பகத்சிங் வாழ்க்கைச் சுருக்கம்

– அ.பாக்கியம்

1907 ஆம் ஆண்டு  செப்டம்பர் 28 பஞ்சாப் மாநிலம் லாகூருக்கு அருகில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா என்ற கிராமத்தில் பகத்சிங் பிறந்தார். இவரது தந்தை பெயர் சர்தார் கிஷன் சிங் சாந்து. தாயார் பெயர் வித்யாவதி. இவர் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்கள்.

பகத்சிங் பிறந்த காலம், பிறந்த மண், அவனது குடும்ப பாரம்பரியம் அவனுடைய எதிர்கால செயல்பாட்டிற்கு தீனி போடுவதாகவே அமைந்திருந்தது.

பகத்சிங் பாட்டனார் அர்ஜுன் சிங் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பகத்சிங்கின்  தந்தை கிஷன் சிங்கும் அவருடைய சகோதரர்கள் அஜித் சிங், சுவரண் சிங் ஆகியோரும் பகத்சிங் பிறந்த போது வீட்டில் இல்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்ததால் பர்மாவின் மாண்டலே சிறையில்  இருந்தார்கள். பகத்சிங் பிறந்து சில தினங்கள் கழித்து அவருடைய தந்தை ஜாமினில் விடப்பட்டு வீட்டிற்கு வந்து தன் மகனை பார்த்தார்.

எனவே பகத்சிங்கின் குடும்ப பாரம்பரியம் விடுதலைப் போராட்ட பாரம்பரியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கிஷன் சிங்கின் சகோதரர் அஜித் சிங் விடுதலை அடைந்த பின்பும் கூட சொந்த ஊருக்குதிரும்ப வில்லை. விடுதலை உணர்வை வெளிநாடுகளில் வலுவடையச் செய்யும் நோக்கத்தோடு மாண்டலேயிலிருந்து நேராக ஜெர்மனிக்கு சென்று விட்டார். மற்றொரு சகோதரர் சுவரன் சிங்  பகத்சிங் பிறந்த அதே ஆண்டு சிறைச்சாலையிலேயே மரணம் அடைந்து விட்டார்.

பகத்சிங் வீட்டு சூழலும் நாட்டுச் சூழலும் அவரை தேசப்பற்று மிக்கவராகவே உருவாக்கி வந்தது. கல்வி என்பது ஒரு மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது.

அவரது தந்தை எனது மகனை சீக்கிய குழந்தைகளுக்கு உரித்தான அந்த கிராமத்தில் இருந்த கால்சா ஹை உயர்நிலை பள்ளியில் சேர்க்க வில்லை. காரணம் அந்த பள்ளி  ஆங்கிலேயருக்கு அடி பணிந்து கிடந்ததால் அந்தப் பள்ளியில் சேர்க்காமல்  லாகூருக்கு அருகாமையில் உள்ள தயானந்த வைதிக பள்ளியில் சேர்த்தார்.

பகத்சிங் தயானந்த உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் லாகூரின் முதல் சதி வழக்கு (1909-1915) நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த வழக்கைப்பற்றி வெளியிலும் வீட்டிலும் விவாதம் நடந்தது. வழக்கின் முக்கியமாக கருதப்பட்ட கத்தார் சிங் சராபா பற்றி பலரும் பேசினர். 13.9.1915 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு 17.11.1915 அன்று கத்தார் சிங் சராபா தூக்கில்  ஏற்றப்பட்டார்

உயர்நீதிமன்றத்தில் நீங்கள் ஏன் அப்பில் செய்யக்கூடாது என்று கேட்கப்பட்டபோது எதற்காக நான் அப்பில் செய்ய வேண்டும். எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்கள் இருக்குமானால் அவைகளையும்  என் நாட்டிற்கு தியாகம் செய்யும் பெருமையே என் விருப்பம் என்று கத்தார் சிங் பதில் அளித்தார்.

இந்த தியாகமும் துணிவும் கத்தார் சிங்கின் புகழை உயர்த்தியது மட்டுமல்ல பகத்சிங் போன்ற  இளைஞர்களுக்கு மானசீக வழிகாட்டியாக மாற்றியது.

பகத்சிங் 12 வயதை அடைந்த பொழுது ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடைபெற்றது. 13.4.1919 அன்று அமிர்தசரத்தில் பொற்கோயிலுக்கு அருகாமையில் உள்ள  மைதானத்தில்  பஞ்சாபின் துணை ஆளுநர் ஓட்வையர் உத்தரவின் பேரில்  ஜெனரல் டயர் தலைமையில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது.  1650 தடவைகள் சுடப்பட்டன. 1000 பேர்கள் கொல்லப்பட்டனர். 2000 பேர்கள் படுகாயம்டைந்தனர். உள்ளே இருந்த கிணற்றில் மட்டும் 120 பேர் விழுந்து மரணமடைந்தனர். பிரிட்டிஷ் இந்தியாவின் சரித்திரத்தில் அது ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆனால் பகத்சிங் போன்ற இளைஞர்களுக்கு அது புதிய வெளிச்சத்தை காட்டியது. 12 வயது நிரம்பிய பகத்சிங்  இந்த படுகொலை செய்தியை கேள்விப்பட்டவுடன் பள்ளிக்குச் செல்லாமல் புகைவண்டி பிடித்து அமிர்தசரஸ் சென்று அந்த இடத்தை பார்த்தான். அந்த இடத்திலேயே உயிரற்றவன் போல் பல நிமிடங்கள் நின்று, ரத்தம் தோய்ந்த  மண்ணை எடுத்து தன் நெற்றியில் பூசிக் கொண்டதோடு கொஞ்சம் மண்ணை எடுத்து சின்ன கண்ணாடி புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும் உணவு உண்ணாமல் இரத்தம் நிறைந்த மண்ணை பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் அந்த மண்ணிற்கு தினசரி புத்தம் புதிய மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி தனக்கு எழுச்சி ஏற்றிக்கொண்டான் என்று அவனது உற்ற நண்பன் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக 27 ஆண்டுகள் கழித்து லண்டனில் துணை ஆளுநர் ஓட்வையரை பழிவாங்கிய சர்தார் உத்தம் சிங் தெரிவிக்கிறார்.

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளும் பகத்சிங்னுடைய நாட்டுப்பற்றையும் விடுதலை வேல்வியில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கியது. அதன் பிறகு படிப்பில் அவனுடைய நாட்டம் செல்லவில்லை. எப்படியோ படித்து மெட்ரிகுலேஷன் வகுப்பில் தேர்வு பெற்றுவிட்டார் அதன்பிறகு தேசிய கல்லூரியில் மாணவராக சேர்ந்தார்.

தேசிய கல்லூரியில்  பகத்சிங்கிற்கு சுகதேவ், பகவதி சரண் வோரா, யாஷ்பால் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இவர்கள் பகத்சிங்குடன் கடைசி வரை இயக்கத்தில் ஈடுபட்டனர்

கல்லூரியில் பகத்சிங் முதலாம் ஆண்டு வெற்றி பெற்ற பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபட்டார். இதற்கிடையில் 1923 ஆம் ஆண்டு அதாவது அவரது 16 வது வயதில் வீட்டில் திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். பகத்சிங் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னால், காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சீக்கியர்கள் நடத்திய போராட்டத்திற்கும் தனது உதவியை செய்தார். ஒரு கட்டத்தில் காந்தியாரின் அகிம்சை அரசியலில் நம்பிக்கையற்று பப்பர் அகாலி  என்னும் ரகசிய சங்கத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு இருக்கிறார்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கு பிறகு தான் அவர் முழு நேர அரசியலுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். மீண்டும் பகத்சிங் வெகு மக்களை திரட்டி குறிப்பாக இளைஞர்களை திரட்டி பிரிட்டிஷ் அரசருக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இதற்காக 1926 ஆம் ஆண்டு தனது 19 வது வயதில் நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த காலகட்டத்தில் தான் ஏராளமான இளைஞர் அமைப்புகள், ஜனநாயக இளைஞர் அமைப்புகள் இந்தியாவில் தோன்றி கொண்டே இருந்தது என்பதை ஜவஹர்லால் நேரு தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்

நவ ஜவான் பாரத் சபாவை உருவாக்குவதற்கு பகவதி சரண் ஓரா, தன்வந்தி மற்றும் பலர் பகசிங்கிற்கு உதவி செய்தனர். இந்த அமைப்பின் முதல் செயலாளராக பகசிங்கும், தலைவராக ராமகிருஷ்ணாவும் கொள்கை பிரச்சார செயலாளராக பகவதி சரண் வோராவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அமைப்பிற்கு அன்றைய தினம் காங்கிரஸில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் சைபுதீன் கிச்சலு, கேதார்நாத் சேகல், லாலா பிண்டி தாஸ் போன்றவர்கள் ஆதரவாக இருந்தனர்.மக்களைத் திரட்டி விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற முறையினை கைவிடக் கூடாது என்பதை இதன் மூலம் நடத்திக் காட்டினார்.

சுதேசி பொருட்களை வாங்குவது, தேக ஆரோக்கியத்தை காப்பது, சகோதரத்துவம் வளர்ப்பது, இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்பட செய்வது, இந்திய இளைஞர்களின் இதயத்தில் தேசபக்தி மற்றும் இந்திய ஒற்றுமை உணர்வை உருவாக்குவது, தொழிலாளர்களை விவசாயிகளையும் அணி திரட்டுவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மட்டுமல்ல அனைத்து ஏகாதிபத்திய சக்தியிடம் இருந்து நாட்டை விடுவிப்பது என்று வகையில் தனது அமைப்பின் கொள்கை பாதையை உருவாக்கிக் கொண்டார்கள்.

சபாவின் செயல்பாடு தீவிரமடைந்தது. தியாகிகளுடைய தினத்தை கொண்டாடினார்கள். இளைஞர்களுக்கு வகுப்புகளை எடுத்தார்கள், சபாவின் சார்பில் தேசிய வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபாவின் செயல்பாடுகள் லாகூரை சுற்றி இருந்தது விரிவடைந்து பஞ்சாப் மாநில நவஜவான் பாரத்சபா என்று செயல்பட ஆரம்பித்தது பகத்சிங் இந்த செயல்பாடுகள்  ஆங்கிலேயர்களின் கண்னை உறுத்தியது. லாகூரில் தசரா விழாவில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்பை  காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதிக அளவு ஜாமீன் தொகை கொடுத்து விடுதலை பெற்றார்.

விவசாயிகள் மத்தியில் சபா செயற்பட்டது. கோதுமை சாகுபடி நடக்காததை கண்டித்து 1928 ஆம் ஆண்டு இயக்கங்களை நடத்தியது. செப்டம்பர் மாதம் விவசாயிகள் தொழிலாளர்கள் மாநாட்டை சபா நடத்தியது.

 சபாவின் செயல்பாடுகள் பஞ்சாபில் அதிகரித்துக் கொண்டிருந்த பொழுது நாட்டின் இதர பகுதிகளிலும் இளைஞர்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. பகத்சிங் சிந்தனை இவை நோக்கி நகர்ந்தது.

இதே காலத்தில் சோசலிசம் தொடர்பான இலக்கியங்களையும் பகத்சிங் படிக்க ஆரம்பித்தார். நாடு முழுவதும் செயல்படக்கூடிய இளைஞர்களை ஒன்று திரட்டி புதிய அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்.

ஏற்கனவே ராம் பிரசாத் பிஸ்மில், யோகேஷ் சட்டர்ஜி, சுசீந்திரநாத் சன்யால்  ஆகியோர் கான்பூரில் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்துஸ்தான் குடியரசு சங்கம்(HRA. )என்ற அமைப்பை உருவாக்கினர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். இந்திய ஐக்கிய குடியரசு அமைப்பது என்று லட்சியமாக அறிவித்தனர் இச்சங்கத்தின் முதல் நடவடிக்கையாக சந்திரசேகர் ஆசாத் தலைமையில் லக்னோ விற்கு அருகில் உள்ள காக்கோரி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து 25 பேர்களை அரசு கைது செய்தது. சந்திரசேகர் ஆசாத், குண்டன் லால் இருவரும் தப்பி சென்றனர். அஷ்பக் உல்லாகான்,ராம் பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங் ,ராஜேந்திர லகிரி, நாலு பேர்கள் தூக்கிலிடப்பட்டனர். நாலு பேர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர் 17 பேருக்கு நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது இதை தொடர்ந்து இந்த அமைப்பு பலவீனப்பட்டது.

இந்த அமைப்பை புனரமைத்து புதிய வடிவத்தில் உருவாக்க பகத்சிங் முயற்சித்தார். உத்தர பிரதேசத்தில் இருந்து பிஜய் குமார் சின்ஹா, சிவ வர்மா, ஜெய தேவ், பகத்சிங், பகவதி சரண்வோரா, சுகதேவ் ஆகியோர்கள் ஆதரவுடன் 1928 செப்டம்பர் 8,9 தேதிகளில் ஹிந்துஸ்தான் சோசியலிஸ்ட் குடியரசு சங்கம்(HSRA) என்ற அமைப்பை டெல்லி கோர்ட்லா மைதானத்தில் உருவாக்கினார்கள். இதன் கொள்கையாக சோசலிசத்தை ஏற்றுக் கொள்வது என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஆசாத், குண்டலாலும் இதில் கலந்து கொண்டனர்.

30.10.1928 அன்று சைமன் கமிஷன் வருகையை  எதிர்த்து லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தின் முடிவில் போலீஸ் அதிகாரிகள் ஸ்காட், சாண்டர்ஸ் ஆகியோரால் தலைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு லாலா லஜபதிராய் 17.11.1928 அன்று காலமானார்.

மிகப்பெரும் தலைவரை சாகடித்த சாண்டர்ஸை பழிவாங்க வேண்டும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய சமதர்ம குடியரசு ராணுவம் முடிவின்படி சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு, ஜெயகோபால், ஆகியோர் உதவியுடன் பகத்சிங் சான்டர்ஸை சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். அன்று முதல் பகக்சிங் தலைமறைவாக செயல்பட்டார்.

08.04.1929  இந்திய நாட்டு மக்களின் சுதந்திர போராட்ட நடவடிக்கைகளை சுருக்கும் சட்டத்தை எதிர்த்தும், தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்தும் மத்திய சட்டசபையில் சத்தம் எழுப்பும் குண்டு வீசும் பணியில் பகத்சிங்கும, பட்டுகேஸ்வர் தத்தும்  ஈடுபட்டார்கள்.

ஆசாத் முதல் எல்லா தோழர்களும் இந்த பணிக்கு பகத்சிங் அனுப்புவதை விரும்பவில்லை. பகத்சிங்கின்  கட்டாயத்தின் பேரிலும், சுகதேவ் விருப்பத்தின் அடிப்படையிலும்  பகத்சிங், பி.கே. தத்  இருவரையும் அனுப்புவது என மத்திய கமிட்டி முடிவு எடுத்து அனுப்பியது.

குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடுவதை காட்டிலும் தாங்களே கைதாக சம்மதித்து பிறகு நீதிமன்றங்களை தன் கொள்கை பரப்பு மேடைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற பகத்சிங் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரலாற்று புகழ்மிக்க இந்த இரண்டாம் லாகூர் சதி வழக்கு 10.07.1929 அன்று லாகூரில் தொடங்கியது. ராஜா சாகிப் பண்டிட் ஸ்ரீ கிஷன் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

32 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது அவர்களின் ஜெயகோபால் ஹன்ஸ்ராஜ், முதலான ஏழு பேர் அப்ருவராக மாறிவிட்டனர். ஆசாத், பகவதி சரண், யஷ்பால் போன்ற ஒன்பது பேரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, பி.கே.தத் ஜே,என்,தாஸ் முதலான 16 பேர் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டனர். லாகூர் நகரத்தின் மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் ஜார்ஜ் அமில்டன் ஹேண்டிங் வழக்கை தாக்கல் செய்திருந்தார். கார்டன் நோட் என்பவர் அரசு தரப்பு வக்கீலாக வந்திருந்தார்.

7.10.1930 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் சாண்ட்ர்ஸ் கொலை வழக்கிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. வெடிகுண்டு வீசியதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கிஷோரிலால், மகாவீர் சிங், பிஜயகுமார் சிங், சிவா வர்மா ஜெயா பிரசாத், ஜெயதேவ, கமல்நாத் திவாரி, ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், குந்தன் லாலுக்கு ஏழு ஆண்டுகளும், பிரேம் கர்த்தருக்கு மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அஜய் குமார், ஜே என் சன்னியால், எஸ் ராஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

17 10 1930 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும் பல்வேறு காரணங்களால் தூக்கு தண்டனை தள்ளி போய் 23. 3 . 1931 அன்று இரவு ஏழு முப்பத்தி மூன்று மணிக்கு மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

மனிதனின் வாழ்வு சாவில் முடிகிறது ஆனால் மாவீரர்களுக்கு அது மேலும் தொடர்கிறது பகத்சிங் வாழ்ந்தது 23 ஆண்கள் 5 மாதம் 16 நாட்கள் மட்டுமே. அன்றைய இதியாவில் காந்திக்கு நிகராக புகழ்பெற்றவராக இருந்தார். இன்றும் தனது நாட்டுப்பற்று, தியாகத்தின் வழியாக  இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

Tags: