாமே!

மேலும் ஹரித்துவார் கும்பமேளாவை சென்ற ஆண்டு கடும் கொரானா காலகட்டத்தில் தான் கோர்ட்டு எச்சரிக்கையையும் மீறி அனுமதித்தீர்கள்! அதில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். சில நாட்கள் அவர்களை அவ்வாறு அனுமதித்துவிட்டு பிறகு தான் கட்டுப்பாடு கொண்டு வந்தீர்கள்! குடியரசு தின ஊர்வலமோ சி மணி நேரத்தில் நடந்து முடியக்கூடியது!  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அனுமதிகளும், மறுப்புகளும் என்றால், இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார மன்னர்களின் ஆட்சி நடக்கிறதா?

ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரு விழாவை வேற்றுமை எண்ணங்களை விதைக்கும் விழாவாக ஒரு அரசே வலிந்து திட்டமிடுகிறது! குடியரசுதின விழா அணுகுமுறைகள் இந்தியா தற்போது குடியரசா? அல்லது மோடி, அமித்ஷாக்களின் முடியரசா? என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது!

Tags: