உக்ரைன் போருக்கான தேவையென்ன? – பகுதி 1

-பாஸ்கர் செல்வராஜ்

போர் என்பது ஒரு நாடு மற்ற நாட்டின் இராணுவ எதிர்ப்பை அடக்கி அந்நாட்டை ஆக்கிரமித்து ஆள்வது என்பதுதான் பொதுவான புரிதல். ஆனால், போர் என்பது பொருளாதாரப் பலனை அரசியல் பலம், அழுத்தம் மற்றும் ஒடுக்குமுறையினூடாக அடைய முடியாதபோது இராணுவ பலத்தின் மூலம் அடைய எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கை. பொருளாதார நோக்கமற்ற போர் என்ற ஒன்று இந்த உலகில் நடந்ததாக வரலாறு இல்லை. அப்படி என்றால் இந்தப் போருக்கான நோக்கம் என்ன? ரஷ்யாவுக்கு ஐரோப்பிய எண்ணெய் – எரிவாயு சந்தையை தக்கவைத்து அதன்மூலம் ஈட்டும் வருமானத்தைத் தொடர்ந்து பெறுவதும் பெருக்குவதும்; ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளுக்கு ரஷ்யாவின் எண்ணெய் – எரிவாயு இயற்கை வளத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்த வருமானத்தின் பெரும்பகுதியை தனதாக்கிக் கொள்வது என்பதும் உடனடி நோக்கம். இதன் நீட்சியாக நீண்டகால நோக்கில் மேற்குலகத்துக்கு தனது உலக மேலாண்மையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவது; ரஷ்யாவுக்கும் மற்றவர்களுக்கும் இந்த ஒற்றை ஆதிக்கத்தை உடைத்து தங்களின் ஆதிக்கப் பங்கைப் பெறுவது.

பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவில் போரிஸ் யெல்சின் (Boris Yeltsin) கால “ஜனநாயக” மாற்றத்தின் மூலம் ரஷ்ய வளங்களைக் கைப்பற்றும் நோக்கம் எட்டப்பட்டாலும் புதின்கால எரிபொருள் தேசியமயமாக்கத்துக்குப் பிறகு அது மீண்டும் கைநழுவிப்போனது. அங்கே மீண்டும் “ஜனநாயக” மாற்றம் ஏற்பட பல மில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவுசெய்து வந்தது மட்டுமல்ல; அதன் அருகில் இருக்கும் ஜோர்ஜியா, உக்ரைன் நாடுகளிலும் பில்லியன் கணக்கில் செலவுசெய்து “ஜனநாயக” வண்ணப்புரட்சிகள் ஏற்படுத்தப்பட்டன. 2014இல் ஏற்படுத்தப்பட்ட உக்ரைன் வண்ணப்புரட்சிக்கு ஐந்து பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ரஷ்யாவில் நேரடி “ஜனநாயக” மாற்றத்தை ஏற்படுத்த முடியாததால் அந்நாட்டின் எரிவாயுக்குழாய் செல்லும் நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான “ஜனநாயக” ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அந்நாடுகளை இராணுவமயமாக்கி பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ரஷ்யாவைப் பணியவைக்கும் அரசியல் இது.

ஆட்சி மாற்ற அரசியல்!

இதை ஐரோப்பிய சந்தை சார்பைக் குறைத்து சீன சந்தையை நோக்கி நகர்ந்தும், உக்ரைனைத் தவிர்த்த கடல்வழியாக ஜெர்மனிக்குச் செல்லும் நோர்டு ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவை அடையும் மாற்று எரிவாயுக்குழாய் திட்டங்களைச் செயல்படுத்தியும் பொருளாதார ரீதியாக ரஷ்யா எதிர்கொண்டது. ரஷ்ய எரிவாயுவை கட்டாரின் எரிவாயுவைக் கொண்டு பதிலீடு செய்ய ஏற்படுத்தப்பட்ட சிரிய உள்நாட்டுப்போர் மற்றும் சமீபத்திய பெலாருஸ், கஜகஸ்தான் நாடுகளின் ஆட்சி மாற்ற அரசியலை நேரடி அல்லது மறைமுக ராணுவ தலையீடுகளின் மூலம் ரஷ்யா எதிர்கொண்டு வந்தது. ரஷ்யாவின் நீளும் இந்தக் கரத்தை உடைக்க அமெரிக்கா அதன்மீது பொருளாதாரத்தடை விதித்தது. தனது பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து டொலரை நீக்கி ர‌ஷ்யா பதிலடி கொடுத்து வந்தது.

முன்பு மந்தத்தை நோக்கிச் சென்ற உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாற்று எரிபொருள் மற்றும் எண்ணெயில் இயங்கும் ஊர்திகளை மாற்றி மின்னூர்திகளைக் கொண்டுவந்து ஒரு ட்ரில்லியன் (trillion) பெறுமான புதிய சந்தைத் தேவையை உருவாக்கி ஒரு புதிய பொருளாதாரச் சுழற்சியை ஏற்படுத்தும் திட்டத்தை ஜனநாயகக் கட்சி முன்மொழிந்தது. தெளிவாக எண்ணெய் கும்பலின் நலனை பலிகொடுக்கும் இந்த முன்னெடுப்பைத் தடுக்கும் முயற்சி அமெரிக்காவில் ஹில்லரி – ட்ரம்ப் (Hillary Trump) தேர்தல் மோதலாக வெடித்தது. இதில் ட்ரம்ப் வெற்றிபெற ஹில்லரிக்கு எதிரான செய்திகளை ரஷ்யா கசியவிட்டு அதன் ஜனநாயக அரசியலில் தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ட்ரம்ப் வெற்றிக்குப்பின் ரஷ்யாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் எக்ஸ்சான்மொபில் (ExxonMobil) நிறுவன தலைவர் டில்லர்சனும் (Tillerson) அவருக்குப் பிறகு எண்ணெய் குழுமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பொம்பேயேயும் (Pompeo) அமெரிக்க வெளியுறவுத் துறை செயலராகப் பதவியேற்றார்கள். இப்படி இந்தப் போருக்கு முன்பு மாறிமாறி தங்களது பொருளாதார நலன்களை முன்னெடுக்கும் ஆட்சி மாற்ற அரசியல் விளையாட்டை இவர்கள் விளையாடி வந்தார்கள்.

கொரோனா, டொலர், பணவீக்கம்…

கொரோனா கால முடக்க சந்தை சரிவையும், மக்களின் வருமான இழப்பையும் ஆறு ட்ரில்லியனுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டு அமெரிக்கா சமாளித்தது. இந்தப் பணமும் முடக்கத்தால் உருவான மின்னணு சாதனங்களுக்கான தேவையும் புதிய பொருளாதார சுழற்சியை முடுக்கிவிட்டது. எண்ணெய் கும்பலின் ஆட்சி முந்தைய மின்னூர்தி திட்டத்தை விடுத்து சீனாவுடன் பனிப்போர்; இந்தியாவை சூரிய மின்னாற்றல் மற்றும் குறை மதிப்பு பொருள் உற்பத்தி மையமாக்கி அமெரிக்காவை மீண்டும் மிகைமதிப்பு பொருள் உற்பத்தி மையமாக மாற்றி அதை உலகம் முழுக்க டொலரில் சந்தைப்படுத்துவது என்ற மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்க முயன்றது. தேர்தலில் எண்ணெய் கும்பலை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த உலகமய ஆதரவு ஜனநாயகக் கட்சி இந்தத் திட்டத்தை விடுத்து தங்களது பழைய மாற்று எரிபொருள், மின்னூர்தி திட்டத்தை முன்னுக்குக் கொண்டுவந்தது. மற்ற மகிழுந்து உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்காத சில்லுகள் மின்னூர்தியைத் தயாரிக்கும் ரெஸ்லாவுக்கு (Tesla) தங்கு தடையின்றி கிடைத்து அதன் விற்பனைப் பெருகி எலான் மஸ்க் (Elon Musk) உலகப் பணக்காரர் ஆனார்.

பெருமளவில் பணத்தை அச்சிட்டு வட்டி விகிதத்தைக் குறைத்து பொருளாதாரத்தை முடுக்கிய இந்த முன்னெடுப்பு சந்தையில் தேவையைக் கூட்டி பொருளாதாரத்தை முடுக்கினாலும் பெரு பணமுதலைகள் தங்களிடம் குவித்து வைத்திருக்கும் செல்வமதிப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. அதைத் தவிர்க்கவும் உருவாகி இருக்கும் புதிய சந்தை தேவையின் மூலம் செல்வத்தை மேலும் பெருக்கவும் உலகம் முழுவதும் உள்ள சொத்துகளை வாங்கச் சென்றார்கள். அது நிதிச்சந்தையில் பங்குகளின் விலையைக் கூட்ட அந்த மதிப்புயர்வுக்கேற்ப பங்குதாரர்களுக்கு வருமான விகிதத்தைக் கொடுக்க நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்த உலகெங்கும் பணவீக்கம். விழிப்புடன் இந்த டொலர் வெள்ளத்துக்கு அணை கட்டிய சீனா (1.5.%) தப்பித்துக் கொண்டது; பட்டுக்கம்பளம் விரித்த இந்தியா (6.95%) மாட்டிக்கொண்டு விழிக்கிறது.

டொலர் பணவீக்கம் உலகத்தின் பிரச்சினை!

இப்போது விலைவாசியைக் கட்டுப்படுத்த பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் எரிபொருள், சிமேந்து, உலோகங்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியைக் கூட்டி அவற்றின் விலைகளை வீழச்செய்ய வேண்டும். பொருட்களின் மதிப்பையும் விலையையும் தெரிவிக்கும் டொலர்தான் அமெரிக்காவின் கையில் இருக்கிறதே ஒழிய இந்தப் பொருட்களின் உற்பத்தி மற்ற நாடுகளின் கைகளில்தான் இருக்கிறது. முற்றுருமையாளர்களின் கையில் இருக்கும் இந்தப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கி விலையை வீழச்செய்தால் அது முதலிட்ட பங்குதாரர்களின் வருமான விகிதத்தைக் குறைத்து இந்த நிறுவனங்களின் பங்கு விலைகளை வீழச்செய்யும் என்பதால் அவர்கள் உற்பத்தியைப் பெருக்க மறுக்கிறார்கள். இதைத் தவிர்த்த இன்னொரு வழி சந்தையில் புழங்கும் டொலரின் அளவைக் குறைத்து வட்டி விகிதத்தை அதிகரித்து மிகை டொலரை சந்தையில் இருந்து நீக்கி அதன் மதிப்பை உயர்த்துவது. அதன்மூலம் பணத்தின் வாங்கும் திறனைக் கூட்டி உயர்ந்திருக்கும் பொருட்களின் விலைகளுக்கு ஈடான டொலராக மாற்றலாம். அது டொலர் மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுவதைக் குறைத்து தொழிற்துறை விரிவாக்கத்தைக் கெடுத்து வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தி தேக்க பணவீக்கத்தைக் கொண்டுவரும்.

இந்த இரண்டையும் தவிர்த்த இன்னொரு வழி எண்ணெய் வள நாடுகள் அல்லது பொருள் உற்பத்தி செய்யும் சீனாவை சந்தையில் டொலரை வாங்கச்செய்து அதன்மூலம் எழும் தேவையால் டொலரின் மதிப்பைக் கூட்டி புழக்கத்தில் இருக்கும் டொலரைக் குறைத்து பணவீக்கத்தை சமாளிக்கலாம். அதாவது மற்ற நாடுகள் அமெரிக்காவுக்குக் கொடுக்கும் கடனை மறைமுகமாக அதிகரிப்பது. மற்ற நாடுகள் டொலர்களில் கடனைப் பெற்று தங்களின் தேவையைச் சமாளிப்பது வழக்கம். இவர்கள் டொலரை அதிகரித்துவிட்டு அதிகாரத் திமிரோடு கடன் கொடு என்கிறார்கள். ஏனென்றால் மற்ற நாடுகளில் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டால் அது அந்த நாட்டின் பிரச்சினை. ஆனால், உலகப்பணமான டொலர் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டால் எல்லோரின் பிரச்சினை.

கத்தியைக் காட்டி கடன் கேட்பது

உலகம் முழுக்க ஏற்கனவே புழக்கத்திலும், கையிருப்பாகவும் முப்பது ட்ரில்லியனுக்கும் அதிகமாக டொலர் இருக்கிறது. மேலும் கையிருப்பை அதிகரிக்க பேசலாம் என்று சவூதிக்கும், ஐக்கிய அரபு நாட்டுக்கும் பைடன் தொலைபேசினால் எண்ணெய் – எரிவாயு சந்தைக்கு போட்டிக்கு வந்து, ட்ரம்ப்கால ஆயுத ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்தி, யேமன் போரில் இந்த நாடுகள் மீதான ஏவுகணை தாக்குதலிலும் கைவிட்ட கடுப்பில் அவர்கள் எடுப்பதே இல்லை. சீனாவுடன் பேசலாம் என்று சென்றால் பதிலாக அவர்கள் ஏகப்பட்ட விஷயங்களை விட்டுக் கொடுக்கச் சொல்கிறார்கள். தாய்வான் பிரச்சினையைக் கிளப்பிவிட்டு வழிக்கு கொண்டுவரலாம் என்றால் அதை சண்டையின்மூலம் சந்திப்போம் என்று முடிவெடுக்கிறார்கள். மீறி சண்டைக்குச் சென்றால் இரு நாடுகளிலும் நடக்கும் சில்லுகள் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இப்போதைய பொருளாதார மீட்சி இல்லாமல்போய் பிரச்சினைகள் பெரிதாக வெடிக்கும்.

டொலர் பணவீக்கமும் அது தெரிவிக்கும் விலை மற்றும் மதிப்பு சரக்கான எரிபொருள் உற்பத்தியைப் பெருக்குவதுதான் இந்த பிரச்சினைக்கு சரியான தேர்வு. அவர்களின் ஒத்துழைப்பின்றி இவர்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் டொலரை உற்பத்தி செய்து அவற்றின் நலனை பலிகொடுக்கும் பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததால் அவர்கள் உற்பத்தியைப் பெருக்காமல் ரஷ்யாவின் தலைமையில் ஒற்றுமையாக மறுத்து நிற்கிறார்கள். அதை உடைக்க ரஷ்யாவை பலகீனமாக்கி எரிபொருள் உற்பத்தியைப் பெருக்கி டொலர் கையிருப்பை கூட்டச்செய்ய அதன் ஐரோப்பிய சந்தையை பிணையாக வைத்து விளையாடும் விளையாட்டு ஆரம்பமானது. ஜெர்மனியின் எரிபொருள் ஆதரவு கிறிஸ்டியன் கட்சி (Christian Democratic Union – CDU) தோல்வியடைந்து அமெரிக்க சார்பு மாற்று எரிபொருள் ஆதரவு கட்சியான கிரீன் கட்சி (Green Party) ஆட்சியில் பங்கேற்றது. பல பில்லியன் டொலர் செலவிட்டு உருவான நோர்டு ஸ்ட்ரீம் 2 திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது ஜெர்மனி. எரிவாயு கொடுப்பதில் சிக்கல் வரும் என்று மிரட்டியது ரஷ்யா. ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவர அடுத்தகட்ட நகர்வுகள் ஆரம்பமானது. அதுவரையிலும் வெளிச்சத்தில் இருந்த தாய்வான் பின்னுக்குப்போய் உக்ரைன் மையத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

உக்ரைன் கழுத்தில் வைக்கும் கத்தியானது!

2014 வண்ணப்புரட்சி உக்ரைனை நேட்டோ ஆதரவு உக்ரைனிய மொழி பேசும் மேற்கு, ரஷ்ய ஆதரவு ரஷ்ய மொழி பேசும் கிழக்கு என இரண்டாகப் பிரித்தது. இது கிட்டத்தட்ட 2009க்கு முந்தைய இலங்கை சூழலுக்கு ஒப்பானது. ஆனால், இங்கு இருதரப்பையும் சமபலம் கொண்ட வெளிநாட்டு இராணுவங்கள் உதவிகள் செய்து ஆதரித்து நின்றன. உக்ரைனிய தேசியவாதிகள் நவநாசிச கொள்கையை ஏற்றும், ரஷ்ய மொழியை அரச செயல்பாடுகளில் இருந்து நீக்கியும், அம்மொழி பேசும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியும், எதிர்த்தரப்பு பகுதியைத் தொடர்ந்து தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி பின்வாங்க வைத்தும் வந்தார்கள். ரஷ்ய மொழி பேசும் பகுதியினர் வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைவதாக அறிவித்து உக்ரைனிய தேசியத்தையே மறுதலித்தார்கள்.

இறுதியில் மேற்குலக ஆதரவு மேற்கு உக்ரைனிய பகுதிக்கு ஆயுதங்கள், இராணுவப்பயிற்சி கொடுத்து நேட்டோ வலுப்படுத்தியது. கிழக்குப் பகுதியை ரஷ்யா இதேபோல் வலுப்படுத்தி வந்தது. உக்ரைன் சிறிய நாடாக இருந்தாலும் சோவியத் காலத்தில் இருந்து தொழிற்துறை வளர்ச்சியடைந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. சோவியத் உடைவுக்குப்பின் அங்கு வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதங்கள் நீக்கப்பட்டாலும் அதை உற்பத்தி செய்யும் ஆற்றல் அதனிடம் தொடர்கிறது. அணு ஆயுதம் உற்பத்தி செய்யும் திறனுள்ள நாடாகவே அது இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து உதவியுடன் சொந்தமாக உக்ரைன் இரு ஏவுகணைகளை உருவாக்கி தயாரிக்க ஆரம்பித்தது. இந்தப் போருக்குமுன் உக்ரைனை அணு ஆயுதம் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என அதிபர் செலன்ஸ்கி (Zelensky) பேசினார். அடுத்து நேட்டோ இணைவது குறித்த நடவடிக்கைகளும் தொடங்கின.

போர் தொடங்கியது

ரஷ்யாவுக்கு அருகிலுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்திலும், ருமேனியாவிலும் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஏஜிஸ் – அசோர் (AEGIS-Ashore) அமைப்பு கவனம் பெற்றது. இந்த அமைப்பைக் கொண்டு தாக்குதலைத் தடுப்பது மட்டுமல்ல தாக்கவும் முடியும்; இதில் பயன்படுத்தப்படும் டொமொஹாக் ஏவுகணைகளில் (Tomahawk Missile) அணு ஆயுதத்தை வைத்து ஏவவும் முடியும் என்கிறார் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை சேர்ந்த ஸ்டீபன் பிரையன். ரஷ்யாவின் எந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பும் இந்தப் பகுதிகளில் இருந்து வரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதில்லை. ஆதலால் அது ரஷ்யாவின் ஆட்டத்தை முடித்து ஐரோப்பிய சந்தையையும் அதன் வளத்தையும் அமெரிக்க – ஐரோப்பிய நிறுவனங்கள் ஆதிக்கம் செய்ய அடிமை சாசனத்தில் கையெழுத்திட வைக்கும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ரஷ்யா அமெரிக்காவிடம் பாதுகாப்பு ஒப்பந்த வரைவைக் கொடுத்து நாம் பேசி முடிவுக்கு வர வேண்டும் இல்லையேல் போர் வெடிக்கும் என உக்ரைன் எல்லையில் படைகளை நிறுத்தியது. உக்ரைனுக்கு நேட்டோவில் சேரும் உரிமை இருக்கிறது எனக்கூறி பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தது அமெரிக்கா.

தொடரும்….

Tags: