இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை முற்றாகப் புறக்கணிக்கும் அம்பிகா சற்குணநாதன்!

2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் கவலையளிப்பதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை திருமதி. சற்குணநாதனின் சாட்சியம் முற்றாகப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில், அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என திருமதி. சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழந்தால், அதனால் ஏற்படும் இழப்புக்கள் வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை அதிகரிக்கும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய தொழில்களில் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக அமைச்சு குறிப்பிடுகின்றது. இலங்கை போன்ற பல்லின மற்றும் பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு, சர்வதேச சமூகத்தில் இலங்கை குறித்த ஆபத்தான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.

‘தண்டனை விதிக்கப்படாத ஒரு கலாச்சாரம்’ குறித்த திருமதி. சற்குணநாதனின் கூற்றுக்களை அமைச்சு மறுக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் அரசாங்கம் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளது என்பதை அமைச்சு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வழங்கி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலாந்தர மீளாய்வு மற்றும் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, விஷேட நடைமுறைகள் உட்பட சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் தீவிரமாக ஈடுபடுட்டு வருகின்றது. முறையான சித்திரவதை சார்ந்த குற்றச்சாட்டுக்களும் இதில் உள்ளடங்கும். சட்டத்தின் ஆட்சி, நீதிக்கான அணுகல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த மேலதிகமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. பரிந்துரைகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்காக இது திறந்திருக்கும்.

‘சிங்கள பௌத்த தேசியவாதம்’ மற்றும் ‘இராணுவமயமாக்கல்’ போன்றவற்றை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக திருமதி. சற்குணநாதன் குறிப்பிடுவதாக அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது. சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், இனம் குறித்த தெளிவற்ற கூற்றுக்களை அவர் முன்வைத்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், அனைத்து குடிமக்களும் அவர்களது மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் அரசியலமைப்பின் கீழ் ஒரே அடிப்படை உரிமைகளைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. மேலும், இலங்கை இனம் அல்லது மத அடிப்படையில் எந்தவித பாகுபாடுமின்றி இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார வசதிகள் போன்ற பொதுச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்கின்றது. உண்மையில், ஆயுத மோதலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும் பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் கூட, முக்கிய இனத்தவர்களாக அப்பகுதிகளில் வாழ்ந்த பொதுமக்களான தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கம் அப்பகுதிகளுக்கு பொதுச் சேவைகளைத் தொடர்ந்தும் வழங்கி வந்தது.

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நில அபகரிப்புக்களை மேற்கொள்ளுதல் மற்றும் மக்கள் தொகையை மாற்றுதல் ஆகியவற்றுக்கான கருவியாக செயற்படுவதாக தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியையும், இன வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுவதாக ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியையும் திருமதி. சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் திரும்பியதன் காரணமாக வனப் பகுதிகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதால், தவிர்க்க முடியாத வகையில் தொல்பொருள் தலங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே, இந்தத் தலங்களைப் பாதுகாப்பதற்காக உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியானது காணிகளை அபகரிப்பதற்கும் சிங்களவர்களை இந்தப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்குமான ஒரு கருவியாகும் எனக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த செயலணியில் அனைத்து இன சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியைப் பொறுத்தமட்டில், அது ஒரு ஆலோசனைப் பாத்திரத்தை மட்டுமே வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செயலணியின் பரிந்துரைகள் முதலில் நீதி அமைச்சாலும், பின்னர் அமைச்சரவையாலும், இறுதியாக நாடாளுமன்றத்தாலும் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி ஆய்வு செய்யப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 2009ஆம் ஆண்டு மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பான்மையானவை (92% க்கும் அதிகமானவை) ஏற்கனவே காணிக்கு சொந்தமான பொதுமக்களுக்கு முறையாக விடுவிக்கப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது. எஞ்சியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

குறிப்பாக சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், ‘சிவில் இடம்’ சுருங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள திருமதி. சற்குணநாதனின் குற்றச்சாட்டுகளைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கின்றது. அரசு சாரா அமைப்புக்களை அரசாங்கம் பங்காளிகளாக அன்றி, எதிரிகளாகப் பார்க்கவில்லை என அமைச்சு வலியுறுத்துகின்றது. இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி சபைக்கான அலுவலகத்தின் பணிகளில் சிவில் சமூக அமைப்புக்கள் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. அரசு சாரா அமைப்புக்களின் பணியை எளிதாக்கும் வகையில், அரசு சாரா அமைப்பின் செயலகத்தை வெளிநாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வருவது போன்ற சில கொள்கை மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை இயக்குவதைத் தவிர, பாதுகாப்புப் படைகளும் புலனாய்வு அமைப்புக்களும் நாட்டிலுள்ள எந்தவொரு குறிப்பிட்ட மக்களையும் கண்காணிப்பதில் அல்லது குறிவைப்பதில் ஈடுபடவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

‘போர் மற்றும் போதைப்பொருள்’ என்ற கட்டமைப்பின் கீழ் நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கைதுகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ள திருமதி. சற்குணநாதனின் கூற்றுக்களை அமைச்சு மறுக்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில், அரசாங்கம் தற்போது அந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், அந்தச் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ‘மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் கோரும் அரசுகளின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக’ சீனாவுடனான தனது நட்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக திருமதி. சற்குணநாதன் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். மாறாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மூலோபாயப் போட்டியைக் கவனத்தில் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் நாங்கள் ஏற்றுக்கொண்ட அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது முக்கிய வெளியுறவுக் கொள்கை சார்ந்த நோக்காகும். தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக சீனாவைத் தவிர, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளுடன் இலங்கை கூட்டுறவை மேற்கொண்டுள்ளது என்பதை அமைச்சு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பில் இத்தகைய கூட்டாண்மைகள் எந்தவித தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.

Tags: