ஹிட்லரின் பேரழிவு முகாம்கள்
ஜனவரி 27: சர்வதேச மனிதப்பேரழிவு நினைவு தினம்
ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லரினால் (Adolf Hitler) இரண்டாம் உலக யுத்த காலத்தில் பல சித்திரவதை முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் யூத இன மக்களும், கம்யூனிஸ்ட்டுகளும், ஜெர்மனியினரல்லாதோரும் என பலர் இலட்சக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு விச வாயு மூலமும், சித்திரவதைகள் மூலமும், பட்டினியின் மூலமும் கொல்லப்பட்ட மனிதப் பேரழிவு (Holocaust) வரலாறு முழு உலகமும் மறந்துவிட முடியாத சோக வரலாறாகும்.
இந்த முகாம்களில் அவுஸ்விற்ஸ் (Auschwitz) என்ற முகாமே மிகப் பெரியதும் மிகக் கொடுமைகள் நிறைந்ததுமாகும். இது ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்து நாட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாம்களை எஸ்.எஸ். (SS) என்ற ஜெர்மானிய உளவு நிறுவனமே பொறுப்பேற்று நடத்தி வந்தது. இந்த முகாமில் 1940 முதல் 1945 ஜனவரி 27 வரை ஜெர்மன் நாஜிகள் நடத்திய அட்டூழியங்கள் பற்றிய முழுமையான விபரங்கள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து சில விபரங்கள்:
அமெரிக்காவிலுள்ள பேரழிவு நினைவு காட்சியகத்தின் மதிப்பீட்டின்படி போலந்திலிருந்த இந்த முகாமுக்கு கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 1.1 மில்லியன் மக்கள் யூதர்கள். இவர்களில் 960,000 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். யூதர்களைத் தவிர, சுமார் 2000,000 பேர் ரோமா மக்கள் (Roma people), தன்னினச் சேர்க்கையாளர்கள் (ர்ழஅழளநஒரயடள)இ சோவியத் போர்க் கைதிகள் (Soviet prisoners) ஆகியோராவர்.
ஒரு கட்டத்தில் இந்த முகாமிலிருந்த 60,000 கைதிகள் பலவந்தமாக மேற்குப் பகுதியிலிருந்த வொட்சிலோ என்ற தூரமான இடத்துக்கு பலவந்தமாக நடத்திச் செல்லப்பட்டனர். இந்தக் கால்நடையின் போது பட்டினி, கடும் குளிர் என்பனவற்றால் சுமார் 15,000 பேர் வழியிலேயே இறந்துவிட்டனர். அது தவிர, எஸ்.எஸ். உளவுப் படையின் உத்தரவைப் புறக்கணித்த பல பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலக யுத்த முடிவில் ஹிட்லரின் ஜேர்மனி, சோவியத் யூனியன் – அமெரிக்கா – இங்கிலாந்து இணைந்த கூட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட போது, 1945 இல் சோவியத் செஞ்சேனையால் இந்த முகாம்கள் விடுவிக்கப்பட்டு மூடப்பட்டன. சோவியத் செஞ்சேனை இந்த முகாம்களை மூடியபோது அங்கு மிகுதியாகவிருந்த சுமார் 7,000 பேரைக் காப்பாற்றியது.
மொத்தமாக 500 ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம்கள் அமைந்திருந்தன. இங்கு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் இன்று 300 கட்டிடங்கள் வரை சிதைவடைந்த நிலையில் உள்ளன.
ஆஸ்விற்ஸ் முகாமில் மிகவும் வசதிகளற்ற நிலையில் அங்கிருந்த தாய்மார்கள் 3,000 வரையிலான குழந்தைகளைப் பிரசவத்துள்ளனர்.
இந்த முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் ஆகக் கூடுதலானோர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தொகை – 426,000. போலந்தைந் சேர்ந்தவர்கள் – 300,000. பிரான்ஸ்சைச் சேர்ந்தவர்கள் – 69,000.
இந்த முகாமில் மொத்தமாக 232,000 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்தக் குழந்தைகளில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர என்ற விபரங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. இருப்பினும், 1944 ஒக்ரோபர் 10 ஆம் திகதி மட்டும் ஒரே நாளில் 800 குழந்தைகள் விச வாயுவின் மூலம் கொல்லப்பட்டனர் என்ற தகவல் பதிவாகியுள்ளது.
ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின் இந்த முகாம் மீதான சோவியத் செஞ்சேனையின் தேடுதலின் போது, இறந்தவர்களின் 110,000 சோடி பாதணிகள், 3,800 சூட்கேஸ்கள், 88 இறாத்தல் எடையுள்ள மூக்குக் கண்டாடிகள், 246 வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் சால்வைகள், 12,000 சட்டிகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 928 பேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தப்பியோட முயற்சித்துள்ளனர். இவர்களில் 196 பேர் வெற்றிகரமாகத் தப்பியோடி இரண்டாம் உலக யுத்தம் முடியும் வரை வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு போலந்து பொதுமக்கள் பல உதவிகளைச் செய்துள்ளனர். 1940 யூலையில் அவுஸ்விற்ஸ் முகாமுக்குப் பொறுப்பான தளபதி தனது எஸ்.எஸ். தளபதிக்கு எழுதிய கடிதத்தில், ‘போலந்து மக்கள் தமது வெறுப்புக்குரிய எஸ்.எஸ். முகாமுக்கு எதிராக எதையும் செய்யத் தயாராக உள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகாமில் இருந்த இரண்டு மாடி சிறைக்கூடுகள் கைதிகளைக் கொண்டே காணிகளைத் துப்பரவு செய்வித்து கட்டுவிக்கப்பட்டுள்ளன. அந்தக் கூடுகள் ஒவ்வொன்றிலும் 700 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு பணி புரிந்த ஜெர்மானிய நாஜி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8,400 ஆகும். இவர்களில் 200 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலோர் கத்தோலிக்கர்கள் அல்லது லுதேரன் (Lutheran) மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 70 சத வீதமானோர் ஆரம்ப கல்வியை மட்டுமே கற்றவர்கள். 5.5 வீதமானோர் மட்டுமே இரண்டாம் நிலைக் கல்வி வரை கற்றவர்கள்.
இந்த உத்தியோகத்தர்களில் 673 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன. சிலருக்கு மரண தண்டனையும், சிலருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். வேறு பலர் வழக்குகளின் போது அரச சாட்சிகளாக மாறி விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.